அன்புள்ள தி.மு.க. பொருளாளர் நண்பர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். நலம், நலம் வாழ வாழ்த்துக்கள்!
தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வைத் தவிர அனைத்துக் கட்சிகளும் மதுவிலக்கு தேவை என வலியுறுத்திய பிறகு, கடைசியாக உங்கள் கட்சித் தலைவர் கலைஞர்,‘‘தமிழ்நாட்டில் தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சமுதாய மாற்றத்திற்கும், ஏற்றத்திற்கும் வழி வகுக்கும் வகையில் மதுவிலக்கை அமல்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும்’’ என்று சமீபத்தில் அறிவித்தார். இந்த அறிவிப்பை நான் வரவேற்கிறேன். மதுவிலக்கை வலியுறுத்தி மருத்துவர் அய்யா அவர்கள் கடந்த 35 ஆண்டுகளாக உழைத்த உழைப்புக்கும், 26 ஆண்டுகளாக பா.ம.க. நடத்திய போராட்டங்கள், உச்சநீதிமன்றம் வரை சென்று போராடி 604 மதுக்கடைகளை மூடியது ஆகியவற்றுக்கும் கிடைத்த வெற்றி காரணமாகவே இன்று மதுவிலக்கு என்பது அனைத்துக் கட்சிகள் மற்றும் மக்கள் இயக்கமாக மாறியிருக்கிறது. இதைத் தொடர்ந்து உங்களுக்கும், உங்கள் கட்சித் தலைவருக்கும் மனமாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இதற்கும் மருத்துவர் அய்யாவும், பாட்டாளி மக்கள் கட்சியும் தான் காரணம் என்பது எங்களுக்கு பெருமையாக இருக்கிறது.
ஆனாலும், தமிழகத்தின் இன்றைய நிலைமை மிகுந்த வருத்தமளிக்கிறது. 4 வயது குழந்தை கூட மது குடிப்பதும், 12,13 வயது சிறுவர்கள் கூட குடித்துவிட்டு போதையில் பள்ளிக்கு செல்வதும், 15, 16 வயது இளம் பெண்கள் குடித்து விட்டு தகராறு செய்வதும் அன்றாட நிகழ்வுகளாக மாறிவிட்டன. இளைய சமுதாயத்தின் இந்த அவலநிலைக்கும், கலாச்சார சீரழிவுக்கும் முக்கியக் காரணம் கடந்த 44 ஆண்டுகளுக்கு முன் மது விலக்கை கலைஞர் ரத்து செய்தது தான் என்பதை யாரும் மறுக்க முடியாது. இன்று 3 தலைமுறைகள் மதுவுக்கு அடிமையானதற்கும், லட்சக்கணக்கானோர் இறந்ததற்கும், பல்லாயிரக்கணக்கான இளம் விதவைகளை உருவானதற்கும், கோடிக்கணக்கான குடும்பங்கள் நிம்மதியை இழந்ததற்கும் காரணம் அதிமுகவும், திமுகவும் தான் என்பது நாடறிந்த உண்மை. இந்த நேரத்தில் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் மதுவிலக்கை நடைமுறைப் படுத்தப்போவதாக உங்கள் கட்சித் தலைவர் கலைஞர் அறிவித்திருப்பது மக்கள் மீது கொண்டுள்ள உண்மையான அக்கறை காரணமாகவா... அல்லது விரைவில் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் காரணமாகவா? என்ற ஐயம் அனைவர் மனதிலும் ஏற்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தப் போவதாக கடந்த 20 ஆண்டுகளில் 5 முறை வாக்குறுதி அளித்தவர் கலைஞர். இந்த காலத்தில் 10 ஆண்டுகள் கலைஞர் முதலமைச்சராக இருந்திருக்கிறார். ஆனால், மதுவிலக்கை நடைமுறைப்படுத்தவில்லை. இந்த நிலையில் தான் ஆறாவது முறையாக மதுவிலக்கு வாக்குறுதியை கலைஞர் வழங்கியிருக்கிறார். கடந்த 20 ஆண்டுகளில் 10 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்ததைப் பயன்படுத்தி மதுவிலக்கை நடைமுறைப்படுத்தியிருந்தால் தமிழகம் இன்று நிம்மதியாக இருந்திருக்கும். கடந்த 22.12.2008 அன்று உங்கள் தலைவரும், அப்போதைய முதலமைச்சருமான கலைஞரை மருத்துவர் அய்யா அவர்கள் சந்தித்து தமிழ்நாட்டில் உடனடியாக மதுவிலக்கை கொண்டு வாருங்கள் என கெஞ்சாத குறையாக மன்றாடினார். அதையேற்று தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று கலைஞர் அறிவித்தார். அதை செயல்படுத்தியிருந்தால் தமிழகம் இன்று மது இல்லாத மாநிலமாக மாறியிருக்குமே? அதை செய்யாதது ஏன்? என்று தான் மருத்துவர் அய்யாவும், நானும் கேட்கிறோம். ஆனால், உங்களிடமிருந்து பதில் இல்லை.
இப்போது வெளியிட்டுள்ள மதுவிலக்கு அறிவிப்புக்கு மக்கள் மீது கொண்ட உண்மையான அக்கறை காரணமா... அல்லது சட்டமன்றத் தேர்தல் காரணமா? என்பது தெரியவில்லை. உங்கள் கட்சி அறிவிப்பு உண்மையானது என்றால் அதற்கான முன்னோட்டமாக தி.மு.க.வினரும், தி.மு.க. ஆதரவாளர்களும் நடத்தும் மது ஆலைகளை உடனடியாக மூடி உங்களின் அக்கறையை நிரூபிக்கலாமே?
முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட்டால் அனைத்து மது ஆலைகளும் மூடப்பட்டு விடும் என்ற பொது அறிவு (சிஷீனீனீஷீஸீ sமீஸீsமீ) கூட எங்களுக்கு இல்லையா? என நீங்கள் வினா எழுப்பினீர்கள். உங்களை விட எனக்கு பொது அறிவு(சிஷீனீனீஷீஸீ sமீஸீsமீ) குறைவாக இருக்கலாம். ஆனால், மதுவிலிருந்து மக்களைக் காக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வு அதிகமாக இருக்கிறது. நாங்கள் கேட்டது மது விலக்கை நடைமுறைப்படுத்துவதிலும், மக்கள் நலனைக் காப்பதிலும் நீங்கள் எவ்வளவு அக்கறை காட்டுகிறீர்கள்? என்பதை நிரூபிப்பதற்குத் தான். உடனடியாக மது ஆலைகளை மூட முடியாது என அறிவித்திருப்பதன் மூலம் மக்கள் நலனை விட அடுத்த 10 மாதங்களில் உங்கள் கட்சியினருக்கு கிடைக்கவிருக்கும் ரூ.15,000 கோடி வருவாய் தான் முக்கியம் என்பதை வெளிப்படுத்தி விட்டீர்கள். உங்களின் கூற்றுப்படி மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு தான் மது ஆலைகள் மூடப்படும் எனில் அதற்கு இன்னும் 10 மாதங்கள் ஆகும். அதற்குள் கீழ்க்கண்ட பாதிப்புகள் ஏற்படும்.
* தமிழகத்தில் ஒரு நாளைக்கு சராசரியாக 16.2 லட்சம் லிட்டர் மது விற்பனை செய்யப்படுகிறது. இதில் 50 விழுக்காட்டை தி.மு.க. சார்பு ஆலைகள் தான் தயாரிக்கின்றன. அப்படியானால் அடுத்த 10 மாதங்களில் 24.30 கோடி லிட்டர் மது தி.மு.க. மது ஆலைகளில் தயாரித்து விற்பனை செய்யப்படும்.
* தமிழகத்தில் மது குடிப்பதால் ஆண்டுக்கு 2 லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள். அதில் திமுக சார்பு ஆலைகள் தயாரிக்கும் மதுவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சம். அடுத்த 10 மாதத்திற்கு மது ஆலைகளை மூட மாட்டீர்கள் என்றால் உங்கள் கட்சியினர் தயாரிக்கும் மதுவைக் குடித்து இன்னும் 80 ஆயிரம் பேர் உயிரிழப்பார்கள்.
* லட்சக்கணக்கான இளைஞர்களும், குழந்தைகளும், பெண்களும் முதல்முறையாக மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமை ஆவார்கள். உங்கள் கட்சியினருக்கு மட்டும் தான் ரூ.15,000 கோடி வருவாய் கிடைக்கும்.
* தி.மு.க.வினர் நடத்தும் மது ஆலைகள் அதன் உற்பத்தித் திறனுக்கு ஏற்றவாறு தினமும் 6.21 லட்சம் லிட்டர் முதல் 9 லட்சம் லிட்டர் வரை நிலத்தடி நீரை உறிஞ்சும். சராசரியாக ஒரு ஆலைக்கு 7 லட்சம் லிட்டர் என வைத்துக் கொண்டாலும் அடுத்த 10 மாதங்களில் 105 கோடி லிட்டர் நிலத்தடி நீர் உறிஞ்சப்படும். இதனால் நிலத்தடி நீர்மட்டமும், சுற்றுச்சூழலும் மிக மோசமாக பாதிக்கப்படும்.
இவ்வளவு தீமைகள் ஏற்படும் வரை காத்திருக்க வேண்டுமா? நீங்கள் நினைத்தால் தி.மு.க.வினர் நடத்தும் மது ஆலைகளை உடனடியாக மூடி 50 விழுக்காடு மது விலக்கை நாளையே ஏற்படுத்தலாமே? அடுத்த 10 மாதத்திற்குள் புதிய மது ஆலைகளை திறந்து மது உற்பத்தி செய்ய முடியாது என்பதால், நீங்கள் மது ஆலைகளை மூடினால் பாதி மதுவிலக்கு சாத்தியம் என்பது மறுக்க முடியாத உண்மை.
திராவிட இயக்கத்தின் முன்னோடியான தந்தைப் பெரியார், கள்ளை ஒழிக்க வேண்டும் என்பதற்காக தமது தோட்டத்தில் இருந்த 500&க்கும் அதிகமான தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தினார். அவர் வழியில் வந்த தி.மு.க. நிறுவனர் பேரறிஞர் அண்ணா,‘‘மதுவிற்பனையின் மூலம் கிடைக்கும் வருவாய், புழுத்துப்போன தொழுநோயாளி கையில் உள்ள வெண்ணெயை வாங்குவதற்குச் சமம்’’ என்று கூறி மதுக்கடைகளை திறக்க மறுத்தார். மக்கள் மீதும் குழந்தைகள் மீதும் உங்களுக்கு உண்மையான அக்கறை இருந்தால் ஏன் 10 மாதம் காத்திருக்க வேண்டும்? பெரியார் வழியில்.... அண்ணா வழியில் உடனடியாக தி.மு.க. சார்ந்த மது ஆலைகளை மூடவேண்டும்.
அவ்வாறு செய்வதன் மூலம் 80 ஆயிரம் பேர் உயிரிழப்பதை தடுக்கலாம்; லட்சக்கணக்கான இளைஞர்களும், குழந்தைகளும், பெண்களும் மதுவுக்கு அடிமையாகாமல் காப்பாற்றலாம்; பல்லாயிரக்கணக்கான இளம் விதவைகளை உருவாவதைத் தடுக்கலாம்; 105 கோடி லிட்டர் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதை தடுத்து விவசாயத்திற்கு உதவலாம்; கோடிக்கணக்கான குடும்பங்களில் நிம்மதியை ஏற்படுத்தலாம். இதையெல்லாம் செய்வதற்கு உங்களால் முடியும். இவற்றை செய்து கோடிக்கணக்கான குடும்பங்களைக் காப்பாற்றும் பொறுப்பு உங்களிடம் தான் உள்ளது. எனவே, தமிழக மக்கள் மீது உங்களுக்கு உண்மையான அக்கறை இருந்தால் தி.மு.க.வினரின் மது ஆலைகளை மூட ஆணையிடுங்கள் என மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்.
உலக சுகாதார அமைப்பு வகுத்துள்ள விதிகளின் படி மது, புகையிலை தொடர்பான கொள்கைகளை வகுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அரசியல் கட்சிகளும், அவற்றின் தலைவர்களும் அந்த தொழிலில் ஈடுபடக்கூடாது. அவ்வாறு இருக்கும்போது மது ஆலைகளை நடத்திக் கொண்டே மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவோம் என்று நீங்கள் பேசுவது ஆதாய முரண் (சிஷீஸீயீறீவீநீt ஷீயீ மிஸீtமீக்ஷீமீst) அல்லவா?. அதுமட்டுமின்றி, உங்கள் கட்சித் தலைவர் ஒருவருக்கு சொந்தமான கோல்டன் வாட்ஸ் என்ற மது உற்பத்தி நிறுவனம், அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் தங்களிடம் கொள்முதல் செய்யப்படும் மதுவின் அளவு குறைந்துவிட்டதாகவும், அதை அதிகரிக்க ஆணையிட வேண்டும் என்றும் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து சாதகமான ஆணையை பெற்றது. மதுவை விற்று மக்களை கெடுப்பதில் உங்கள் கட்சியினர் இவ்வளவு தீவிரமாக செயல்படும் நிலையில், மதுவிலக்கு பற்றி நீங்கள் பேசுவது வெறும் நாடகம் என்று தான் நினைக்கத் தோன்றுகிறது. எந்த ஒரு அறிவுரையையும் வழங்குவதற்கு முன் அதை சொல்வதற்கு நம்மை நாம் தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். ஒருமுறை மகாத்மா காந்தியிடம் ஒரு தாய் தனது மகனை அழைத்து வந்தார். மகனுக்கு அளவுக்கு அதிகமாக இனிப்பு உண்ணும் பழக்கம் இருப்பதாகவும் அதனை மாற்ற அவனுக்கு அறிவுரை வழங்குமாறும் கேட்டுக் கொண்டாராம்.
அதைக்கேட்ட மகாத்மா, அந்த தாயிடம் பத்து நாட்கள் கழித்து மகனை அழைத்து வரும்படி கூறினார். அதன்படி பின்னர் அழைத்து வரப்பட்ட அந்தச் சிறுவனிடம் இனிப்பு உண்பதால் உண்டாகக் கூடிய தீமைகளை விளக்கிவிட்டு “இனிமேல் அதிகமாக இனிப்பு உண்ணாதே’’ என்று கூறினாராம்.
சிறுவனின் தாய் “இந்த அறிவுரையை பத்து நாட்களுக்கு முன்பே கூறியிருக்கலாமே?’’ என்று கேட்க, அதற்கு மகாத்மா காந்தி “பத்து நாட்களுக்கு முன்பு எனக்கு இனிப்பு உண்ணும் பழக்கம் இருந்தது. என்னிடம் அந்தப் பழக்கத்தை வைத்துக் கொண்டு இந்தச் சிறுவனுக்கு புத்திமதிகூற எனக்கு என்ன தகுதி இருக்கிறது? என் இனிப்பு உண்ணும் பழக்கத்தை விட்டொழிக்க எனக்கு பத்து நாள் அவகாசம் வேண்டியிருந்தது. அதனால் தான் இந்த தாமதம்’’ என்றாராம்.
அதேபோல், மதுவிலக்குக்கு உங்களைத் தகுதிப்படுத்திக் கொள்ளுங்கள். 44 ஆண்டுகளாக மக்கள் மீது மதுவைத் திணித்து லட்சக்கணக்கானோரின் உயிரைப் பறித்து, பல்லாயிரக்கணக்கான இளம் விதவைகளை உருவாக்கி, கோடிக்கணக்கான குடும்பங்களை நாசப்படுத்தியது போதாதா? எனவே, மக்கள் மீது உங்களுக்கு உண்மையான அக்கறை இருந்தால், மதுவிலக்குக்கு உங்களை தகுதிப்படுத்திக் கொள்ளும் வகையில், தி.மு.க.வினர் மற்றும் தி.மு.க. ஆதரவாளர்களுக்கு சொந்தமான மது ஆலைகளை நாளையே மூட ஆணையிடுங்கள். குறைந்தபட்சம் ஆகஸ்ட் 15 ஆம் தேதியாவது மூடி மதுவின் கொடுமைகளிலிருந்து மக்களுக்கு விடுதலை கொடுங்கள்.
இதற்கு முன் பொதுப்பிரச்சினைகள் குறித்து 3 முறையும், மது விலக்கு குறித்து ஒரு முறையும் உங்களுக்கு கடிதம் எழுதினேன். பதில் இல்லை. இந்த முறையும் பதில் வேண்டாம்.இக்கடிதம் கிடைத்த பிறகு தி.மு.க. மது ஆலைகள் மூடப்பட்டால் அதையே எனக்கு பதிலாக கருதிக் கொள்வேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment