Monday, August 31, 2015

பாமகவின் அடுத்த உறுதிமொழி.. முதல் நாள் முதல் கையெழுத்து... பூரண மதுவிலக்கு!

சென்னை: மாற்றம், முன்னேற்றம், அன்புமணி என்ற வாசகத்தைத் தொடர்ந்து அடுத்து ஒரு உறுதிமொழியையே அடுத்த வாசகமாக வெளியிட்டுள்ளது பாமக.சட்டசபைத் தேர்தலுக்கு படு வேகமாக தயாராகி வருகிறது பாமக. தனது பலமான பகுதிகளை மேலும் பலமாக்குவதோடு, பலவீனமான ஏரியாக்களை பலமாக்கும் முயற்சிகளிலும் அது ஈடுபட்டுள்ளது.மண்டல மாநாடுகள், ஊர் ஊராகச் சென்று மக்களைச் சந்தித்தல் என்று வாக்கு வங்கியைப் பலப்படுத்தி வருகிறது பாமக.

முதல்வர்" அன்புமணி பாமக தனது முதல்வர் வேட்பாளராக டாக்டர் அன்புமணி ராமதாஸை அறிவித்து அவரது தலைமையில் களப் பணியாற்றி வருகிறது. டாக்டர் ராமதாஸை விட அன்புமணியே தற்போது பாமகவில் முன்னிறுத்தப்பட்டு வருகிறார்.

அன்புமணியின் சூறாவளி பிரசாரம் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் டாக்டர் அன்புமணி படு தீவிரமாக செயலாற்றி வருகிறார். பாமகவின் பலமான வாக்கு வங்கி உள்ள பகுதிகளுக்கு அடிக்கடி சென்று மக்களைச் சந்திக்கிறார். முக்கியப் பிரச்சினைகளில் அடிக்கடி அறிக்கை விடுகிறார்.

மாற்றம், முன்னேற்றம் இதுதவிர சமூக வலைதளங்கள் மற்றும் பிற தொழில்நுட்ப வளர்ச்சியையும் பாமக சரியான முறையில் பயன்படுத்த ஆரம்பித்துள்ளது. சமூக வலைதளங்களில் பிரபலமானது பாமக வெளியிட்ட மாற்றம், முன்னேற்றம், அன்புமணி என்ற வாசகம்தான். பலர் இதே பாணியில் தாங்களும் உருவாக்கி பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர் (சிலர் கேலியாகவும்).
அடுத்த வாசகம் ரெடி இந்த நிலையில் தனது அடுத்த வாசகத்தை வெளியிட்டுள்ளது பாமக. முதல் நாள் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கு என்பதே அந்த புதிய வாசகம்.
மது விலக்கு ஆட்சிக்கு வந்த முதல் நாள் போடும் முதல் கையெழுத்து மது விலக்கு குறித்தே என்பதை விளக்குகிறது இந்த வாசகம். இந்த புதிய வாசகத்தை டாக்டர் அன்புமணி தனது பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்டவற்றிலும் பிரமோட் செய்து வருகிறார்.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/pmk-releases-its-second-slogan-234624.html#slide167822

அன்புமணியை முன்னிறுத்தி மீண்டும் போஸ்டர்!

பா.ம.க. முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் என அக்கட்சி தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்ததையடுத்து, அவர் வெளியிட்டும் அறிக்கை, செய்தியாளர்கள் சந்திப்பு, பொதுக்கூட்டங்கள் என அனைத்திலும் முதல்வர் வேட்பாளர் என்ற வாசகம் இடம்பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இதுதவிர சமூக வலைதளங்கள் மற்றும் பிற தொழில்நுட்ப வளர்ச்சியையும் பாமக சரியான முறையில் பயன்படுத்த ஆரம்பித்தது. 

இதைத்தொடர்ந்து 'மாற்றம் முன்னேற்றம் அன்புமணி' என தமிழகம் முழுவதும் போஸ்டர்களை ஒட்டி கோவையில் மிகப்பெரிய மாநாடு நடத்தியது பாமக. தொடர்ந்து வேலூர், மதுரையிலும் மிகப்பெரிய மாநாடுகளை அக்கட்சி நடத்தியது. சமூக வலைதளங்களில் பிரபலமானது பாமக வெளியிட்ட மாற்றம், முன்னேற்றம், அன்புமணி என்ற வாசகம்தான். 

இந்தநிலையில் சென்னை லயோலா கல்லூரியின் மக்கள் ஆதரவு மையம் அண்மையில் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவு ஒன்றை வெளியிட்டது. அதில், அடுத்த முதல்வராகும் வாய்ப்பு ஜெயலலிதாவிற்கு 32 சதவீதமும், மு.க.ஸ்டாலினுக்கு 28 சதவீதமும், கலைஞருக்கு 21.33 சதவீதமும், விஜயகாந்திற்கு 6.24 சதவீதமும், அன்புமணிக்கு 2.27 சதவீதமும், வைகோவுக்கு 1.85 சதவீதமும், சீமானுக்கு 1.84 சதவீதமும், திருமாவளவனுக்கு 1.13 சதவீதமும், ஜி.கே.வாசனுக்கு 1 சதவீதமும், தமிழிசைக்கு 0.93 சதவீதமும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி 5வது இடத்துக்கு தள்ளப்பட்டதால், பொதுவாக சிறந்த முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்ற வினாவிற்கு ஒவ்வொரு கட்சியிலும் ஒருவருக்கு மட்டும் தான் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். இதுவரை நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளில் இந்த முறை தான் கடைபிடிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் முதன்முறையாக திமுக சார்பில் மு.க.ஸ்டாலின், கலைஞர் என இருவாய்ப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. கருத்துக்கணிப்பு என்ற பெயரில் ஒரு தரப்பான கருத்தை திணிப்பது அழகல்ல. இது மிக மோசமான அரசியல் கருத்து வணிகமாகவே மக்களால் பார்க்கப்படும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில் தனது அடுத்த வாசகத்தை வெளியிட்டுள்ளது பாமக. முதல் நாள் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கு என்பதே அந்த புதிய வாசகம். ஆட்சிக்கு வந்த முதல் நாள் போடும் முதல் கையெழுத்து மது விலக்கு குறித்தே என்பதை விளக்குகிறது இந்த வாசகம். இந்த புதிய வாசகத்தை அன்புமணியும், அவரது கட்சியினரும் தனது பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்டவற்றிலும் பிரமோட் செய்து வருகின்றனர்.

Sunday, August 30, 2015

திருப்பெரும்புதூர் விமான நிலையப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; ராமதாஸ்

திருப்பெரும்புதூர் விமான நிலையப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பன்னாட்டு வானூர்திப் போக்குவரத்து வரைபடத்தில் சென்னையின் முக்கியத்துவம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. சென்னை விமான நிலையம் வழியாக பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதற்கு ஈடு கொடுக்கும் வகையில் சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைக்கும் பணிகள் வேகம் பெறாதது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் 1152 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கிறது. கடந்த 2005 ஆம் ஆண்டில் இந்த விமான நிலையத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை ஆண்டுக்கு 50 லட்சமாக இருந்தது. கடந்த 10 ஆண்டுகளில் இது படிப்படியாக அதிகரித்து ஆண்டுக்கு 1.43 கோடி பேர் என்ற அளவை எட்டியிருக்கிறது. இது மேலும் அதிகரிக்கும் என்பதால் எதிர்காலத் தேவையைக்  கருத்தில் கொண்டு சென்னைக்கான இரண்டாவது விமான நிலையத்தை திருப்பெரும்புதூரில் அமைக்க  முடிவெடுக்கப்பட்டது. அதன்பின் 17 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், புதிய விமான நிலையத்தை அமைப்பதற்கான நிலம் அடையாளம் காணப்பட்டதைத் தவிர வேறு பணிகள் எதுவும் நடக்க வில்லை.

திருப்பெரும்புதூர் விமான நிலையம் மொத்தம் 5,000 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படவுள்ளது. இதற்கு ரூ.20,000 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. விமான நிலையம் அமைப்பதற்காக 7 கி.மீ. நீளத்திற்கும், 4 கி.மீ. அகலத்திற்கும் பறந்து விரிந்து கிடக்கும் 7,000 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்கான சாத்தியக் கூறு ஆய்வுகளும் நடத்தப்பட்டுவிட்டன. 

சென்னையின் இரண்டாவது விமான நிலையத்தை அமைக்க திருப்பெரும்புதூரை விட சிறந்த இடம்  இல்லை என இந்திய விமான நிலையங்கள் ஆணையம் தெரிவித்திருக்கிறது. இவ்வளவுக்குப் பிறகும் இந்த விமான நிலையத்தை அமைக்கும் பணிகள் தொடங்கப்படாததற்கான காரணத்தை விளங்கிக் கொள்ள முடியவில்லை. கடந்த 29.06.2013 அன்று அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நடைபெற்ற உட்கட்டமைப்பு திட்டங்கள் தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் திருப்பெரும்புதூர் விமான நிலையம் அமைக்கும் பணிகளை ஓராண்டுக்குள் தொடங்க முடிவெடுக்கப்பட்டது. ஆனால், அதன்பின்  2 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், பணிகள் தொடங்குவதற்கான அறிகுறி கூட தென்படவில்லை.

திருப்பெரும்புதூர் விமான நிலையத்துடன் திட்டமிடப்பட்ட ஹைதராபாத், பெங்களூர் பசுமைவெளி விமான நிலையங்கள் 2008 ஆம் ஆண்டில் திறக்கப்பட்டு விட்டன. ஆனால், இங்கு பணிகள் கூட தொடங்கப்படவில்லை. இதில் தற்போதைய தமிழக அரசு ஆர்வம் காட்டாதது தான் தாமதத்திற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. விமான நிலையத்திற்கான பணிகள் தொடங்கக் கோரும் விண்ணப்பத்தை மத்திய அரசிடம் மாநில அரசு தாக்கல் செய்யவேண்டும். ஆனால், இதுவரை  தமிழக அரசு இதற்காக விண்ணப்பிக்கவில்லை. தமிழகத்திற்கு தொழில் முதலீட்டை ஈர்க்க  உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்துவதாகவும், தொலைநோக்குத் திட்டம் 2023&ஐ செயல்படுத்துவதாகவும்  நாடகங்களை அரங்கேற்றி வரும் அரசு, அதற்கு அவசியமான விமான நிலையத் திட்டத்தில் அலட்சியம் காட்டுவது கண்டிக்கத்தக்கது. மிகப்பெரிய தொழில் மையமாக திருப்பெரும்புதூர் உருவாகி வரும் நிலையில் அங்கு விமான நிலையம் அமைக்கப்பட்டால் அப்பகுதி மேலும் வளர்ச்சியடைய வாய்ப்புள்ளது. சென்னை & பெங்களூர் தொழில் தாழ்வாரத்தில் திருப்பெரும்புதூரில் சிறப்பு பொருளாதார மண்டலம், வேலூர் மாவட்டத்தில் தோல் பொருள் தொழிற்சாலைகள், ஓசூரில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் இருப்பதால் திருப்பெரும்புதூரில் விமான நிலையம் அமைக்க வேண்டியது அவசியம் ஆகும்.

சென்னை விமான நிலைய விரிவாக்கத் திட்டத்தின்படி ஏற்கனவே உள்ள இரு பழைய முனையங்களில் இரு புறமும் 2 புதிய முனையங்கள் கட்டப்பட்டன. இதன்மூலம் கூடுதலாக ஆண்டுக்கு 1.4 கோடி பயணிகளை கையாளும் திறன் ஏற்படுத்தப்பட்டது. இதன்மூலம் அதன் பயணிகள் கையாளும் திறன் ஆண்டுக்கு 3 கோடியாக உயர்ந்துள்ளது. ஆனால், இப்போது ஆண்டுக்கு 1.43 கோடி பயணிகளை கையாளும் சென்னை விமான நிலையம் 2019-20 ஆம் ஆண்டில் அதன் முழுத் திறனை எட்டிவிடும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது (As part of expansion project two new Terminal Buildings have been constructed on both sides of the old terminals. The additional Capacity such made is 14 mppa.The ultimate airport capacity is estimated to be 30 mppa and is forecasted that the traffic will reach to this saturation level by the year 2019-20-The present traffic is 14.3 mppa).சென்னை விமான நிலையத்தை இனியும் விரிவுபடுத்துவது சாத்தியமில்லை என்பதால், அதற்குள் புதிய விமான நிலையம் அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட வேண்டும். புதிய விமான நிலையம் அமைக்க அதிக காலம் ஆகும் என்பதால், அதற்கான பணிகளை உடனடியாக தொடங்கினால் மட்டுமே 2019&20 ஆம் ஆண்டில் பணிகளை முடிக்க இயலும். எனவே, திருப்பெரும்புதூர் விமான நிலைய பணிகளை உடனடியாக தொடங்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருப்பெரும்புதூர் விமான நிலையத் திட்டத்தை பொதுத்துறை & தனியார் துறை கூட்டு முயற்சியில் செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. இது தேவையற்ற பிரச்சினைகளுக்கு வழி வகுக்கும். எனவே, விமான நிலையத்தை அமைத்தல் மற்றும் பராமரித்தல் பணிகளை  விமான நிலையங்கள் ஆணையத்தின் மூலமாக மத்திய அரசே மேற்கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி, சென்னை மற்றும் திருப்பெரும்புதூர் விமான நிலையங்களை இணைக்கும் வகையில் அதிவேக பறக்கும் சாலை, மற்றும் தொடர்வண்டிப் பாதைகளையும் அமைக்க வேண்டும். அதற்கான பணிகளும் உடனடியாக தொடங்கப்பட வேண்டும். இதற்கெல்லாம் மேலாக விமான நிலையத்திற்கு நிலங்களைக் கையகப்படுத்தும் போது அதனால் பொது மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஓகனேக்கல் படகு விபத்து 6 பேர் பலி; பாதுகாப்பு குறைபாடுகளே காரணம்; அன்புமணி ராமதாஸ்

அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஓகனேக்கலில் நேற்று நிகழ்ந்த படகு விபத்தில் சென்னையைச் சேர்ந்த ஒரே குடும்பத்தின் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஓகனேக்கல் படகு விபத்துக்கு பாதுகாப்பு குறைபாடுகளும், அலட்சியமும் தான் காரணம் என்று கூறப்படுகிறது. படகுகளில் பயணம் செய்பவர்கள் அனைவரும் உயிர் காக்கும் ஆடைகளை அணிய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த விதி கடைபிடிக்கப்பட்டிருந்தால் விபத்தில் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டிருக்கும். அதேபோல், ஒரு படகில் 5 பயணிகளும், படகு ஓட்டுனரும் மட்டுமே செல்ல வேண்டும். இந்த விதியும் மீறப்பட்டு ஒரே படகில் 10 பேர் பயணம் செய்திருக்கின்றனர். படகு சவாரிக்காக ஒருவருக்கு ரூ.110 மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும். ஆனால், அதைவிட கூடுதலாக ரூ.160 வசூலிப்பதுடன் அதிக வருவாய் ஈட்ட வேண்டும் என்பதற்காக அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் செல்வதையும் படகு ஓட்டுனர்கள் வழக்கமாக வைத்திருக்கின்றனர்.

இத்தகைய விதிமீறல்களை மாவட்ட நிர்வாகம் தான் தடுத்திருக்க வேண்டும். ஓகனேக்கல் நீர்வீழ்ச்சியில் தடை செய்யப்பட்ட  பகுதிகளுக்கு படகுகள் இயக்கப்படுவதையும் மாவட்ட நிர்வாகம் தடுத்திருக்க வேண்டும். ஆனால், மாவட்ட நிர்வாகம் இதையெல்லாம் கண்டு கொள்வதே இல்லை. தருமபுரி மாவட்ட நிர்வாகத்தின் இந்த அலட்சியப் போக்கு கடுமையாக கண்டிக்கத்தக்கது ஆகும்.  ஓகனேக்கலில் ஐந்து அருவியை பார்ப்பதற்காக தொங்கும் பாலம் அமைந்துள்ளது. இந்த பாலத்தின் வழியாக ஐந்து அருவிக்கு மிகவும் நெருக்கமாக பயணிகள் செல்வதால் பாதுகாப்பு காரணங்களைக் காட்டி பாலம் மூடப்பட்டது. இந்த பாலத்தில் பாதுகாப்பை வலுப்படுத்தி பயணிகளை அனுமதித்திருந்தால்,  அந்த அருவியை காண்பதற்காக ஆபத்தான படகுப் போக்குவரத்தை பயணிகள் தேர்வு செய்திருக்க மாட்டார்கள். ஆனால், அலட்சியத்தின் உறைவிடமான மாவட்ட நிர்வாகம் இதையும் செய்யவில்லை.

இது தான் ஓகனேக்கலில் நடந்த கடைசி விபத்தாக இருக்க வேண்டும். இனியும் இத்தகைய விபத்துக்கள் நடக்காத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் வலுப்படுத்த வேண்டும். படகு விபத்தில் எவரேனும் சிக்கிக் கொண்டால் அவர்களை உடனடியாக மீட்பதற்கு வசதியாக அனைத்து கருவிகளுடன் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் நிறுத்தப்பட வேண்டும். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு தலா ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Saturday, August 29, 2015

இலங்கைக்கு இலவசமாக வழங்கப்பட்ட 3 போர்க்கப்பல்கலையும்

பா.ம.க. நிறுவனர்  இராமதாசு அறிக்கை:
’’இந்திய கடலோரக் காவல்படைக்கு சொந்தமான ஐ.சி.ஜி. வராஹா என்ற போர்க்கப்பலை சிங்களக் கடற்படைக்கு இந்தியா இலவசமாக வழங்கியுள்ளது. தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டு வரும் இலங்கைக்கு இந்தியா கப்பலைக் கொடையாக அளித்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

இலங்கை ஒருபோதும் நமக்கு விசுவாசமாக இருந்ததில்லை என்பதை நன்றாக உணர்ந்திருந்தும் அந்நாட்டுக்கு மத்திய அரசு பல உதவிகளை வழங்கி வருகிறது. இத்தகைய உதவிகளால் பாதிக்கப் படுவது தமிழ்நாடு தான் என்ற போதிலும், அது தொடர்பாக தமிழக அரசிடமும், அரசியல் கட்சிகளிடமும் ஆலோசனை நடத்துவதோ, கருத்துக் கேட்பதோ கிடையாது. கச்சத்தீவை தாரை வார்த்ததில் தொடங்கி, 2009 ஆம் ஆண்டு இறுதிப் போருக்கு ஆயுதம் வழங்கியது வரை மத்திய அரசின் அணுகுமுறை துரோகி நாடான இலங்கைக்கு சாதகமாகவும், தமிழகத்திற்கு பாதகமாகவும் தான் இருந்து வருகிறது. 

இப்போது கூட ஐ.சி.ஜி. வராஹா போர்க்கப்பலை இலங்கைக்கு தாரை வார்ப்பதில் வெளிப்படையான அணுகுமுறை கடைபிடிக்கப்படவில்லை. இந்த விஷயம் தமிழக அரசியல் கட்சிகளுக்குத் தெரிந்தால்  கடும் எதிர்ப்பு எழும் என்பதால், அந்த கப்பலை இந்திய கடற்படை மற்றும் கடலோரக் காவல்படை அதிகாரிகள் கடந்த வியாழக்கிழமை கொழும்பு துறைமுகத்திற்கு ரகசியமாக கொண்டு சென்று ஒப்படைத்து விட்டு திரும்பியுள்ளனர். இப்போது கூட இந்த செய்தியை இலங்கை பாதுகாப்புத்துறை தான் வெளியிட்டிருக்கிறதே தவிர, இந்திய பாதுகாப்புத்துறை வாய் பேசாமல் தான் இருந்து வருகிறது.

இலங்கைக்கு இந்திய போர்க்கப்பல் ஐ.சி.ஜி. வராஹா தரப்பட்டதை சாதாரண உதவியாக கருதி விட்டு விட முடியாது. இதன் பின்னணியில் பல துரோகங்களும், ரகசியங்களும் அடங்கியிருக்கின்றன. இந்திய கடலோரக் காவல்படைக்கு சொந்தமான ஐ.சி.ஜி. வராஹா, ஐ.சி.ஜி. விக்ரஹா ஆகிய இரு போர்க்கப்பல்கள் கடந்த 2006 ஆம் ஆண்டில் இலங்கை கடற்படைக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டன. 

எஸ்.எல்.என் சாகரா, எஸ்.எல்.என் சயூரளா என பெயர் மாற்றம் செய்யப்பட்ட இந்த இரு போர்க்கப்பல்கள் தான் இறுதிப் போரில் அப்பாவி ஈழத்தமிழர்களை படுகொலை செய்யப் பயன்படுத்தப்பட்டன. அப்போதே இந்த போர்க்கப்பல்களை திரும்பப்பெற வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன். 2009 ஆம் ஆண்டு போர் முடிவடைந்த பின் தமிழகத்தில் எழுந்த கொந்தளிப்பை அடக்கும் வகையில் இலங்கைக்கு வழங்கப்பட்ட  2 போர்க் கப்பல்களும்  திரும்பப் பெறப்படும் என்று பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்தது. அதன்படி பெறப்பட்ட ஐ.சி.ஜி. விக்ரஹா புதுப்பிக்கப்பட்டு மீண்டும் இலங்கைக்கே வழங்கப்பட்டது.  ஐ.சி.ஜி. சரயு என்ற இந்திய போர்க்கப்பலும் 2010 ஆம் ஆண்டில் இலங்கைக்கு இலவசமாக வழங்கப் பட்டது. அதைத் தொடர்ந்து கொல்கத்தாவில் முற்றிலுமாக புதுப்பிக்கப்பட்ட ஐ.சி.ஜி. வராஹா போர்க் கப்பலை இந்தியா இப்போது இலவசமாக இலங்கைக்கு வழங்கியுள்ளது. இதைப் புதுப்பிப்பதற்காக செலவிடப்பட்ட பல கோடி ரூபாயை இந்திய அரசே வழங்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்தியாவின் பாதுகாப்புக்கு இலங்கை ஒதுபோதும் துணையாக இருக்கப் போவதில்லை. ஏற்கனவே ஈழத் தமிழர்களை படுகொலை செய்வதற்காக இந்த கப்பலை பயன்படுத்திய இலங்கை, இப்போது வங்கக்கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை கைது செய்வது, தாக்குவது, சுட்டுக் கொல்வது போன்ற மனித உரிமை மீறல்களை அரங்கேற்றுவதற்கு தான் பயன்படுத்தப் போகிறது.  உலகில் சொந்த நாட்டு மீனவர்களை தாக்க அடுத்த நாட்டு கடற்படைக்கு ஆயுதங்களை வழங்கிய அவப்பெயர் தான் இந்தியாவுக்கு ஏற்படப்போகிறது. இந்த பழியை தடுக்க வேண்டுமானால், இதுவரை இலங்கைக்கு இலவசமாக வழங்கப்பட்ட 3 போர்க்கப்பல்கலையும் மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்.’’

கருத்துக்கணிப்பு என்ற பெயரில் விருப்பங்களைத் திணிப்பதா? ராமதாஸ் கண்டனம்

கருத்துக்கணிப்பு என்ற பெயரில் ஒரு தரப்பான கருத்தை திணிப்பது அழகல்ல. இது மிக மோசமான அரசியல் கருத்து வணிகமாகவே மக்களால் பார்க்கப்படும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

சென்னையை சேர்ந்த மக்கள் ஆய்வு என்ற அமைப்பின் சார்பில் தமிழகம் 2016 - ஒரு முன்னோட்டம் என்ற தலைப்பில் தேர்தல் குறித்த முன்னோட்ட கருத்து கணிப்புகள் நடத்தப்பட்டு இன்று வெளியிடப்பட்டுள்ளன. கருத்துக்கணிப்பு முடிவுகள் உண்மையை வெளிப்படுத்துவதற்கு மாறாக நகைப்பை வரவழைக்கும் வகையில் அமைந்திருக்கின்றன. 

கருத்துக்கணிப்பில் சிறந்த முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற வினாவிற்கு ஜெயலலிதாவிற்கு சாதகமாக 31 விழுக்காட்டினரும், ஸ்டாலினுக்கு சாதகமாக 27 விழுக்காட்டினரும், கலைஞருக்கு சாதகமாக 21 விழுக்காட்டினரும் கருத்து தெரிவித்துள்ளனர். பா.ம.க முதலமைச்சர் பதவிக்கான வேட்பாளர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்க்கு ஆதரவு குறைவாக இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. பொதுவாக சிறந்த முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்ற வினாவிற்கு ஒவ்வொரு கட்சியிலும் ஒருவருக்கு மட்டும் தான் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். இதுவரை நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளில் இந்த முறை தான் கடைபிடிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் முதன்முறையாக திமுக சார்பில் மு.க.ஸ்டாலின், கலைஞர் என இருவாய்ப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. 

திமுகவுக்கு ஆதரவாக, குறிப்பாக மு.க.ஸ்டாலினுக்கு சாதகமாக ஒரு கருத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே இப்படி ஒரு கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. திமுகவின் முதலமைச்சர் பதவிக்கான வேட்பாளர் யார் என்பது குறித்து கலைஞருக்கும், மு.க. ஸ்டாலினுக்கும் இடையே மோதல் நிலவி வரும் நிலையில், அப்பதவிக்கு மு.க.ஸ்டாலின் முன்னிருத்தப்பட வேண்டும் என்பதற்காகவே, திமுக தலைவர் கலைஞரை விட ஸ்டாலினுக்கு அதிக செல்வாக்கு இருப்பது போல காட்டப்பட்டிருப்பதாக ஊடகத்துறையில் பேசப்படுகிறது. இதற்கு முன் 2007ம் ஆண்டில் திமுகவின் அடுத்த தலைவர் ஆவதற்கு யாருக்கு அதிக ஆதரவு உள்ளது என்பது குறித்து ஒரு நாளிதழில் திட்டமிட்டு கருத்துத்திணிப்பு வெளியிடப்பட்டதையும், அதைத் தொடர்ந்து மதுரையில் நடந்த நாளிதழ் அலுவலகம் எரிப்பு மற்றும் மூன்று பேர் கொல்லப்பட்ட நிகழ்வுகளையும் தமிழகம் அறியும். இப்போதும் அதே போன்ற ஒரு கருத்துத் திணிப்பு முயற்சி தான் அரங்கேற்றப்பட்டிருக்கிறது. 

இந்தக் கருத்துக்கணிப்பு முடிவுகளில் பல இடங்களில் முரண்பாடுகள் அப்பட்டமாகத் தெரிகின்றன. ஜெயலலிதா முதலமைச்சராக வேண்டும் என்று 31.56 விழுக்காட்டினர் விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், அதைவிட அதிகமாக அதிமுக ஆட்சி அமைக்க வேண்டும் என 34.10 விழுக்காட்டினர் கருத்து தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் கலைஞருக்கும், மு.க. ஸ்டாலினுக்கும் சாதகமாக 49.31 விழுக்காட்டினர் கருத்து தெரிவித்துள்ள நிலையில், திமுக ஆட்சி அமைக்க வேண்டும் என்று 32.6 விழுக்காட்டினர் மட்டுமே கூறியுள்ளனர். அதே போல் பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சி அமைவதற்கு 11.9 விழுக்காட்டினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் பா.ம.கவின் முதலமைச்சர் வேட்பாளருக்கு அதைவிட குறைந்த ஆதரவே காணப்படுவதாக கருத்துக்கணிப்பில் கூறப்பட்டிருக்கிறது. முரண்பாட்டின் மொத்த உருவமாக அமைந்துள்ள இந்தக் கருத்துக்கணிப்பை எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். 
கருத்துக்கணிப்பை நடத்தி, அதன் முடிவுகளை வெளியிடுவதில் காட்டப்பட்ட அவசரமும், கருத்துக்கணிப்புக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட மாதிரிகளும் பல்வேறு உள்நோக்கங்களை அம்பலப்படுத்துவதாக அமைந்திருக்கின்றன. திமுகவின் செல்வாக்கு அதலபாதாளத்திற்கு சென்றுவிட்ட நிலையில் அதை தூக்கி நிறுத்தவும், மு.க. ஸ்டாலினை கூட்டணி தலைவராக ஏற்கும்படி சிறிய கட்சிகளுக்கு நிர்பந்தம் அளிக்கவும் வசதியாகவே மு.க.ஸ்டாலின் ஆதரவுடன் மு.க. ஸ்டாலினுக்கு ஆதரவாக இப்படி ஒரு கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் இன்று பற்றி எரியும் பிரச்சனை மது ஒழிப்பு தான். இந்த விஷயத்தில் ஒட்டுமொத்த தமிழகமே பாட்டாளி மக்கள் கட்சியின் பின்னால் அணிவகுத்து நிற்கிறது. ஆனால் இந்தக் கருத்துக்கணிப்பில் மதுவிலக்குக் குறித்து எந்த வினாவும் எழுப்பபடவில்லை. பாட்டாளி மக்கள் கட்சியின் செல்வாக்கை மறைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டிருக்கிறது என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் தேவையில்லை. 

ஒரு மாநிலத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தவிருக்கும் தேர்தலில் மக்களின் மனநிலையை அறிய வேண்டுமானால், விரிவான முறையில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இந்தக் கருத்துக்கணிப்பு மொத்தம் 80 தொகுதிகளில் 3500 பேரிடம் மட்டுமே அதாவது ஒரு தொகுதியில் 43 பேரிடம் மட்டுமே நடத்தப்பட்டிருக்கிறது. ஐந்தரை கோடி வாக்காளர்கள் தீர்மானிக்க வேண்டிய விஷயத்தை அதில் பத்தாயிரத்தில் ஒரு பங்கு கூட இல்லாதவர்களின் மூலம் தீர்மானிக்க விரும்புவது அபத்தம் மட்டுமின்றி, ஜனநாயகத்தை கொச்சைப்படுத்தும் செயல் ஆகும். 

மக்கள் ஆய்வு அமைப்பின் தலைவரான முனைவர் இராஜநாயகம் சென்னை இலயோலா கல்லூரியின் அங்கமாக இருந்து இது போன்ற ஏராளமான கருத்துக்கணிப்புகளை நடத்தியுள்ளார். அவை பெரும்பாலும் சரியாகவே இருந்திருக்கின்றன. ஆனால் இப்போது தனியாக அவர் நடத்தி வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகள் நம்பகத்தன்மை அற்றவையாக உள்ளன. எவருக்கேனும் ஆதரவாக கருத்து தெரிவிக்க வேண்டும் என்றால் அதை வெளிப்படையாக செய்யலாம். அதைவிடுத்து கருத்துக்கணிப்பு என்ற பெயரில் ஒரு தரப்பான கருத்தை திணிப்பது அழகல்ல. இது மிக மோசமான அரசியல் கருத்து வணிகமாகவே மக்களால் பார்க்கப்படும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார். 

Friday, August 28, 2015

ஜெயலலிதாவைத் தொடர்ந்து சோ.ராமசாமியை சந்தித்து நலம் விசாரித்தார் ராமதாஸ்

சென்னை : உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் துக்ளக் பத்திரிகை ஆசிரியர் சோ. ராமசாமியை பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று காலை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.அப்போது, சோ.ராமசாமி விரைவில் நலம் பெற்று இல்லம் திரும்ப வேண்டும் என்ற தமது விருப்பத்தை தெரிவித்துக் கொண்டார்.
பின்னர், டாக்டர் என்ற முறையில் சோ. ராமசாமிக்கு அளிக்கப்படும் மருத்துவம் குறித்தும், உடல் நிலையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் மருத்துவர்களிடம் ராமதாஸ் கேட்டறிந்தார்.அண்மையில் சோவை முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தது குறிப்பிடத்தக்கது.
 

மக்கள்தொகைக்கேற்ப ஜாதிவாரியாக இடஒதுக்கீடு வழங்குவதே சரியானது: டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்!

சென்னை: மக்கள் தொகைக்கு ஏற்ப ஜாதிவாரியாக இடஒதுக்கீடு வழங்குவதுதான் பிரச்சனைகளுக்கு சரியான தீர்வாக அமையும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.ADVERTISEMENTஇது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:குஜராத்தில் பட்டிதார் வகுப்பைச் சேர்ந்த படேல் சமுதாயத்தினர் தங்களை பிற பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்த்து இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, அகமதாபாத்தில் அண்மையில் நடத்திய போராட்டம் ஒட்டு மொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. முன்னேறிய பிரிவைச் சேர்ந்த படேல் சமூகத்திற்கு இட ஒதுக்கீடு வேண்டுமா...வேண்டாமா? என்பது பற்றி நாடு முழுவதும் விவாதம் தொடங்கியுள்ள நிலையில், இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது அவசியமாகியுள்ளது
கல்வி அதிக செலவு பிடிக்கும் ஒன்றாகவும், அரசு வேலைவாய்ப்பு என்பது அரிதாக வழங்கப்படும் ஒன்றாகவும் மாறி விட்ட நிலையில், இட ஒதுக்கீடு என்ற ஒன்று இருந்தால் தான் கல்வி, வேலை வாய்ப்பை பெற முடியும் என்ற நிலை உருவாகிவிட்டது. இதைக்காரணம் காட்டி தான் படேல் வகுப்பினர் ஹர்திக் படேல் என்ற 22 வயது இளைஞரின் தலைமையில் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தியுள்ளனர்.1981 ஆம் ஆண்டில் குஜராத்தில் முதலமைச்சராக இருந்த மாதவ்சிங் சோலங்கி, சமூக, பொருளாதார அடிப்படையில் பின்தங்கியிருந்த சமூகங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கிய போது, அதற்கு பட்டிதார் சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், இப்போது அதே சமூகத்தினர் தங்களுக்கும் இட ஒதுக்கீடு தேவை என போராட வந்திருப்பது சமூக நீதியின் தேவை அதிகரித்திருப்பதையே காட்டுகிறது.ஆனால், படேல் சமூகத்திற்கு இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்று குஜராத் அரசு அறிவித்துள்ளது. இதற்குக் காரணம் உச்ச நீதிமன்றம் விதித்துள்ள தடை தான். கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மத்திய அரசு கடைபிடித்து வரும் அதே 49.5% இடஒதுக்கீட்டைத் தான் குஜராத் அரசும் கடைபிடிக்கிறது.படேல் சமூகத்தினரை பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இட ஒதுக்கீட்டிற்குள் கொண்டு வந்தால், அப்பிரிவில் ஏற்கனவே உள்ள சமூகத்தினர் பாதிக்கப்படுவார்கள். அதே நேரத்தில் படேல் சமூகத்தினருக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கினாலோ, பிற பிற்படுத்தப்பட்ட பிரிவில் சேர்த்து அதற்கான இட ஒதுக்கீட்டு அளவை அதிகரித்தாலோ அது உச்ச நீதிமன்றம் நிர்ணயித்த 50% உச்சவரம்பை தாண்டி விடும் என்பது தான் குஜராத் மாநில அரசின் வாதம் ஆகும்.சட்டரீதியாக பார்த்தால் இது சரியாக தோன்றினாலும், சமூக நீதியின் வழியாக பார்க்கும் போது இதை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த பிரச்சினைக்கான தீர்வை 1928 ஆம் ஆண்டிலேயே தமிழகம் வழங்கியிருக்கிறது. நீதிக்கட்சி ஆதரவுடன் அமைந்த சுப்பராயன் தலைமையிலான அரசில் கல்வி அமைச்சராக இருந்த முத்தையா முதலியார் 1921 ஆம் ஆண்டின் 1021 ஆவது அரசாணையில் சில திருத்தங்களைச் செய்து வகுப்புவாரி இட ஒதுக்கீட்டை நடைமுறைக்கு கொண்டு வந்தார். இம்முறையில் 100% இட ஒதுக்கீடு அனைத்து பிரிவினருக்கும் கிட்டத்தட்ட அவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப பிரித்து வழங்கப்பட்டது.இந்த வகுப்புவாரி இட ஒதுக்கீட்டு முறையை தந்தை பெரியார் தீவிரமாக ஆதரித்தார். இவ்வாறு முன்னேறிய வகுப்பினர் உள்ளிட்ட அனைத்து பிரிவினருக்கும் அவரவர் மக்கள் தொகைக்கு ஏற்ற வகையில் இட ஒதுக்கீடு வழங்கும் 100% வகுப்புவாரி இடஒதுக்கீட்டை நாடு முழுவதும் விரிவுபடுத்துவது தான் குஜராத்தில் இப்போது எழுந்துள்ள சிக்கலுக்கு தீர்வாக அமையும்.இந்தத் தீர்வைத் தான் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நான் வலியுறுத்தி வருகிறேன். இந்த முறையில் மற்ற பிரிவினருக்கும் அவர்கள் கேட்பதற்கு முன்பே இடஒதுக்கீட்டு வழங்கப்படும் என்பதால் எதிர்காலத்தில் சிக்கல் எழாது. வகுப்புவாரி இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்கு ஒரே தடை உச்ச நீதிமன்றம் விதித்துள்ள 50% உச்சவரம்பு தான்.கேசவானந்த பாரதி வழக்கில் அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை அம்சங்களை மாற்றக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பும், அதனடிப்படையில் இந்திரா சகானி வழக்கில் இட ஒதுக்கீட்டிற்கு 50% உச்சவரம்பு நிர்ணயித்து உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பும் தான் சமூக நீதிக்கு தடையாக உள்ளன. இவை அகற்றப்பட வேண்டும்.சமூக நீதியை அளந்து வழங்க அது ஒன்றும் கடைச்சரக்கல்ல. அனைத்து பிரிவினருக்கும் மக்கள் தொகை அடிப்படையில் 100% இட ஒதுக்கீடு வழங்குவதே உண்மையான சமூக நீதியாக இருக்கும். இதை உச்ச நீதிமன்றத்திற்கு புரிய வைக்க வேண்டும். தமிழகத்தில் 69% இட ஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் கடந்த 13.07.2010 அன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீட்டை நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று அறிவித்தது.இட ஒதுக்கீட்டுப் பிரிவினரின் மக்கள் தொகை எத்தனை விழுக்காடு உள்ளதோ, அவ்வளவு இட ஒதுக்கீட்டு வழங்கலாம் என்பது தான் இந்த தீர்ப்பில் பொதிந்திருக்கும் பொருள் ஆகும். அதன்படி பார்த்தால் வகுப்புவாரி இடஒதுக்கீடு முறைக்கு நீதிமன்றம் எதிர்ப்பு தெரிவிப்பதற்கான வாய்ப்புகள் குறைவாகும். மேலும், இட ஒதுக்கீட்டின் அளவு 50 விழுக்காட்டிற்கும் மிகக் கூடாது என உச்ச நீதிமன்றம் கூறியதன் நோக்கம் இட ஒதுக்கீடு இல்லாத பிரிவினர் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காகத் தான். அனைவருக்கும் உரிய அளவில் இட ஒதுக்கீடு வழங்கப்படும் போது, ஒரு பிரிவினருக்கு பாதிப்பு என்ற பிரச்சினை எழ வாய்ப்பில்லை.எனவே, நாடு முழுவதும் வகுப்புவாரி இட ஒதுக்கீட்டு முறையை நடைமுறைப் படுத்துவது குறித்து பொது விவாதத்தை மத்திய அரசு தொடங்க வேண்டும். ஓய்வு பெற்ற நீதியரசர்கள், சமூக நீதி ஆர்வலர்கள் உள்ளிட்டோரைக் கொண்ட குழுவை அமைத்து வகுப்புவாரி இட ஒதுக்கீட்டு முறையை எவ்வாறு நடைமுறைப்படுத்தலாம்? சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு உள்ளிட்ட பணிகளை எவ்வாறு மேற்கொள்ளலாம்? என்பது குறித்து பரிந்துரை பெறலாம். அதற்கு முன்பாக வகுப்புவாரி இட ஒதுக்கீட்டு முறை தொடர்பான கொள்கை அறிவிப்பை மத்திய அரசு வெளியிட வேண்டும்.இவ்வாறு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
 

Thursday, August 27, 2015

போர்க்குற்ற விசாரணை... இலங்கைக்கு ஆதரவாக சொந்த முகத்தைக் காட்டும் அமெரிக்கா... ராமதாஸ் கண்டனம்

சென்னை : இலங்கை போர்க்குற்றங்களை உள்நாட்டு அளவில் விசாரித்தாலே போதுமானது என்று அமெரிக்கா கூறியதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.ADVERTISEMENTஇது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது...இலங்கை இறுதிப் போரின் போது நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பாக பன்னாட்டு விசாரணை தேவையில்லை என்றும் உள்நாட்டு விசாரணையே போதுமானது என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் நிஷா பிஸ்வால் கூறியுள்ளார்.சீனாவுக்கு ஆதரவானவர் என்பதால், ராஜக்பக்சவை அதிகார பொறுப்பிலிருந்து நீக்குவதற்காக இலங்கைத் தமிழர் பிரச்சினையை கையிலெடுத்த அமெரிக்கா, தற்போது, தனக்கு சாதகமானவர்கள் ஆட்சிக்கு வந்ததும், தனது சொந்த முகத்தை காட்டுகிறது.இலங்கை போர்க்குற்றத்துக்கு பன்னாட்டு விசாரணை தேவை என்பதை வலியுறுத்தி ஐ.நா. மனித உரிமை ஆணையருக்கு பசுமை தாயகம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்த மாதம் நடக்கவுள்ள ஐ.நா.மனித உரிமை பேரவை கூட்டத்திலும் வலியுறுத்துவோம். இவ்வாறு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Wednesday, August 26, 2015

நடிகர் திலகத்திற்கு அரசே மணிமண்டபம் அமைக்கும் முடிவு வரவேற்கத்தக்கது; ராமதாஸ்

நடிகர் திலகத்திற்கு அரசே மணிமண்டபம் அமைக்கும் முடிவு வரவேற்கத்தக்கது என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு சென்னை அடையாறு பகுதியில் அரசு செலவில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் ஜெயலலிதா அறிவித்திருக்கிறார். நடிகர் திலகத்திற்கு சிறப்பு சேர்க்கும் வகையிலான தமிழக அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது.

வீரத்தின் அடையாளம் வீரபாண்டிய கட்டபொம்மன், தேசியக்கவி பாரதியார், கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரனார் ஆகியோரின் உருவத்தை தமிழர்களின் மனதில் கொண்டு வந்து நிறுத்திய நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு மணி மண்டபம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக எழுப்பப்பட்டு வருகிறது. 

நடிகர் திலகம் 2001 ஆம் ஆண்டில் மறைந்த நிலையில் அவரது முதல் நினைவு நாளுக்குள் மணிமண்டபம் எழுப்பப்பட்டிருந்தால் அது அவருக்கு உண்மையான அஞ்சலியாக இருந்திருக்கும். அவர் மறைந்து 14 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இப்போதாவது மணிமண்டபம் அமைக்க அரசு முன்வந்திருப்பது மன நிறைவளிக்கிறது. சிவாஜியின் மணிமண்டபத்தை அறிவிப்புடன் நிறுத்தி விடாமல் உடனடியாக பணிகளைத் தொடங்க வேண்டும். அதுமட்டுமின்றி, கடற்கரை சாலையிலுள்ள அவரது உருவச்சிலை அங்கேயே நீடிப்பதையும் அரசு உறுதி செய்யவேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் மீண்டும் சமஸ்கிருத வாரம் கொண்டாடுவதா? மத்திய அரசுக்கு ராமதாஸ் கண்டனம்

 


 

சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் மீண்டும் சமஸ்கிருத வாரம் கொண்டாடும்படி மத்திய அரசு ஆணையிட்டிருப்பதற்கு கண்டனம் தெரிவித்திப்பதாக கூறியுள்ள பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், தமிழகத்தில் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் தமிழ் மொழி வாரத்தையும், மற்ற மாநிலங்களில் உள்ளூர் அலுவல் மொழி வாரங்களையும் கொண்டாடும்படி சி.பி.எஸ்.இ நிர்வாகத்திற்கு மத்திய அரசு ஆணையிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இந்தியா முழுவதும் நடுவண் இடைநிலைக் கல்வி வாரிய (சி.பி.எஸ்.இ) பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில் நேற்று முதல் செப்டம்பர் ஒன்றாம் தேதி வரை சமஸ்கிருத வாரம் கொண்டாடும்படி மத்திய அரசு ஆணையிட்டிருக்கிறது. 

சமஸ்கிருத வாரக் கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு எழக்கூடாது என்பதற்காக ஆகஸ்ட் 25 ஆம் தேதி சுற்றறிக்கை அனுப்பி, அதற்கு அடுத்த நாளே கொண்டாட்டத்தை தொடங்கும்படி சி.பி.எஸ்.இ. அறிவுறுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கது.

சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் சமஸ்கிருத வாரத்தை  கடந்த ஆண்டே சி.பி.எஸ்.இ. நிர்வாகம்  அறிமுகம் செய்தது. ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை சமஸ்கிருத வாரம் கொண்டாடப்பட வேண்டும் என்ற சி.பி.எஸ்.இ. நிர்வாகத்தின் அறிவிப்புக்கு பாட்டாளி மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்தது. 

இதையடுத்து தமிழக அரசும், மற்ற கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் சமஸ்கிருத வாரத்திற்கு தமிழகத்தில் ஆதரவு கிடைக்கவில்லை. தமிழகத்தின் உணர்வுகளை மதித்து சமஸ்கிருத வாரத் திணிப்பை சி.பி.எஸ்.இ. கைவிட்டிருக்க வேண்டும். 

ஆனால், சமஸ்கிருத வாரம் கொண்டாடப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் மத்திய அரசு, இதற்கு எதிர்ப்பு எழுந்து விடக்கூடாது என்பதற்காக கமுக்கமாக சுற்றறிக்கை அனுப்பி அடுத்த நாளே கொண்டாட்டத்தை தொடங்குவது நல்லாட்சிக்கு அடையாளமோ, வெளிப்படையான செயலோ அல்ல. இது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.

‘‘சமஸ்கிருதம் இந்தியாவின் தொன்மையான மொழிகளில் ஒன்று. இந்தியாவின் நாகரிகம் மற்றும் கலாச்சார வளர்ச்சி குறித்து அறிந்து கொள்ள வேண்டுமானால் சமஸ்கிருதத்தை நன்றாக அறிந்திருப்பது மிகவும் முக்கியம்’’ என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது முற்றிலும் தவறானது ஆகும். ‘‘ உலக மொழிகளுக்கெல்லாம் தமிழ் தாய்மொழி. சமஸ்கிருதத்துக்கு தமிழ் மூல மொழி’’ என்பதை பாவாணர் ஆதாரங்களுடன் மெய்ப்பித்துள்ளார். சமஸ்கிருதம் வாய் மொழி... தமிழ் வாழ்மொழி  என்பது மொழியறிஞர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்ட உண்மை. சமஸ்கிருதத்தை வெறும் 14,000 பேர் மட்டுமே பேசுவதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்கள் தெரிவிக்கின்றன. அதேநேரத்தில்  தமிழ் உலகம் முழுவதும் 10 கோடி மக்களால் பேசப்படுகிறது. அவ்வாறு இருக்கும் போது தமிழ் உட்பட பல்வேறு மொழிகளைப் பேசி, தனித்தனி கலாச்சாரத்தைக் கடைபிடிக்கும் பல்வேறு தேசிய இனங்களைச் சேர்ந்த கோடிக்கணக்கான மக்கள் மீது சமஸ்கிருத திணிக்கப்படுவதை ஏற்க முடியாது.

மத்தியில் பாரதிய ஜனதா தலைமையிலான அரசு பதவியேற்ற பின்  சமஸ்கிருத வாரம்,  சமஸ்கிருதம் கட்டாயப் பாடம், ஆசிரியர் நாளை குரு உத்சவ் ஆக கொண்டாடுதல், பல்கலைக்கழகங்களில் இந்தி கட்டாயப் பாடம், தமிழ்நாட்டில் உள்ள பண்பலை வானொலிகளில் இந்தி நிகழ்ச்சிகள் என மொழி மற்றும் கலாச்சாரத் திணிப்புகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தட்பவெப்ப நிலை மாறி விதைக்கப்படும் பயிர்களை மண் கூட ஏற்றுக்கொள்ளாது எனும் போது, இனம் மாறி திணிக்கப்படும்  மொழியையும், கலாச்சாரத்தையும் மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். எனவே, சமஸ்கிருத வாரக் கொண்டாட்டத்தை உடனடியாக நிறுத்தும்படி நடுவண் இடைநிலைக் கல்வி வாரியத்துக்கு(சி.பி.எஸ்.இ)  அரசு ஆணையிட வேண்டும். மேலும், பா.ம.க.  ஏற்கனவே வலியுறுத்தியபடி தமிழகத்தில் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் தமிழ் மொழி வாரத்தையும், மற்ற மாநிலங்களில் உள்ளூர் அலுவல் மொழி வாரங்களையும் கொண்டாடும்படி சி.பி.எஸ்.இ நிர்வாகத்திற்கு மத்திய அரசு ஆணையிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 

Monday, August 24, 2015

மறுவாழ்வு அளித்தது தமிழர்கள் தான். அவர்களுக்கு விக்கிரமசிங்க துரோகம் செய்யக்கூடாது: ராமதாஸ்

10 ஆண்டுகளாக அரசியலில் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த விக்கிரமசிங்கவுக்கு, அதிபர் தேர்தலில் இராஜபக்சேவை வீழ்த்தி மறுவாழ்வு அளித்தது தமிழர்கள் தான். அவர்களுக்கு விக்கிரமசிங்க துரோகம் செய்யக்கூடாது என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

இலங்கை தேர்தலில் வெற்றி பெற்று தேசிய அரசின் பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்க தி இந்து நாளிதழ் குழுமத்தின் தலைவர் என். இராமுக்கு அளித்த நேர்காணலில் ஈழத் தமிழர்களுக்கான  அதிகாரப் பகிர்வு, இலங்கைப் போர்க்குற்ற விசாரணை குறித்து தெரிவித்துள்ள கருத்துக்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. புதிய அரசிலும் தமிழர்களுக்கு நீதி கிடைக்காது என்பதையே இவை காட்டுகின்றன.

இலங்கைப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக இந்தியாவும், இலங்கையும் 1987 ஆம் ஆண்டில் செய்து கொண்ட அமைதி உடன்பாட்டின் அடிப்படையில் தான் இலங்கை அரசியலமைப்பு சட்டத்தில் 13 ஆவது திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த திருத்தத்தை செயல்படுத்துவதால் தமிழர்களுக்கு எந்த அதிகாரமும் கிடைக்காது என்று கூறி அப்போதே இந்த தீர்வை ஈழத்தமிழர்கள் ஏற்க மறுத்து விட்டனர். ஆனாலும், அதன்பின் 28 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில், அதில் கூறப்பட்ட உரிமைகளை வழங்குவதற்குக் கூட இலங்கை அரசு முன்வரவில்லை. 

இந்த நேரத்தில் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரணில், ஈழத் தமிழர்களுக்கு அதிகாரம் வழங்குவது குறித்து எந்த உத்தரவாதத்தையும் அளிக்காமல், மழுப்பலான பதில்களையே அளித்திருக்கிறார். ஒன்று பட்ட இலங்கையில், தமிழர்களுக்கு சுயாட்சி அதிகாரம் வழங்கப்படுமா? என்ற கேள்விக்கு விடையளித்த அவர், 13 ஆவது அரசியல் சட்டத் திருத்தத்திற்குட்பட்டு இதை செய்ய முடியுமா? என்பது குறித்து ஆராயலாம் என கூறியிருக்கிறார். 

13 ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தின்படி தமிழர்கள் வாழும் பகுதிகளின் முதலமைச்சர்களுக்கு தமிழகத்தில் ஊராட்சித் தலைவருக்கு உள்ள அதிகாரத்தைக் கூட வழங்க முடியாது எனும் நிலையில், சுயாட்சி உரிமை வழங்குவது குறித்து ஆராயலாம் என்பது ஏமாற்று வேலை என்பதைத் தவிர வேறில்லை. 

13ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தில் தமிழர்களுக்கு ஓரளவாது அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதற்காக சேர்க்கப்பட்ட அம்சங்களில் மிகவும் முக்கியமானவை வடக்கு&கிழக்கு மாநிலங்களை இணைப்பது, காவல்துறை மற்றும் நில நிர்வாக அதிகாரங்களை மாநில அரசுகளுக்கு வழங்குவதாகும். ஆனால், மாநிலங்கள் இனைப்பு குறித்து எந்த வாக்குறுதியையும் ரணில் வழங்கவில்லை. நில அதிகாரம்  தேவையில்லை; காவல்துறை அதிகாரம் தவறாக பயன்படுத்தப்படும் என்று கூறி அவற்றை வழங்க முடியாது என்பதை மறைமுகமாகத் தெரிவித்து விட்டார். 

இத்தனைக்கும் இவை புதிய கோரிக்கைகள் அல்ல. 2002 ஆம் ஆண்டில் விடுதலைப்புலிகள் போர்நிறுத்தத்தை அறிவித்த பிறகு அவர்களுக்கும், ரணில் அரசுக்கும் இடையே நடந்த் பேச்சுகளின் போது இந்த அதிகாரங்களை வழங்க அரசுத்தரப்பு முன் வந்தது. ஆனால், இப்போது இந்த அதிகாரங்களை வழங்க மறுப்பதன் மூலம் தமிழர்களை மூன்றாம் தர குடிமக்களாக நடத்தவே ரணில் துடிக்கிறார் என்பது தெளிவாகிறது. 10 ஆண்டுகளாக அரசியலில் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த விக்கிரமசிங்கவுக்கு, அதிபர் தேர்தலில் இராஜபக்சேவை வீழ்த்தி மறுவாழ்வு அளித்தது தமிழர்கள் தான். அவர்களுக்கு விக்கிரமசிங்க துரோகம் செய்யக்கூடாது.

அதேபோல், இலங்கை இறுதிப் போரில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது  குறித்த பன்னாட்டு விசாரணையை ஏற்க முடியாது; உள்நாட்டு விசாரணைக்கு மட்டுமே தமது அரசு ஒப்புக்கொள்ளும் என்றும் அவர் கூறியுள்ளார். இது ஈழத்தமிழர் இனப்படுகொலையை மூடி மறைக்கும் முயற்சியாகும். இலங்கை இனப்படுகொலையை முன்னின்று நடத்தியது இராஜபக்சேவும், அவரது குடும்பத்தினரும் தான். அவர்கள் அரசியல் ரீதியாக எதிரிகள் என்ற போதிலும், சிங்களர்கள் என்ற ஒரே காரணத்திற்காக இராஜபக்சே தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது என்று நினைக்கும் விக்கிரமசிங்க தமிழர்களின் நலனைக் காப்பாற்றுவார் என்று நினைப்பது பகல் கனவாகவே அமையும். இன்னும் கேட்டால் விடுதலைப்புலிகளுடன் பேச்சு வார்த்தை நாடகத்தை நடத்திக் கொண்டே, ஈழத்தமிழர்களை ஒழிப்பதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்து முடித்தவர் தான் ரணில் விக்கிரமசிங்க.

இராஜபக்சேவாக இருந்தாலும், விக்கிரமசிங்கவாக இருந்தாலும் ஈழத்தமிழர்கள் விஷயத்தில் ஒரே நிலைப்பாடு தான். இராஜபக்சே, விக்கிரமசிங்க என்று முகமூடிகள் தான் மாறுமே தவிர சிங்களப் பேரினவாதம் தான் அவர்களை ஆட்டிப்படைக்கும். ஈழத்தமிழர்களை கொடுமைப்படுத்தினால் தான் சிங்களர்களின் வாக்குகளைப் பெற முடியும் என்பதாலேயே தமிழர்களுக்கு அவர்கள் நன்மை செய்ய மாட்டார்கள். ரணில் தலைமையிலான அரசில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இணைந்தால் தமிழர்களுக்கு ஏதேனும் நன்மை செய்ய வேண்டும் என்பதால், அதை தவிர்க்க, எதிரெதிர் நிலைப்பாடு கொண்ட இராஜபக்சே கட்சியும், ரணில் கட்சியும் இணைந்து தேசிய அரசு அமைத்திருப்பதிலிருந்தே அவர்களின் தமிழர் எதிர்ப்பு அரசியலை புரிந்து கொள்ள முடியும். எனவே, இப்பிரச்சினையில் இந்தியா தலையிட்டு இலங்கை மீதான போர்க்குற்றச்சாற்றுகளை பன்னாட்டு குற்றவியல் விசாரணைக்கு அனுப்பவும், ஈழத் தமிழர்களுக்கு அவர்கள் விரும்பும் தீர்வைப் பெற்றுத் தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Sunday, August 23, 2015

ரஜினி சொன்னதையே நானும் சொல்கிறேன்... ஜெ. மீண்டும் வந்தால் தமிழகத்தைக் காப்பாற்ற முடியாது- ராமதாஸ்

மதுரை: ஜெயலலிதா மீண்டும் முதல்வரானால் ஆண்டவனால் கூட தமிழகத்தைக் காப்பாற்ற முடியாது என்று அன்று ரஜினிகாந்த் சொன்னார். அதையே நானும் இப்போது சொல்கிறேன். 2016 தேர்தலில் ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்து விட்டால் இந்தத் தமிழகத்தை எத்தனை ஆண்டவன் வந்தாலும், எத்தனை காவடி எடுத்தாலும், பால் குடம் எடுத்தாலும் காப்பாற்ற முடியாது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.பாமகவின் மண்டல மாநாடுகள் வரிசையில் பாண்டிய மண்டல அரசியல் மாநாடு நேற்று இரவு வாடிப்பட்டி பகுதியில் நடைபெற்றது. பல ஆயிரம் பேர் திரண்டு வந்திருந்தனர் இந்தக் கூட்டத்திற்கு.பெருமளவில் கூட்டம் கூடியதால் உற்சாகத்துடன் காணப்பட்ட டாக்டர் ராமதாஸ் மதுரை மற்றும் அதன் சுற்றுப் பகுதி பிரச்சினைகளை விலாவாரியாகப் பேசினார். அதற்காக பாமக குரல் கொடுத்ததை விளக்கிப் பேசினார்.
2007 ம் ஆண்டிலேயே தமிழகம் 2020 என்ற தொலைநோக்கு திட்டத்தை நாங்கள் கொண்டு வந்தோம். அதுபோல் எந்த கட்சியாவது பேசியதுண்டா? எதிர்கால கனவுகள் பற்றி பொறுப்புடன் பல திட்டங்களை வெளியிட்டோம். இதுவல்லவா நல்ல கட்சி.
1996ல் ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆண்டவனாலும் தமிழகத்தை காப்பாற்ற முடியாது என்று ரஜினி சொன்னார். அதேயே சோவும் வலியுறுத்தினார். அதையே நானும் சொல்கிறேன்.
இனியும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் எத்தனை ஆண்டவன் வந்தாலும், காவடி எடுத்தாலும், பால் குடம் எடுத்தாலும் தமிழகத்தை காப்பாற்ற முடியாது. அன்புமணி அமைக்கும் அரசு மக்களுக்காக மக்களால் நடத்தப்படும் ஆட்சியாக இருக்கும், எனவேதான் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் நல்லாட்சிதர ஆதரவு தாருங்கள்.

Saturday, August 22, 2015

தனியார் பள்ளிகளில் கட்டணத்தை குறைக்க தேவை... தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை : தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்விக் கட்டணத்தை குறைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.கல்வி தான் வளர்ச்சிக்கான அடிப்படை என்பதால், அதை அனைத்து தரப்பினரும் பெறும் வகையில் அரசு இந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது...தமிழ்நாட்டில் 533 தனியார் பள்ளிகளுக்கு 2015-16, 2016-17, 2017-2018 ஆகிய மூன்று கல்வி ஆண்டுகளுக்கான கட்டணத்தை நீதிபதி சிங்காரவேலு தலைமையிலான கட்டண நிர்ணயக் குழு அறிவித்திருக்கிறது.சென்னையில் மொத்தம் 76 தனியார் பள்ளிகளுக்கு இப்போது கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இவற்றில் பெரும்பாலான பள்ளிகளில் 12 ஆம் வகுப்புக்கான கட்டணம் 40,000 ரூபாய்க்கு மேல் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.இது அடிப்படை கல்விக் கட்டணம் மட்டுமே. இத்துடன் சிறப்புக் கட்டணம், பாட நூல் கட்டணம், நன்கொடை ஆகியவற்றையும் சேர்த்தால் தனியார் பள்ளிகளில் ஆண்டுக்கு ரூ.80 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படக் கூடும்.தமிழ்நாட்டிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கான கட்டணத்தையும் அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி குழு தான் நிர்ணயிக்கிறது. தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகாரக் குழுவின் (NAAC) தரச்சான்று பெறப்பட்ட படிப்புகளுக்கு ரூ.45 ஆயிரமும், தரச்சான்று பெறப்படாத படிப்புகளுக்கு ரூ.40 ஆயிரமும் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்பட வேண்டும் என்று இக்குழு அறிவித்திருக்கிறது.கல்வி தான் வளர்ச்சிக்கான அடிப்படை என்பதால், அதை அனைத்து தரப்பினரும் பெறும் வகையில் அரசு பள்ளிகளில் கல்வித் தரத்தை உயர்த்தவும், தனியார் பள்ளிகளில் கட்டணத்தைக் குறைக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
 

Tuesday, August 18, 2015

குறையும் கரும்பு சாகுபடி: விவசாயத்தின் வீழ்ச்சியைத் தடுக்க நடவடிக்கை தேவை: ராமதாஸ்

குறையும் கரும்பு சாகுபடி, விவசாயத்தின் வீழ்ச்சியைத் தடுக்க நடவடிக்கை தேவை என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாட்டில் கரும்பு சாகுபடி தொடர்பாக கசப்பான செய்தி வெளியாகியிருக்கிறது. கரும்பு சாகுபடி கடந்த 4 ஆண்டுகளில் 37% குறைந்திருக்கிறது என்பது தான் அந்த கசப்பான செய்தி. தமிழகத்தில் வேளாண் வளர்ச்சி திருப்தியளிக்கும் வகையில் இல்லை என்பதையே இந்த புள்ளிவிவரம் காட்டுகிறது.

2011-12 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 386 லட்சம் டன் கரும்பு சாகுபடி செய்யப்பட்டது. அதற்கு முந்தைய காலங்களில் எட்டப்பட்ட வளர்ச்சியின் அடிப்படையில் பார்த்தால் 2014-15 ஆம் ஆண்டில் கரும்பு சாகுபடி 500 லட்சம் டன் என்ற இலக்கை எட்டியிருக்க வேண்டும். ஆனால், கரும்பு சாகுபடி  படிப்படியாகக் குறைந்து 245 லட்சம் டன் என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. இது நடப்பாண்டில்  மேலும் குறைந்து 200 லட்சம் டன்னுக்கும் கீழ் சென்றால் கூட ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை. கரும்பு சாகுபடியை கைவிட்ட உழவர்கள் அதற்கு பதிலாக சவுக்கு, தேக்கு, முந்திரி போன்ற பயிர்களை சாகுபடி செய்யத் தொடங்கியுள்ளனர். இந்த பயிர்கள் லாபம் தரக்கூடியவை தான் என்றாலும், உணவாக  பயன்படக்கூடிய கரும்புக்கு பதிலாக இவை பயிரிடப்படுவது விவசாயத்திற்கு ஏற்பட்ட வீழ்ச்சியாகவே தோன்றுகிறது. இந்த அவல நிலைக்கு ஜெயலலிதாவின் அ.தி.மு.க அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.

கரும்பு சாகுபடிக்கான செலவுகள் அதிகரித்து விட்ட நிலையில், அதற்கான விலை பெருமளவில் குறைந்து விட்டதால் தான் விவசாயிகள் கரும்புக்கு பதிலாக மாற்றுப் பயிர்களை நாடத் தொடங்கி விட்டனர். அதுமட்டுமின்றி, கரும்பை கொள்முதல் செய்யும் தனியார் சர்க்கரை ஆலைகள் அதற்கான பணத்தை முழுமையாகவும், குறிப்பிட்ட காலத்திலும் வழங்காதது இன்னொரு காரணம் ஆகும். 2011 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில், அதிமுக ஆட்சிக்கு வந்தால் ஒரு டன் கரும்புக்கு ரூ.2500 வழங்கப்படும் என்று ஜெயலலிதா அறிவித்திருந்தார். ஆனால், ஆட்சிக்கு வந்த பின்னர் அந்த வாக்குறுதியை காற்றில் பறக்க விட்டு  கரும்புக்கு ரூ.2100 மட்டுமே வழங்கினார்.

2012 ஆம் ஆண்டில் இது ரூ.2350 ஆகவும், 2013 ஆம் ஆண்டில் ரூ.2650 ஆகவும் உயர்த்தப்பட்டது. ஆனால், 2014 ஆண்டில் ஒரு ரூபாய் கூட உயர்த்தப்படவில்லை. மேலும் உழவர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையான ரூ.650 கோடியை தமிழக அரசு இன்னும் பெற்றுத் தரவில்லை.  

2011 ஆம் ஆண்டு வரை கரும்புக்கு மத்திய அரசு அறிவிக்கும் ஆதார விலையுடன், மாநில அரசு டன்னுக்கு ரூ.650 ஊக்கத்தொகை சேர்த்து வழங்குவது வழக்கமாக இருந்தது. ஆனால், அ.தி.மு.க. ஆட்சியில் இது படிப்படியாக குறைக்கப்பட்டு இப்போது ரூ.450 ஆகி விட்டது. தமிழக அரசு அறிவித்த விலையும் அறிவிப்பு நிலையில் தான் இருக்கிறதே தவிர வழங்கப்படவில்லை. இந்த விலையை  வழங்க முடியாது என்று சர்க்கரை ஆலைகள் திட்டவட்டமாக கூறிவிட்டன. அறிவிக்கப்பட்ட விலையை  விவசாயிகளுக்கு பெற்றுத் தருவதற்குக் கூட தமிழக அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

குறிப்பாக 2013-14 ஆம் ஆண்டில் 325 லட்சம் டன்னாக இருந்த கரும்பு உற்பத்தி 2014-15 ஆம் ஆண்டில், 245 லட்சம் டன்னாக குறைந்து விட்டது. ஒரே ஆண்டில் கரும்பு உற்பத்தி 80 லட்சம் டன் குறைந்ததற்கு காரணம் கரும்புக்கான விலையை அரசும், சர்க்கரை ஆலைகளும் போட்டிப்போட்டு டன்னுக்கு ரூ.2200 ஆக குறைத்தது தான். இது வெட்டுக் கூலிக்கும், உரம் வைக்கும் செலவுக்கும்  கூட போதுமானது இல்லை என்பதால் தான் கரும்பு சாகுபடியிலிருந்து விவசாயிகள் வெளியேறத் தொடங்கியுள்ளனர். இதை சாதாரணமான நிகழ்வாக பார்க்கக்கூடாது. நெல் சாகுபடியிலும் இழப்பு மட்டுமே உழவர்களுக்கு விஞ்சுவதால் அதையும் கைவிட்டு வேறு பயிருக்கு மாறும் ஆபத்து உள்ளது. தஞ்சாவூர், நாகை போன்ற காவிரி படுகைகளில் சவுக்கு பயிரிடப்படுவது வளமையின் அடையாளமல்ல. இப்போக்கு உடனடியாக தடுக்கப்படாவிட்டால் உணவுக்கு பிறரிடம் கையேந்தும் நிலை உருவாகிவிடும்.

கரும்புக்கு கட்டுபடியாகும் விலையை வழங்குவதன் மூலம் மட்டுமே விவசாயத்தின் வீழ்ச்சியைத் தடுக்க முடியும். எனவே, நடப்பாண்டிலாவது கரும்புக்கான கொள்முதல் விலையை டன்னுக்கு ரூ.4,000 ஆக உயர்த்துவதுடன், அது உழவர்களுக்கு வழங்கப்படுவதையும் அரசு உறுதி செய்ய வேண்டும். இல்லாவிட்டால், தமிழகத்தில் விவசாயம் என்ற தொழில் ஒரு காலத்தில் சிறப்பாக நடைபெற்றது என்பதை வருங்காலத் தலைமுறை வரலாற்றுப் புத்தகங்களில் மட்டும் தான் படிக்க வேண்டியிருக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இலங்கைத் நாடாளுமன்றத் தேர்தல் முடிவு தமிழர்க்கு எந்த பயனும் இல்லை, தமிழீழமே தீர்வு என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கையில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. எந்த கட்சியும் ஆட்சியமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை பெறவில்லை. எனினும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ரணில் விக்கிரமசிங்க பிரதமராவது உறுதியாகிவிட்டது.

இலங்கை அதிபர் தேர்தலில் தோல்வியடைந்து பதவியை பறிகொடுத்த நிலையில், பிரதமர் பதவியைக் கைப்பற்றலாம் என்று எண்ணத்தில் காய் நகர்த்திய இராஜபக்சேவின் கனவுகளும் கலைந்து விட்டன. தமது தோல்வியை ஒப்புக்கொண்டுள்ள இராஜபக்சே எதிர்க்கட்சி உறுப்பினராக செயல்படப் போவதாக அறிவித்துள்ளார். வழக்கம் போலவே தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதிக வாக்குகளைக் கைப்பற்றியுள்ளது. 20-க்கும் மேற்பட்ட இடங்கள் அக்கட்சிக்கு கிடைக்கக்கூடும்.

இலங்கைத் தேர்தலில் தமிழர்களுக்கு சாதகமான அம்சம் ஏதேனும் உண்டு என்றால், அது முன்னாள் அதிபர் இராஜபக்சேவுக்கு ஏற்பட்ட தோல்வி தான். அதிபராக இருந்த போது 1.5 லட்சம் அப்பாவித் தமிழர்களை படுகொலை செய்த இராஜபக்சே மீண்டும் பிரதமரானால், அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு தமிழர்களுக்கு எதிராக செயல்படுவார் என்று தமிழர்கள் அஞ்சினர். இத்தகைய சூழலில்  இராஜபக்சே தோல்வியடைந்திருப்பது தமிழர்களுக்கு ஓரளவு நிம்மதியைத் தந்துள்ளது. இதைத் தவிர வேறு எந்த நன்மையும் ஈழத் தமிழர்களுக்கு ஏற்படப்போவதில்லை என்பது தான் உண்மையாகும்.

இலங்கைத் தேர்தல் முடிவுகள் உலகத்திற்கு சொல்லும் பாடம் என்னவெனில், அந்நாட்டில் சிங்கள இனத்தவரும், தமிழர்களும் ஒற்றுமையாக வாழ முடியாது என்பது தான். இந்தத் தேர்தலில் இராஜபக்சே தலைமையிலான அணியும், விக்கிரமசிங்க தலைமையிலான அணியும் தமிழர்களுக்கு எதிராகவும், சிங்கள இனவெறியை தூண்டும் வகையிலும் பரப்புரை மேற்கொண்டன. இதன்பயனாக சிங்களர்கள் வாக்குகளை இரு கட்சிகளும் சரிசமமாக பகிர்ந்து கொண்டனர். அதேபோல் தமிழர்கள் அதிகம்  வாழும் பகுதிகளில் தமிழர் தேசிய கூட்டமைப்பு தான் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றியுள்ளது. இதன்மூலம் சிங்களர்களை ஆதரிக்கத் தயாரில்லை என்பதை தமிழர்களும், தமிழர்களுக்கு அதிகாரம் வழங்கத் தயாராக இல்லை என்பதை சிங்களர்களும் மீண்டும் ஒரு முறை தெரிவித்திருக்கின்றனர்.

இதே நிலை தொடர்ந்தால் தமிழர்கள் தொடர்ந்து கொத்தடிமைகளாகவே வாழ நேரிடும். இதன்பிறகும் இரு இனத்தினரும் ஒன்றாக வாழ்வது பொருந்தா கூட்டணியாகவே இருக்கும். எனவே, உலகெங்கும் வாழும் ஈழத்தமிழர்களிடையே பொதுவாக்கெடுப்பு நடத்தி தனித் தமிழீழம் அமைக்க ஐ.நா. அமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். அது தான் இலங்கை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக அமையும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சேஷசமுத்திரம் கலவரம்: தேசிய மனித உரிமை ஆணையத்தில் பாமக புகார்



பா.ம.க. தலைமை நிலையச் செய்தி:
’’விழுப்புரம் மாவட்டம் சேஷசமுத்திரம் கிராம மக்கள் மீது கடந்த 16 ஆம் தேதி காவல்துறையினர் மிகக்கொடிய தாக்குதலை நடத்தியுள்ளனர். கருவுற்ற பெண்கள் மற்றும் சிறுவர்களை தாக்கி கைது செய்துள்ளனர். அந்த கிராம மக்களுக்கு சொந்தமான ரூ.80 லட்சம் மதிப்புள்ள சொத்துக்கள் சூறையாடப் பட்டுள்ளன.

 இதற்குக் காரணமான காவல்துறை துணைத் தலைவர் சுமித் சரண், கண்காணிப்பாளர்  நரேந்திரன் நாயர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; சொத்துக்களை இழந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்; அப்பாவி மக்கள் மீது தொடரப்பட்ட பொய்வழக்குகளை திரும்பப்பெற ஆணையிட வேண்டும் என்று கோரி தேசிய மனித உரிமை ஆணையத்திடம் பா.ம.க. சார்பில் வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவையின் தலைவர் வழக்கறிஞர் க.பாலு இன்று மனு அளித்தார்.’’

Sunday, August 16, 2015

சேஷசமுத்திரம் மக்களை தாக்கி வீடுகளை சூறையாடிய போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை தேவை: ராமதாஸ்

சென்னை: சேஷசமுத்திரம் மக்களை தாக்கி வீடுகளை சூறையாடிய காவல் துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்தை அடுத்த சேஷசமுத்திரத்தில் அப்பாவி மக்கள் மற்றும் பெண்கள் மீது மிகக்கொடிய வன்முறை மற்றும் ஒடுக்குமுறையை காவல்துறையினர் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். மனித உரிமைகளை சற்றும் மதிக்காமல் காவல்துறை நடத்திய தாக்குதல் கடும் கண்டனத்துக்குரியது.சங்கராபுரம் அருகிலுள்ள சேஷசமுத்திரம் கிராமத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரும், தாழ்த்தப்பட்ட பிரிவினரும் வசித்து வருகின்றனர். தாழ்த்தப்பட்ட மக்கள் எண்ணிக்கையில் குறைவாக இருக்கும் போதிலும், அவர்களுக்கு பிற சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்பாக இருந்து வந்துள்ளனர். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்கள் அவர்களுக்கு சொந்தமான அம்மன் கோவிலில் தேரோட்டம் நடத்த வேண்டும் என்று விரும்பியதால், அதற்கான தேரையும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரே வாங்கிக் கொடுத்துள்ளனர். இத்தகைய சூழலில் வன்முறையைத் தூண்டி பிழைப்பு நடத்தும் அரசியல் கட்சியைச் சேர்ந்த சில சமூக விரோதிகள் தாழ்த்தப்பட்ட மக்களிடம் நச்சுப் பிரச்சாரம் செய்து இரு சமூகங்களுக்கும் இடையே பகைமையை ஏற்படுத்தியுள்ளனர். இதனால் 3 ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறவில்லை. இது குறித்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள நிலையில் வன்முறைக் கட்சியை சேர்ந்த சிலர் இன்று தேரோட்டம் நடத்தியே தீருவோம் என சுவரொட்டிகளை ஒட்டி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர். அதன்விளைவாக நேற்றிரவு 2 சமூகத்தினருக்கும் இடையே மோதல் மூண்டுள்ளது.இதையடுத்து மோதலை கட்டுப்படுத்துவதற்கு வரவழைக்கப்பட்ட காவல்துறையினர், மோதலுக்கு யார் காரணம் என்பதை விசாரிக்காமல் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மீது கண்மூடித்தனமாக தடியடி மற்றும் தாக்குதல் நடத்தியுள்ளனர். அப்போது காவல்துறையினர் மீது சிலர் கற்களை வீசியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த காவல்துறையினர் விழுப்புரம் சரக காவல்துறை துணைத்தலைவர் சுமித்சரண், விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் நரேந்திரன் நாயர், கடலூர் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், திருவண்ணாமலை காவல் கண்காணிப்பாளர் பொன்னி ஆகியோர் தலைமையில் 500 பேர் அதிகாலை 4 மணிக்கு சேஷசமுத்திரத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூக மக்கள் வாழும் தெருக்களில் நுழைத்து ஒடுக்குமுறையை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். வீடுகளில் ஆண்கள் இல்லாத நிலையில், அங்கிருந்த தொலைக்காட்சி மற்றும் வீட்டு பயன்பாட்டுப் பொருட்களை இரும்புக் கம்பிகளால் நொறுக்கியுள்ளனர். ஏராளமான இரு சக்கர ஊர்திகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. காவல்துறையினரால் சூறையாடப்பட்ட அப்பாவிகளுக்கு சொந்தமான பொருட்களின் மதிப்பு பல லட்ச ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது.ஒடுக்குமுறைகளில் இருந்து தப்பிப்பதற்காக மண் மலை, கொசப்பாடி, கரடி சித்தூர், செல்லம்பட்டு உள்ளிட்ட அண்டை கிராமங்களில் தஞ்சம் புகுந்த மக்களையும் காவல்துறையினர் வளைத்து கொடுமைப்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. வீடுகளில் பெண்கள் தனியாக இருந்தால் அவர்களுக்கு தொல்லை தரக்கூடாது என உச்சநீதிமன்றம் தெளிவாக அறிவுரை வழங்கியிருக்கிறது. ஆனால், அதை மதிக்காமல் அதிகாலையில் வீடு புகுந்து பெண்களையும், சிறுவர்களையும் தாக்கியுள்ளனர்.பெண்களின் தலைமுடியைப் பிடித்து வேண்டுமென்றே தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் பகுதிகள் வழியாக இழுத்து வந்துள்ளனர். காவல்துறையில் பணியாற்றும் ஒரு குறிப்பிட்ட பிரிவினரால் இத்தகைய மனித உரிமை மீறல்கள் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டுள்ளன. இதுபோன்ற அடக்குமுறைகளை மன்னிக்க முடியாது.காவல்துறையினர் மீது கற்கள் வீசப்பட்டிருந்தால் அது கண்டனத்துக்குரியது. இதற்கு யார் காரணம்? என்பதை விசாரணையின் மூலம் கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான் சட்டம் சொல்லும் வழியாகும். கடந்த காலங்களில் காவல்துறையினருக்கு எதிராக போராட்டங்கள் வெடித்து பெருமளவில் பொதுச்சொத்து சேதப்படுத்தப்பட்ட போது கூட, அதற்குக் காரணமானவர்கள் மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்படவில்லை.மாறாக சேஷசமுத்திரம் மக்களை மட்டும் ஏதோ பாகிஸ்தான் பயங்கரவாதிகளைப் போல கொடூரமாக நடத்தியுள்ளனர். அண்டை நாடு மீது இன்னொரு நாடு படையெடுத்து பிடித்த போது கூட அங்குள்ள மக்கள் இந்த அளவுக்கு இழிவுபடுத்தப்பட்டிருக்க மாட்டார்கள். இறுதியாக 11 பெண்கள், 7 சிறுவர் உட்பட மொத்தம் 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், நூற்றுக்கும் மேற்பட்டோர் சட்டவிரோதக் காவலில் வைத்து கொடுமைப்படுத்தப்படுகின்றனர். பொதுவாக எந்த மோதல் தொடர்பாகவும் சிறுவர்கள் கைது செய்யப்படுவதில்லை. ஆனால், 7 அப்பாவி சிறுவர்களை தாக்கி கைது செய்திருப்பது காவல்துறையினரின் வெறிச்செயலுக்கு ஆதாரம் ஆகும்.காவல்துறை துணைத்தலைவர் சுமித் சரண், கண்காணிப்பாளர் நரேந்திரன் நாயர் ஆகியோர் தான் இந்த ஒடுக்குமுறைக்கு காரணம் ஆவர். இவர்கள் இதற்கு முன் பணியாற்றிய தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களிலும் இத்தகைய மோதல்களும், அடக்குமுறைகளும் நடந்தது குறிப்பிடத்தக்கது. சேஷசமுத்திரம் ஒடுக்குமுறைக்கு காரணமான இந்த இருவர் உள்ளிட்ட காவல் அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.இந்த தாக்குதல்கள் குறித்து விசாரிப்பதற்காக வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவைத் தலைவர் கே.பாலு தலைமையில் உண்மை கண்டறியும் குழு நாளை அங்கு அனுப்பி வைக்கப்படும். இது தொடர்பாக தேசிய மற்றும் மாநில மனித உரிமை ஆணையங்கள், தேசிய குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணையம் ஆகியவற்றில் புகார் செய்யப்படும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

20 ஆண்டுகளில் ரூ. 5 லட்சம் கோடி தாது மணல், கிரானைட் ஊழல்... விசாரணை கோரும் ராமதாஸ்

சென்னை: தமிழகத்தில் கடந்த 20 வருடமாகவே கிரானைட் மற்றும் தாது மணல் ஊழல் நடந்து வருகிறது. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.இதுதொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் விரிவான விசாரணை தேவை என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
மதுரை மாவட்டத்தில் பெருமளவில் கிரானைட் கொள்ளை நடப்பதாகவும், அதன் குறைந்தபட்ச மதிப்பு ரூ.16,000 கோடி இருக்கலாம் என்றும் 2012 ஆம் ஆண்டில் அப்போதைய மதுரை மாவட்ட ஆட்சியர் சகாயம் தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பினார். அதன்பிறகு தான் கிரானைட் ஊழல் குறித்த விவரங்கள் பொதுமக்களுக்கு வெளிப்படையாக தெரியவந்தன. ஆனால், கிரானைட் மற்றும் தாது மணல் ஊழல்கள் 20 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகின்றன என்பதும், தமிழகத்தை ஆளும் அதிமுகவும், ஏற்கனவே ஆண்ட திமுகவும் இந்த இயற்கை வள கொள்ளைக்கு துணை நின்றதுடன், அதைப் பயன்படுத்தி பெருமளவு ஊழல் செய்தன என்பது தான் மறுக்க முடியாத உண்மை. தனியாருக்குத் தாரை வார்த்த ஜெயலலிதா 3/13 தனியாருக்குத் தாரை வார்த்த ஜெயலலிதா தமிழ்நாட்டில் கிரானைட் வளம் அதிகம் இருப்பதால் அதை வெட்டி எடுத்து விற்பனை செய்வதற்காக தமிழ்நாடு கனிம நிறுவனம்(டாமின்) கடந்த 1978 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.1992 ஆம் ஆண்டு வரை இந்த நிறுவனம் தான் கிரானைட் குவாரிகளை கையாண்டு வந்தது. 1992 ஆம் ஆண்டில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தான் கிரானைட் குவாரிகளை தனியாருக்கு தாரை வார்த்தார். அந்த ஆண்டில் மட்டும் சுமார் 200 கிரானைட் குவாரிகளுக்கான உரிமத்தை தனியாருக்கு வழங்கினார். இதுதான் ஊழலுக்கு அடித்தளம் 4/13 இதுதான் ஊழலுக்கு அடித்தளம் கிரானைட் ஊழலுக்கு இது தான் அடித்தளமாக அமைந்தது. தனியாருக்கு கிரானைட் குவாரி உரிமங்கள் வழங்கப்பட்டதில் ஜெயலலிதா அரசு மிகப்பெரிய அளவில் ஊழல் செய்ததாக குற்றச்சாற்றுகள் எழுந்தன. 1996 ஆண்டில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் கிரானைட் உரிமம் வழங்குவதில் ரூ.39 கோடி ஊழல் செய்ததாக ஜெயலலிதா, முன்னாள் அமைச்சர் கரூர் சின்னசாமி, இ.ஆ.ப. அதிகாரி தியானேஸ்வரன் ஆகியோர் மீது வழக்குத் தொடரப்பட்டு, ஜெயலலிதா தவிர மற்ற இருவரும் கைது செய்யப்பட்டனர். ஆனால், அடுத்த சில மாதங்களில் இந்த வழக்கு நீர்த்து போகச் செய்யப்பட்டது. அனைவரும் தப்பினர் 5/13 அனைவரும் தப்பினர் குற்றப்பத்திரிக்கை கூட தாக்கல் செய்யப்படாததால் குற்றஞ்சாற்றப்பட்டிருந்த அனைவரும் தப்பினர். ஊழல் செய்ததாகக் கூறி கைது செய்யப்பட்ட அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கரூர் சின்னசாமி திமுகவில் சேர்த்துக் கொள்ளப்பட்டதுடன், அவருக்கு மாநில அளவில் பதவியும் வழங்கப்பட்டது. இதற்கெல்லாம் காரணம் கிரானைட் குவாரி அதிபர்களின் அன்பான கவனிப்பும், உபசரிப்பும் தான் என்ற புகாரை ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. ரூ. 5 லட்சம் கோடி ஊழல் 6/13 ரூ. 5 லட்சம் கோடி ஊழல் தமிழ்நாட்டில் இதுவரை நடந்த கிரானைட் கொள்ளையின் மதிப்பு ரூ. 5 லட்சம் கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. கிரானைட் நிறுவனம் நடத்தும் மதுரை தொழிலதிபரின் அதிகாரப்பூர்வ சொத்து மட்டும் ரூ.30,000 கோடி என்பதிலிருந்தே, அதிமுக, திமுக ஆதரவுடன் நடந்த கிரானைட் ஊழலில் முழு பரிமானத்தை புரிந்து கொள்ளமுடியும். ஊழலை ஊட்டி வளர்த்த திராவிடக் கட்சிகள் 7/13 ஊழலை ஊட்டி வளர்த்த திராவிடக் கட்சிகள் தாது மணல் கொள்ளையை ஊக்குவித்ததும் இரு திராவிடக் கட்சிகளின் ஆட்சிகள் தான். 1989 ஆம் ஆண்டில் தாது மணல் கொள்ளையைத் தொடங்கிய வி.வி. மினரல்ஸ் நிறுவனத்திற்கு அரசியல் வேறுபாடு பாராமல் இரு கட்சிகளும் ஊக்கமளித்தன. இந்நிறுவன அதிபர் வைகுந்தராஜன், அதிமுக தலைமையுடன் வெளிப்படையாகவே வணிக உறவு வைத்திருக்கிறார். வைகுந்தராஜனின் பங்குகள் 8/13 வைகுந்தராஜனின் பங்குகள் ஆளுங்கட்சிக்கு சொந்தமான ஜெயா தொலைக்காட்சி, மிடாஸ் போன்ற நிறுவனங்களில் வைகுந்தராஜனுக்கு பங்குகள் உள்ளன. தாது மணல் கொள்ளை வழக்கு தொடர்பாக முந்தைய திமுக ஆட்சியில் 2007ஆம் ஆண்டு இவர் கைது செய்யப்பட்டபோது, தமிழகத்தின் மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்காத, ஜெயலலிதா கொதித்தெழுந்து வைகுந்தராஜன் கைது பழிவாங்கும் நடவடிக்கை என குற்றஞ்சாற்றினார். சமரசம் காரணமாக விடுதலை 9/13 சமரசம் காரணமாக விடுதலை தாது மணல் கொள்ளை வழக்கில் 2007 ஆம் ஆண்டில் வைகுந்தராஜனை திமுக அரசு கைது செய்த போதிலும், அதன்பிறகு அவர்களுக்கிடையே ஏற்பட்ட சமரசம் காரணமாக விடுதலை செய்யப்பட்டார். அதன்பின் அவர் மீதான வழக்கு என்ன ஆனது என்பது இதுவரை தெரியவில்லை. வி.வி. மினரல்ஸ் நிறுவனத்திற்கு ஆதரவாக திமுக செயல்படுகிறது என்பதற்கு பல உதாரணங்களைக் கூற முடியும். தமிழகத்தில் நடைபெறும் கிரானைட், தாது மணல் உள்ளிட்ட ஊழல்கள் குறித்து விசாரணை நடத்தக்கோரும் மனுவை ஆளுனரிடம் மனு அளிக்கப்போவதாக கடந்த ஆண்டு இறுதியில் அறிவித்தேன்; அதன்படி17.08.2015 அன்று ஆளுனரிடம் ஊழல் குற்றச்சாட்டு பட்டியல் வழங்கப்பட்டது. அமைதியாக இருக்கும் திமுக 10/13 அமைதியாக இருக்கும் திமுக இதேபோன்ற மனுவை ஆளுனர் மாளிகைக்கு பேரணி நடத்தி ஆளுனரிடம் வழங்கப்போவதாக கடந்த ஜனவரி மாதம் நடந்த தி.மு.க. பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அதன்பின் 8 மாதங்களாகியும் கிரானைட், தாது மணல் ஊழல் குறித்து விசாரணை ஆணையம் அமைக்கக் கோரும் மனுவை திமுக தாக்கல் செய்யவில்லை; அதற்கான காரணத்தையும் கூறவில்லை. ஊழல்களுக்கு திமுகவும் உடந்தை 11/13 ஊழல்களுக்கு திமுகவும் உடந்தை தமிழகக் கடலோரப்பகுதிகளில் இருந்து கடந்த 2002 முதல் 2012 வரையிலான 10 ஆண்டுகளில் ரூ.45 லட்சம் கோடி மதிப்புள்ள மோனசைட் தாதுவை வி.வி.மினரல்ஸ் கொள்ளையடித்திருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல், ரூ.5 லட்சம் கோடி அளவுக்கு கிரானைட் கொள்ளை நடந்திருப்பதாகவும் தெரிகிறது. இந்த ஊழல்களுக்கு அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுமே உடந்தை. இதுகுறித்து ஆளுனரிடம் பா.ம.க. அளித்த மனுவில் முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாற்றுகளை இரு கட்சிகளுமே மறுக்கவில்லை என்பதிலிருந்தே அக்குற்றச்சாற்றுகளின் உண்மைத்தன்மையை உணர்ந்து கொள்ளலாம். விரிவான விசாரணை தேவை 12/13 விரிவான விசாரணை தேவை தமிழகத்தின் விலைமதிப்பற்ற இயற்கை வளங்களை தனியார் தடையின்றி கொள்ளையடிப்பதை அனுமதிக்கக்கூடாது. கிரானைட் ஊழல் குறித்து சகாயம் குழுவும், தாது மணல் ஊழல் குறித்து ககன்தீப்சிங் பேடி குழுவும் விசாரணை நடத்தி வருகின்றன. எனினும், இவற்றின் விசாரணை வரம்பு மிகவும் குறுகியதாகும். எனவே, தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளாக நடைபெற்ற தாது மணல், கிரானைட் ஊழல்கள் குறித்து மத்திய புலனாய்வுப் பிரிவு(CBI) அல்லது சிறப்பு புலனாய்வுக்குழு (Special Investigation Team -SIT) அமைத்து விரிவான விசாரணை நடத்த அரசு ஆணையிட வேண்டும் என்று ராமதாஸ் கோரியுள்ளார்.

Saturday, August 15, 2015

ஜெ. சுதந்திர தின உரையில் மதுவிலக்கு அறிவிப்பு இல்லை: ராமதாஸ் கண்டனம்

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சுதந்திர தின உரையில் மதுவிலக்கு பற்றிய அறிவிப்பு இல்லாததால் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.ADVERTISEMENTஇது தொடர்பாக டாக்டர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கை:இந்தியாவின் 69-ஆவது விடுதலை நாளையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்துப் பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா புதிய அறிவிப்புகள் எதையும் வெளியிடவில்லை. குறிப்பாக மதுவிலக்கு குறித்து அறிவிப்பு வெளியிடாததால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Thursday, August 13, 2015

மக்களைக் கெடுத்தது போதும்; மதுக்கடைக்கு மூடுவிழா நடத்துக; ராமதாஸ்

மக்களைக் கெடுத்தது போதும்; மதுக்கடைக்கு மூடுவிழா நடத்துக என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வறட்சி, நதிநீர் பிரச்சினை, வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் என எத்தனையோ பிரச்சினைகள் தமிழகத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தாலும், அவை அனைத்தையும் கடந்த சமூகப் பேரழிவாக உருவெடுத்திருப்பது மதுவும், அதனால் ஏற்படும் பாதிப்புகளும் தான். மதுவின் கொடுமைகள் பற்றி ஒவ்வொரு நாளும் வெளியாகும் செய்திகள் நமது மனசாட்சியை உலுக்குவதாக அமைந்திருக்கின்றன.

உலகில் மிக மோசமான கலாச்சார சீரழிவைச் சந்தித்த நாடுகளுக்குச் சென்று, ‘‘உங்கள் நாட்டில் 4 வயது குழந்தை என்ன குடிக்கும்?’’ என்று கேட்டால், ‘பால் குடிக்கும்’ என்பது தான் பொதுவான பதிலாக இருக்கும். ஆனால், கலாச்சாரத்தின் தொட்டிலாக போற்றப்படும் தமிழ்நாட்டில் இந்த கேள்வியை துணிச்சலாகக் கேட்க முடியாது. காரணம். 4 வயது குழந்தைக்குக் கூட மதுவைப் புகட்டி கெடுக்கும் கலாச்சாரம் உருவாகியிருக்கிறது. மாணவர்கள், பெண்கள், குழந்தைகள் என யாரெல்லாம் தூய்மையின்  உருவமாக கொண்டாடப்பட்டார்களோ, அவர்கள் அனைவரும் மது வலையில் வீழ்த்தப்படும் அவலம் அரங்கேற்றப்பட்டு வருகிறது. இவை அனைத்துக்கும் காரணம்.... தெருவுக்குத் தெரு கடை திறந்து மதுவை மிக எளிதாக கிடைக்கும் பொருளாக மாற்றியதைத் தவிர வேறென்னவாக இருக்க முடியும்.

2003 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தமிழக அரசே டாஸ்மாக் நிறுவனம் மூலம் மதுக்கடைகளைத் திறந்து மதுவை விற்பனை செய்யத் தொடங்கியது. அன்று முதல் இன்று வரை தமிழகத்தின் சராசரி பொருளாதார வளர்ச்சி 10 விழுக்காட்டைத் தாண்டவில்லை. ஆனால், இதேகாலத்தில் மது விற்பனை மூலம் அரசுக்கு கிடைத்த லாபத்தின் சராசரி வளர்ச்சி விதிதம் 20 விழுக்காட்டுக்கும் குறையவில்லை. இந்த காலத்தை தமிழகத்தை ஆட்சி செய்தவர்கள் எதன் வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்தினார்கள் என்பதை இந்த புள்ளி விவரங்களில் இருந்து அறிந்து கொள்ளலாம். ஆங்கிலேயர் ஆட்சியில் இந்திய மக்களுக்கு விடுதலை உணர்வு ஏற்படாமல் இருக்க மதுக்கடைகளை அதிக இடங்களில் திறந்து மக்களை எப்போதும் போதையிலேயே வைத்திருந்தார்களாம். அதேபோல் தான் தங்களுக்கு எதிராக  குரல் கொடுத்துவிடக்கூடாது என்று தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்து வரும் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் அதிக அளவில் மதுக்கடைகளை திறந்து மக்களின் உணர்வுகளை சிதைத்து விட்டன.

மது அரக்கனை ஒழிக்க வேண்டும் என்பதற்காக கடந்த 35 ஆண்டுகளாக நான் போராடி வருகிறேன். கடந்த சில மாதங்களாக பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் மாவட்டம் தோறும் நடத்தப்பட்டு வரும் மது ஒழிப்புப் போராட்டங்களுக்கு பல்லாயிரக்கணக்கில் பெண்கள் திரண்டு வருகின்றனர். மதுவுக்கு எதிரான மகளிரின் மனநிலையை இந்தப் போராட்டங்களில் இருந்தே அறிந்து கொள்ளலாம். ஆனால்,  இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத தமிழக அரசு, மதுக்கடைகளை மூடி மதுவிலக்கை நடைமுறைப் படுத்துவதற்குப் பதிலாக மக்களை அவமானப்படுத்தும் வகையில் ஒவ்வொரு வருவாய் வட்டத்திற்கும் இரு மதுக்கடைகள் வீதம் 500 எலைட் மதுக்கடைகளை திறந்து வருகிறது. இதுபோன்ற மக்கள் நலனுக்கு எதிரான செயல்களை தமிழக மக்கள் சகித்துக் கொள்ள மாட்டார்கள். நேரம் வரும்போது  தங்களின் வலிமை என்ன என்பதை நிரூபித்திருக்கிறார்கள். இனி வரும் காலத்திலும் நிரூபிப்பார்கள் என்பது உறுதி.

இறுதியாக, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஒன்றை நினைவூட்ட விரும்புகிறேன். தமிழக முதலமைச்சராக முதன்முறையாக பதவியேற்ற பின் மதுவின் தீமைகளை விளக்கும் வகையில் அரசு சார்பில் தயாரிக்கப்பட்ட, ‘நீங்க நல்லா இருக்கணும்’ என்ற திரைப்படத்தின் அறிமுக விழா  26.11.1992 அன்று சென்னையில் நடந்தது. அந்த விழாவில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, ‘‘குடிப்பழக்கத்திற்கு அடிமைப்பட்டவர்கள் முதலில் தம்மை அழித்துக் கொள்கிறார்கள்.அடுத்து அவர்களைச் சார்ந்திருப்பவர்களை நிலையான பாதிப்புக்கு ஆட்படுத்துகிறார்கள். குறிப்பாக, மனைவி, மக்களின் நலன் முழுமையாக புறக்கணிக்கப்படுவதுடன், அவர்களின் வாழ்க்கை மட்டுமல்ல, அவர்களது சந்ததியினரின் மனநலத்திற்கும் பெரும் பாதிப்பையும், தீங்கையும் விளைவிக்கிறார்கள். இப்படி இவ்வளவு தீமைகளை விளைவிக்கக்கூடிய மதுப்பழக்கம் தேவைதானா? பகுத்தறிவுள்ள ஒவ்வொரு மனிதனின் இதயத்திலும், நியாயத்தோடு எழ வேண்டிய நேர்மையான கேள்வி இது’’ என்று கூறினார்.

ஜெயலலிதா கூறியபடி அவருக்கு மக்கள் நல்லா இருக்கணும் என்ற எண்ணம் இருந்தால், இந்திய விடுதலை நாளான நாளை முதல் தமிழகத்தில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும். அவர் செய்வாரா?. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மீத்தேன் திட்டம் போச்சு, பாறை எரிவாயு திட்டம் வந்தது டும்டும்டும்.. ராமதாஸ் எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் பாறை எரிவளி திட்டத்தை செயல்படுத்த கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்தியுள்ள பாமக, இத்திட்டம் தொடர்பாக, தமிழக அரசு தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.ADVERTISEMENTபாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர், ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தின் காவிரிப் படுகையில் 9 பகுதிகளில் 35 இடங்களில் பாறை எரிவளியை (shale gas) பிரித்து எடுக்கும் திட்டத்திற்கு அனுமதி கோரி, மத்திய அரசுக்கு எண்ணை மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனமான ஓ.என்.ஜி.சி விண்ணப்பித்திருக்கிறது.சுற்றுச்சூழலுக்கும், விவசாயத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய இத்திட்டத்தை செயல்படுத்த ஓ.என்.ஜி.சி துடிப்பது கண்டிக்கத்தக்கது. இந்தியாவில் பாரம்பரிய முறையில் எடுக்கப்படும் இயற்கை எரிவளி வளம் குறைந்துவிட்ட நிலையில், பாறைகளுக்கு நடுவே புதைந்திருக்கும் எரிவளியை பாறையை உடைத்து வெளிக்கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது.இந்தியாவில் மொத்தம் 2000 லட்சம் கோடி கன அடி அளவுக்கு பாறை எரிவளி இருப்பதாகவும், அவற்றில் 90 லட்சம் கோடி கன அடி பாறை எரிவளியை எடுக்க முடியும் என்றும், மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் கண்டறிந்திருக்கிறது. இந்த எரிவளியை எடுப்பதன் மூலம், அடுத்த 26 ஆண்டுகளுக்கு இந்தியாவின் எரிசக்தி தேவையை நிறைவேற்ற முடியும் என்பதால் பாறை எரிவளித் திட்டத்தை செயல்படுத்த முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தீர்மானித்தது.தமிழ்நாட்டில் 9 பகுதிகள் உட்பட இந்தியா முழுவதும் 56 இடங்களில் பாறை எரிவளி எடுப்பதற்கு ஓ.என்.ஜி.சி மற்றும் ஆயில் இந்தியா ஆகிய நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி தமிழகத்தில் பாறை எரிவளியையும், பாறை எண்ணையையும் எடுக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு ஓ.என்.ஜி.சி கடந்த ஜூன் மாதம் 29ம் தேதி கடிதம் எழுதியுள்ளது.மத்திய அரசும், இந்த அனுமதியை வழங்குவது குறித்து தீவிரமாக ஆய்வு செய்து வருவதாக தெரிகிறது. காவிரிப்படுகையில் அதிக அளவில் காணப்படும் மீத்தேன் எரிவளியை எடுக்க முந்தைய தி.மு.க ஆட்சி காலத்தில் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டிருந்ததால் அதற்கான நடவடிக்கைகள் சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்படவிருந்தன. அதனால் காவிரிப்படுகையில் மிக மோசமான பாதிப்புகள் ஏற்படும் என்பதால் அதற்கு எதிராக மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் வெடித்தன.அதன்பயனாக அந்த முயற்சி, முறியடிக்கப்பட்ட நிலையில், அதைவிட பெரும் ஆபத்தாக பாறை எரிவளித் திட்டத்தை செயல்படுத்த ஓ.என்.ஜி.சி துடிக்கிறது. மீத்தேன் எரிவளி திட்டத்தைவிட பாறை எரிவளித் திட்டம் மிகவும் ஆபத்தானது. மீத்தேன் திட்டம் சில ஆயிரம் அடி ஆழத்தில் சாதாரண நிலையில் இருக்கும் மீத்தேன் வாயுவை பிரித்து எடுப்பதாகவும். பாறை எரிவளி எந்பது பல கிலோ மீட்டர் ஆழத்தில் பாறைகளுக்கு நடுவே புதைந்துள்ள எரிவளியை பிரித்து எடுப்பதாகும்.பாறை எரிவளித் திட்டம் செயல்படுத்தப்பட்டால், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், அரியல், கடலூர் ஆகிய மாவட்டங்களில் விவசாயம் அழிவதுடன் மக்கள் வாழ முடியாத நிலை உருவாகிவிடும். 5 கோடி பேருக்கு குடிநீர் கிடைக்காத நிலை ஏற்படும். மொத்தத்தில் தமிழகம் பாலைவனமாகிவிடும். உலகின் பல நாடுகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் போதிலும், அவையெல்லாம் மக்கள் வசிக்காத பகுதிகள். தமிழகத்தில் இத்திட்டத்திற்காக காவிரிப்படுகையை அழிக்க முயல்வது கண்டிக்கத்தக்கது.இத்திட்டம் குறித்த நிலைப்பாட்டை தமிழக அரசு விளக்க வேண்டும். பாறை எரிவளித் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்தக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். தமிழ்நாட்டை பாலைவனமாக்கும், பாறை எரிவளித் திட்டத்தை கைவிட வலியுறுத்தி காவிரிப் பாசன மாவட்ட தலைநகரங்களில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் நடத்தப்படும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்
 

கொடைக்கானல் பாதரசக் கழிவை உலகத்தரத்தில் அகற்ற வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

 


கொடைக்கானல் பகுதியில் பரவியுள்ள பாதரசக் கழிவை உலகத்தரத்தில் அகற்ற வேண்டும் என பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கொடைக்கானல் பகுதியில் பரவியுள்ள பாதரசக்(Mercury)கழிவுகளை அகற்ற, அதற்குக் காரணமான யுனிலீவர் நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் மற்றும் மருத்துவர் என்ற முறையில், பாதரசக் கழிவுகளை விரைவாகவும், வெளிப்படையாகவும், முழுமையாகவும் அகற்ற வேண்டியது அவசியம் என்பதில் உறுதியாக உள்ளேன்.

கொடைக்கானல் பாதரசக் கழிவுகளை தூய்மைப்படுத்துவதற்கு தரம் குறைந்த முறையை பயன்படுத்த யுனிலீவர் நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியிருக்கிறது. யுனிலீவர் பயன்படுத்தவுள்ள தரம் என்பது, அதன் தலைமையகம் அமைந்துள்ள இங்கிலாந்தில் கடைபிடிக்கப்படும்  பாதரச கையாளும் தரத்தை விட 25 மடங்கு குறைந்ததாகும். உயர்தரமான பெருநிறுவன நடத்தையை போதிக்கும் 58 பில்லியன் டாலர் மதிப்புள்ள இந்த நிறுவனம் இத்தகைய இரட்டை அளவுகோள்களையும், கஞ்சத் தனத்தையும் கடைபிடிப்பது மன்னிக்க முடியாத குற்றம் ஆகும். யுனிலீவர் நிறுவனத்தின் இந்தியப் பிரிவு இந்த விஷயத்தில் செயல்படும் விதத்தைத் தெரிந்து கொண்டு, காலம் கடப்பதற்குள் தேவையான மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி யுனிலீவர் நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி பால் போல்மன் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

வைகை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியாக செயல்படும் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில்  யுனிலீவர் நிறுவனத்தின் வெப்பமானி தொழிற்சாலை அமைந்திருக்கிறது. அதுமட்டுமின்றி, பாம்பார் சோழா சூழல் அமைப்பின் ஓர் அங்கமாகவும் இருக்கும் இப்பகுதி அதிஉயர் உலகத்தரத்தில் தூய்மைப் படுத்தப்பட வேண்டும். யுனிலீவர் திட்டமிட்டிருப்பதைப் போல தரம் குறைந்த முறையில் அரைகுறையாக தூய்மைப்படுத்தப்பட்டால் கணிசமான அளவில் பாதரசக் கழிவு தொடர்ந்து தேங்கி கொடைக்கானல் ஏரிகளை மாசுபடுத்தும். அதுமட்டுமின்றி, அந்த ஏரிகளையும், வைகை நதியையும் நம்பியிருக்கும் மக்களையும் கடுமையாக பாதிக்கும். இதை கொடைக்கானல் சார்ந்த பிரச்சினையாக மட்டும் பாராமல், ஒட்டுமொத்த தமிழகத்தையும், குறிப்பாக தேனி, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களை அச்சுறுத்தக்கூடிய பிரச்சினையாக பார்க்க வேண்டும்.

பாதரசம் என்பது நியூரோடாக்சின் எனப்படும் நச்சுப் பொருள் ஆகும். இது மூளையையும், அதை  சார்ந்த செயல்பாடுகளையும் கடுமையாக பாதிக்கும். இது சிறுநீரகத்தை செயலிழக்க வைக்கும் நச்சு ஆகும். பாதரச பாதிப்பு தொடர்பான ஐக்கிய நாடுகள் அமைப்பின் மினமாட்டா ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டிருப்பதுடன், பாதரசக் கழிவுக்கான அனைத்து ஆதாரங்களையும் அகற்றுவதாகவும் உறுதி பூண்டிருக்கிறது.

பாதரசத்தின் தீமைகளை நான் இங்கு பட்டியலிட்டிருந்தாலும், மலைகளின் இளவரசியான கொடைக்கானல் மலைக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு பாதரச கழிவு உள்ள பகுதி எந்த உடல் நல பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று மருத்துவர் என்ற முறையில் உறுதியாக கூற முடியும். அழகு கொஞ்சும் கொடைக்கானல் மலைக்கு தொடர்ந்து பெருமளவில் சுற்றுலா செல்லும்படி  சுற்றுலாப் பயணிகளைக் கேட்டுக்கொள்கிறேன். கொடைக்கானல் பகுதியில் குவிந்திருக்கும் பாதரசக் கழிவுகள் முழுமையாக அகற்றப்படுவதை உறுதி செய்வதில் உள்ளூர் மக்களின் குரலுக்கு வலு சேர்ப்பதன் மூலம் கொடைக்கானல் மீது அன்பு செலுத்தும்படியும் கேட்டுக் கொள்கிறேன்.

கொடைக்கானலில் பாதரசக் கழிவுகள் உள்ள இடத்தை தூய்மைப்படுத்தும் பணி அறிவியல்பூர்வமாகவும், வெளிப்படையானதாகவும், பாதிப்பை ஏற்படுத்திய யுனிலீவர் நிறுவனத்தின் செலவில் செய்யப்படுவதாகவும் இருப்பதை உறுதி செய்யும்படி மத்திய, மாநில அரசுகளையும் கேட்டுக் கொள்கிறேன்.

பாதரசக் கழிவுகளை அகற்றும் பிரச்சினையில் சுற்றுச்சூழல் சார்ந்த இரட்டை நிலையை யுனிலீவர் நிறுவனம் கடைபிடிப்பதை அனுமதிக்கக்கூடாது. இந்த விஷயத்தில் அதிஉயர் உலகத்தரம் கடைபிடிக்கப் படுவதை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Wednesday, August 12, 2015

தி.மு.க.வினர் மது ஆலைகளை உடனே மூடுக! -மு.க.ஸ்டாலினுக்கு அன்புமணி ராமதாஸ் மடல்

 


அன்புள்ள தி.மு.க. பொருளாளர் நண்பர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். நலம், நலம் வாழ வாழ்த்துக்கள்!

தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வைத் தவிர அனைத்துக் கட்சிகளும் மதுவிலக்கு தேவை என வலியுறுத்திய பிறகு, கடைசியாக உங்கள் கட்சித் தலைவர் கலைஞர்,‘‘தமிழ்நாட்டில் தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சமுதாய மாற்றத்திற்கும், ஏற்றத்திற்கும் வழி வகுக்கும் வகையில் மதுவிலக்கை அமல்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும்’’ என்று சமீபத்தில் அறிவித்தார். இந்த அறிவிப்பை நான் வரவேற்கிறேன். மதுவிலக்கை வலியுறுத்தி மருத்துவர் அய்யா அவர்கள் கடந்த 35 ஆண்டுகளாக உழைத்த உழைப்புக்கும், 26 ஆண்டுகளாக பா.ம.க. நடத்திய போராட்டங்கள், உச்சநீதிமன்றம் வரை சென்று போராடி 604 மதுக்கடைகளை மூடியது ஆகியவற்றுக்கும் கிடைத்த வெற்றி காரணமாகவே இன்று மதுவிலக்கு என்பது அனைத்துக் கட்சிகள் மற்றும் மக்கள் இயக்கமாக மாறியிருக்கிறது. இதைத் தொடர்ந்து  உங்களுக்கும், உங்கள் கட்சித் தலைவருக்கும் மனமாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இதற்கும் மருத்துவர் அய்யாவும், பாட்டாளி மக்கள் கட்சியும் தான் காரணம் என்பது எங்களுக்கு பெருமையாக இருக்கிறது. 

ஆனாலும், தமிழகத்தின் இன்றைய நிலைமை மிகுந்த வருத்தமளிக்கிறது. 4 வயது குழந்தை கூட மது குடிப்பதும், 12,13 வயது சிறுவர்கள் கூட குடித்துவிட்டு போதையில் பள்ளிக்கு செல்வதும், 15, 16 வயது இளம் பெண்கள்  குடித்து விட்டு தகராறு செய்வதும் அன்றாட நிகழ்வுகளாக மாறிவிட்டன. இளைய சமுதாயத்தின் இந்த அவலநிலைக்கும், கலாச்சார சீரழிவுக்கும் முக்கியக் காரணம் கடந்த 44 ஆண்டுகளுக்கு முன் மது விலக்கை கலைஞர் ரத்து செய்தது தான் என்பதை யாரும் மறுக்க முடியாது. இன்று 3 தலைமுறைகள் மதுவுக்கு அடிமையானதற்கும், லட்சக்கணக்கானோர் இறந்ததற்கும், பல்லாயிரக்கணக்கான இளம் விதவைகளை உருவானதற்கும், கோடிக்கணக்கான குடும்பங்கள் நிம்மதியை இழந்ததற்கும் காரணம் அதிமுகவும், திமுகவும் தான் என்பது நாடறிந்த உண்மை. இந்த நேரத்தில் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் மதுவிலக்கை நடைமுறைப் படுத்தப்போவதாக உங்கள் கட்சித் தலைவர் கலைஞர் அறிவித்திருப்பது மக்கள் மீது கொண்டுள்ள உண்மையான அக்கறை காரணமாகவா... அல்லது விரைவில் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் காரணமாகவா? என்ற ஐயம் அனைவர் மனதிலும் ஏற்பட்டிருக்கிறது. 

தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தப் போவதாக கடந்த 20 ஆண்டுகளில் 5 முறை வாக்குறுதி அளித்தவர் கலைஞர். இந்த காலத்தில் 10 ஆண்டுகள் கலைஞர் முதலமைச்சராக இருந்திருக்கிறார். ஆனால், மதுவிலக்கை நடைமுறைப்படுத்தவில்லை. இந்த நிலையில் தான் ஆறாவது முறையாக மதுவிலக்கு வாக்குறுதியை கலைஞர் வழங்கியிருக்கிறார். கடந்த 20 ஆண்டுகளில் 10 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்ததைப் பயன்படுத்தி மதுவிலக்கை நடைமுறைப்படுத்தியிருந்தால் தமிழகம் இன்று நிம்மதியாக இருந்திருக்கும். கடந்த 22.12.2008 அன்று உங்கள் தலைவரும், அப்போதைய முதலமைச்சருமான கலைஞரை மருத்துவர் அய்யா அவர்கள் சந்தித்து தமிழ்நாட்டில் உடனடியாக மதுவிலக்கை கொண்டு வாருங்கள் என கெஞ்சாத குறையாக மன்றாடினார். அதையேற்று தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று கலைஞர் அறிவித்தார். அதை செயல்படுத்தியிருந்தால் தமிழகம் இன்று மது இல்லாத மாநிலமாக மாறியிருக்குமே? அதை செய்யாதது ஏன்? என்று தான் மருத்துவர் அய்யாவும், நானும் கேட்கிறோம். ஆனால், உங்களிடமிருந்து பதில் இல்லை. 

இப்போது வெளியிட்டுள்ள மதுவிலக்கு அறிவிப்புக்கு மக்கள் மீது கொண்ட உண்மையான அக்கறை காரணமா... அல்லது சட்டமன்றத் தேர்தல் காரணமா? என்பது தெரியவில்லை. உங்கள் கட்சி அறிவிப்பு உண்மையானது என்றால் அதற்கான முன்னோட்டமாக தி.மு.க.வினரும், தி.மு.க. ஆதரவாளர்களும் நடத்தும் மது ஆலைகளை உடனடியாக மூடி உங்களின் அக்கறையை நிரூபிக்கலாமே? 

முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட்டால் அனைத்து மது ஆலைகளும் மூடப்பட்டு விடும் என்ற பொது அறிவு (சிஷீனீனீஷீஸீ sமீஸீsமீ) கூட எங்களுக்கு இல்லையா? என நீங்கள் வினா எழுப்பினீர்கள். உங்களை விட எனக்கு பொது அறிவு(சிஷீனீனீஷீஸீ sமீஸீsமீ) குறைவாக இருக்கலாம். ஆனால், மதுவிலிருந்து மக்களைக் காக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வு அதிகமாக இருக்கிறது. நாங்கள் கேட்டது மது விலக்கை நடைமுறைப்படுத்துவதிலும், மக்கள் நலனைக் காப்பதிலும் நீங்கள் எவ்வளவு அக்கறை காட்டுகிறீர்கள்? என்பதை நிரூபிப்பதற்குத் தான். உடனடியாக மது ஆலைகளை மூட முடியாது என அறிவித்திருப்பதன் மூலம் மக்கள் நலனை விட அடுத்த 10 மாதங்களில் உங்கள் கட்சியினருக்கு கிடைக்கவிருக்கும் ரூ.15,000 கோடி வருவாய் தான் முக்கியம் என்பதை வெளிப்படுத்தி விட்டீர்கள். உங்களின் கூற்றுப்படி மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு தான் மது ஆலைகள் மூடப்படும் எனில் அதற்கு இன்னும் 10 மாதங்கள் ஆகும். அதற்குள் கீழ்க்கண்ட பாதிப்புகள் ஏற்படும்.

* தமிழகத்தில் ஒரு நாளைக்கு சராசரியாக 16.2 லட்சம் லிட்டர் மது விற்பனை செய்யப்படுகிறது. இதில்  50 விழுக்காட்டை தி.மு.க. சார்பு ஆலைகள் தான் தயாரிக்கின்றன. அப்படியானால் அடுத்த 10 மாதங்களில் 24.30 கோடி லிட்டர் மது தி.மு.க. மது ஆலைகளில் தயாரித்து விற்பனை செய்யப்படும்.

* தமிழகத்தில் மது குடிப்பதால் ஆண்டுக்கு 2 லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள். அதில் திமுக சார்பு ஆலைகள் தயாரிக்கும் மதுவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சம். அடுத்த 10 மாதத்திற்கு மது ஆலைகளை மூட மாட்டீர்கள் என்றால் உங்கள் கட்சியினர் தயாரிக்கும் மதுவைக் குடித்து இன்னும் 80 ஆயிரம் பேர் உயிரிழப்பார்கள்.

* லட்சக்கணக்கான இளைஞர்களும், குழந்தைகளும், பெண்களும் முதல்முறையாக மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமை ஆவார்கள். உங்கள் கட்சியினருக்கு மட்டும் தான் ரூ.15,000 கோடி வருவாய் கிடைக்கும்.

* தி.மு.க.வினர் நடத்தும் மது ஆலைகள் அதன் உற்பத்தித் திறனுக்கு ஏற்றவாறு தினமும் 6.21 லட்சம் லிட்டர் முதல் 9 லட்சம் லிட்டர் வரை நிலத்தடி நீரை உறிஞ்சும். சராசரியாக ஒரு ஆலைக்கு 7 லட்சம் லிட்டர் என வைத்துக் கொண்டாலும் அடுத்த 10 மாதங்களில் 105 கோடி லிட்டர் நிலத்தடி நீர் உறிஞ்சப்படும். இதனால் நிலத்தடி நீர்மட்டமும், சுற்றுச்சூழலும் மிக மோசமாக பாதிக்கப்படும்.

இவ்வளவு தீமைகள் ஏற்படும் வரை காத்திருக்க வேண்டுமா? நீங்கள் நினைத்தால் தி.மு.க.வினர் நடத்தும் மது ஆலைகளை உடனடியாக மூடி 50 விழுக்காடு மது விலக்கை நாளையே ஏற்படுத்தலாமே? அடுத்த 10 மாதத்திற்குள் புதிய மது ஆலைகளை திறந்து மது உற்பத்தி செய்ய முடியாது என்பதால், நீங்கள் மது ஆலைகளை மூடினால்  பாதி மதுவிலக்கு சாத்தியம் என்பது மறுக்க முடியாத உண்மை. 

திராவிட இயக்கத்தின் முன்னோடியான தந்தைப் பெரியார், கள்ளை ஒழிக்க வேண்டும் என்பதற்காக தமது தோட்டத்தில் இருந்த 500&க்கும் அதிகமான தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தினார். அவர்  வழியில் வந்த தி.மு.க. நிறுவனர் பேரறிஞர் அண்ணா,‘‘மதுவிற்பனையின் மூலம் கிடைக்கும் வருவாய், புழுத்துப்போன தொழுநோயாளி கையில் உள்ள வெண்ணெயை வாங்குவதற்குச் சமம்’’ என்று கூறி மதுக்கடைகளை திறக்க மறுத்தார். மக்கள் மீதும் குழந்தைகள் மீதும் உங்களுக்கு உண்மையான அக்கறை இருந்தால் ஏன் 10 மாதம் காத்திருக்க வேண்டும்? பெரியார் வழியில்.... அண்ணா வழியில் உடனடியாக தி.மு.க. சார்ந்த மது ஆலைகளை மூடவேண்டும்.

அவ்வாறு செய்வதன் மூலம் 80 ஆயிரம் பேர் உயிரிழப்பதை தடுக்கலாம்; லட்சக்கணக்கான இளைஞர்களும், குழந்தைகளும், பெண்களும் மதுவுக்கு அடிமையாகாமல் காப்பாற்றலாம்; பல்லாயிரக்கணக்கான இளம் விதவைகளை உருவாவதைத் தடுக்கலாம்; 105 கோடி லிட்டர் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதை தடுத்து விவசாயத்திற்கு உதவலாம்; கோடிக்கணக்கான குடும்பங்களில் நிம்மதியை ஏற்படுத்தலாம். இதையெல்லாம் செய்வதற்கு உங்களால் முடியும். இவற்றை செய்து கோடிக்கணக்கான குடும்பங்களைக் காப்பாற்றும் பொறுப்பு உங்களிடம் தான் உள்ளது. எனவே, தமிழக மக்கள் மீது உங்களுக்கு உண்மையான அக்கறை இருந்தால் தி.மு.க.வினரின் மது ஆலைகளை மூட ஆணையிடுங்கள் என மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்.

உலக சுகாதார அமைப்பு வகுத்துள்ள விதிகளின் படி மது, புகையிலை தொடர்பான கொள்கைகளை வகுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அரசியல் கட்சிகளும், அவற்றின் தலைவர்களும் அந்த தொழிலில் ஈடுபடக்கூடாது. அவ்வாறு இருக்கும்போது மது ஆலைகளை நடத்திக் கொண்டே மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவோம் என்று நீங்கள் பேசுவது ஆதாய முரண் (சிஷீஸீயீறீவீநீt ஷீயீ மிஸீtமீக்ஷீமீst) அல்லவா?. அதுமட்டுமின்றி, உங்கள் கட்சித் தலைவர் ஒருவருக்கு சொந்தமான கோல்டன் வாட்ஸ் என்ற மது உற்பத்தி நிறுவனம், அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் தங்களிடம் கொள்முதல் செய்யப்படும் மதுவின் அளவு குறைந்துவிட்டதாகவும், அதை அதிகரிக்க ஆணையிட வேண்டும் என்றும் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத்  தொடர்ந்து சாதகமான ஆணையை பெற்றது. மதுவை விற்று மக்களை கெடுப்பதில் உங்கள் கட்சியினர்  இவ்வளவு தீவிரமாக செயல்படும் நிலையில், மதுவிலக்கு பற்றி நீங்கள் பேசுவது வெறும் நாடகம் என்று தான் நினைக்கத் தோன்றுகிறது. எந்த ஒரு அறிவுரையையும் வழங்குவதற்கு முன் அதை சொல்வதற்கு நம்மை நாம் தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். ஒருமுறை மகாத்மா காந்தியிடம் ஒரு தாய் தனது மகனை அழைத்து வந்தார். மகனுக்கு அளவுக்கு அதிகமாக இனிப்பு உண்ணும் பழக்கம் இருப்பதாகவும் அதனை மாற்ற அவனுக்கு அறிவுரை வழங்குமாறும் கேட்டுக் கொண்டாராம்.

அதைக்கேட்ட மகாத்மா, அந்த தாயிடம் பத்து நாட்கள் கழித்து மகனை அழைத்து வரும்படி கூறினார். அதன்படி பின்னர் அழைத்து வரப்பட்ட அந்தச் சிறுவனிடம் இனிப்பு உண்பதால் உண்டாகக் கூடிய தீமைகளை விளக்கிவிட்டு “இனிமேல் அதிகமாக இனிப்பு உண்ணாதே’’ என்று கூறினாராம்.

சிறுவனின் தாய் “இந்த அறிவுரையை பத்து நாட்களுக்கு முன்பே கூறியிருக்கலாமே?’’  என்று கேட்க, அதற்கு மகாத்மா காந்தி “பத்து நாட்களுக்கு முன்பு எனக்கு இனிப்பு உண்ணும் பழக்கம் இருந்தது. என்னிடம் அந்தப் பழக்கத்தை வைத்துக் கொண்டு இந்தச் சிறுவனுக்கு புத்திமதிகூற எனக்கு என்ன தகுதி இருக்கிறது? என் இனிப்பு உண்ணும் பழக்கத்தை விட்டொழிக்க எனக்கு பத்து நாள் அவகாசம் வேண்டியிருந்தது. அதனால் தான் இந்த தாமதம்’’ என்றாராம். 

அதேபோல், மதுவிலக்குக்கு உங்களைத் தகுதிப்படுத்திக் கொள்ளுங்கள். 44 ஆண்டுகளாக மக்கள் மீது மதுவைத் திணித்து லட்சக்கணக்கானோரின் உயிரைப் பறித்து, பல்லாயிரக்கணக்கான இளம் விதவைகளை உருவாக்கி, கோடிக்கணக்கான குடும்பங்களை நாசப்படுத்தியது போதாதா? எனவே, மக்கள் மீது உங்களுக்கு உண்மையான அக்கறை இருந்தால், மதுவிலக்குக்கு உங்களை தகுதிப்படுத்திக் கொள்ளும் வகையில், தி.மு.க.வினர் மற்றும் தி.மு.க. ஆதரவாளர்களுக்கு சொந்தமான மது ஆலைகளை நாளையே மூட ஆணையிடுங்கள். குறைந்தபட்சம் ஆகஸ்ட் 15 ஆம் தேதியாவது மூடி மதுவின் கொடுமைகளிலிருந்து மக்களுக்கு விடுதலை கொடுங்கள்.

இதற்கு முன் பொதுப்பிரச்சினைகள் குறித்து 3 முறையும், மது விலக்கு குறித்து ஒரு முறையும்  உங்களுக்கு கடிதம் எழுதினேன். பதில் இல்லை. இந்த முறையும் பதில் வேண்டாம்.இக்கடிதம் கிடைத்த பிறகு தி.மு.க. மது ஆலைகள் மூடப்பட்டால் அதையே எனக்கு பதிலாக கருதிக் கொள்வேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tuesday, August 11, 2015

மேகதாது அணைக்கு அரசு அனுமதி தருமா? சதானந்த கவுடா சர்ச்சை உருவாக்க கூடாது: அன்புமணி

பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கர்நாடக மாநிலத்தில் மேகதாது என்ற இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கும்; இதற்கான விண்ணப்பத்தை மத்திய அரசிடம் கர்நாடக அரசு உடனடியாக வழங்கினால், அதற்கான அனுமதியை தாமே பெற்றுத் தரத் தயார் என மத்திய சட்ட அமைச்சர் சதானந்த கவுடா கூறியிருக்கிறார். இரு மாநில உறவுகளை சீர்குலைக்கும் வகையிலான இப்பேச்சு கண்டிக்கத்தக்கது.

தமிழகத்தில் 25 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசனத் தேவைக்காகவும், 5 கோடி பேர் குடிநீர் தேவைக்காகவும், காவிரி நீரையே நம்பியிருக்கிறார்கள். மேகதாது பகுதியில் அணை கட்டப்பட்டால் தமிழகத்திற்கு  சொட்டு  நீர் கூட வராது. இதனால் ஒட்டுமொத்த தமிழகமும் பாலைவனமாக மாறிவிடும் ஆபத்து உள்ளது. இதைத் தடுக்க வேண்டும் என்பதற்காகத் தான் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி அவர்களை 3 முறை  நேரில் சந்தித்தும், கடிதம் எழுதியும் மேகதாது அணை திட்டத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று வலியுறுத்தினேன். நாடாளுமன்ற மக்களவையிலும் இத்திட்டத்தை அனுமதிக்கக்கூடாது என்று கோரினேன்.

இது தொடர்பாக பதிலளித்து கடந்த 09.06.2015 அன்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி  எனக்கு எழுதியக் கடிதத்தில்,‘‘சிவசமுத்திரம் மின்திட்டத்திற்காக கர்நாடக அரசு ஏற்கனவே விண்ணப்பித்தது. மாநிலங்களிடையே பாயும் நதியான காவிரியில் எந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதாக இருந்தாலும் அதுகுறித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தின் கருத்தையும் கேட்க வேண்டும் என்று காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருப்பதால், அந்த மாநிலங்களின் கருத்துக்களைக் கேட்டு, அதையும் விரிவான திட்ட அறிக்கையுடன் இணைத்து அனுப்ப வேண்டும்; அப்போது தான் மாநிலங்களுக்கு இடையிலான கோணத்தில் ஆய்வு செய்ய முடியும் என்று கூறி திட்ட அறிக்கையை அரசு திருப்பி அனுப்பிவிட்டது. இதைத் தவிர வேறு எந்த திட்டத்திற்குமான விரிவான திட்ட அறிக்கையும் நீர்வள ஆணையத்திற்கு வரவில்லை. மேகதாது அணை திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை நீர்வள ஆணையத்திடம் தாக்கல் செய்யப்பட்டால் அதுகுறித்து  காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின் எட்டாவது பிரிவுக்கு உட்பட்டு ஆய்வு செய்யப்படும்’’ என குறிப்பிட்டிருந்தார். அதன்படி, தமிழகம் ஒப்புதல் அளிக்காவிட்டால் மேகதாது திட்டத்திற்கு அனுமதி தரப்படாது என்று அவர் திட்டவட்டமாக கூறிவிட்டார்.

இத்தகைய சூழலில் மூத்த மத்திய அமைச்சர்களில் ஒருவரான சதானந்த கவுடா, மேகதாது திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கும் என்றும், இதற்கான அனுமதியை கர்நாடக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுத் தருவார்கள் என்றும் கூறுவது தேவையில்லாத சர்ச்சையை ஏற்படுத்தும். நதிநீர் விவகாரங்கள் குறித்து இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் மத்திய அமைச்சரவைக்கும், பிரதமருக்கும் மட்டுமே உள்ளது. இந்த விஷயத்தில் மத்திய அமைச்சரவைக்கு பரிந்துரை செய்ய வேண்டியது நீர்வளத்துறை அமைச்சர் தான். மேகதாது அணை திட்டத்திற்கு அனுமதி கோரி கர்நாடகம் விண்ணப்பித்தால் கூட, காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி அத்திட்டத்திற்கு  தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒப்புதல் இருந்தால் மட்டுமே அந்த விண்ணப்பத்தை மத்திய அரசு பரிசீலிக்கும் என்று அமைச்சர் உமாபாரதி தெளிவாக கூறிவிட்டார்.

அவ்வாறு இருக்கும்போது  இத்திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கும் என எந்த அடிப்படையில் அமைச்சர் சதானந்த கவுடா கூறுகிறார் எனத் தெரியவில்லை. அதுமட்டுமின்றி, ஒட்டுமொத்த நாட்டுக்கும் அமைச்சராக செயல்பட வேண்டிய சதானந்த கவுடா தாம் சார்ந்திருக்கும் மாநிலத்தின் நலனுக்காக மட்டும்  குரல் கொடுப்பது ஆரோக்கியமானது அல்ல. எனவே, மேகதாது அணை சிக்கலில் இரு மாநில உறவுகளை பாதிக்கும் வகையிலும், சர்ச்சையை ஏற்படுத்தும் வகையிலும் பேசுவதை சதானந்தகவுடா தவிர்க்க வேண்டும்.

மேகதாது அணை தொடர்பான சர்ச்சை எழுவதற்கு காரணமே காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை செயல்படுத்துவதற்கான காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாதது தான் என்பதை மத்திய அரசு உணர வேண்டும். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர் உமாபாரதி ஆகியோரை இருமுறை  சந்தித்து வலியுறுத்தினேன். நாடாளுமன்றத்திலும் இது குறித்து பேசியுள்ளேன். இது தமிழக விவசாயிகளின் வாழ்வாதார பிரச்சினை மட்டுமல்ல... சட்டம்-ஒழுங்கு சம்பந்தப்பட்ட பிரச்சினையும் ஆகும். எனவே, காவிரி நதி நீர் பகிர்வு தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளுக்கும் முடிவு கட்டும் வகையில் காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்குமுறை குழு ஆகியவற்றை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும். 

பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாசு அறிக்கை

 

கூகுள் நிறுவன தலைமை நிர்வாகியாக நியமிக்கப்பட்ட சுந்தர் பிச்சைக்கு அன்புமணி வாழ்த்து!

கூகுள் நிறுவன தலைமை நிர்வாகியாக நியமிக்கப்பட்ட சுந்தர் பிச்சைக்கு பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாசு வாழ்த்து தெரிவித்துள்ளார். வாழ்த்துச் செய்தியில், 

உலகின் புகழ்பெற்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான கூகுள் நிறுவனம் ஆல்ஃபபெட் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு, அதன் முதன்மை நிர்வாக அதிகாரியாக சென்னையைச் சேர்ந்த  சுந்தரராஜன் பிச்சை நியமிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!

சுந்தரராஜன் பிச்சை சென்னையில் ஒரு மிகச் சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவர். இளம்வயதில் நாட்டு நடப்புகளை அறிந்து கொள்ள தொலைக்காட்சி கூட இல்லாத சூழலில் வளர்ந்தவர். மேல்படிப்புக்கு அமெரிக்கா செல்ல வேண்டுமென்ற நிலை ஏற்பட்ட போது, அவரது தந்தையின் ஓராண்டு ஊதியத்தை சேர்த்தால் கூட விமானத்திற்கான பயணச்சீட்டு வாங்க முடியாது என்ற நிலை இருந்தது. ஆனால், அத்தனை தடைகளையும் தமது கல்வி மற்றும் அறிவால் தகர்த்தெறிந்து இந்த உயர் பொறுப்புக்கு வந்திருப்பதன் மூலம் தமிழர்களுக்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்திருக்கிறார். உலகின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்புக்கு இந்தியாவைச் சேர்ந்த சத்யா நாதெள்ளா ஏற்கனவே வந்துள்ள நிலையில், இன்னுமொரு அமெரிக்க நிறுவனத்தின்  தலைமைப் பொறுப்புக்கு இந்தியாவைச் சேர்ந்த, குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜன் பிச்சை தேர்வாகியிருப்பது மிகவும் உற்சாகமளிக்கிறது. தமிழர்களிடம் திறமைக்கு பஞ்சமில்லை... வாய்ப்பும் ஊக்குவிப்பும் மட்டுமே தேவை என்பதை சுந்தரின் உயர்வு  நிரூபித்திருக்கிறது.

சுந்தர்ராஜன் பிச்சை மேலும் பல உயர் பதவிகளை பெற்று, சாதனைகளை படைத்து தமிழகத்திற்கும்   இந்தியாவிற்கும் சிறப்பும், பெருமையும் சேர்க்க எனது இதயம் கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: