Thursday, August 13, 2015

மீத்தேன் திட்டம் போச்சு, பாறை எரிவாயு திட்டம் வந்தது டும்டும்டும்.. ராமதாஸ் எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் பாறை எரிவளி திட்டத்தை செயல்படுத்த கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்தியுள்ள பாமக, இத்திட்டம் தொடர்பாக, தமிழக அரசு தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.ADVERTISEMENTபாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர், ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தின் காவிரிப் படுகையில் 9 பகுதிகளில் 35 இடங்களில் பாறை எரிவளியை (shale gas) பிரித்து எடுக்கும் திட்டத்திற்கு அனுமதி கோரி, மத்திய அரசுக்கு எண்ணை மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனமான ஓ.என்.ஜி.சி விண்ணப்பித்திருக்கிறது.சுற்றுச்சூழலுக்கும், விவசாயத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய இத்திட்டத்தை செயல்படுத்த ஓ.என்.ஜி.சி துடிப்பது கண்டிக்கத்தக்கது. இந்தியாவில் பாரம்பரிய முறையில் எடுக்கப்படும் இயற்கை எரிவளி வளம் குறைந்துவிட்ட நிலையில், பாறைகளுக்கு நடுவே புதைந்திருக்கும் எரிவளியை பாறையை உடைத்து வெளிக்கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது.இந்தியாவில் மொத்தம் 2000 லட்சம் கோடி கன அடி அளவுக்கு பாறை எரிவளி இருப்பதாகவும், அவற்றில் 90 லட்சம் கோடி கன அடி பாறை எரிவளியை எடுக்க முடியும் என்றும், மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் கண்டறிந்திருக்கிறது. இந்த எரிவளியை எடுப்பதன் மூலம், அடுத்த 26 ஆண்டுகளுக்கு இந்தியாவின் எரிசக்தி தேவையை நிறைவேற்ற முடியும் என்பதால் பாறை எரிவளித் திட்டத்தை செயல்படுத்த முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தீர்மானித்தது.தமிழ்நாட்டில் 9 பகுதிகள் உட்பட இந்தியா முழுவதும் 56 இடங்களில் பாறை எரிவளி எடுப்பதற்கு ஓ.என்.ஜி.சி மற்றும் ஆயில் இந்தியா ஆகிய நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி தமிழகத்தில் பாறை எரிவளியையும், பாறை எண்ணையையும் எடுக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு ஓ.என்.ஜி.சி கடந்த ஜூன் மாதம் 29ம் தேதி கடிதம் எழுதியுள்ளது.மத்திய அரசும், இந்த அனுமதியை வழங்குவது குறித்து தீவிரமாக ஆய்வு செய்து வருவதாக தெரிகிறது. காவிரிப்படுகையில் அதிக அளவில் காணப்படும் மீத்தேன் எரிவளியை எடுக்க முந்தைய தி.மு.க ஆட்சி காலத்தில் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டிருந்ததால் அதற்கான நடவடிக்கைகள் சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்படவிருந்தன. அதனால் காவிரிப்படுகையில் மிக மோசமான பாதிப்புகள் ஏற்படும் என்பதால் அதற்கு எதிராக மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் வெடித்தன.அதன்பயனாக அந்த முயற்சி, முறியடிக்கப்பட்ட நிலையில், அதைவிட பெரும் ஆபத்தாக பாறை எரிவளித் திட்டத்தை செயல்படுத்த ஓ.என்.ஜி.சி துடிக்கிறது. மீத்தேன் எரிவளி திட்டத்தைவிட பாறை எரிவளித் திட்டம் மிகவும் ஆபத்தானது. மீத்தேன் திட்டம் சில ஆயிரம் அடி ஆழத்தில் சாதாரண நிலையில் இருக்கும் மீத்தேன் வாயுவை பிரித்து எடுப்பதாகவும். பாறை எரிவளி எந்பது பல கிலோ மீட்டர் ஆழத்தில் பாறைகளுக்கு நடுவே புதைந்துள்ள எரிவளியை பிரித்து எடுப்பதாகும்.பாறை எரிவளித் திட்டம் செயல்படுத்தப்பட்டால், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், அரியல், கடலூர் ஆகிய மாவட்டங்களில் விவசாயம் அழிவதுடன் மக்கள் வாழ முடியாத நிலை உருவாகிவிடும். 5 கோடி பேருக்கு குடிநீர் கிடைக்காத நிலை ஏற்படும். மொத்தத்தில் தமிழகம் பாலைவனமாகிவிடும். உலகின் பல நாடுகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் போதிலும், அவையெல்லாம் மக்கள் வசிக்காத பகுதிகள். தமிழகத்தில் இத்திட்டத்திற்காக காவிரிப்படுகையை அழிக்க முயல்வது கண்டிக்கத்தக்கது.இத்திட்டம் குறித்த நிலைப்பாட்டை தமிழக அரசு விளக்க வேண்டும். பாறை எரிவளித் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்தக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். தமிழ்நாட்டை பாலைவனமாக்கும், பாறை எரிவளித் திட்டத்தை கைவிட வலியுறுத்தி காவிரிப் பாசன மாவட்ட தலைநகரங்களில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் நடத்தப்படும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்
 

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: