பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை:
’’ஓர் அமைப்பு எவ்வாறு செயல்படக்கூடாது என்பதற்கு ஏதேனும் உதாரணம் கூற வேண்டுமானால், தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தைத் தான் கூற வேண்டும். தகவல் ஆணையங்கள் எதற்காக ஏற்படுத்தப்பட்டனவோ, அந்நோக்கத்திற்கு எதிராக செயல்படுவது தமிழக தகவல் ஆணையம் தான்.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி தமிழ்நாடு தகவல் ஆணையம் 2005 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டாலும், அதற்கு ஆணையர்கள் எவரும் நியமிக்கப்பட வில்லை. 28.01.2006 அன்று தான் தலைமைத் தகவல் ஆணையரும் இரு ஆணையர்களும் நியமிக்கப் பட்டு ஆணையம் செயல்படத் தொடங்கியது. 2008-ஆம் ஆண்டில் இந்த ஆணையத்தின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 7 ஆக உயர்த்தப்பட்டது. தொடக்கத்தில் ஓரளவு நன்றாக செயல்பட்ட இந்த ஆணையம், அதன் தலைவராக தமிழக அரசின் ஓய்வு பெற்ற தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி நியமிக்கப்பட்டதும் தான் முடங்கத் தொடங்கியது. அ.தி.மு.க. ஆட்சியில் அக்கட்சியின் நிர்வாகிகளும், ஆளுங்கட்சிக்கு ஆதரவான ஓய்வு பெற்ற அதிகாரிகளும் நியமிக்கப்பட்டதால் அரசின் செயல்பாடுகளை கண்காணிக்கும் அமைப்பாக செயல்பட வேண்டிய ஆணையம் அரசின் தவறுகளை மூடிமறைக்கும் அமைப்பாக மாறியது.
தமிழ்நாடு தகவல் ஆணையத்திற்கு ஒரு தலைவரையும், 10 உறுப்பினர்களையும் நியமிக்கலாம். ஆனால், இப்போது தகவல் ஆணையத்தில் 4 ஆணையர்கள் மட்டுமே உள்ளனர். அதுமட்டுமின்றி, கீழ்மட்டத்தில் மறுக்கப்படும் தகவல்களை மேல்முறையீட்டின் மூலம் பெற்றுத் தரும் நீதிபதிகளைப் போல செயல்பட வேண்டிய அவர்கள் தகவல் கேட்டு வருபவர்களை மிரட்டி, விரட்டியடிக்கும் பணியைத் தான் செய்து வருகிறார்கள். இதற்கு எத்தனையோ உதாரணங்களைக் கூற முடியும். தகவல் கேட்டு வந்த ஒருவர் பணிந்து நடக்காததற்காக காவல்துறையினர் உதவியுடன் பொய்வழக்கு பதிவு செய்து சிறைக்கு அனுப்பியக் கொடுமை தமிழ்நாட்டைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் நடந்திருக்காது.
அரசின் திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள் ஆகியவை குறித்த தகவல்களை அரசிடமிருந்து கேட்டு பெற்று அவற்றில் ஏதேனும் விதிமீறல்கள் இருந்தால் அவற்றைக் களைய நடவடிக்கை எடுப்பது, அரசிடமிருந்து பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை பெறுவதில் தாமதம் ஏற்பட்டால் அதுகுறித்த தகவல்களை பெற்று சரி செய்தல் ஆகியவை தான் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் நோக்கம் ஆகும். இதன்மூலம் அரசுத் துறை செயல்பாடுகளில் ஊழலை ஒழிக்க முடியும்; நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையில் தான் இச்சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், இல்லாத காரணங்களைக் கூறி மனுவைத் திருப்பி அனுப்புதல், அனல் மின்நிலையங்கள் குறித்த தகவல்களைக் கோரினால் புனல் மின் நிலையங்கள் குறித்த தகவல்களைத் தருதல் என உண்மையான தகவல்கள் வெளியாகாமல் தடுப்பதில் அரசு அதிக கவனம் செலுத்துகிறது.
இதை எதிர்த்து இரண்டாம் நிலை மேல்முறையீட்டுக்காக தமிழ்நாடு தகவல் ஆணையத்திற்கு செல்லும் தகவல் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள். லட்சக்கணக்கான மேல்முறையீட்டு மனுக்கள் விசாரிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன. தகவல் பெறும் உரிமைச் சட்டப்படி குறிப்பிட்ட காலத்திற்குள் தகவல் அளிக்காத அதிகாரிகள் மீது ரூ.25,000 வரை அபராதம் விதிக்க சட்டத்தில் வகை செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், சட்டத்தின்படி செயல்படாத தகவல் ஆணையர்கள் இருதரப்பையும் அழைத்துப் பேசி கட்டப்பஞ்சாயத்து செய்து வைக்கின்றனர். பல நேரங்களில் தகவல் தராத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக அவர்களை மிரட்டி தகவல் ஆணையர்கள் பணமாகவும், பொருளாகவும் லஞ்சம் வாங்கும் கொடுமையும் நடக்கிறது.
தமிழக தகவல் ஆணையத்தில் தலைமை தகவல் ஆணையர், 6 ஆணையர் பதவிகள் காலியாக கிடக்கின்றன. இந்த காலியிடங்களை நிரப்ப வேண்டுமானால் எதிர்க்கட்சித் தலைவருடன் ஆலோசனை நடத்த வேண்டும் என்பதால், அதைத் தவிர்ப்பதற்காக இந்த காலியிடங்களை நிரப்பும் முயற்சியையே தமிழக அரசு எடுக்கவில்லை. தமிழ்நாடு தகவல் ஆணையம் ஊழலை ஒழிப்பதற்கு பதிலாக ஊழலை ஊக்குவிக்கும் பணியையே செய்து வருவதால் தகவல் பெறும் உரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டதன் நோக்கமே சிதைக்கப்பட்டு விட்டது. இதற்கு தமிழக அரசு தான் முழுமையாக பொறுப்பேற்க வேண்டும்.
இதுவரை நிலவி வந்த சூழலை மாற்றி தகவல் ஆணையம் சிறப்பாக செயல்பட வேண்டுமானால், ஆணையத்திற்கு நியாயமான முறையில் ஆணையர்களை நியமித்து புத்துயிரூட்ட வேண்டும். மேலும் தகவல் தர மறுக்கும் அதிகாரிகள் மீது சட்டப்படியான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.’’
No comments:
Post a Comment