கொடைக்கானல் பகுதியில் பரவியுள்ள பாதரசக் கழிவை உலகத்தரத்தில் அகற்ற வேண்டும் என பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கொடைக்கானல் பகுதியில் பரவியுள்ள பாதரசக்(Mercury)கழிவுகளை அகற்ற, அதற்குக் காரணமான யுனிலீவர் நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் மற்றும் மருத்துவர் என்ற முறையில், பாதரசக் கழிவுகளை விரைவாகவும், வெளிப்படையாகவும், முழுமையாகவும் அகற்ற வேண்டியது அவசியம் என்பதில் உறுதியாக உள்ளேன்.
கொடைக்கானல் பாதரசக் கழிவுகளை தூய்மைப்படுத்துவதற்கு தரம் குறைந்த முறையை பயன்படுத்த யுனிலீவர் நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியிருக்கிறது. யுனிலீவர் பயன்படுத்தவுள்ள தரம் என்பது, அதன் தலைமையகம் அமைந்துள்ள இங்கிலாந்தில் கடைபிடிக்கப்படும் பாதரச கையாளும் தரத்தை விட 25 மடங்கு குறைந்ததாகும். உயர்தரமான பெருநிறுவன நடத்தையை போதிக்கும் 58 பில்லியன் டாலர் மதிப்புள்ள இந்த நிறுவனம் இத்தகைய இரட்டை அளவுகோள்களையும், கஞ்சத் தனத்தையும் கடைபிடிப்பது மன்னிக்க முடியாத குற்றம் ஆகும். யுனிலீவர் நிறுவனத்தின் இந்தியப் பிரிவு இந்த விஷயத்தில் செயல்படும் விதத்தைத் தெரிந்து கொண்டு, காலம் கடப்பதற்குள் தேவையான மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி யுனிலீவர் நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி பால் போல்மன் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
வைகை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியாக செயல்படும் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் யுனிலீவர் நிறுவனத்தின் வெப்பமானி தொழிற்சாலை அமைந்திருக்கிறது. அதுமட்டுமின்றி, பாம்பார் சோழா சூழல் அமைப்பின் ஓர் அங்கமாகவும் இருக்கும் இப்பகுதி அதிஉயர் உலகத்தரத்தில் தூய்மைப் படுத்தப்பட வேண்டும். யுனிலீவர் திட்டமிட்டிருப்பதைப் போல தரம் குறைந்த முறையில் அரைகுறையாக தூய்மைப்படுத்தப்பட்டால் கணிசமான அளவில் பாதரசக் கழிவு தொடர்ந்து தேங்கி கொடைக்கானல் ஏரிகளை மாசுபடுத்தும். அதுமட்டுமின்றி, அந்த ஏரிகளையும், வைகை நதியையும் நம்பியிருக்கும் மக்களையும் கடுமையாக பாதிக்கும். இதை கொடைக்கானல் சார்ந்த பிரச்சினையாக மட்டும் பாராமல், ஒட்டுமொத்த தமிழகத்தையும், குறிப்பாக தேனி, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களை அச்சுறுத்தக்கூடிய பிரச்சினையாக பார்க்க வேண்டும்.
பாதரசம் என்பது நியூரோடாக்சின் எனப்படும் நச்சுப் பொருள் ஆகும். இது மூளையையும், அதை சார்ந்த செயல்பாடுகளையும் கடுமையாக பாதிக்கும். இது சிறுநீரகத்தை செயலிழக்க வைக்கும் நச்சு ஆகும். பாதரச பாதிப்பு தொடர்பான ஐக்கிய நாடுகள் அமைப்பின் மினமாட்டா ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டிருப்பதுடன், பாதரசக் கழிவுக்கான அனைத்து ஆதாரங்களையும் அகற்றுவதாகவும் உறுதி பூண்டிருக்கிறது.
பாதரசத்தின் தீமைகளை நான் இங்கு பட்டியலிட்டிருந்தாலும், மலைகளின் இளவரசியான கொடைக்கானல் மலைக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு பாதரச கழிவு உள்ள பகுதி எந்த உடல் நல பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று மருத்துவர் என்ற முறையில் உறுதியாக கூற முடியும். அழகு கொஞ்சும் கொடைக்கானல் மலைக்கு தொடர்ந்து பெருமளவில் சுற்றுலா செல்லும்படி சுற்றுலாப் பயணிகளைக் கேட்டுக்கொள்கிறேன். கொடைக்கானல் பகுதியில் குவிந்திருக்கும் பாதரசக் கழிவுகள் முழுமையாக அகற்றப்படுவதை உறுதி செய்வதில் உள்ளூர் மக்களின் குரலுக்கு வலு சேர்ப்பதன் மூலம் கொடைக்கானல் மீது அன்பு செலுத்தும்படியும் கேட்டுக் கொள்கிறேன்.
கொடைக்கானலில் பாதரசக் கழிவுகள் உள்ள இடத்தை தூய்மைப்படுத்தும் பணி அறிவியல்பூர்வமாகவும், வெளிப்படையானதாகவும், பாதிப்பை ஏற்படுத்திய யுனிலீவர் நிறுவனத்தின் செலவில் செய்யப்படுவதாகவும் இருப்பதை உறுதி செய்யும்படி மத்திய, மாநில அரசுகளையும் கேட்டுக் கொள்கிறேன்.
பாதரசக் கழிவுகளை அகற்றும் பிரச்சினையில் சுற்றுச்சூழல் சார்ந்த இரட்டை நிலையை யுனிலீவர் நிறுவனம் கடைபிடிப்பதை அனுமதிக்கக்கூடாது. இந்த விஷயத்தில் அதிஉயர் உலகத்தரம் கடைபிடிக்கப் படுவதை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment