Sunday, August 16, 2015

சேஷசமுத்திரம் மக்களை தாக்கி வீடுகளை சூறையாடிய போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை தேவை: ராமதாஸ்

சென்னை: சேஷசமுத்திரம் மக்களை தாக்கி வீடுகளை சூறையாடிய காவல் துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்தை அடுத்த சேஷசமுத்திரத்தில் அப்பாவி மக்கள் மற்றும் பெண்கள் மீது மிகக்கொடிய வன்முறை மற்றும் ஒடுக்குமுறையை காவல்துறையினர் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். மனித உரிமைகளை சற்றும் மதிக்காமல் காவல்துறை நடத்திய தாக்குதல் கடும் கண்டனத்துக்குரியது.சங்கராபுரம் அருகிலுள்ள சேஷசமுத்திரம் கிராமத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரும், தாழ்த்தப்பட்ட பிரிவினரும் வசித்து வருகின்றனர். தாழ்த்தப்பட்ட மக்கள் எண்ணிக்கையில் குறைவாக இருக்கும் போதிலும், அவர்களுக்கு பிற சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்பாக இருந்து வந்துள்ளனர். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்கள் அவர்களுக்கு சொந்தமான அம்மன் கோவிலில் தேரோட்டம் நடத்த வேண்டும் என்று விரும்பியதால், அதற்கான தேரையும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரே வாங்கிக் கொடுத்துள்ளனர். இத்தகைய சூழலில் வன்முறையைத் தூண்டி பிழைப்பு நடத்தும் அரசியல் கட்சியைச் சேர்ந்த சில சமூக விரோதிகள் தாழ்த்தப்பட்ட மக்களிடம் நச்சுப் பிரச்சாரம் செய்து இரு சமூகங்களுக்கும் இடையே பகைமையை ஏற்படுத்தியுள்ளனர். இதனால் 3 ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறவில்லை. இது குறித்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள நிலையில் வன்முறைக் கட்சியை சேர்ந்த சிலர் இன்று தேரோட்டம் நடத்தியே தீருவோம் என சுவரொட்டிகளை ஒட்டி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர். அதன்விளைவாக நேற்றிரவு 2 சமூகத்தினருக்கும் இடையே மோதல் மூண்டுள்ளது.இதையடுத்து மோதலை கட்டுப்படுத்துவதற்கு வரவழைக்கப்பட்ட காவல்துறையினர், மோதலுக்கு யார் காரணம் என்பதை விசாரிக்காமல் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மீது கண்மூடித்தனமாக தடியடி மற்றும் தாக்குதல் நடத்தியுள்ளனர். அப்போது காவல்துறையினர் மீது சிலர் கற்களை வீசியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த காவல்துறையினர் விழுப்புரம் சரக காவல்துறை துணைத்தலைவர் சுமித்சரண், விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் நரேந்திரன் நாயர், கடலூர் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், திருவண்ணாமலை காவல் கண்காணிப்பாளர் பொன்னி ஆகியோர் தலைமையில் 500 பேர் அதிகாலை 4 மணிக்கு சேஷசமுத்திரத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூக மக்கள் வாழும் தெருக்களில் நுழைத்து ஒடுக்குமுறையை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். வீடுகளில் ஆண்கள் இல்லாத நிலையில், அங்கிருந்த தொலைக்காட்சி மற்றும் வீட்டு பயன்பாட்டுப் பொருட்களை இரும்புக் கம்பிகளால் நொறுக்கியுள்ளனர். ஏராளமான இரு சக்கர ஊர்திகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. காவல்துறையினரால் சூறையாடப்பட்ட அப்பாவிகளுக்கு சொந்தமான பொருட்களின் மதிப்பு பல லட்ச ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது.ஒடுக்குமுறைகளில் இருந்து தப்பிப்பதற்காக மண் மலை, கொசப்பாடி, கரடி சித்தூர், செல்லம்பட்டு உள்ளிட்ட அண்டை கிராமங்களில் தஞ்சம் புகுந்த மக்களையும் காவல்துறையினர் வளைத்து கொடுமைப்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. வீடுகளில் பெண்கள் தனியாக இருந்தால் அவர்களுக்கு தொல்லை தரக்கூடாது என உச்சநீதிமன்றம் தெளிவாக அறிவுரை வழங்கியிருக்கிறது. ஆனால், அதை மதிக்காமல் அதிகாலையில் வீடு புகுந்து பெண்களையும், சிறுவர்களையும் தாக்கியுள்ளனர்.பெண்களின் தலைமுடியைப் பிடித்து வேண்டுமென்றே தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் பகுதிகள் வழியாக இழுத்து வந்துள்ளனர். காவல்துறையில் பணியாற்றும் ஒரு குறிப்பிட்ட பிரிவினரால் இத்தகைய மனித உரிமை மீறல்கள் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டுள்ளன. இதுபோன்ற அடக்குமுறைகளை மன்னிக்க முடியாது.காவல்துறையினர் மீது கற்கள் வீசப்பட்டிருந்தால் அது கண்டனத்துக்குரியது. இதற்கு யார் காரணம்? என்பதை விசாரணையின் மூலம் கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான் சட்டம் சொல்லும் வழியாகும். கடந்த காலங்களில் காவல்துறையினருக்கு எதிராக போராட்டங்கள் வெடித்து பெருமளவில் பொதுச்சொத்து சேதப்படுத்தப்பட்ட போது கூட, அதற்குக் காரணமானவர்கள் மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்படவில்லை.மாறாக சேஷசமுத்திரம் மக்களை மட்டும் ஏதோ பாகிஸ்தான் பயங்கரவாதிகளைப் போல கொடூரமாக நடத்தியுள்ளனர். அண்டை நாடு மீது இன்னொரு நாடு படையெடுத்து பிடித்த போது கூட அங்குள்ள மக்கள் இந்த அளவுக்கு இழிவுபடுத்தப்பட்டிருக்க மாட்டார்கள். இறுதியாக 11 பெண்கள், 7 சிறுவர் உட்பட மொத்தம் 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், நூற்றுக்கும் மேற்பட்டோர் சட்டவிரோதக் காவலில் வைத்து கொடுமைப்படுத்தப்படுகின்றனர். பொதுவாக எந்த மோதல் தொடர்பாகவும் சிறுவர்கள் கைது செய்யப்படுவதில்லை. ஆனால், 7 அப்பாவி சிறுவர்களை தாக்கி கைது செய்திருப்பது காவல்துறையினரின் வெறிச்செயலுக்கு ஆதாரம் ஆகும்.காவல்துறை துணைத்தலைவர் சுமித் சரண், கண்காணிப்பாளர் நரேந்திரன் நாயர் ஆகியோர் தான் இந்த ஒடுக்குமுறைக்கு காரணம் ஆவர். இவர்கள் இதற்கு முன் பணியாற்றிய தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களிலும் இத்தகைய மோதல்களும், அடக்குமுறைகளும் நடந்தது குறிப்பிடத்தக்கது. சேஷசமுத்திரம் ஒடுக்குமுறைக்கு காரணமான இந்த இருவர் உள்ளிட்ட காவல் அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.இந்த தாக்குதல்கள் குறித்து விசாரிப்பதற்காக வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவைத் தலைவர் கே.பாலு தலைமையில் உண்மை கண்டறியும் குழு நாளை அங்கு அனுப்பி வைக்கப்படும். இது தொடர்பாக தேசிய மற்றும் மாநில மனித உரிமை ஆணையங்கள், தேசிய குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணையம் ஆகியவற்றில் புகார் செய்யப்படும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: