நடிகர் திலகத்திற்கு அரசே மணிமண்டபம் அமைக்கும் முடிவு வரவேற்கத்தக்கது என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு சென்னை அடையாறு பகுதியில் அரசு செலவில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் ஜெயலலிதா அறிவித்திருக்கிறார். நடிகர் திலகத்திற்கு சிறப்பு சேர்க்கும் வகையிலான தமிழக அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது.
வீரத்தின் அடையாளம் வீரபாண்டிய கட்டபொம்மன், தேசியக்கவி பாரதியார், கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரனார் ஆகியோரின் உருவத்தை தமிழர்களின் மனதில் கொண்டு வந்து நிறுத்திய நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு மணி மண்டபம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக எழுப்பப்பட்டு வருகிறது.
நடிகர் திலகம் 2001 ஆம் ஆண்டில் மறைந்த நிலையில் அவரது முதல் நினைவு நாளுக்குள் மணிமண்டபம் எழுப்பப்பட்டிருந்தால் அது அவருக்கு உண்மையான அஞ்சலியாக இருந்திருக்கும். அவர் மறைந்து 14 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இப்போதாவது மணிமண்டபம் அமைக்க அரசு முன்வந்திருப்பது மன நிறைவளிக்கிறது. சிவாஜியின் மணிமண்டபத்தை அறிவிப்புடன் நிறுத்தி விடாமல் உடனடியாக பணிகளைத் தொடங்க வேண்டும். அதுமட்டுமின்றி, கடற்கரை சாலையிலுள்ள அவரது உருவச்சிலை அங்கேயே நீடிப்பதையும் அரசு உறுதி செய்யவேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment