கூகுள் நிறுவன தலைமை நிர்வாகியாக நியமிக்கப்பட்ட சுந்தர் பிச்சைக்கு அன்புமணி வாழ்த்து!
கூகுள் நிறுவன தலைமை நிர்வாகியாக நியமிக்கப்பட்ட சுந்தர் பிச்சைக்கு பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாசு வாழ்த்து தெரிவித்துள்ளார். வாழ்த்துச் செய்தியில்,
உலகின் புகழ்பெற்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான கூகுள் நிறுவனம் ஆல்ஃபபெட் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு, அதன் முதன்மை நிர்வாக அதிகாரியாக சென்னையைச் சேர்ந்த சுந்தரராஜன் பிச்சை நியமிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!
சுந்தரராஜன் பிச்சை சென்னையில் ஒரு மிகச் சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவர். இளம்வயதில் நாட்டு நடப்புகளை அறிந்து கொள்ள தொலைக்காட்சி கூட இல்லாத சூழலில் வளர்ந்தவர். மேல்படிப்புக்கு அமெரிக்கா செல்ல வேண்டுமென்ற நிலை ஏற்பட்ட போது, அவரது தந்தையின் ஓராண்டு ஊதியத்தை சேர்த்தால் கூட விமானத்திற்கான பயணச்சீட்டு வாங்க முடியாது என்ற நிலை இருந்தது. ஆனால், அத்தனை தடைகளையும் தமது கல்வி மற்றும் அறிவால் தகர்த்தெறிந்து இந்த உயர் பொறுப்புக்கு வந்திருப்பதன் மூலம் தமிழர்களுக்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்திருக்கிறார். உலகின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்புக்கு இந்தியாவைச் சேர்ந்த சத்யா நாதெள்ளா ஏற்கனவே வந்துள்ள நிலையில், இன்னுமொரு அமெரிக்க நிறுவனத்தின் தலைமைப் பொறுப்புக்கு இந்தியாவைச் சேர்ந்த, குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜன் பிச்சை தேர்வாகியிருப்பது மிகவும் உற்சாகமளிக்கிறது. தமிழர்களிடம் திறமைக்கு பஞ்சமில்லை... வாய்ப்பும் ஊக்குவிப்பும் மட்டுமே தேவை என்பதை சுந்தரின் உயர்வு நிரூபித்திருக்கிறது.
சுந்தர்ராஜன் பிச்சை மேலும் பல உயர் பதவிகளை பெற்று, சாதனைகளை படைத்து தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் சிறப்பும், பெருமையும் சேர்க்க எனது இதயம் கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment