கருத்துக்கணிப்பு என்ற பெயரில் ஒரு தரப்பான கருத்தை திணிப்பது அழகல்ல. இது மிக மோசமான அரசியல் கருத்து வணிகமாகவே மக்களால் பார்க்கப்படும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னையை சேர்ந்த மக்கள் ஆய்வு என்ற அமைப்பின் சார்பில் தமிழகம் 2016 - ஒரு முன்னோட்டம் என்ற தலைப்பில் தேர்தல் குறித்த முன்னோட்ட கருத்து கணிப்புகள் நடத்தப்பட்டு இன்று வெளியிடப்பட்டுள்ளன. கருத்துக்கணிப்பு முடிவுகள் உண்மையை வெளிப்படுத்துவதற்கு மாறாக நகைப்பை வரவழைக்கும் வகையில் அமைந்திருக்கின்றன.
கருத்துக்கணிப்பில் சிறந்த முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற வினாவிற்கு ஜெயலலிதாவிற்கு சாதகமாக 31 விழுக்காட்டினரும், ஸ்டாலினுக்கு சாதகமாக 27 விழுக்காட்டினரும், கலைஞருக்கு சாதகமாக 21 விழுக்காட்டினரும் கருத்து தெரிவித்துள்ளனர். பா.ம.க முதலமைச்சர் பதவிக்கான வேட்பாளர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்க்கு ஆதரவு குறைவாக இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. பொதுவாக சிறந்த முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்ற வினாவிற்கு ஒவ்வொரு கட்சியிலும் ஒருவருக்கு மட்டும் தான் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். இதுவரை நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளில் இந்த முறை தான் கடைபிடிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் முதன்முறையாக திமுக சார்பில் மு.க.ஸ்டாலின், கலைஞர் என இருவாய்ப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன.
திமுகவுக்கு ஆதரவாக, குறிப்பாக மு.க.ஸ்டாலினுக்கு சாதகமாக ஒரு கருத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே இப்படி ஒரு கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. திமுகவின் முதலமைச்சர் பதவிக்கான வேட்பாளர் யார் என்பது குறித்து கலைஞருக்கும், மு.க. ஸ்டாலினுக்கும் இடையே மோதல் நிலவி வரும் நிலையில், அப்பதவிக்கு மு.க.ஸ்டாலின் முன்னிருத்தப்பட வேண்டும் என்பதற்காகவே, திமுக தலைவர் கலைஞரை விட ஸ்டாலினுக்கு அதிக செல்வாக்கு இருப்பது போல காட்டப்பட்டிருப்பதாக ஊடகத்துறையில் பேசப்படுகிறது. இதற்கு முன் 2007ம் ஆண்டில் திமுகவின் அடுத்த தலைவர் ஆவதற்கு யாருக்கு அதிக ஆதரவு உள்ளது என்பது குறித்து ஒரு நாளிதழில் திட்டமிட்டு கருத்துத்திணிப்பு வெளியிடப்பட்டதையும், அதைத் தொடர்ந்து மதுரையில் நடந்த நாளிதழ் அலுவலகம் எரிப்பு மற்றும் மூன்று பேர் கொல்லப்பட்ட நிகழ்வுகளையும் தமிழகம் அறியும். இப்போதும் அதே போன்ற ஒரு கருத்துத் திணிப்பு முயற்சி தான் அரங்கேற்றப்பட்டிருக்கிறது.
இந்தக் கருத்துக்கணிப்பு முடிவுகளில் பல இடங்களில் முரண்பாடுகள் அப்பட்டமாகத் தெரிகின்றன. ஜெயலலிதா முதலமைச்சராக வேண்டும் என்று 31.56 விழுக்காட்டினர் விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், அதைவிட அதிகமாக அதிமுக ஆட்சி அமைக்க வேண்டும் என 34.10 விழுக்காட்டினர் கருத்து தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் கலைஞருக்கும், மு.க. ஸ்டாலினுக்கும் சாதகமாக 49.31 விழுக்காட்டினர் கருத்து தெரிவித்துள்ள நிலையில், திமுக ஆட்சி அமைக்க வேண்டும் என்று 32.6 விழுக்காட்டினர் மட்டுமே கூறியுள்ளனர். அதே போல் பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சி அமைவதற்கு 11.9 விழுக்காட்டினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் பா.ம.கவின் முதலமைச்சர் வேட்பாளருக்கு அதைவிட குறைந்த ஆதரவே காணப்படுவதாக கருத்துக்கணிப்பில் கூறப்பட்டிருக்கிறது. முரண்பாட்டின் மொத்த உருவமாக அமைந்துள்ள இந்தக் கருத்துக்கணிப்பை எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
கருத்துக்கணிப்பை நடத்தி, அதன் முடிவுகளை வெளியிடுவதில் காட்டப்பட்ட அவசரமும், கருத்துக்கணிப்புக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட மாதிரிகளும் பல்வேறு உள்நோக்கங்களை அம்பலப்படுத்துவதாக அமைந்திருக்கின்றன. திமுகவின் செல்வாக்கு அதலபாதாளத்திற்கு சென்றுவிட்ட நிலையில் அதை தூக்கி நிறுத்தவும், மு.க. ஸ்டாலினை கூட்டணி தலைவராக ஏற்கும்படி சிறிய கட்சிகளுக்கு நிர்பந்தம் அளிக்கவும் வசதியாகவே மு.க.ஸ்டாலின் ஆதரவுடன் மு.க. ஸ்டாலினுக்கு ஆதரவாக இப்படி ஒரு கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் இன்று பற்றி எரியும் பிரச்சனை மது ஒழிப்பு தான். இந்த விஷயத்தில் ஒட்டுமொத்த தமிழகமே பாட்டாளி மக்கள் கட்சியின் பின்னால் அணிவகுத்து நிற்கிறது. ஆனால் இந்தக் கருத்துக்கணிப்பில் மதுவிலக்குக் குறித்து எந்த வினாவும் எழுப்பபடவில்லை. பாட்டாளி மக்கள் கட்சியின் செல்வாக்கை மறைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டிருக்கிறது என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் தேவையில்லை.
ஒரு மாநிலத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தவிருக்கும் தேர்தலில் மக்களின் மனநிலையை அறிய வேண்டுமானால், விரிவான முறையில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இந்தக் கருத்துக்கணிப்பு மொத்தம் 80 தொகுதிகளில் 3500 பேரிடம் மட்டுமே அதாவது ஒரு தொகுதியில் 43 பேரிடம் மட்டுமே நடத்தப்பட்டிருக்கிறது. ஐந்தரை கோடி வாக்காளர்கள் தீர்மானிக்க வேண்டிய விஷயத்தை அதில் பத்தாயிரத்தில் ஒரு பங்கு கூட இல்லாதவர்களின் மூலம் தீர்மானிக்க விரும்புவது அபத்தம் மட்டுமின்றி, ஜனநாயகத்தை கொச்சைப்படுத்தும் செயல் ஆகும்.
மக்கள் ஆய்வு அமைப்பின் தலைவரான முனைவர் இராஜநாயகம் சென்னை இலயோலா கல்லூரியின் அங்கமாக இருந்து இது போன்ற ஏராளமான கருத்துக்கணிப்புகளை நடத்தியுள்ளார். அவை பெரும்பாலும் சரியாகவே இருந்திருக்கின்றன. ஆனால் இப்போது தனியாக அவர் நடத்தி வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகள் நம்பகத்தன்மை அற்றவையாக உள்ளன. எவருக்கேனும் ஆதரவாக கருத்து தெரிவிக்க வேண்டும் என்றால் அதை வெளிப்படையாக செய்யலாம். அதைவிடுத்து கருத்துக்கணிப்பு என்ற பெயரில் ஒரு தரப்பான கருத்தை திணிப்பது அழகல்ல. இது மிக மோசமான அரசியல் கருத்து வணிகமாகவே மக்களால் பார்க்கப்படும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment