Sunday, June 14, 2015

இந்தியர்களுக்கு பாதிப்பு: அமெரிக்க விசா கட்டுப்பாட்டை தளர்த்த நடவடிக்கை தேவை: பா.ம.க.



பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

அமெரிக்காவில் உள்ள சில நிறுவனங்களில் ஆட்குறைப்பு செய்யப்பட்டதையடுத்து இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் விசாக்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை அங்கு எழுந்துள்ளது. அடுத்த ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இனிவரும் மாதங்களில் இந்தியர்களுக்கான விசாக் கட்டுப்பாடு தீவிரமடையும் வாய்ப்புள்ளது.

அமெரிக்காவின் புகழ்பெற்ற பொழுதுபோக்கு நிறுவனம் வால்ட் டிஸ்னி, மின்சார நிறுவனம் தெற்கு கரோலினா எடிசன் ஆகியவற்றில் பணியாற்றிய நூற்றுக்கணக்கான அமெரிக்கர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு, அவர்களுக்கு பதில் ஹெச்-1பி (H-1B)விசா வைத்துள்ள இந்தியர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களில் பலர் இந்தியாவைச் சேர்ந்த இன்ஃபோசிஸ், டி.சி.எஸ். நிறுவனங்களுக்காக பணியாற்றச் சென்றவர்கள் ஆவர். இதையடுத்து இந்த இரு நிறுவனங்களின் விசா விதி மீறல்கள் பற்றி விசாரணை  நடத்த வேண்டும்; இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் H-1B விசாக்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்று அமெரிக்காவின் செல்வாக்கு மிகுந்த செனட்டர்கள் வலியுறுத்திள்ளனர். அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடக்கூடும் என எதிர்பார்க்கப்படும் பெர்னி சாண்டர்ஸ்  H-1B விசாக்களை கடுமையாக எதிர்ப்பவர் ஆவார்.எனவே இனி வரும் நாட்களில் இந்தியர்களுக்கான விசாக் கட்டுப்பாடு தீவிரப்படுத்தப்படுவதுடன், குறைக்கப் படுவதற்கும் வாய்ப்புள்ளது. அப்படி ஏதேனும் நடந்தால் அமெரிக்காவில் வேலைவாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கும் இந்திய இளைஞர்களின் கனவுகள் கருகி விடும் வாய்ப்பு இருப்பதை மறுப்பதற்கில்லை.

பொதுவாகவே இந்தியர்கள்  H-1B விசா மூலம் அமெரிக்க வருவதால் தான் தங்களின் வேலைவாய்ப்பு பறிக்கப்படுவதாக அங்குள்ள இளைஞர்களிடம் ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால், அது உண்மையல்ல. இந்தியர்கள் குறைந்த ஊதியத்தில் வேலை செய்வார்கள் என்பதால் தான் அவர்களை அமெரிக்க நிறுவனங்கள் பணியில் அமர்த்துகின்றன என்றாலும், அதைத் தாண்டி மற்றொரு உண்மையும் உள்ளது. மென்பொருட்களைத் தயாரித்து வழங்கிய பின்னர் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்வதற்கு அமெரிக்க மென்பொருள் பொறியாளர்கள் முன்வருவதில்லை. ஆனால், அந்தப் பணியை அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்ய இந்தியர்கள் தயாராக உள்ளனர். அதுமட்டுமல்லாமல், திறமையின் அடிப்படையில் இந்தியர்கள் மட்டுமே செய்யக்கூடிய பல பணிகள் அமெரிக்காவில் உள்ளன. அமெரிக்காவில் தற்போது 30,000 இந்தியர்கள்  H-1B விசா பெற்று பணியாற்றி வருகின்றனர். அவர்களின் பணிக்கான தேவை அதிகமாக இருப்பதால் பல நிறுவனங்களிலிருந்து அவர்களுக்கு அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன.

 H-1B விசாவில் செல்லும் இந்தியர்களால் அமெரிக்காவில் உள்ளவர்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப் படுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாற்று உண்மையற்ற, கற்பனையான ஒன்றாகும். அமெரிக்க நிறுவனங்கள் நுணுக்கமான தொழில்நுட்பம் கொண்ட பணிகளுக்கு இந்தியரையே சார்ந்திருக்கின்றன; இந்தியர்களும் தாய்நாட்டில் கிடைப்பதைவிட சற்று அதிக ஊதியத்தில் கிடைக்கும் வேலைக்காக அமெரிக்காவைச் சார்ந்திருக்கின்றனர். H-1B விசா மூலம் இந்தியர்களும், அமெரிக்க நிறுவனங்களும் பரஸ்பரம் பயனடைகின்றனர். கடந்த காலங்களில் இந்தியர்களுக்கான விசாக்களை குறைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளன. இதை உணராமல்  H-1B விசா சிக்கலை தேர்தல் பிரச்சினையாக்க அமெரிக்க அரசியல் அரங்கில் நடக்கும் முயற்சிகளைத் தடுக்க வேண்டும்.

அமெரிக்கத் தேர்தலையொட்டி நடக்கும் அரசியல் காய் நகர்த்தல்கள் காரணமாக இந்தியர்களுக்கு வழங்கப்படும்   H-1B விசாக்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டால் இந்தியர்களின் அமெரிக்க வேலைவாய்ப்பும், அவர்கள் மூலம் இந்தியாவுக்கு கிடைக்கும் அன்னிய செலாவணியும் பாதிக்கப்படும். இதைக் கருத்தில் கொண்டு இந்தியர்களுக்கான   H-1B விசாக்களின் எண்ணிக்கையைக் குறைக்கக் கூடாது; மாறாக அதிகரிக்க வேண்டும் என்று அமெரிக்காவிடம் வலியுறுத்த மத்திய அரசும், நாஸ்காம் அமைப்பும் முன்வர வேண்டும். இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி அவர்களையும், வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அவர்களையும் நேரில் சந்தித்து வலியுறுத்தவும் முடிவு செய்திருக்கிறேன்.

அதேநேரத்தில் இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் போதிய வேலைவாய்ப்புகள் இல்லாதது தான்  அதிக அளவிலான இளைஞர்கள் வேலை தேடி அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்வதற்குக் காரணமாகும். தமிழகத்தில் மட்டும் 2 கோடி இளைஞர்கள் வேலையின்றி வாடுகின்றனர். இந்நிலையை மாற்ற தமிழகத்தில் வேலைவாய்ப்புகளை பெருக்கவும், பணிக்கு தகுதியான மனித வளத்தை உருவாக்க திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்கவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: