திருப்பெரும்புதூர் விமான நிலையப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பன்னாட்டு வானூர்திப் போக்குவரத்து வரைபடத்தில் சென்னையின் முக்கியத்துவம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. சென்னை விமான நிலையம் வழியாக பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதற்கு ஈடு கொடுக்கும் வகையில் சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைக்கும் பணிகள் வேகம் பெறாதது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் 1152 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கிறது. கடந்த 2005 ஆம் ஆண்டில் இந்த விமான நிலையத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை ஆண்டுக்கு 50 லட்சமாக இருந்தது. கடந்த 10 ஆண்டுகளில் இது படிப்படியாக அதிகரித்து ஆண்டுக்கு 1.43 கோடி பேர் என்ற அளவை எட்டியிருக்கிறது. இது மேலும் அதிகரிக்கும் என்பதால் எதிர்காலத் தேவையைக் கருத்தில் கொண்டு சென்னைக்கான இரண்டாவது விமான நிலையத்தை திருப்பெரும்புதூரில் அமைக்க முடிவெடுக்கப்பட்டது. அதன்பின் 17 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், புதிய விமான நிலையத்தை அமைப்பதற்கான நிலம் அடையாளம் காணப்பட்டதைத் தவிர வேறு பணிகள் எதுவும் நடக்க வில்லை.
திருப்பெரும்புதூர் விமான நிலையம் மொத்தம் 5,000 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படவுள்ளது. இதற்கு ரூ.20,000 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. விமான நிலையம் அமைப்பதற்காக 7 கி.மீ. நீளத்திற்கும், 4 கி.மீ. அகலத்திற்கும் பறந்து விரிந்து கிடக்கும் 7,000 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்கான சாத்தியக் கூறு ஆய்வுகளும் நடத்தப்பட்டுவிட்டன.
சென்னையின் இரண்டாவது விமான நிலையத்தை அமைக்க திருப்பெரும்புதூரை விட சிறந்த இடம் இல்லை என இந்திய விமான நிலையங்கள் ஆணையம் தெரிவித்திருக்கிறது. இவ்வளவுக்குப் பிறகும் இந்த விமான நிலையத்தை அமைக்கும் பணிகள் தொடங்கப்படாததற்கான காரணத்தை விளங்கிக் கொள்ள முடியவில்லை. கடந்த 29.06.2013 அன்று அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நடைபெற்ற உட்கட்டமைப்பு திட்டங்கள் தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் திருப்பெரும்புதூர் விமான நிலையம் அமைக்கும் பணிகளை ஓராண்டுக்குள் தொடங்க முடிவெடுக்கப்பட்டது. ஆனால், அதன்பின் 2 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், பணிகள் தொடங்குவதற்கான அறிகுறி கூட தென்படவில்லை.
திருப்பெரும்புதூர் விமான நிலையத்துடன் திட்டமிடப்பட்ட ஹைதராபாத், பெங்களூர் பசுமைவெளி விமான நிலையங்கள் 2008 ஆம் ஆண்டில் திறக்கப்பட்டு விட்டன. ஆனால், இங்கு பணிகள் கூட தொடங்கப்படவில்லை. இதில் தற்போதைய தமிழக அரசு ஆர்வம் காட்டாதது தான் தாமதத்திற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. விமான நிலையத்திற்கான பணிகள் தொடங்கக் கோரும் விண்ணப்பத்தை மத்திய அரசிடம் மாநில அரசு தாக்கல் செய்யவேண்டும். ஆனால், இதுவரை தமிழக அரசு இதற்காக விண்ணப்பிக்கவில்லை. தமிழகத்திற்கு தொழில் முதலீட்டை ஈர்க்க உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்துவதாகவும், தொலைநோக்குத் திட்டம் 2023&ஐ செயல்படுத்துவதாகவும் நாடகங்களை அரங்கேற்றி வரும் அரசு, அதற்கு அவசியமான விமான நிலையத் திட்டத்தில் அலட்சியம் காட்டுவது கண்டிக்கத்தக்கது. மிகப்பெரிய தொழில் மையமாக திருப்பெரும்புதூர் உருவாகி வரும் நிலையில் அங்கு விமான நிலையம் அமைக்கப்பட்டால் அப்பகுதி மேலும் வளர்ச்சியடைய வாய்ப்புள்ளது. சென்னை & பெங்களூர் தொழில் தாழ்வாரத்தில் திருப்பெரும்புதூரில் சிறப்பு பொருளாதார மண்டலம், வேலூர் மாவட்டத்தில் தோல் பொருள் தொழிற்சாலைகள், ஓசூரில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் இருப்பதால் திருப்பெரும்புதூரில் விமான நிலையம் அமைக்க வேண்டியது அவசியம் ஆகும்.
சென்னை விமான நிலைய விரிவாக்கத் திட்டத்தின்படி ஏற்கனவே உள்ள இரு பழைய முனையங்களில் இரு புறமும் 2 புதிய முனையங்கள் கட்டப்பட்டன. இதன்மூலம் கூடுதலாக ஆண்டுக்கு 1.4 கோடி பயணிகளை கையாளும் திறன் ஏற்படுத்தப்பட்டது. இதன்மூலம் அதன் பயணிகள் கையாளும் திறன் ஆண்டுக்கு 3 கோடியாக உயர்ந்துள்ளது. ஆனால், இப்போது ஆண்டுக்கு 1.43 கோடி பயணிகளை கையாளும் சென்னை விமான நிலையம் 2019-20 ஆம் ஆண்டில் அதன் முழுத் திறனை எட்டிவிடும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது (As part of expansion project two new Terminal Buildings have been constructed on both sides of the old terminals. The additional Capacity such made is 14 mppa.The ultimate airport capacity is estimated to be 30 mppa and is forecasted that the traffic will reach to this saturation level by the year 2019-20-The present traffic is 14.3 mppa).சென்னை விமான நிலையத்தை இனியும் விரிவுபடுத்துவது சாத்தியமில்லை என்பதால், அதற்குள் புதிய விமான நிலையம் அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட வேண்டும். புதிய விமான நிலையம் அமைக்க அதிக காலம் ஆகும் என்பதால், அதற்கான பணிகளை உடனடியாக தொடங்கினால் மட்டுமே 2019&20 ஆம் ஆண்டில் பணிகளை முடிக்க இயலும். எனவே, திருப்பெரும்புதூர் விமான நிலைய பணிகளை உடனடியாக தொடங்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருப்பெரும்புதூர் விமான நிலையத் திட்டத்தை பொதுத்துறை & தனியார் துறை கூட்டு முயற்சியில் செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. இது தேவையற்ற பிரச்சினைகளுக்கு வழி வகுக்கும். எனவே, விமான நிலையத்தை அமைத்தல் மற்றும் பராமரித்தல் பணிகளை விமான நிலையங்கள் ஆணையத்தின் மூலமாக மத்திய அரசே மேற்கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி, சென்னை மற்றும் திருப்பெரும்புதூர் விமான நிலையங்களை இணைக்கும் வகையில் அதிவேக பறக்கும் சாலை, மற்றும் தொடர்வண்டிப் பாதைகளையும் அமைக்க வேண்டும். அதற்கான பணிகளும் உடனடியாக தொடங்கப்பட வேண்டும். இதற்கெல்லாம் மேலாக விமான நிலையத்திற்கு நிலங்களைக் கையகப்படுத்தும் போது அதனால் பொது மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment