Sunday, September 20, 2015

கடைசி நேர ஊழல் வேட்டையில் முழு வீச்சில் ஈடுபட்டிருக்கும் ஆட்சியாளர்கள்: பாமக குற்றச்சாட்டு



பாட்டாளி மக்கள் கட்சியின் மத்திய மண்டல அரசியல் மாநாடு திருச்சி, பஞ்சப்பூரில் 20.09.2015 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட அரசியல் தீர்மானத்தில், 

வறுமை இல்லாத,  வளமையும், செழுமையும் நிறைந்த தமிழகத்தை உருவாக்க பாட்டாளி மக்கள் கட்சியை ஆட்சியில் அமர்த்துவோம் 

ஒரு நாட்டில் நிலமும், வளமும் பெருகிக் கிடந்தால் கூட அந்த நாட்டை வழி நடத்திச் செல்ல நல்ல தலைமை இல்லா விட்டால் எல்லா வளமும் வீணாகி விடும். அதே நேரத்தில் எந்த வளமும் இல்லாவிட்டால் கூட வலிமையான தலைமை இருந்தால் நாட்டை அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றிச் செல்ல முடியும். தலைமை நல்லதாக இல்லாததுடன் நாட்டை சுரண்டுவதாகவும் அமைந்து விட்டால் அதை விட அந்த நாட்டுக்கு கேடு வேறு எதுவும் இருக்க முடியாது. அப்படிப்பட்டதொரு அவல நிலை தான் தமிழகத்தில் நிலவி வருகிறது. தமிழகத்தின் வீழ்ச்சிக்கு இது தான் அடிப்படைக் காரணம் ஆகும்.

கல்வி, விவசாயம், தொழில் துறை ஆகிய மூன்று துறைகள் தான் ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு வழி வகுப்பவை ஆகும். ஆனால், தமிழகத்தை 50 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுமே  இந்த துறைகளின் வளர்ச்சிக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக மாநிலத்தையும், மக்களையும் சீரழிக்கும்  விஷயங்களில் மட்டுமே அளவுக்கு அதிகமான ஆர்வம் காட்டி வருகின்றன என்பது வருத்தம் அளிக்கும் விஷயமாகும்.

திருச்சி, கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் விவசாயமே முதன்மை தொழிலாக இருந்து வந்தது. ஆனால், இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. காரணம் பாசன ஆதாரங்கள் இல்லாததால் ஒரு காலத்தில் பால்வனமாக இருந்த காவிரி பாசன மாவட்டங்கள் பாலைவனமாக மாறிவிட்டது தான். எப்போதும் முப்போகம் விளையும் காவிரி பாசன மாவட்டங்களில் ஒரு போக சம்பா விளைவதே அதிசயமாக மாறி விட்டது. நெல் கதிர்கள் நிறைந்திருந்த வயல்கள் எல்லாம் கருங்கற்களால் பாகம் பிரிக்கப்பட்டு வீட்டு மனைகளாகிவிட்டன. இதற்கெல்லாம் காரணம் வற்றாநதியாக ஓடிக்கொண்டிருந்த  காவிரி இன்று வாய்க்கால் அளவுக்கு கூட தண்ணீர் ஓடாத மண் பாதையாக மாறி விட்டது தான்.  தமிழகத்திற்கு காவிரியில் ஆண்டுக்கு 192 டி.எம்.சி. தண்ணீர் விட வேண்டும் என்பது நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு. இத்தீர்ப்புக்கு செயல்வடிவம் கொடுக்கப்பட்டிருந்தால் காவிரி கரை புரண்டு ஓடியிருக்கும்; காவிரி பாசன மாவட்ட விவசாயிகளின் முகங்களில் களை நிறைந்திருக்கும். ஆனால், இறுதித் தீர்ப்பு வெளியாகி 4 ஆண்டுகள் ஆட்சியிலிருந்த முந்தைய தி.மு.க. அரசு, இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிடக் கூட நடவடிக்கை எடுக்கவில்லை. அதி.மு.க. அரசு பதவியேற்று விரைவில் ஐந்தாண்டுகள் முடிவடையவுள்ள நிலையில், இறுதித் தீர்ப்பை நிறைவேற்றுவதற்காக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கச் செய்வதற்கு கடிதங்களை எழுதியதைத் தவிர துரும்பைக்கூட கிள்ளிப் போடவில்லை. 

குப்புறத் தள்ளிய குதிரை குழியையும் பறித்த கதையாக காவிரி பாசன மாவட்ட விவசாயிகளுக்கு எந்த உதவியையும் செய்ய அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் உபத்திரவங்களை செய்வதற்கு மட்டும் தவறவில்லை. முந்தைய தி.மு.க. ஆட்சியின் போது, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மீத்தேன் வாயு எடுப்பதற்காக கிரேட் ஈஸ்ட்ரன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட் (Great Eastren Energy Corporation Limited) என்ற நிறுவனத்திற்கு காவிரிக் கரையோரப்பகுதிகள் தாரை வார்க்கப்பட்டன. மக்கள் போராட்டத்திற்கு பிறகு அம்முயற்சி முறியடிக்கப்பட்ட நிலையில், அதே ஆபத்து இப்போது ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் வடிவில் வந்திருக்கிறது. இந்த ஆபத்தை முறியடிக்க அ.தி.மு.க. அரசு தயாராக இல்லை. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் காவிரி பாசன மாவட்டங்களும், கடலூர், அரியலூர் மாவட்டங்களும் பாலைவனமாக மாறிவிடும் ஆபத்து இருக்கிறது. ஆனால், கடைசி நேர ஊழல் வேட்டையில் முழு வீச்சில் ஈடுபட்டிருக்கும் ஆட்சியாளர்களுக்கு  உழவர்களின் பிரச்சினை காதிலும் விழவில்லை; கண்களிலும் படவில்லை.

தமிழகத்தின் ஒட்டுமொத்த தொழில் உற்பத்தியில் 60 விழுக்காடு சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளிலும், 15%  கோவை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளிலும் நடைபெறுகிறது. திருச்சி மண்டலத்தைப் பொறுத்தவரை ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட பொன்மலை தொடர்வண்டி பணிமனை, காமராசர் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட திருச்சி பாரத மிகு மின் நிறுவனம் (BHEL) ஆகியவற்றைத் தவிர படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் எந்த தொழிற்சாலையும் இந்தப் பகுதியில் அமைக்கப்படவில்லை. 86 லட்சம் இளைஞர்கள் படித்து விட்டு அரசு வேலைக்காக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருக்கும் போதிலும் அவர்களின் கனவை நனவாக்க குறைந்தபட்ச நகர்வுகளைக் கூட மேற்கொள்ள ஆளும் கட்சியும், ஆண்ட கட்சியும் தயாராக இல்லை.
கடந்த 50 ஆண்டுகளில் நடந்தவை எதுவும் நல்லதாக இல்லாத நிலையில், இனி நடப்பவையாவது நல்லதாக இருக்க வேண்டும் என்பதால் தான், தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்குடன் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களை முதலமைச்சர் பதவிக்கான வேட்பாளராக முன்னிறுத்தி வரும் 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை பாட்டாளி மக்கள் கட்சி எதிர்கொள்ளவிருக்கிறது. 50 ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்ட கட்சிகளுக்கு தங்களை வளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருந்ததால், தமிழகத்தை வளப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் வரவில்லை; அதற்கான அரசியல் துணிச்சலும் இல்லை. அதன் விளைவு தான் முதன்மை மாநிலமாக உருவெடுத்திருக்க வேண்டிய தமிழகம் பொருளாதார வளர்ச்சியில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது.

இந்த நிலையை மாற்றுவதற்கான வலிமையும், திறமையும் பா.ம.க.வுக்கு மட்டுமே உண்டு....
வலிவான தலைமை
தெளிவான பொருளாதாரத் திட்டம்
ஒளிமயமான, அதிக பாதுகாப்பான எதிர்காலம்  என்பதே பா.ம.க.வின் லட்சியம் -வாக்குறுதியாகும்.
எனவே,
ஒரு சொட்டு மது இல்லாத தமிழகம்,
ஒரு பைசா ஊழல் இல்லாத தமிழகம்,
வேளாண் செழுமை நிறைந்த தமிழகம்,
தொழில் வளம் மிகுந்த தமிழகம்,
வேலைவாய்ப்பு நிறைந்த தமிழகம்,
வறுமை இல்லாத தமிழகம்,
அமைதியும், மகிழ்ச்சியும் நிறைந்த தமிழகம் அமைக்க மருத்துவர் அன்புமணி இராமதாசு தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஆட்சி அமைக்க பா.ம.க.வின் மத்திய மண்டல மாநாடு உறுதி ஏற்கிறது.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: