Saturday, August 29, 2015

இலங்கைக்கு இலவசமாக வழங்கப்பட்ட 3 போர்க்கப்பல்கலையும்

பா.ம.க. நிறுவனர்  இராமதாசு அறிக்கை:
’’இந்திய கடலோரக் காவல்படைக்கு சொந்தமான ஐ.சி.ஜி. வராஹா என்ற போர்க்கப்பலை சிங்களக் கடற்படைக்கு இந்தியா இலவசமாக வழங்கியுள்ளது. தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டு வரும் இலங்கைக்கு இந்தியா கப்பலைக் கொடையாக அளித்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

இலங்கை ஒருபோதும் நமக்கு விசுவாசமாக இருந்ததில்லை என்பதை நன்றாக உணர்ந்திருந்தும் அந்நாட்டுக்கு மத்திய அரசு பல உதவிகளை வழங்கி வருகிறது. இத்தகைய உதவிகளால் பாதிக்கப் படுவது தமிழ்நாடு தான் என்ற போதிலும், அது தொடர்பாக தமிழக அரசிடமும், அரசியல் கட்சிகளிடமும் ஆலோசனை நடத்துவதோ, கருத்துக் கேட்பதோ கிடையாது. கச்சத்தீவை தாரை வார்த்ததில் தொடங்கி, 2009 ஆம் ஆண்டு இறுதிப் போருக்கு ஆயுதம் வழங்கியது வரை மத்திய அரசின் அணுகுமுறை துரோகி நாடான இலங்கைக்கு சாதகமாகவும், தமிழகத்திற்கு பாதகமாகவும் தான் இருந்து வருகிறது. 

இப்போது கூட ஐ.சி.ஜி. வராஹா போர்க்கப்பலை இலங்கைக்கு தாரை வார்ப்பதில் வெளிப்படையான அணுகுமுறை கடைபிடிக்கப்படவில்லை. இந்த விஷயம் தமிழக அரசியல் கட்சிகளுக்குத் தெரிந்தால்  கடும் எதிர்ப்பு எழும் என்பதால், அந்த கப்பலை இந்திய கடற்படை மற்றும் கடலோரக் காவல்படை அதிகாரிகள் கடந்த வியாழக்கிழமை கொழும்பு துறைமுகத்திற்கு ரகசியமாக கொண்டு சென்று ஒப்படைத்து விட்டு திரும்பியுள்ளனர். இப்போது கூட இந்த செய்தியை இலங்கை பாதுகாப்புத்துறை தான் வெளியிட்டிருக்கிறதே தவிர, இந்திய பாதுகாப்புத்துறை வாய் பேசாமல் தான் இருந்து வருகிறது.

இலங்கைக்கு இந்திய போர்க்கப்பல் ஐ.சி.ஜி. வராஹா தரப்பட்டதை சாதாரண உதவியாக கருதி விட்டு விட முடியாது. இதன் பின்னணியில் பல துரோகங்களும், ரகசியங்களும் அடங்கியிருக்கின்றன. இந்திய கடலோரக் காவல்படைக்கு சொந்தமான ஐ.சி.ஜி. வராஹா, ஐ.சி.ஜி. விக்ரஹா ஆகிய இரு போர்க்கப்பல்கள் கடந்த 2006 ஆம் ஆண்டில் இலங்கை கடற்படைக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டன. 

எஸ்.எல்.என் சாகரா, எஸ்.எல்.என் சயூரளா என பெயர் மாற்றம் செய்யப்பட்ட இந்த இரு போர்க்கப்பல்கள் தான் இறுதிப் போரில் அப்பாவி ஈழத்தமிழர்களை படுகொலை செய்யப் பயன்படுத்தப்பட்டன. அப்போதே இந்த போர்க்கப்பல்களை திரும்பப்பெற வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன். 2009 ஆம் ஆண்டு போர் முடிவடைந்த பின் தமிழகத்தில் எழுந்த கொந்தளிப்பை அடக்கும் வகையில் இலங்கைக்கு வழங்கப்பட்ட  2 போர்க் கப்பல்களும்  திரும்பப் பெறப்படும் என்று பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்தது. அதன்படி பெறப்பட்ட ஐ.சி.ஜி. விக்ரஹா புதுப்பிக்கப்பட்டு மீண்டும் இலங்கைக்கே வழங்கப்பட்டது.  ஐ.சி.ஜி. சரயு என்ற இந்திய போர்க்கப்பலும் 2010 ஆம் ஆண்டில் இலங்கைக்கு இலவசமாக வழங்கப் பட்டது. அதைத் தொடர்ந்து கொல்கத்தாவில் முற்றிலுமாக புதுப்பிக்கப்பட்ட ஐ.சி.ஜி. வராஹா போர்க் கப்பலை இந்தியா இப்போது இலவசமாக இலங்கைக்கு வழங்கியுள்ளது. இதைப் புதுப்பிப்பதற்காக செலவிடப்பட்ட பல கோடி ரூபாயை இந்திய அரசே வழங்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்தியாவின் பாதுகாப்புக்கு இலங்கை ஒதுபோதும் துணையாக இருக்கப் போவதில்லை. ஏற்கனவே ஈழத் தமிழர்களை படுகொலை செய்வதற்காக இந்த கப்பலை பயன்படுத்திய இலங்கை, இப்போது வங்கக்கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை கைது செய்வது, தாக்குவது, சுட்டுக் கொல்வது போன்ற மனித உரிமை மீறல்களை அரங்கேற்றுவதற்கு தான் பயன்படுத்தப் போகிறது.  உலகில் சொந்த நாட்டு மீனவர்களை தாக்க அடுத்த நாட்டு கடற்படைக்கு ஆயுதங்களை வழங்கிய அவப்பெயர் தான் இந்தியாவுக்கு ஏற்படப்போகிறது. இந்த பழியை தடுக்க வேண்டுமானால், இதுவரை இலங்கைக்கு இலவசமாக வழங்கப்பட்ட 3 போர்க்கப்பல்கலையும் மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்.’’

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: