Sunday, August 9, 2015

அமைச்சர்கள் மாற்றம்: ஜெயலலிதா விளக்கமளிக்க வேண்டும்; ராமதாஸ்

4 ஆண்டுகளில் 30 அமைச்சர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர், மாற்றம் குறித்து ஜெயலலிதா விளக்கமளிக்க வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழக அமைச்சரவை மீண்டும் ஒரு முறை மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. திருப்பூரைச் சேர்ந்த ஆனந்தன் புதிய அமைச்சராக பதவியேற்றுக் கொண்டிருக்கிறார். இது தமிழக அமைச்சரவையில் செய்யப்படும் 24 ஆவது மாற்றமாகும். இதுவரை மொத்தம் 30 அமைச்சர்கள் பதவி நீக்கப்பட்டுள்ளனர்.

அமைச்சரவையை மாற்றியமைப்பது முதலமைச்சரின் சிறப்பு உரிமையாகும். நிர்வாக வசதிக்காக அமைச்சர்களையோ, அவர்களின் துறைகளையோ எத்தனை முறை வேண்டுமானாலும் முதலமைச்சர் மாற்றியமைக்கலாம்; இதற்கான அதிகாரம் அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது என்பதை நான் அறிவேன். எனினும், அந்த அதிகாரம் ஆக்கபூர்வமான தேவைகளுக்கு மட்டும் தான் பயன்படுத்தப்பட வேண்டும். ஒருவருக்கு எவ்வளவு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறதோ, அதைவிட அதிகமாக அவருக்கு பொறுப்பு இருக்க வேண்டும். ஆனால், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அதிகாரத்தை பயன்படுத்துவதில் உள்ள துடிப்பு பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்பதில் இல்லாமல் போனது தான் தமிழகத்தின் சாபக்கேடு.

2011 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் தேதி ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவை பதவி ஏற்றது. அதில் ஜெயலலிதாவையும் சேர்த்து 34 பேர் இடம் பெற்றிருந்தனர். ஆனால், அவர்களில் 11 பேர் மட்டுமே இதுவரை அமைச்சர் பதவியில் நீடிக்கின்றனர். மீதமுள்ளோர் வெவ்வேறு காலக்கட்டத்தில், வெவ்வேறு காரணங்களுக்காக பதவி நீக்கப்பட்டிருக்கிறார்கள். நிர்வாக வசதிக்காகவே அமைச்சர்கள் மாற்றப்படுகிறார்கள் என்று அரசுத் தரப்பில் கூறப்பட்டாலும், அவர்களின் மாற்றத்திற்கான உண்மையான காரணம்  ஊழல், நிர்வாகத் திறமையின்மை ஆகிய இரண்டில் ஒன்றாகத் தான் இருக்க முடியும். இந்த இரண்டில் ஒரு காரணத்திற்காக நீக்கப்பட்ட அமைச்சர்களுக்கு மீண்டும் பதவி தரப்படக்கூடாது.

ஆனால், ஆர்.பி. உதயகுமார், எஸ்.பி. சண்முகநாதன், எஸ்.பி. வேலுமணி, கோகுல இந்திரா, பி.வி. ரமணா ஆகியோரும், அவர்களுக்குப் பிறகு இப்போது ஆனந்தனும் ஏற்கனவே பதவி நீக்கப்பட்டு இரண்டாவது முறையாக அமைச்சர்களாக்கப்பட்டுள்ளனர். ஊழலோ, நிர்வாகத் திறமையின்மையோ. ஏதோ ஒரு காரணத்திற்காக நீக்கப்பட்டவர்கள் மீண்டும் எதற்காக அமைச்சர்களாக்கப்பட்டனர் என்பதை  புரிந்து கொள்ள முடியவில்லை. ஒருவேளை அவர்கள் ஊழல் புகார்களின் அடிப்படையில் நீக்கப்பட்டு, அவர்கள் மீதான புகாரில் உண்மையில்லை என்ற காரணத்தினால் மீண்டும் பதவி வழங்கப்பட்டதா? அல்லது நிர்வாகத் திறமையின்மைக்காக நீக்கப்பட்டு, அதன்பின் ஏதேனும் ஒரு ஐ.ஐ.எம்.மில் சேர்ந்து நிர்வாகத்திறமை பெற்று வந்ததால் பதவி வழங்கப்பட்டதா? என்பது குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா விளக்கமளிக்க வேண்டும். இதற்கான தார்மீகக் கடமை ஜெயலலிதாவுக்கு உள்ளது.

இவர்கள் இப்படியென்றால் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, என்.ஆர். சிவபதி ஆகியோரின் கதை இன்னும் சுவையானது. இவர்கள் இருவருமே இரு முறை அமைச்சர்களாக்கப்பட்டு, இரு முறை நீக்கப்பட்டவர்கள். இவர்கள் இரண்டாவது முறை அமைச்சராக்கப்பட்ட போது தான் இருவர் மீதும் கடுமையான ஊழல் குற்றச்சாற்றுகள் எழுந்தன. குறிப்பாக அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் ஊழல் வெறியால் நேர்மையான  வேளாண்துறை அதிகாரியான முத்துக்குமாரசாமி தற்கொலை செய்து கொள்ள வேண்டிய அவலம் நேர்ந்தது. ஊழலில் திளைத்த இவர்கள் எந்த அடிப்படையில் மீண்டும் அமைச்சர்களாக்கப்பட்டார்கள்? என்பதையும் ஜெயலலிதா விளக்க வேண்டும் என்று தமிழக மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு கல்வித்துறை மிகவும் முக்கியமானது. இத்துறையில் அனுபவம் வாய்ந்த ஒருவர் இருந்தால் தான் கல்வி வளர்ச்சிக்கான திட்டங்களைத் தீட்டி செயல்படுத்த முடியும். ஆனால், பள்ளிக் கல்வித்துறைக்கு கடந்த 4 ஆண்டுகளில் சி.வி. சண்முகம், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, என்.ஆர்.சிவபதி, வைகைச் செல்வன், பழனியப்பன், கே.சி. வீரமணி ஆகிய 6 பேர் அமைச்சர்களாக  இருந்துள்ளனர். இவர்களில் வீரமணியைத் தவிர வேறு எவரும் கல்வி அமைச்சர் பதவியில் ஓராண்டு கூட நீடிக்கவில்லை. இவ்வாறு இருந்தால் பள்ளிக்கல்வித் துறையை எவ்வாறு முன்னேற்ற முடியும்?

கடந்த மே மாதம் அமைச்சர் ஆனந்தன் நீக்கம் செய்யப்பட்ட போது, அவருக்கு எதிராக பெண்மணி ஒருவர் அளித்த மோசடி புகாரும், வனத்துறையில் நடந்த ஊழல்களும் தான் காரணம் என கூறப்பட்டது. ஆனந்தன் மீண்டும் அமைச்சராக அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் மீது அந்த பெண்மணி மீண்டும் புகார் கூறியுள்ளார். இடைப்பட்ட 3 மாதங்களில் ஆனந்தன் எப்படி உத்தமர் ஆனார் என்பதையும் அரசு விளக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் 4 ஆண்டுகளில் 30 அமைச்சர்கள் நீக்கப்படுவது  இதுவரை நடக்காத ஒன்றாகும். இவ்வளவு அமைச்சர்கள் நீக்கப்பட்டதற்கும், நீக்கப்பட்டவர்களில் சிலரே மீண்டும் அமைச்சராக்கப்பட்டதற்கும் என்ன காரணம்? என்பதை ஜெயலலிதா விளக்க வேண்டும். இல்லாவிட்டால், செய்த ஊழலில் மேலிடத்திற்கு செலுத்த வேண்டிய பங்கை முறையாக செலுத்தாததால் தான் பல அமைச்சர்கள் நீக்கப்பட்டனர்; அவர்களில் கணக்கை சரி செய்தவர்கள் மீண்டும் அமைச்சர்கள் ஆக்கப்பட்டனர் என்று  கூறப்படும் புகார்களை உண்மை என்று நம்ப வேண்டியிருக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: