Wednesday, August 5, 2015

வி.வி.மினரல்சுக்கு ஆதரவாக 32 தீர்ப்புகள்.. ஹைகோர்ட் தலைமை நீதிபதி தலையிட ராமதாஸ் கோரிக்கை

சென்னை: தாது மணல் கொள்ளையில் ஈடுபட்டுள்ள வி.வி.மினரல்ஸ் நிறுவனத்துக்கு ஆதரவாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரே நீதிபதியால் 32 தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்வதில் திட்டமிட்டு முட்டுக்கட்டைகள் ஏற்படுத்தப்படுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.இதுதொடர்பாக ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் தாது மணல் கொள்ளையில் ஈடுபட்டுள்ள வி.வி. மினரல்ஸ் நிறுவனத்துக்கு ஆதரவாக சென்னை உயர்நீதிமன்றத்தில் 32 தீர்ப்புகள் வழங்கப்பட்டிருப்பதாகவும், அந்த தீர்ப்புகளுக்கு எதிராக மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்வதில் திட்டமிட்டு முட்டுக்கட்டைகள் ஏற்படுத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இச்செய்திகள் பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் அளிக்கின்றன

 
தென் மாவட்டங்களில் வி.வி. மினரல்ஸ் நிறுவனம் சட்டவிரோதமாகவும், சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் தாது மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனம் விதிமுறைகளை மீறி தாது மணல் அள்ளியது பல்வேறு ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.விதிகளை பின்பற்றி நடக்காததால் அந்த நிறுவனம் தாது மணல் அள்ள தடை விதித்து மத்திய அரசு ஆணையிட்டிருந்தது. அதை எதிர்த்து வி.வி. மினரல்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த 32 வழக்குகளில் இந்த நிறுவனத்திற்கு ஆதரவாக ஒற்றை நீதிபதி ஒருவர் தீர்ப்பளித்திருப்பதாகக் கூறப்படுகிறது.மத்திய அரசின் முடிவுக்கு எதிராக நெல்லை மாவட்டத்தில் உள்ள குடிமையியல் நீதிமன்றத்தில் வி.வி. மினரல்ஸ் நிறுவனம் பல வழக்குகளைத் தொடர்ந்துள்ளது. அந்த வழக்குகளில் தீர்ப்பளிக்கப்பட்ட பிறகு தான் இந்த விஷயத்தில் உயர்நீதிமன்றத்தை வி.வி. மினரல்ஸ் அணுக முடியும். ஆனால், அந்த நிறுவனம் அவசர அவசரமாக உயர்நீதிமன்றத்தை அணுகி சாதகமான தீர்ப்புகளை பெற்றிருப்பது பல ஐயங்களை ஏற்படுத்தியிருக்கிறது.அதுமட்டுமின்றி, இவ்வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகளை எதிர்த்து உரிய காலத்தில் மேல்முறையீடு செய்வதும் திட்டமிட்டு தடுக்கப்பட்டிருக்கிறது. நீதிப்பேராணை வழக்குகளில் தீர்ப்பின் ஆணை தயாரான நாளில் இருந்து 30 நாட்களில் மேல்முறையீடு செய்யப்பட வேண்டும். ஆனால், வி.வி. மினரல்ஸ் நிறுவனம் தொடர்பான வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டு 6 மாதங்களாகியும் அதன் சான்றளிக்கப்பட்ட நகல்கள் வழங்கப்படவில்லை.அதுமட்டுமின்றி, அந்த வழக்குகளில் மத்திய அரசின் விளக்கத்தைக் கேட்காமலேயே, வி.வி. மினரல்ஸ் நிறுவனத்திற்கு சாதகமாக தீர்ப்பளிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. சான்றளிக்கப்பட்ட தீர்ப்பாணை குறித்த காலத்தில் வழங்கப்படாவிட்டாலும் கூட, அதைக் காரணம் காட்டி, தீர்ப்பாணை இல்லாமலேயே மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்ய முடியும். ஆனாலும் அந்த வாய்ப்பை மத்திய அரசு வழக்கறிஞர்கள் ஏன் பயன்படுத்தவில்லை என்பதும் தெரியவில்லை.வி.வி. மினரல்ஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்குகளில் தீர்ப்பளிக்கப்பட்ட விதமும், தீர்ப்பாணைகளை வழங்குவதில் திட்டமிட்டு செய்யப்பட்ட காலதாமதமும் நீதித்துறை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை சிதைத்து விட்டன. 2ஜி ஊழல் தொடர்பான வழக்கில் கருத்து தெரிவித்த உச்சநீதிமன்றம், இயற்கை வளங்கள் தேசிய சொத்தாக கருதப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது.தாது மணலை பொறுத்த வரை, அது பொருளாதாரம் சார்ந்த விஷயம் மட்டுமல்ல. நாட்டின் பாதுகாப்பு தொடர்புடைய விஷயமும் ஆகும். அவ்வாறு இருக்கும் போது தாது மணல் குவாரிகள் தீவிர கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட வேண்டும். ஆனால், மத்திய அரசின் விதிகளை மீறும் வி.வி. மினரல்ஸ் நிறுவனத்துக்கு விதிக்கப்பட்ட தடையை உடனடியாக அகற்றுவதும், அதை எதிர்த்து மேல்முறையீடு செய்யவிடாமல் முட்டுக்கட்டை போடுவதும் நீதித்துறை மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு துரோகம் செய்யும் செயலாகும்.ஏழை, எளிய மக்களின் கடைசி நம்பிக்கையாக நீதிமன்றங்கள் தான் உள்ளன. ஆட்சியாளர்களாலோ, அதிகாரிகளாலோ அநீதி இழைக்கப்படும்போது நீதிமன்றங்களை அணுகி நீதி பெறலாம் என்று மக்கள் நம்புகிறார்கள். அந்த நம்பிக்கை தோற்கும் வகையில் நீதிமன்றங்களின் செயல்பாடுகள் அமையக் கூடாது.வி.வி. மினரல்ஸ் நிறுவனத்துக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது யார்? தீர்ப்பாணைகள் குறிப்பிட்ட காலத்திற்குள் மத்திய அரசுக்கு வழங்கப்படாததற்கு காரணம் யார்? என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரியவில்லை. ஆனாலும், வி.வி. மினரல்ஸ் போன்ற நிறுவனங்களுக்கு சாதகமாக ஒருசிலர் செயல்படுவது தொடர்ந்தால், ஏழைகளின் கடைசி நம்பிக்கையாக இருக்கும் மேல்நிலை நீதிமன்றங்கள், பணக்காரர்களின் முதல் நம்பிக்கையாக மாறிவிடும் ஆபத்து இருப்பதை உரியவர்கள் உணர வேண்டும்.எனவே, வி.வி. மினரல்ஸ் நிறுவனம் தொடர்பான வழக்குகளில் தவறு செய்தவர்கள் யார்? என்பதை கண்டறிவதுடன், இனியும் இத்தகைய தவறுகள் நடக்காமல் தடுக்க சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதன் மூலம் காலம் காலமாக கட்டிக்காக்கப்பட்டு வரும் சென்னை உயர்நீதிமன்றத்தின் மாண்பை பாதுகாக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: