Thursday, September 24, 2015

மின்சாரக் கொள்முதலால் பல லட்சம் கோடி இழப்பு; கையெழுத்திட்ட ஒப்பந்தங்களை உடனடியாக ரத்து செய்க: ராமதாஸ்

மின்சாரக் கொள்முதலால் அரசுக்கு பல லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது, எனவே கையெழுத்திட்ட ஒப்பந்தங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாடு மின்வாரியத்திற்கு, தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதால் ஏற்படும் இழப்புகள் குறித்த விவரங்களை மின்வாரிய பொறியாளர்கள் அமைப்பு வெளியிட்டிருக்கிறது. மின்சாரக் கொள்முதலில் நடைபெற்று வரும் ஊழல்கள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளன.

தமிழ்நாட்டில் நிலவும் மின் தட்டுப்பாட்டை சமாளிப்பதற்காக தனியாரிடமிருந்து மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது. மொத்தம் 3,300 மெகாவாட் அளவுக்கு மின்சாரம் கொள்முதல் செய்ய 11 தனியார் மின் நிறுவனங்களுடன் மின் வாரியம் ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறது. சந்தையில் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.2.60க்கு கிடைக்கும் நிலையில், தனியார் நிறுவனங்களிடமிருந்து ஒரு யூனிட் ரூ.4.91 என்ற விலையில் கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் ஆண்டுக்கு ரூ.2688 கோடி வீதம் ஒப்பந்த காலமான 15 ஆண்டுகளில் மொத்தம் ரூ.40,327 கோடி இழப்பு ஏற்படும் என மின்வாரிய பொறியாளர்கள் அமைப்பு குற்றஞ்சாற்றிருக்கிறது. இக்குற்றச்சாற்றுகளை ஆதாரமற்றவை என ஒதுக்கி விட முடியாது.

தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு மின்சாரம் கொள்முதல் செய்வதில் பெருமளவில் முறைகேடுகள் நடப்பதாக பல ஆண்டுகளாகவே நான் குற்றஞ்சாற்றி வருகிறேன். மின்தட்டுப்பாட்டைக் காரணம் காட்டி அதிக விலைக்கு மின்சாரம் வாங்கி ஊழல் செய்யும் கலாச்சாரம் முந்தைய தி.மு.க. ஆட்சியில்  தொடங்கியது. அ.தி.மு.க. ஆட்சியில் மின் கொள்முதல் ஊழல் தொடர்வது மட்டுமின்றி, அதிகரித்தும்  வருகிறது. தனியார் நிறுவனங்களுடன் தமிழ்நாடு மின்சார வாரியம் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தின் படி மின்சாரத்தை வாங்கினாலும், வாங்காவிட்டாலும் அவற்றுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். தமிழகத்தில் காற்றாலை மின்சாரம் அதிக அளவில் உற்பத்தியான நேரத்தில், தனியார் நிறுவனங்களிடம் இருந்து அனல் மின்சாரத்தை கொள்முதல் செய்யாமலேயே அதற்கான கட்டணத்தை மின்சார வாரியம் செலுத்தியது குறிப்பிடத்தக்கது. இதனால் மின்வாரியத்திற்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

அனல் மின்சாரம் மட்டுமின்றி சூரிய ஒளி மின்சாரத்தை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தங்களை செய்து கொள்வதிலும் மின்சார வாரியத்திற்கு திட்டமிட்டு இழப்பு ஏற்படுத்தப்படுகிறது. அதானி குழுமம் உட்பட மொத்தம் 32 நிறுவனங்களிடம் இருந்து 1084 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரத்தை  யூனிட் ரூ.7.01 என்ற விலையில் கொள்முதல் செய்ய மின்சார வாரியம் ஒப்பந்தம் செய்திருக்கிறது. இதுதவிர 107 நிறுவனங்களிடம் இருந்து 2722.5 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரத்தைக் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தங்களில் தமிழ்நாடு மின்சார வாரியம் விரைவில் கையெழுத்திடவிருக்கிறது. அதுமட்டுமின்றி, அண்மையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், பல்வேறு பன்னாட்டு  நிறுவனங்கள் 5345 மெகாவாட் திறன் கொண்ட சூரிய ஒளி மின் நிலையங்களை அமைக்க சம்மதம் தெரிவித்துள்ளன. இந்த நிறுவனங்கள் அனைத்திடமிருந்தும் ஒரு யூனிட் ரூ.7.01 என்ற விலையில்  சூரிய ஒளி மின்சாரத்தைக் கொள்முதல் செய்ய மின்சார வாரியம் முடிவு செய்திருக்கிறது. இதனால் ஒரு மெகாவாட்டுக்கு ரூ.9 கோடி வீதம் மொத்தம் ரூ.82,359 கோடி இழப்பு ஏற்படும் ஆபத்து உள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியம் ஏற்கனவே கடுமையான இழப்பை சந்தித்து வருகிறது. மின் வாரியத்தின் மொத்தக் கடன் சுமை ஒன்றரை லட்சம் கோடி ரூபாயைத் தாண்டி விட்டது. இந்த நிலையில் தமிழக ஆட்சியாளர்கள் கமிஷனுக்கு ஆசைப்பட்டு அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவதால் ஏற்படும் இழப்புகளுக்கு யார் பொறுப்பேற்பார்கள் என்பதை தமிழக முதலமைச்சர் விளக்க வேண்டும். மக்கள் நலனில் தமிழக அரசுக்கு அக்கறை இருந்திருந்தால் தமிழக அரசே மின் திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தியிருக்க முடியும். அவ்வாறு செயல்படுத்தியிருந்தால் அதிக விலைக்கு மின்சாரம் வாங்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது. ஆனால், ஊழல் செய்வதை மட்டுமே நோக்கமாகக் கொண்ட தமிழக ஆட்சியாளர்கள் மின் நிலையங்களை அமைத்தால் தனியாரிடம் இருந்து மின்சாரம் வாங்கி கமிஷன் பெற முடியாது என்பதால் மின் திட்டங்களைத் தாமதப்படுத்துகின்றனர். எண்ணூர் மின்திட்டம், உடன்குடி மின் திட்டம் ஆகியவற்றை குறைந்த செலவில் அமைத்துத் தர சீன நிறுவனம் முன்வந்த போதிலும், அதனால் மின்சார வாரியத்திற்கு ரூ.3000 கோடி அளவுக்கு லாபம் கிடைக்கும் என்றாலும், அதைப் பொருட்படுத்தாமல் அமைச்சருக்கு நெருக்கமான நிறுவனத்திற்கு தான் ஒப்பந்தம் தருவோம் என்று தமிழக அரசு கூறுவதில் இருந்தே ஆட்சியாளர்களின் நோக்கத்தை புரிந்து கொள்ள முடியும்.

தனியார் நிறுவனங்களுடன் தமிழக அரசு செய்து கொண்டுள்ள மின்சாரக் கொள்முதல் ஒப்பந்தங்கள்  தொடர்பான அனைத்து விவரங்களையும் உள்ளடக்கிய வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும். சந்தை விலையை விட அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்வதற்காக கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் அனைத்தையும் தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: