Sunday, September 13, 2015

டாஸ்மாக் கடைகளில் புதிய பீர் அறிமுகம்: திமுக,அதிமுக மீது அன்புமணி குற்றச்சாட்டு


 
 

பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாசு அறிக்கை:

’’மக்கள் நலனுக்கான திட்டங்களை அறிமுகம் செய்வதில் ஆர்வம் காட்டாத தமிழக அரசு, மதுவைக் கொடுத்து மக்களைக் கெடுப்பதில் மட்டும் தீவிரமாக ஆர்வம் காட்டி வருகிறது. அதன் ஒரு கட்டமாக டென்மார்க் தயாரிப்பான கார்ல்ஸ்பெர்க் என்ற புதிய பீர் வகையை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது.

தமிழ்நாட்டில் இலக்கு நிர்ணயித்து மது விற்பனை செய்து வரும் தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம்  விற்பனையை அதிகரிக்கும் நோக்கத்துடன் இந்த முடிவை எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. 

டென்மார்க் நாட்டைச் சேர்ந்த கார்ல்ஸ்பெர்க் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் கால்பதித்து  பீர் உற்பத்தியைத் தொடங்கியது. எனினும் தமிழகத்தில் இந்த பீர் வகை அனுமதிக்கப்படவில்லை. 2011 ஆம் ஆண்டில் இந்த பீர் வகை ஆந்திராவிலிருந்து கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டாலும்,  மிகக்குறுகிய காலத்திலேயே அதன் விற்பனை நிறுத்தப்பட்டுவிட்டது. இத்தகைய சூழலில் கார்ல்ஸ்பெர்க் பீர் வகையை அதிகாரப்பூர்வமாக விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. இதற்கான ஒப்பந்தம் சென்னையில் நேற்று கையெழுத்தாகியிருக்கிறது. அதன்படி அடுத்த சில நாட்களில்  இந்த புதிய பீர் விற்பனைக்கு வரவிருக்கிறது. 650 மி.லி. கொண்ட கார்ல்ஸ்பெர்க் பீர்பாட்டிலின் அதிகபட்ச சில்லறை விலை ரூ.140 என்று நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதாக  டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதில் குறிப்பிடத்தக்க இன்னொரு முக்கிய அம்சம், முதலில் வெளிநாடுகளில் இருந்தும், பின்னர் வெளி மாநிலங்களில் இறக்குமதி செய்யப்பட்ட இந்த வகை பீர் இப்போது தமிழகத்திலேயே உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த சேவையை செய்து தருவது தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவருக்கான சொந்தமான பீர் ஆலை தான். அதனிடமிருந்து முதல்கட்டமாக ஒரு லட்சம் பெட்டிகள் கார்ல்ஸ்பெர்க் பீர் வாங்க ஆணையிடப்பட்டிருப்பதாகவும் டாஸ்மாக் வட்டாரங்களில் பேசப் படுகிறது.

தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா 34 ஆண்டுகளாக போராடி வருகிறார். மதுவை ஒழிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகம்  முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் எனது தலைமையில்  மது ஒழிப்பு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் ஏற்பட்ட விழிப்புணர்வின் காரணமாக மதுவுக்கு எதிராக அனைத்துத் தரப்பு மக்களும் கொந்தளித்துள்ளனர். ஆனால், இதைப் பற்றியெல்லாம் சற்றும் கருத்தில் கொள்ளாமல் மது விற்பனையை பெருக்க வேண்டும் என்பதையே நோக்கமாக  கொண்டிருப்பது மிகக் கொடிய குற்றமாகும். 

அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டில் விற்பனை செய்யப்படும் மதுவகைகளில் பாதி  தி.மு.க.வினருக்கு சொந்தமான மது ஆலைகளில் இருந்து உற்பத்தி செய்யப்படுகிறது என்று தொடர்ந்து நான் குற்றஞ்சாற்றி வருகிறேன். மது குடிப்பதால் தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 2 லட்சம் பேர் உயிரிழப்பதாகவும்,  இவர்களில் ஒரு லட்சம் பேர் தி.மு.க.வினர் உற்பத்தி செய்யும் மதுவைக் குடிப்பதால் உயிரிழப்பவர்கள் என்றும் கூறிவருகிறேன். இந்த உயிரிழப்பைத்தடுக்க தி.மு.க.வினர் நடத்தும் மது ஆலைகளை மூடும்படி திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்தேன். அதற்கு இதுவரை  பதில் வரவில்லை. 

ஆனால், தமிழகத்தில் மதுவை வெள்ளமாக பாய விட வேண்டும் என்ற அரசின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் டாஸ்மாக் நிறுவனத்திற்கு வெளிநாட்டு பீர் வகைகளை தயாரித்து வழங்க  தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரின் மது ஆலை முன்வந்திருப்பது கண்டிக்கத்தக்கது. ‘‘எத்தனை லட்சம் மக்கள் உயிரிழந்தாலும் பரவாயில்லை... மதுவை விற்று வருவாய் ஈட்ட வேண்டும்’’ என்பது தான் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளின் பொதுவான கொள்கையாக உள்ளன. அரசியலில் எதிரெதிர் துருவங்களில் இருந்தாலும் மதுவைக் கொடுத்து மக்களை அழிப்பதில் கூட்டணி அமைத்து செயல்படும் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளையும் மக்கள் விரட்டியடிப்பது உறுதி.’’

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: