பல்வேறு கால கட்டங்களில் தமக்கு உதவி செய்தவர்களுக்கு தகவல் ஆணையர்கள் பணி நியமனம் மூலம் செஞ்சோற்று கடன் தீர்த்திருக்கிறார் ஜெ. ஜெயலலிதா என்றும், உண்மையை குழி தோண்டி புதைக்கவா தகவல் ஆணையர் நியமனங்கள்? என்றும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டு தகவல் ஆணையத்தில் தலைமை ஆணையராக ஓய்வு பெற்ற காவல்துறை தலைமை இயக்குனர் கே. இராமானுஜமும், ஆணையர்களாக ஓய்வு பெற்ற நீதிபதி தட்சிணாமூர்த்தி, அ.தி.மு.க. வழக்கறிஞர் செல்வம் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். முக்கியம் வாய்ந்த தகவல் ஆணையர்கள் நியமனத்தில் சட்ட விதிகள் பெயரளவில் கூட கடைபிடிக்கப்படாதது கடும் கண்டனத்துக்குரியதாகும்.
தலைமைத் தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள இராமானுஜம் தமிழக அரசின் ஆலோசகராக பணியாற்றி, அரசு ஊதியத்தில் அ.தி.மு.க.வுக்கு ஆலோசனை வழங்கும் பணியை செய்தவர். சட்டத்தை செயல்படுத்தும் காவல்துறையில் தலைமை பொறுப்பில் இருந்த அவர் சட்டவிரோத செயல்களுக்கு எல்லாம் எப்படி துணை போனார்? வருவாய்க்கு மீறி சொத்துக்குவித்த வழக்கில் தமது அதிகாரத்தை பயன்படுத்தி என்னென்ன உதவிகளையெல்லாம் செய்தார் என்பது தமிழகத்தின் அரசியலை உன்னிப்பாக கவனித்து வருபவர்களுக்கு நன்றாகத் தெரியும். அதே சொத்துக்குவிப்பு வழக்கிற்கு அடிப்படையாக இருந்த வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாதது குறித்த வழக்கில் ஜெயலலிதாவுடன் சமரசம் செய்து கொண்டதாக கூறி, அவ்வழக்கை திரும்பப் பெறுவதாக வருமான வரித்துறை மனுத் தாக்கல் செய்த போது, எதிர் கேள்வி எழுப்பாமல் அதை அனுமதித்த நீதிபதி தட்சினாமூர்த்தி தான் தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டிருக்கிறார். மூன்றாவது நபரைப் பற்றி கேட்கவே தேவையில்லை. அவர் அ.தி.மு.க.வின் நிர்வாகி. மொத்தத்தில் பல்வேறு கால கட்டங்களில் தமக்கு உதவி செய்தவர்களுக்கு தகவல் ஆணையர்கள் பணி நியமனம் மூலம் செஞ்சோற்று கடன் தீர்த்திருக்கிறார் ஜெ. ஜெயலலிதா.
தகவல் பெறும் உரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டதன் நோக்கமே அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மை ஏற்படுத்த வேண்டும்; ஊழலை தடுக்க வேண்டும் என்பதற்காகத் தான். ஆனால், தகவல் ஆணையர்களை நியமிப்பதிலேயே வெளிப்படைத் தன்மை கடைபிடிக்கப்படுவதில்லை என்பது தான் கொடுமை. தகவல் ஆணையர்களை முதலமைச்சர், முதலமைச்சரால் நியமிக்கப்படும் அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரைக் கொண்ட குழுவின் பரிந்துரைப்படி தான் நியமிக்கப்பட வேண்டும் என்று தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் 15 (3) ஆவது பிரிவில் தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. ஆனால், அதை மதிக்காமல் எதிர்க்கட்சித் தலைவரிடம் கருத்து மட்டும் கேட்டுக் கடிதம் எழுதுவதும், அக்கடிதம் அவருக்கு கிடைப்பதற்கு முன்பே கூட்டத்தைக் கூட்டி தகவல் ஆணையர்களை நியமிப்பதும் அந்த சட்டத்தின் நோக்கத்தையே சிதைக்கும் செயல் என்பதில் எள் முனையளவு கூட ஐயமில்லை.
முந்தைய தி.மு.க. ஆட்சியிலும் தகவல் ஆணையர்களை நியமிப்பதில் இத்தகைய அணுகுமுறை தான் கடைபிடிக்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் அவசர, அவசரமாக அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரைக் கூட அழைக்காமல் கூட்டத்தைக் கூட்டி இ.ஆ.ப. அதிகாரி பி.ஏ.இராமையா, சி. மனோகரன், ஆறுமுகநயினார் ஆகியோர் தகவல் ஆணையர்களாக நியமிக்கப்பட்டனர். இதற்கு அப்போதைய ஆளுனரான பர்னாலாவிடம் ஒரேநாளில் அனுமதி பெறப்பட்டது. ஆனால், விதிமுறைகளை மீறிய இந்த நியமனம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் பின்நாளில் தீர்ப்பளித்தது. அத்தீர்ப்பிலிருந்து இப்போதைய அரசு பாடம் கற்கவில்லை.
தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் பல பதவிகள் காலியாக இருப்பதையும், அவற்றை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும் முதன்முதலில் நான் தான் குரல் கொடுத்தேன். இதற்காக 22.06.2015 அன்று சென்னையில் போராட்டம் நடத்தினேன். ஆனால், இப்போது நியமிக்கப்பட்டுள்ள தலைமைத் தகவல் ஆணையர் மற்றும் தகவல் ஆணையர்களின் பின்னணியை பார்க்கும் போது இந்த நியமனமே தேவையில்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது. அரசின் செயல்பாடுகள் குறித்த தகவல்களை வழங்குவது தான் தகவல் ஆணையர்களின் பணி ஆகும். ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரை தகவல்களை கசிய விடாமல் பாதுகாப்பவர்களும், ஆளுங்கட்சிக்கு விசுவாசமாக பணியாற்றுபவர்களும் தான் தகவல் ஆணையர்களாக நியமிக்கப்படுகின்றனர். முந்தைய ஆட்சியில் தலைமைத் தகவல் ஆணையராக நியமிக்கப்பட்ட ஸ்ரீபதி, இப்போது தலைமைத் தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள இராமானுஜம் ஆகிய இருவருமே ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் தான். இவர்கள் தகவல் மறைப்பு ஆணையர்களாக செயல்படுவார்களே தவிர தகவல் வழங்கும் ஆணையர்களாக செயல்பட மாட்டார்கள்.
தமிழக காவல்துறையின் தலைமை இயக்குனராக இராமானுஜம் நியமிக்கப்பட்டதில் ஏராளமான சர்ச்சைகள் உள்ளன. அது குறித்து எவரேனும் தகவல் கேட்டால், அதற்கு இராமானுஜத்தின் எதிர்வினை எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதிலிருந்தே தகவல் ஆணையம் எவ்வாறு செயல்படும் என்பதை உணர்ந்து கொள்ள முடியும். மொத்தத்தில் தமிழகத்தில் தகவல் பெறும் உரிமையை குழி தோண்டி புதைக்க கடந்த ஆட்சியில் குழி தோண்டப்பட்டது; இப்போது அதை மூட கற்கள் அடுக்கப்படுகின்றன என குற்றம் சாட்டியுள்ளார்.
No comments:
Post a Comment