Monday, October 12, 2015

வளைகுடா நாடுகளில் வீட்டுப்பணி செய்யும் தமிழக பெண்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ்

வளைகுடா நாடுகளில் வீட்டுப்பணி செய்யும் தமிழக பெண்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சவுதி அரேபியாவில் வீட்டுப்பணி செய்யச் சென்ற வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கஸ்தூரி என்ற பெண்ணின் கைகளை அவர் பணியாற்றும் வீட்டின் உரிமையாளர் கொடூரமான முறையில் வெட்டித் துண்டாக்கியது குறித்து அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளியாகியிருக்கின்றன. இதனால், வளைகுடா நாடுகளில் பணியாற்றும் தமிழ்நாட்டு பெண்களின் பாதுகாப்பு குறித்து பெரும் அச்சம் ஏற்பட்டிருக்கிறது.

வீட்டு வேலை செய்வதற்காக மாதம் ரூ.23,000 ஊதியம் என்று கூறித் தான் கடந்த ஜூலை மாதம் 28 ஆம் தேதி கஸ்தூரி முனிரத்தினம் சவுதி அரேபியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், அங்கு சென்றதில் இருந்தே அதிக நேரம் பணி செய்யும்படி கட்டாயப்படுத்தப்பட்டார். உணவும், ஊதியமும் கூட முறையாக வழங்கப்படவில்லை. சவுதி அரேபியாவில் பணியாற்றும் பெரும்பாலான பெண்களின் நிலையும் இப்படிப்பட்டதாகவே இருக்கிறது. 

இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் 7 பெண்களிடம் அந்நாட்டு அதிகாரிகள் விசாரணை நடத்த முடிவு செய்தனர். அவர்களில் 5 பெண்கள் மிரட்டலுக்கு பணிந்து விசாரணைக்கு வராமல் பின்வாங்கிய நிலையில், கஸ்தூரி உள்ளிட்ட இருவர் மட்டும் துணிச்சலாக தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்து பட்டியலிட்டுள்ளனர். அதிகாரிகள் நடத்திய விசாரணையிலும் இது உறுதி செய்யப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த வீட்டு உரிமையாளர்கள் கஸ்தூரியை அறையில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியுள்ளனர். அவர்களிடம் தப்புவதற்காக மூன்றாவது மாடியிலிருந்து சேலையை கட்டி, அதைப் பிடித்துக்கொண்டு இறங்கிய போது தான் அவரை வீட்டு உரிமையாளர்கள் கத்தியால் வெட்டி மாடியிலிருந்து கீழே தள்ளியிருக்கின்றனர் என விசாரணையில் தெரிய வந்துள்ளது. கஸ்தூரிக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை கேட்கும் போதே நெஞ்சம் பதறுகிறது.

உண்மையில், கஸ்தூரிக்கு இழைக்கப்பட்ட கொடுமை வளைகுடா நாடுகளில் பணியாற்றும் இந்தியப் பெண்களுக்கு இழைக்கப்படும் கடலளவு கொடுமைகளில் சிறுதுளி மட்டும் தான். வீட்டுப் பணிக்காகவும், வேறு பணிகளுக்காகவும் அழைத்துச் செல்லப்படும் பெண்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாக்கப் படுகின்றனர். ரூ.25,000 முதல் ரூ.30,000 வரை ஊதியம் வழங்குவதாக அழைத்துச் செல்லப்படும் அவர்களுக்கு அதில் மூன்றில் ஒரு பங்கு கூட தரப்படுவதில்லை. மாறாக ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 15 மணி நேரம் வரை பணியாற்றும்படி கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். அவர்களுக்கு விடுமுறை மறுக்கப் படுவதுடன், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.  ஓரிடத்தில்  பணியாற்ற பிடிக்கவில்லை என்றால், இன்னொரு இடத்திற்கு மாறும் உரிமை மறுக்கப்படுகிறது. ஆடு, மாடுகளை அடைப்பதற்குக் கூட லாயக்கற்ற இடங்களில் தங்க வைக்கப்படுக்கிறார்கள். இதுகுறித்து  வளைகுடா நாட்டு அதிகாரிகளிடம் தொடர்ந்து புகார் செய்யப்படும் போதிலும் எந்த பயனும் ஏற்படவில்லை.

சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட், குவைத், பஹ்ரைன், ஓமன், கத்தார் ஆகிய வளைகுடா நாடுகளில் இந்தியாவைச் சேர்ந்த 90 ஆயிரம் பெண்கள் வீட்டுப் பணிப்பெண்களாக பணியாற்றுகின்றனர். இவர்களில் சுமார் 35 ஆயிரம் பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் தவிர சுற்றுலா விசாவில் வளைகுடா நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படும் ஆயிரக்கணக்கான பெண்கள் சட்டவிரோதமாக வீட்டுப்பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அவர்களுக்கு விசா இல்லை என்பதாலும், அவர்களின் பாஸ்போர்ட்டுகளை உரிமையாளர்கள் பறித்து வைத்துக் கொள்வதாலும் அவர்களால் அந்தக் கொடுமைகளில் இருந்து மீண்டு வர முடியவில்லை. இக்கொடுமைகளை அறியாத பெண்கள், தங்கள் குடும்ப வறுமையை போக்குவதற்காக வளைகுடா நாடுகளுக்கு சென்று கொடிய வலையில் சிக்கிக் கொள்கிறார்கள். இந்தக் கொடுமைகளில் இருந்து அவர்களை மீட்டெடுக்க வேண்டும்.

இதற்காக தமிழக அரசு அதிகாரிகள், இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் அடங்கியக் குழுவை அனைத்து வளைகுடா நாடுகளுக்கும் அனுப்பி அங்குள்ள தமிழகம் உள்ளிட்ட இந்தியப் பெண்களின்  நிலைமை குறித்து ஆராய வேண்டும். அவர்கள் என்னென்ன வாக்குறுதி அளித்து அழைத்துச் செல்லப் பட்டார்களோ அந்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படுவதையும், தொழிலாளர் நல விதிகள் அனைத்தும் பின்பற்றப்படுவதையும் இந்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். 

வளைகுடா நாடுகளில் பணியாற்ற அழைத்து வரப்படும் இந்தியப் பெண்கள் ஒவ்வொருவரின் பெயரிலும்  ரூ.1.60 லட்சம் (2500 அமெரிக்க டாலர் வங்கி உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும் என்று 18 நாடுகளுடன் இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. ஆனால், சவுதி அரேபியாவும், குவைத்தும் இந்த ஒப்பந்தத்தை செயல்படுத்தவில்லை. அனைத்து வளைகுடா நாடுகளும் இதை செயல்படுத்துவதை இந்தியா  உறுதி செய்ய வேண்டும். வளைகுடா நாடுகளில் பணியாற்ற விருப்பமற்ற பெண்கள் தாயகம் திரும்பவும்,  அவர்கள் பெயரில் அளிக்கப்பட்டுள்ள வங்கி உத்தரவாதம் ரூ.1.60 லட்சத்தை  அவர்களுக்கு இழப்பீடாக வழங்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி, கை துண்டிக்கப்பட்ட  கஸ்தூரியை தமிழகம் அழைத்து வந்து உயர்தர சிகிச்சை அளிக்கவும், அவருக்கு அவரது உரிமையாளர்களிடம் ரூ.25 லட்சம் இழப்பீடு பெற்றுத் தருவதற்கும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Sunday, October 11, 2015

திருநெல்வேலியில் பா.ம.க-வின் தென் மண்டல அரசியல் மாநாடுஒரு பைசா ஊழல் இல்லாத, ஒரு கைப்பிடி இயற்கை வளக் கொள்ளை இல்லாத தமிழகத்தை உருவாக்க பாட்டாளி மக்கள் கட்சியை ஆட்சியில் அமர்த்துவோம் 

இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாகியிருக்க வேண்டிய தமிழ்நாட்டின் இன்றைய நிலை பரிதாபத்திற்குரியதாக மாறியிருக்கிறது. முன்னேற்றத்திற்கு அடிப்படையான அனைத்து வளங்களும் ஆட்சியாளர்களால் திட்டமிட்டு சீரழிக்கப்படுகின்றன என்பது தான் வருத்தம் தரும் உண்மை ஆகும்.

தமிழகத்தின் மக்கள் அனைவரும் கண்ணியமான வாழ்க்கை வாழ்வதை உறுதி செய்ய வேண்டும்  என்பது தான் மக்கள் நலன் விரும்பும் ஓர் அரசின் அடிப்படைக் கடமையாகும். இதற்காக வேளாண் வளர்ச்சி மிகவும் அவசியமாகும். நல்ல உற்பத்தித்திறன் கொண்ட விவசாயத்துறை இல்லாமல் ஒரு நாடு முன்னேற முடியாது. அதேபோல், வளர்ச்சிக்குத் தேவைப்படும் பிற காரணிகளான தரமான, தடையற்ற குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய மின்சாரம், சிறப்பான மனித வளம், நல்ல தலைமை ஆகிய எதுவுமே தமிழகத்தில் இல்லாதது தான் வளர்ச்சியில் பின்தங்கியதற்கு முக்கியக் காரணமாகும்.

இது ஒருபுறமிருக்க, இன்னொரு புறம் இயற்கை வளங்கள் திட்டமிட்டு கொள்ளையடிக்கப் படுகின்றன. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் ரூ.60 லட்சம் கோடி மதிப்புள்ள தாது மணலும், ரூ.5 லட்சம் கோடி மதிப்புள்ள கிரானைட் கற்களும், ரூ. 2 லட்சம் கோடி மதிப்புள்ள ஆற்று மணலும் கொள்ளையடிக்கப்பட்டிருக்கின்றன. இந்த கொள்ளையை தடுக்க தமிழக ஆட்சியாளர்கள் துரும்பைக் கூட கிள்ளிப்போடவில்லை. மாறாக, இந்த இயற்கை வளக் கொள்ளைகளை வெளிக்கொண்டு வருவதற்காக நடத்தப்படும் விசாரணையை முடக்குவதில் தான் தமிழக அரசு ஆர்வம் காட்டுகிறது.

தமிழகத்தின் வற்றாத ஜீவநதியான தாமிரபரணியிலும், அதை சார்ந்த ஆறுகளிலும் தடையில்லாமல் மணல் கொள்ளை நடக்கிறது. கொள்ளையடிக்கப்படும் மணல் கேரள மாநிலத்திற்கு கடத்தப்படுகிறது. மணல் கொள்ளையை தடுக்க வேண்டும் என்று நீதிமன்றங்கள் பலமுறை ஆணையிட்ட பிறகும் மணல் கொள்ளை தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதைத் தடுக்க வேண்டிய ஆட்சியாளர்களே மணல் கொள்ளைக்கு ஆதரவளித்துக் கொண்டிருப்பது கடுமையாக கண்டிக்கப்பட வேண்டியதாகும்.

வறுமை ஒழிக்கப்பட வேண்டுமானால் உள்ளடக்கிய வளர்ச்சி ஏற்படுத்தப்பட வேண்டும். அதற்காக வேளாண்துறை ஊக்குவிக்கப்பட வேண்டும்; உற்பத்தித்துறை மேம்படுத்தப்பட வேண்டும். ஆனால், அதற்கான நடவடிக்கைகள் எதுவுமே மேற்கொள்ளப்படவில்லை. தமிழகத்தின் ஒட்டுமொத்த தொழில் உற்பத்தியில் 60 விழுக்காடு சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளிலும், 15%  கோவை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளிலும் நடைபெறுகிறது. தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தொழிற்சாலைகள்  ஏற்படுத்தப்பட்டால் தான் தொழில் வளர்ச்சியும், வேலைவாய்ப்பும் பெருகும். குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் சொல்லிக்கொள்ளும் படியாக ஒரு தொழிற்சாலை கூட அமைக்கப்படவில்லை. நாங்குநேரியில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கப்பட்ட போதிலும் அங்கு இதுவரை எந்த தொழிற்சாலைகளும் தொடங்கப்படவில்லை.  இதற்குக் காரணம் போதிய கட்டமைப்பு வசதிகளை திமுக, அதிமுக அரசுகள் ஏற்படுத்தாதது தான்.

தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டுகளில் வளர்ச்சியடைந்த ஒரே விஷயம் ஊழல் தான். எங்கும் ஊழல்... எதிலும் ஊழல் என்பது தான் ஆட்சியாளர்களின் தாரக மந்திரமாக உள்ளது. இன்னொருபுறம்  தெருவுக்குத் தெரு மதுக்கடைகளை திறந்து மக்களைக் கெடுப்பதில் தற்போதைய தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. பரமபத விளையாட்டின் பாம்புகளைப் போல தி.மு.க.வும், அ.தி.மு.க.வும்  தமிழகத்தை வளர்ச்சியில் கீழ் நோக்கி இழுத்துக் கொண்டிருக்கின்றன. இதைத் தடுத்து நிறுத்தி தமிழகத்தின் வளர்ச்சி என்ற ஏணியில் பயணம் செய்ய வைக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.

கடந்த 50 ஆண்டுகளில் நடந்தவை எதுவும் நல்லதாக இல்லாத நிலையில், இனி நடப்பவையாவது நல்லதாக இருக்க வேண்டும் என்பதால் தான், தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்குடன் மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்களை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தி வரும் 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை பா.ம.க. எதிர்கொள்ளவிருக்கிறது.

மது, ஊழலை ஒழித்து, இயற்கை வளக் கொள்ளையை தடுத்து, அனைவருக்கும் தரமான மருத்துவம் மற்றும் கல்வியை வழங்கி, விவசாயத்தை லாபகரமான தொழிலாக்கி,  வறுமை இல்லாத, அமைதியும், மகிழ்ச்சியும் நிறைந்த தமிழகத்தை அமைக்கும் திறன் மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்களுக்கு  மட்டுமே இருப்பதாக  பா.ம.க. நம்புகிறது. எனவே, மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள் தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சி அமைக்க ஆட்சி மாற்றத்திற்கான பா.ம.க.வின் தென் மண்டல அரசியல் மாநாடு உறுதி ஏற்கிறது; அனைத்து தரப்பு மக்களின் ஆதரவைக் கோருகிறது. 

Thursday, October 8, 2015

உழவர் தலைவர் நாராயணசாமி நாயுடுவுக்கு அரசு மணிமண்டபம் அமைக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்!

போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த  உழவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக எழுப்பப்பட்டு வருகிறது. நானும் பல்வேறு காலகட்டங்களில் இக்கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளேன். 

2011-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி கடந்த 05.04.2011 அன்று கோவையில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா, அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் நாராயணசாமி நாயுடுவின் நினைவிடத்தில் மணி மண்டபம் அமைக்கப்படும். 1970-71 போராட்டங்களில் கொல்லப்பட்ட உழவர்கள் குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்கப்படும்’’ என அறிவித்தார். அப்போது தெலுங்குதேசக் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, இடதுசாரித் தலைவர்கள் பிரகாஷ் காரத், ஏ.பி. பரதன் உள்ளிட்டோரும் உடனிருந்தனர். ஆனால், ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் முடிவடைந்து விட்ட நிலையில், இந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கதாகும்.

உழவர்களால் போற்றப்படும் நாராயணசாமி நாயுடு அவர்களுக்கு மணி மண்டபம் அமைக்கும் விஷயத்தில் தமிழக அரசு இனியும் கால தாமதம் செய்யக்கூடாது. நாராயணசாமி நாயுடு அவர்களுக்கு மணிமண்டபம் அமைக்கவும்,  1970-71 போராட்டங்களில் கொல்லப்பட்ட உழவர்கள் குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்கவும் அரசு உடனடியாக ஆணை பிறப்பிக்கவேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்

Wednesday, October 7, 2015

கட்சியை மறந்து அஞ்சலி செலுத்த வந்துள்ளோம்: ஜி.கே.மணி பேட்டி

 

புதுக்கோட்டைக்கு வந்த பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

மறைந்த முன்னாள் அமைச்சர் வெங்கடாசலத்தின் 5ம் ஆண்டு நினைவு தினத்தில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்துவதற்காக பாமக சார்பில் கலந்துகொண்டேன். அவர் என்னுடன் சட்டமன்றத்தில் ஒன்றாக இருந்தவர், நல்ல மனிதர். கட்சியை மறந்து அஞ்சலி செலுத்த வந்துள்ளோம். 

திருச்சி விமான நிலையத்திற்கு மாமன்னர் பெரும்பிடுகு முத்தரையர் பெயரினை சூட்ட வேண்டும். இதற்கு தமிழக அரசு மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும். 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு அன்புமணிராமதாஸ் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. பல மண்டலங்களில் பாமக சார்பில் மாநாடு நடத்தப்பட்டது. தற்போது வரும் 11ம் தேதி திருநெல்வேலியில் மாநாடு நடைபெற உள்ளது. தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு பாமக திட்டங்களை வகுத்துள்ளது. மதுவிற்கு எதிராக பல போராட்டங்கள் பாமக சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. 

ஆயிரங்களில் நடப்பது லஞ்சம், லட்சம் கோடிகளில் நடப்பது தான் ஊழல். பாமக தலைமையில் மாற்று அணி தேர்தல் நேரத்தில் அமையும். பாமக ஆட்சிக்கு வந்தால் ஒரு சொட்டு மது கூட தமிழகத்தில் இருக்காது, லஞ்சம் ஊழல் ஒழிக்க சேவை உரிமை சட்டம், லோக் ஆயுக்தா கொண்டுவரப்படும், கல்வி செலவை அரசே ஏற்கும் என்ற அறிவிப்பிற்கு படித்த இளைஞர்கள் மாணவர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. 

2011ம் ஆண்டு அதிமுக தேர்தல் அறிக்கையில் சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. ஆனால் விலைவாசி உயர்வு கட்டுப்படுத்த தவறிவிட்டது. 2011ம் ஆண்டு பொன்னி அரிசி 35 ரூபாய இருந்தது தற்போது 55க்கு விற்கப்படுகிறது. 72 ரூபாய்க்கு விற்கப்பட்ட துவரம் பருப்பு தற்போது 155 ரூபாய்க்கு ஏறிவிட்டது. இந்த அதிமுக ஆட்சியில் அனைத்து பொருட்களும் 100 அல்ல 200 சதவீதம் அளவிற்கு விலை உயர்ந்துவிட்டது. பதுக்கல், ஆன்லைன் வர்த்தகமும் விலைவாசி உயர்வுக்கு காரணமாக உள்ளது. தனிமனித வளர்ச்சிக்கு கல்வி தான் அவசியம் தேவை. எனவே மத்திய அரசு கல்விக்காக நிதியை அதிக அளவில் ஒதுக்கீடு செய்ய வேண்டும். மக்களின் இறுதி புகழிடமாக நீதிமன்றங்கள் உள்ளது. நீதிமன்ற கண்ணியத்தையும், புகழினை நீதிபதிகள், வக்கீல்கள் காக்க வேண்டும். 

சட்டமன்ற தேர்தலில் பாமக முதலமைச்சர் வேட்பாளராக அன்புமணியை அறிவிப்பது கட்சியின் உரிமை. விஷ்ணுபிரியா கொலை வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளது. எனவே கருத்து சொல்ல இயலாது. பாமக தொண்டர்கள் எங்களுக்கு தெரியாமல் மது குடிப்பதை தடுக்க இயலாது. ஆனால் கட்சி நிர்வாகிகள் யாரும் மது குடிக்க கூடாது என்று கட்டுப்பாட்டில் வைத்துள்ளோம். 

மத்திய அரசு வேலைவாய்ப்பில் தமிழர்களுக்கு உரிய இடம் கிடைப்பதில்லை, புறக்கணிக்கப்படுகிறது. அதிக வேலைவாய்ப்புகள் மத்திய அரசு பணியில் தான் உள்ளது. எனவே தமிழகத்தில் மத்திய அரசு பணிக்கு தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கிட வேண்டும். இதேபோல் மற்ற அந்தந்த மாநிலத்தவர்களுக்கு மாநிலங்களில் மத்திய அரசு பணி வழங்கிட வேண்டும். காவிரி நடுவர்மன்ற தீர்ப்பின்படி கர்நாடகா தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கவில்லை. இதில் மத்திய அரசும் பாராமுகமாக உள்ளது. தமிழக மக்கள் 80 சதவீதம் பேர் காவிரி குடிநீரை நம்பி உள்ளனர். அனைத்து தமிழக கட்சிகளுக்கு இதில் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும். ஆசிரியர்களின் ஜேக்டோ அமைப்பின் கோரிக்கைகள் நியாயமானது தான். தமிழக அரசு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். அன்புமணிராமதாஸ் தமிழகம் முழுவதும் சென்று பொதுமக்கள், வணிகர்கள், பொறியாளர்கள், வக்கீல்கள், பத்திரிக்கையாளர்கள் என அனைவரையும் கருத்துகேட்புக்கு சந்திக்க உள்ளார். இந்த கருத்து கேட்புக்கு பின் பாமக மக்கள் தேர்தல் அறிக்கையாக 2016 ஜனவரி மாதம் வெளியிடப்படும். பல கட்சிகளில் மாறி மாறி கூட்டணி வைத்ததற்காக பாமக மக்களிடம் மன்னிப்பு கேட்டது. இதேபோல் மற்ற கட்சிகள் மன்னிப்பு கேட்டது உண்டா என்றார்.

இந்த பேட்டியின்போது மாநில துணை பொதுச் செயலாளர்கள் மூர்த்தி, அருள்மணி, மாவட்ட செயலாளர் வெள்ளைச்சாமி, நகர செயலாளர் பெரியசாமி, மாவட்ட தலைவர் சரவணக்குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்

மருத்துவக் கல்லூரி வழக்கு: விரைவில் நீதி கிடைக்கும்! அன்புமணி இராமதாசு அறிக்கை

பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாசு அறிக்கையில்,

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் சுகாதார அமைச்சராக பதவி வகித்த நான் 2009 ஆம் ஆண்டில் அப்பதவிலியிருந்து விலகினேன். அதன் பின் சில ஆண்டுகள் கழித்து, லக்னோ மற்றும் இந்தூர் மருத்துவக் கல்லூரிகளுக்கான அங்கீகாரத்தை 2008 ஆம் ஆண்டில் புதுப்பித்து வழங்கியதில் விதிமீறல்கள் நடந்ததாகக் கூறி சிலர் மீது மத்தியப் புலனாய்வுப் பிரிவு(சி.பி.ஐ) வழக்குத் தொடர்ந்தது.

 இந்த வழக்கின் முதல்கட்ட விசாரணையிலும் (Preliminary Enquiry), பின்னர் தாக்கல் செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையிலும் (First Information Report)) எனது பெயர் இல்லை. ஆனால், 2012-ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கின்  குற்றப்பத்திரிகையில் அரசியல் காரணங்களுக்காக எனது பெயர் சேர்க்கப்பட்டது. அடிப்படை ஆதாரம் இல்லாமல் தொடரப்பட்ட இந்த வழக்கிலிருந்து எனது பெயரை நீக்க வேண்டும் என்று கோரி 2012-ஆம் ஆண்டில்  நான் விடுவிப்பு மனு (Discharge Petition) தாக்கல் செய்தேன். அம்மனு கடந்த மூன்றரை ஆண்டுகளாக அடுத்தடுத்து 4 நீதிபதிகளால் விசாரிக்கப் பட்டது. அதைத் தொடர்ந்து இன்று ஆணை பிறப்பித்த நீதிபதி நான் தாக்கல் செய்த விடுவிப்பு மனுவை நிராகரித்திருக்கிறார்.

இந்த ஆணை வழக்கமான நீதிமன்ற நடைமுறை தான். இந்த வழக்கில் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாத நிலையில், இது எந்த வகையிலும் பின்னடைவை ஏற்படுத்தாது. இதை எதிர்த்து சட்டப்படியான அடுத்த கட்ட நடவடிக்கைகளை நான் மேற்கொள்ள இருக்கிறேன். அதன் முடிவில் எனக்கு நீதி கிடைக்கும்; வழக்கிலிருந்து வெளிவருவேன் என்ற முழு நம்பிக்கை இருக்கிறது. இது போன்ற வழக்குகளின் மூலம் எங்களின் செயல்பாடுகளை முடக்க முடியாது. ஊழலுக்கு எதிரான பாட்டாளி மக்கள் கட்சியின் பயணம் முன்பை விட அதிக வேகத்தில் தொடரும். இவ்வாறு கூறியுள்ளார்.

Tuesday, October 6, 2015

ஈழத் தமிழருக்கு நிரந்தர தீர்வு கிடைக்குமெனில் பா.ஜ.க. அணியில் இருந்து விலக பா.ம.க. தயார்: அன்புமணி

சென்னை: ஈழத் தமிழர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைத்துவிடும் எனில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேற நாங்கள் தயார் என்று பா.ம.க. எம்.பி. அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். அக்கூட்டத்தில் இலங்கை அரசின் போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.ADVERTISEMENTஇந்த நிலையில் சென்னை திரும்பிய அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் இருந்து ஏமாற்றத்துடனே திரும்பி வந்துள்ளோம். இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பாக அமெரிக்காவின் நீர்த்துப்போன தீர்மானமே நிறைவேற்றப்பட்டுள்ளது.இந்த விவகாரத்தில் இந்தியா ஏன் மவுனம் சாதித்தது எனப் புரியவில்லை. ஐ.நா.வில் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை மத்திய அரசும், தமிழக பாஜகவும் முதல் துவக்கம் என்று கூறுவதை ஏற்க முடியாது.போருக்கு ஆயுதம் கொடுத்ததன் காரணமாக இந்தியா, சீனா போன்ற நாடுகள் இலங்கையை ஆதரிக்கின்றன. ஆனால் இந்த விவகாரம் இத்தோடு முடிவடையக் கூடியது என்று சொல்ல முடியாது.ஐ.நா. மனித உரிமை ஆணையரின் அறிக்கையில் இலங்கை அரசு குற்றச் செயலில் ஈடுபட்டது என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டு உள்ளதையும் கருத்தில் கொள்ள வேண்டும். ஐ.நா.வின் பாதுகாப்புக் குழுவுக்கு இந்த பிரச்னையைக் கொண்டு செல்லும் அளவுக்கு, தமிழகத்தில் இருந்து அழுத்தம் கொடுக்க வேண்டும்.சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதோடு கடமை முடிந்துவிட்டதாக அரசும் கருதக் கூடாது. அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி, அதில் அவர்களின் கருத்துகளை அறிந்து, அதற்கேற்ப மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்.இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறினார்.இதன் பின்னர் "ஈழத்தமிழர் பிரச்சினையில் உண்மையாக குரல் கொடுப்பதாக இருந்தால், பா.ஜ.க. கூட்டணியை விட்டு பா.ம.க. வெளியே வர வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளாரே? என்று அன்புமணியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, இலங்கை தமிழர் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு கிடைக்கும் என்றால் பா.ஜ.க. கூட்டணியை விட்டு வெளியேற பா.ம.க. தயாராக இருக்கிறது என்றார்.
 

அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வை கண்டித்து பா.ம.க. ஆர்ப்பாட்டம்!

 


 

அரிசி, பருப்பு, எண்ணெய் உள்பட அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வை கண்டித்து பா.ம.க. சார்பில் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்ட முடிவில் ராமதாசிடம், பா.ம.க. பா.ஜனதா கூட்டணி நீடிக்குமா? என்று நிருபர்கள் கேட்டனர். 

அதற்கு ராமதாஸ் பதில் அளிக்கையில், ‘பா.ம.க.வின் முதல்–அமைச்சர் வேட்பாளராக அன்புமணி அறிவிக்கப்பட்டு உள்ளார். இதை ஏற்று வந்தால் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைப்போம்’ என்றார். 4 கட்சி கூட்டணி பற்றி கருத்து கேட்டபோது, இப்போது அதுபற்றி எதுவும் சொல்ல முடியாது. பொறுத்திருந்து பார்ப்போம் என்றார்.

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் [http://aiyanar.blogspot.com] ------------------------------------------------
HTML Counter Users Visited: