இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கையில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. எந்த கட்சியும் ஆட்சியமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை பெறவில்லை. எனினும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ரணில் விக்கிரமசிங்க பிரதமராவது உறுதியாகிவிட்டது.
இலங்கை அதிபர் தேர்தலில் தோல்வியடைந்து பதவியை பறிகொடுத்த நிலையில், பிரதமர் பதவியைக் கைப்பற்றலாம் என்று எண்ணத்தில் காய் நகர்த்திய இராஜபக்சேவின் கனவுகளும் கலைந்து விட்டன. தமது தோல்வியை ஒப்புக்கொண்டுள்ள இராஜபக்சே எதிர்க்கட்சி உறுப்பினராக செயல்படப் போவதாக அறிவித்துள்ளார். வழக்கம் போலவே தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதிக வாக்குகளைக் கைப்பற்றியுள்ளது. 20-க்கும் மேற்பட்ட இடங்கள் அக்கட்சிக்கு கிடைக்கக்கூடும்.
இலங்கைத் தேர்தலில் தமிழர்களுக்கு சாதகமான அம்சம் ஏதேனும் உண்டு என்றால், அது முன்னாள் அதிபர் இராஜபக்சேவுக்கு ஏற்பட்ட தோல்வி தான். அதிபராக இருந்த போது 1.5 லட்சம் அப்பாவித் தமிழர்களை படுகொலை செய்த இராஜபக்சே மீண்டும் பிரதமரானால், அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு தமிழர்களுக்கு எதிராக செயல்படுவார் என்று தமிழர்கள் அஞ்சினர். இத்தகைய சூழலில் இராஜபக்சே தோல்வியடைந்திருப்பது தமிழர்களுக்கு ஓரளவு நிம்மதியைத் தந்துள்ளது. இதைத் தவிர வேறு எந்த நன்மையும் ஈழத் தமிழர்களுக்கு ஏற்படப்போவதில்லை என்பது தான் உண்மையாகும்.
இலங்கைத் தேர்தல் முடிவுகள் உலகத்திற்கு சொல்லும் பாடம் என்னவெனில், அந்நாட்டில் சிங்கள இனத்தவரும், தமிழர்களும் ஒற்றுமையாக வாழ முடியாது என்பது தான். இந்தத் தேர்தலில் இராஜபக்சே தலைமையிலான அணியும், விக்கிரமசிங்க தலைமையிலான அணியும் தமிழர்களுக்கு எதிராகவும், சிங்கள இனவெறியை தூண்டும் வகையிலும் பரப்புரை மேற்கொண்டன. இதன்பயனாக சிங்களர்கள் வாக்குகளை இரு கட்சிகளும் சரிசமமாக பகிர்ந்து கொண்டனர். அதேபோல் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் தமிழர் தேசிய கூட்டமைப்பு தான் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றியுள்ளது. இதன்மூலம் சிங்களர்களை ஆதரிக்கத் தயாரில்லை என்பதை தமிழர்களும், தமிழர்களுக்கு அதிகாரம் வழங்கத் தயாராக இல்லை என்பதை சிங்களர்களும் மீண்டும் ஒரு முறை தெரிவித்திருக்கின்றனர்.
இதே நிலை தொடர்ந்தால் தமிழர்கள் தொடர்ந்து கொத்தடிமைகளாகவே வாழ நேரிடும். இதன்பிறகும் இரு இனத்தினரும் ஒன்றாக வாழ்வது பொருந்தா கூட்டணியாகவே இருக்கும். எனவே, உலகெங்கும் வாழும் ஈழத்தமிழர்களிடையே பொதுவாக்கெடுப்பு நடத்தி தனித் தமிழீழம் அமைக்க ஐ.நா. அமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். அது தான் இலங்கை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக அமையும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment