Friday, September 18, 2015

முதல்வருக்காக அப்பாவி மக்கள் உயிரை விட வேண்டுமா? : அன்புமணி


பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாசு அறிக்கை:
’’கேரள மாநிலம் புனலூர் என்ற இடத்தில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழக பேரூந்தில் திடீரென ஓட்டை ஏற்பட்டு, அதன் வழியாக சுவாதி என்ற பயணி சாலையில் விழுந்தது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. நல்வாய்ப்பாக அந்த பயணிக்கு பெரிய  பாதிப்பு ஏற்படவில்லை என்பது நிம்மதி அளித்தாலும், நெரிசல் மிகுந்த இடங்களில் இந்த நிகழ்வு நடந்திருந்தால் என்னவாகும் என்பதை நினைக்கவே நெஞ்சம் பதறுகிறது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழக பேரூந்துகளின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. மொத்தம்  22,500 பேரூந்துகள் இயக்கப்படும் நிலையில் அவற்றில் 70 விழுக்காட்டுக்கும் கூடுதலான பேரூந்துகள்  பயணம் செய்வதற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளன. இவற்றை சரி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. அரசுப் பேரூந்துகளில் பெரும்பாலானவற்றில் அமருவதற்கான இருக்கைகள் கூட சரியாக இருப்பதில்லை. பணிமனைகளில் இருந்து புறப்படும் பேரூந்துகள் திரும்ப வந்தால் தான் நிச்சயம் என்ற நிலை தான் தமிழகம் முழுவதும் காணப்படுகிறது. பேரூந்துகளில் உள்ள குறைக் காரணம் காட்டி அவற்றை இயக்க மறுக்கும் ஓட்டுனர்கள் மிரட்டப்படுகிறார்கள். பல ஓட்டுனர்களும், நடத்துனர்களும் தங்களின் சொந்த செலவில் பேரூந்துகளில் உள்ள குறைகளை சரி செய்து இயக்கும் அவலமும் அரங்கேறி வருகிறது.

புனலூரில் ஓட்டை விழுந்த பேரூந்து அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் திருநெல்வேலி கோட்டத்திற்கு சொந்தமானது ஆகும். இந்த போக்குவரத்துக் கழகத்தின் மேலாண் இயக்குனர் பதவி கடந்த 8 மாதங்களாக காலியாக உள்ள நிலையில், அதை நிரப்ப தமிழக அரசின் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. புனலூரில் நடைபெற்றது போன்ற நிகழ்வுகளும், விபத்துக்களும் தமிழகம் முழுவதும் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கின்றன. கடந்த ஜனவரி 20 ஆம் தேதி ஒகேனக்கல்  மலைப்பகுதியில் பேரூந்து கவிழ்ந்து 12 பேர் உயிரிழந்ததற்கு பேரூந்து சரியான நிலையில் இல்லாதது தான் காரணம் ஆகும். அதன்பின் கடந்த ஜூன் ஒன்றாம் தேதி தருமபுரியில் நடுசாலையில் பழுதடைந்து நின்ற பேரூந்தை நானும், என்னுடன் வந்தவர்களும் தள்ளி ஓட வைத்தோம். தமிழகம் முழுவதுமே இதே நிலை தான் காணப்படுகிறது.

ஒரு பேரூந்து அதிகபட்சமாக 6 ஆண்டுகள் அல்லது 7 லட்சம் கி.மீ. மட்டுமே இயக்கப்பட வேண்டும்.  ஆனால், அரசுப்போக்குவரத்துக் கழக பேரூந்துகளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவை ஆயுள்காலம் முடிந்த பிறகும் இயக்கப்படுகின்றன. அதிக அளவில் விபத்துக்கள் ஏற்படுவதற்கு இதுதான் முக்கியக் காரணம் ஆகும். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் 7153 புதிய பேரூந்துகளை வாங்க ஆணையிடப்பட்டது. ஆனால், அவற்றில் இதுவரை 4939 பேரூந்துகள் மட்டுமே தயார் செய்யப்பட்டு சாலைகளில் இயக்கப் படுகின்றன. பல பேரூந்துகள் இயக்குவதற்கு தயார் நிலையில் இருந்தாலும், அவற்றை ஜெயலலிதாவின் திருக்கரங்களால் தான் தொடங்கி வைக்க வேண்டும் என்று கூறி, இயக்காமல் நிறுத்தி வைத்திருக்கின்றனர்.

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு முதலமைச்சர் பதவியில் ஜெயலலிதா நீக்கி வைக்கப்பட்டிருந்த  நேரத்தில், புதிதாக கூடு கட்டப்பட்ட பேரூந்துகள் ஒன்று கூட பயணிகள் போக்குவரத்துக்காக இயக்கப்பட வில்லை. இதனால் அரசுக்கு ஏற்படும் இழப்பை சுட்டிக்காட்டி, அவற்றை உடனடியாக இயக்க வேண்டும்  என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் வலியுறுத்தியிருந்தார். அதன்பிறகு ஜெயலலிதா மீண்டும் பதவியேற்ற பிறகு கடந்த ஜூன் 18 ஆம் தேதி மொத்தம் 290 புதிய பேரூந்துகளை ஜெயலலிதா தொடங்கி வைத்தார். அதன்பின் கடந்த 3 மாதங்களில் மொத்தம் 422 புதிய பேரூந்துகள் கூடு கட்டப்பட்டு, இயக்குவதற்கு தயார் நிலையில் உள்ளன. இவற்றில் 202 பேரூந்துகள் நீண்ட தூரம் செல்லும் சொகுசுப் பேரூந்துகள் ஆகும். இவை அனைத்தும் ஜெயலலிதா கைகளால் தான் தொடங்கி வைக்கப்பட வேண்டும் என்று கூறி, இவற்றை அதிகாரிகள் இயக்காமலேயே முடக்கி வைத்திருக்கின்றனர். இதனால் பல கோடி இழப்பு வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. ஆனால், இதைப்பற்றியெல்லாம் தமிழக அரசு கவலைப்படவில்லை.

ஒருபுறம் ஓட்டைப் பேரூந்துகள் இயக்கப்படுவதால் பயணிகள் பாதிக்கப்படுவதும், விபத்தில் சிக்காமலேயே காயமடைவதும் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், இருக்கும் புதிய பேரூந்துகளை இயக்காமல் முடக்கி வைத்திருப்பது முறையல்ல. எத்தனை உயிர்கள் போனாலும் பரவாயில்லை... ஜெயலலிதாவின் கைகளால் தான் தொடங்கி வைக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கக்கூடாது. எனவே, தயார் நிலையில் உள்ள புதிய பேரூந்துகள் அனைத்தையும்  உடனடியாக இயக்கவும், பழுதடைந்த பேரூந்துகளை சீரமைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம் பேரூந்துகளின் பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: