Sunday, September 13, 2015

பா.ம.க வரைவு தேர்தல் அறிக்கை 16-ஆம் தேதி வெளியீடு: ராமதாஸ் அறிவிப்பு

 

2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பா.ம.க.வின் வரைவுத் தேர்தல் அறிக்கை சென்னையில் நாளை மறுநாள் 16ஆம் தேதி வெளியிடப்படும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கண்ணியமான தேர்தலுக்கான கூட்டமைப்பும், வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவையும் இணைந்து அண்மையில் சென்னையில் நடத்திய ‘ஜனநாயகத்துடன் கூடிய வளர்ச்சி’ என்ற தலைப்பிலான கருத்தங்கில் அறிவுப்பூர்வமாகவும், மக்கள் மீதான அக்கறையுடனும் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டுள்ளன. இத்தகைய அறிவார்ந்த, ஜனநாயக நலன் சார்ந்த முன்முயற்சிகளை பாட்டாளி மக்கள் கட்சி வரவேற்கிறது. 

முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி, கண்ணியமான தேர்தலுக்கான கூட்டமைப்பின் தலைவரும், ஓய்வு பெற்ற இ.ஆ.ப. அதிகாரியுமான எம்.ஜி. தேவசகாயம் உள்ளிட்ட சான்றோர் பங்கேற்ற இந்தக் கருத்தரங்கில் தேர்தலுக்கு முன்பாக அரசியல் கட்சிகள் செய்ய வேண்டிய கடமைகள் என்ன? என்பது குறித்து விரிவாக விளக்கப்பட்டிருக்கிறது. 

அதில் முதன்மையானது அரசியல் கட்சிகள் வளர்ச்சி மற்றும் நிர்வாகத்திற்கான செயல் திட்டத்தை தேர்தல் அறிக்கையாக மக்களிடம் முன் வைக்க வைக்க வேண்டும்; அப்போது தான் அதன் சாதக, பாதகங்களை ஆராய்ந்து முடிவெடுக்க மக்களுக்கு போதிய அவகாசம் கிடைக்கும் என்பதாகும். ஜனநாயகத்தில் மக்கள் தான் இறுதி எஜமானர்கள் என்பதை உறுதி செய்யும் வகையில் முன் வைக்கப்பட்டுள்ள இந்த யோசனையை பா.ம.க முழுமையாக ஏற்கிறது.

தமிழ்நாட்டில் அறிவார்ந்த அரசியல் முன்னெடுக்கப்பட வேண்டும்; மக்களின் யோசனைகள் தான் அரசின் திட்டங்களாக உருப்பெற வேண்டும் என்பதே பா.ம.க.வின் நிலைப்பாடு ஆகும். அதனால் தான் கடந்த காலங்களில் மக்களின் விருப்பத்துக்கு எதிராக கொண்டு வரப்பட்ட திட்டங்களை எதிர்த்து கடுமையான போராட்டங்களை பா.ம.க. நடத்தியிருக்கிறது. 

அந்த வகையில், வளர்ச்சி மற்றும் நிர்வாகத்திற்கான பாட்டாளி மக்கள் கட்சியின் செயல்திட்டத்தை மக்கள் ஆராய்வதற்கு அவகாசம் வழங்கும் வகையிலும், மக்களின் மேலான ஆலோசனைகளை பெறும் வகையிலும் 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பா.ம.க.வின் வரைவுத் தேர்தல் அறிக்கை சென்னையில் நாளை மறுநாள் 16&ஆம் தேதி வெளியிடப்படும்.

தமிழகம் இப்போது எதிர்கொண்டு வரும் அனைத்து பிரச்சினைகளுக்குமான தீர்வு அந்த அறிக்கையில் இடம் பெற்றிருக்கும். தமிழகத்தின் பெரும் பிரச்சினைகளாக உருவெடுத்திருப்பவை கல்வி, சுகாதாரம், விவசாயம், உட்கட்டமைப்பு உள்ளிட்ட துறைகளில் ஏற்பட்டுள்ள சீரழிவுகள் தான். தொழில் வளர்ச்சி என்பது பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. 

முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி தமிழகத்திற்கு பெரும் முதலீடு வந்துவிட்டதாக நாடகங்கள் நடத்தப்பட்ட நிலையில், தமிழகத்தில் செயல்பட்டு வந்த நோக்கியா, ஃபாக்ஸ்கான் போன்ற பெரு நிறுவனங்களும், கோவையைச் சேர்ந்த தொழிலதிபர்களும் ஆந்திரம், கர்நாடகம் போன்ற அண்டை மாநிலங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். 

இதற்குக் காரணம் தமிழகத்தில் போதிய அளவில் உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படாதது தான். தமிழகத்தில் 86 லட்சம் படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து விட்டு வேலைக்காக காத்திருக்கின்றனர்.

மின் தட்டுப்பாடு, சுற்றுச்சூழல் சீர்கேடு, பொதுப்போக்குவரத்துக் குறைபாடுகள், குடிநீர் தட்டுப்பாடு, நகரமயமாக்கல், ஊரகப் பகுதிகளில் அடிப்படை வசதியின்மை என தீர்க்கப்பட வேண்டிய சிக்கல்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இதற்கெல்லாம் மேலாக சமூகத்தை அழித்து வரும் மது அரக்கனை ஒழிக்க வேண்டிய பெரும் கடமையும் ஆட்சியாளர்களுக்கு உள்ளது. 

இவை அனைத்துக்கும் எத்தகைய தீர்வுகளை ஒரு கட்சி முன்வைக்கிறது என்பதைப் பொறுத்து தான் அக்கட்சியின் நிர்வாகத் திறனையும், மக்கள் மீது கொண்டுள்ள அக்கறையையும் உணர முடியும். பாட்டாளி மக்கள் கட்சி மக்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டிருக்கிறது என்பதையும், நிர்வாகத் திறனையும் வெளிப்படுத்தும் வகையில் அதன் வரைவு நிதிநிலை அறிக்கை அமைந்திருக்கும் என்பதை பெருமிதத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். 

வரைவு நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்ட பிறகு பொதுமக்களிடமும், பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுனர்களிடமும் கருத்துக்கள் கோரப்பட்டு, அவர்கள் தெரிவிக்கும் ஆக்கப்பூர்வமான யோசனைகளும்  சேர்க்கப்பட்டு நிறைவு நிதிநிலை அறிக்கை வெளியிடப்படும். அது அடுத்த ஐந்தாண்டு ஆட்சியில் தமிழக  வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்படவிருக்கும் நலப்பணிகள் தொடர்பாக தமிழ்நாட்டு மக்களுடன் பாட்டாளி மக்கள் கட்சி செய்து கொள்ளும் சமூக ஒப்பந்தமாக இருக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: