பா.ம.க. முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் என அக்கட்சி தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்ததையடுத்து, அவர் வெளியிட்டும் அறிக்கை, செய்தியாளர்கள் சந்திப்பு, பொதுக்கூட்டங்கள் என அனைத்திலும் முதல்வர் வேட்பாளர் என்ற வாசகம் இடம்பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இதுதவிர சமூக வலைதளங்கள் மற்றும் பிற தொழில்நுட்ப வளர்ச்சியையும் பாமக சரியான முறையில் பயன்படுத்த ஆரம்பித்தது.
இதைத்தொடர்ந்து 'மாற்றம் முன்னேற்றம் அன்புமணி' என தமிழகம் முழுவதும் போஸ்டர்களை ஒட்டி கோவையில் மிகப்பெரிய மாநாடு நடத்தியது பாமக. தொடர்ந்து வேலூர், மதுரையிலும் மிகப்பெரிய மாநாடுகளை அக்கட்சி நடத்தியது. சமூக வலைதளங்களில் பிரபலமானது பாமக வெளியிட்ட மாற்றம், முன்னேற்றம், அன்புமணி என்ற வாசகம்தான்.
இந்தநிலையில் சென்னை லயோலா கல்லூரியின் மக்கள் ஆதரவு மையம் அண்மையில் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவு ஒன்றை வெளியிட்டது. அதில், அடுத்த முதல்வராகும் வாய்ப்பு ஜெயலலிதாவிற்கு 32 சதவீதமும், மு.க.ஸ்டாலினுக்கு 28 சதவீதமும், கலைஞருக்கு 21.33 சதவீதமும், விஜயகாந்திற்கு 6.24 சதவீதமும், அன்புமணிக்கு 2.27 சதவீதமும், வைகோவுக்கு 1.85 சதவீதமும், சீமானுக்கு 1.84 சதவீதமும், திருமாவளவனுக்கு 1.13 சதவீதமும், ஜி.கே.வாசனுக்கு 1 சதவீதமும், தமிழிசைக்கு 0.93 சதவீதமும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி 5வது இடத்துக்கு தள்ளப்பட்டதால், பொதுவாக சிறந்த முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்ற வினாவிற்கு ஒவ்வொரு கட்சியிலும் ஒருவருக்கு மட்டும் தான் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். இதுவரை நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளில் இந்த முறை தான் கடைபிடிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் முதன்முறையாக திமுக சார்பில் மு.க.ஸ்டாலின், கலைஞர் என இருவாய்ப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. கருத்துக்கணிப்பு என்ற பெயரில் ஒரு தரப்பான கருத்தை திணிப்பது அழகல்ல. இது மிக மோசமான அரசியல் கருத்து வணிகமாகவே மக்களால் பார்க்கப்படும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில் தனது அடுத்த வாசகத்தை வெளியிட்டுள்ளது பாமக. முதல் நாள் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கு என்பதே அந்த புதிய வாசகம். ஆட்சிக்கு வந்த முதல் நாள் போடும் முதல் கையெழுத்து மது விலக்கு குறித்தே என்பதை விளக்குகிறது இந்த வாசகம். இந்த புதிய வாசகத்தை அன்புமணியும், அவரது கட்சியினரும் தனது பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்டவற்றிலும் பிரமோட் செய்து வருகின்றனர்.
No comments:
Post a Comment