Tuesday, August 11, 2015

மேகதாது அணைக்கு அரசு அனுமதி தருமா? சதானந்த கவுடா சர்ச்சை உருவாக்க கூடாது: அன்புமணி

பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கர்நாடக மாநிலத்தில் மேகதாது என்ற இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கும்; இதற்கான விண்ணப்பத்தை மத்திய அரசிடம் கர்நாடக அரசு உடனடியாக வழங்கினால், அதற்கான அனுமதியை தாமே பெற்றுத் தரத் தயார் என மத்திய சட்ட அமைச்சர் சதானந்த கவுடா கூறியிருக்கிறார். இரு மாநில உறவுகளை சீர்குலைக்கும் வகையிலான இப்பேச்சு கண்டிக்கத்தக்கது.

தமிழகத்தில் 25 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசனத் தேவைக்காகவும், 5 கோடி பேர் குடிநீர் தேவைக்காகவும், காவிரி நீரையே நம்பியிருக்கிறார்கள். மேகதாது பகுதியில் அணை கட்டப்பட்டால் தமிழகத்திற்கு  சொட்டு  நீர் கூட வராது. இதனால் ஒட்டுமொத்த தமிழகமும் பாலைவனமாக மாறிவிடும் ஆபத்து உள்ளது. இதைத் தடுக்க வேண்டும் என்பதற்காகத் தான் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி அவர்களை 3 முறை  நேரில் சந்தித்தும், கடிதம் எழுதியும் மேகதாது அணை திட்டத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று வலியுறுத்தினேன். நாடாளுமன்ற மக்களவையிலும் இத்திட்டத்தை அனுமதிக்கக்கூடாது என்று கோரினேன்.

இது தொடர்பாக பதிலளித்து கடந்த 09.06.2015 அன்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி  எனக்கு எழுதியக் கடிதத்தில்,‘‘சிவசமுத்திரம் மின்திட்டத்திற்காக கர்நாடக அரசு ஏற்கனவே விண்ணப்பித்தது. மாநிலங்களிடையே பாயும் நதியான காவிரியில் எந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதாக இருந்தாலும் அதுகுறித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தின் கருத்தையும் கேட்க வேண்டும் என்று காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருப்பதால், அந்த மாநிலங்களின் கருத்துக்களைக் கேட்டு, அதையும் விரிவான திட்ட அறிக்கையுடன் இணைத்து அனுப்ப வேண்டும்; அப்போது தான் மாநிலங்களுக்கு இடையிலான கோணத்தில் ஆய்வு செய்ய முடியும் என்று கூறி திட்ட அறிக்கையை அரசு திருப்பி அனுப்பிவிட்டது. இதைத் தவிர வேறு எந்த திட்டத்திற்குமான விரிவான திட்ட அறிக்கையும் நீர்வள ஆணையத்திற்கு வரவில்லை. மேகதாது அணை திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை நீர்வள ஆணையத்திடம் தாக்கல் செய்யப்பட்டால் அதுகுறித்து  காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின் எட்டாவது பிரிவுக்கு உட்பட்டு ஆய்வு செய்யப்படும்’’ என குறிப்பிட்டிருந்தார். அதன்படி, தமிழகம் ஒப்புதல் அளிக்காவிட்டால் மேகதாது திட்டத்திற்கு அனுமதி தரப்படாது என்று அவர் திட்டவட்டமாக கூறிவிட்டார்.

இத்தகைய சூழலில் மூத்த மத்திய அமைச்சர்களில் ஒருவரான சதானந்த கவுடா, மேகதாது திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கும் என்றும், இதற்கான அனுமதியை கர்நாடக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுத் தருவார்கள் என்றும் கூறுவது தேவையில்லாத சர்ச்சையை ஏற்படுத்தும். நதிநீர் விவகாரங்கள் குறித்து இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் மத்திய அமைச்சரவைக்கும், பிரதமருக்கும் மட்டுமே உள்ளது. இந்த விஷயத்தில் மத்திய அமைச்சரவைக்கு பரிந்துரை செய்ய வேண்டியது நீர்வளத்துறை அமைச்சர் தான். மேகதாது அணை திட்டத்திற்கு அனுமதி கோரி கர்நாடகம் விண்ணப்பித்தால் கூட, காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி அத்திட்டத்திற்கு  தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒப்புதல் இருந்தால் மட்டுமே அந்த விண்ணப்பத்தை மத்திய அரசு பரிசீலிக்கும் என்று அமைச்சர் உமாபாரதி தெளிவாக கூறிவிட்டார்.

அவ்வாறு இருக்கும்போது  இத்திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கும் என எந்த அடிப்படையில் அமைச்சர் சதானந்த கவுடா கூறுகிறார் எனத் தெரியவில்லை. அதுமட்டுமின்றி, ஒட்டுமொத்த நாட்டுக்கும் அமைச்சராக செயல்பட வேண்டிய சதானந்த கவுடா தாம் சார்ந்திருக்கும் மாநிலத்தின் நலனுக்காக மட்டும்  குரல் கொடுப்பது ஆரோக்கியமானது அல்ல. எனவே, மேகதாது அணை சிக்கலில் இரு மாநில உறவுகளை பாதிக்கும் வகையிலும், சர்ச்சையை ஏற்படுத்தும் வகையிலும் பேசுவதை சதானந்தகவுடா தவிர்க்க வேண்டும்.

மேகதாது அணை தொடர்பான சர்ச்சை எழுவதற்கு காரணமே காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை செயல்படுத்துவதற்கான காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாதது தான் என்பதை மத்திய அரசு உணர வேண்டும். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர் உமாபாரதி ஆகியோரை இருமுறை  சந்தித்து வலியுறுத்தினேன். நாடாளுமன்றத்திலும் இது குறித்து பேசியுள்ளேன். இது தமிழக விவசாயிகளின் வாழ்வாதார பிரச்சினை மட்டுமல்ல... சட்டம்-ஒழுங்கு சம்பந்தப்பட்ட பிரச்சினையும் ஆகும். எனவே, காவிரி நதி நீர் பகிர்வு தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளுக்கும் முடிவு கட்டும் வகையில் காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்குமுறை குழு ஆகியவற்றை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும். 

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: