பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை:
’’தொடர்வண்டித்துறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்வது குறித்து பரிந்துரைக்க அமைக்கப் பட்ட பொருளாதார வல்லுனர் பிபெக் தேப்ராய் தலைமையிலான குழு அதன் அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்துள்ளது. தேப்ராய் குழுவின் பரிந்துரைகளில் சில வரவேற்கத்தக்கவை என்றாலும் பெரும்பாலானவை தனியாருக்கு சாதகமாகவும், பயணிகளுக்கு பாதகமாகவும் அமைந்திருக்கின்றன.
தொடர்வண்டித்துறையின் அதிகாரம் முழுவதையும் தொடர்வண்டித்துறை வாரியத்திடம் குவித்து வைக்கக் கூடாது; மண்டல மேலாளர்களுக்கும், கோட்ட மேலாளர்களுக்கும் அதிகாரங்கள் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரை பயனுள்ள ஒன்றாகும். இதன்மூலம் உள்ளூர் தேவைக்கான திட்டங்களை மண்டல நிலையிலான அதிகாரிகளே தீட்டி நிறைவேற்ற முடியும். தொடர்வண்டித்துறைக்கு தமிழகம் தான் அதிக வருவாயை ஈட்டித் தருகிறது என்ற போதிலும், இந்த வருவாயைக் கொண்டு வருவாய் ஈட்டாத பிகார் போன்ற மாநிலங்களில் திட்டங்களை செயல்படுத்தும் நிலை இதனால் மாறும்.
ஆனால், தனியாரும் தொடர்வண்டிகளை இயக்க அனுமதிக்க வேண்டும் என்று தேப்ராய் குழு அளித்துள்ள பரிந்துரை தான் மிகவும் ஆபத்தானது. ‘‘ பயணிகள் மற்றும் சரக்குத் தொடர்வண்டிகளை இயக்க தனியாரும் அனுமதிக்கப்பட வேண்டும். தனியாரும், தொடர்வண்டித்துறையும் போட்டிபோட்டு தொடர்வண்டிகளை இயக்க வேண்டும்’’ என்பது தான் அக்குழுவின் பரிந்துரையாகும். மேலோட்டமாக பார்க்கும்போது தனியார் தொடர்வண்டிகள் வந்தால் அவை தூய்மையாகவும், சரியான நேரத்திலும் இயங்கும் என்ற எண்ணத்தில் இந்த யோசனை வரவேற்கத்தக்கது போல தோன்றலாம். உண்மையில் இது தொடர்வண்டித்துறையை கொஞ்சம், கொஞ்சமாக அழிப்பதற்கான திட்டம் என்பதில் சந்தேகமில்லை.
தொடர்வண்டிகளை இயக்க தனியார் அனுமதிக்கப்படும் பட்சத்தில், ஆட்சியாளர்களின் ஆதரவுடன் அவர்களுக்கு சலுகைகள் வழங்கப்படும். அதிக லாபம் தரும் வழித்தடங்களிலும், மற்றத் தடங்களில் பயணிகள் நெரிசல் அதிகமுள்ள நேரங்களிலும் தனியார் வண்டிகள் இயக்க அனுமதிக்கப்படும். இதனால், அரசு பேரூந்துகளும், தனியார் பேரூந்துகளும் இயக்கப்படும் வழித்தடங்கள் அனைத்திலும் அரசுப் பேரூந்துகள் எப்படி நட்டதில் இயங்குகின்றனவோ, அதேபோல் தனியார் தொடர்வண்டிகள் அதிக லாபத்தில் இயங்கும் பாதைகளில், அரசுத் தொடர்வண்டிகள் நட்டத்தில் ஓடும் நிலை உருவாகும்.
அதுமட்டுமின்றி தனியார் நிறுவனங்கள் சந்தை நிலவரத்திற்கு ஏற்ப தங்களின் கட்டணத்தை நிர்ணயித்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும்; அதற்கு அரசு எந்த கட்டுப்பாடும் விதிக்கக்கூடாது என்பது தேப்ராய் குழுவின் இன்னொரு பரிந்துரையாகும். இது தனியார் நிறுவனங்கள் கட்டணக் கொள்ளையில் ஈடுபடலாம் என்பதற்கு அளிக்கப்பட்ட அனுமதியாகவே தோன்றுகிறது. இது நடைமுறைப் படுத்தப்பட்டால் தொடர்வண்டிப் பயணம் என்பது பணக்காரர்களுக்கானதாக மாறி விடும். இந்தியாவின் எந்த பகுதிக்கும் சாதாரண மக்கள் கூட எளிதாக சென்று வர முடிகிறது என்றால் அதற்கு முக்கியக் காரணம், மற்ற அனைத்து போக்குவரத்து முறைகளையும் விட தொடர்வண்டிக் கட்டணங்கள் மிகவும் குறைவாக இருப்பது தான்.
இதற்கு மாறாக தனியார் நிறுவனங்கள் தொடர்வண்டிகளை இயக்கி விருப்பம் போல கட்டணத்தை நிர்ணயிக்க அனுமதி அளிக்கப்பட்டால் அது சுற்றுலாவை பாதிக்கும். அதேபோல், சரக்குக் கட்டணங்கள் உயர்த்தப்படும் போது அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயரும். மேலும், அதிக வருமானம் தரும் நிலக்கரி, இரும்புத்தாது போன்ற சரக்குகளை கையாளவே தனியார் நிறுவனங்கள் முன்னுரிமை அளிக்கும்; குறைந்த வருவாய் தரும் உணவு தானியங்களை கொண்டு செல்ல ஆர்வம் காட்டாது என்பதால் உணவு தானியங்களுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும்.
தேப்ராய் குழுவின் இன்னொரு பரிந்துரை தொடர்வண்டித்துறையை பிரித்து தொடர்வண்டி இயக்கம் சார்ந்த பணிகளுக்கு ஓர் அமைப்பையும், பள்ளிகள், மருத்துவமனைகள், காவல் பணி ஆகியவற்றுக்கு இன்னொரு அமைப்பையும் ஏற்படுத்தலாம் என்பதாகும். தொடர்வண்டிப் பணியாளர் குடும்பங்களுக்காக மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளை நடத்தத் தேவையில்லை; வேண்டுமானால் தனியாரிடமிருந்து இந்த சேவைகளை அவர்கள் பெற மானியம் வழங்கலாம் என்பதும் அதன் பரிந்துரைகளில் ஒன்றாகும். இது தொடர்வண்டித்துறை பணியாளர்களின் கல்வி மற்றும் மருத்துவ உரிமைகளை பறிக்கும் செயல்.
பொதுவாக பொருளாதார வல்லுனர்களுக்கு வருவாய் பெருக்கம் பற்றி மட்டும் தான் தெரியும்; வறிய மக்களின் முன்னேற்றத்தில் அக்கறை இருக்காது என்பார்கள். அதை நிரூபிக்கும் வகையில் தான் பிபேக் தேப்ராய் குழுவின் பரிந்துரைகள் அமைந்துள்ளன. அதில் இடம்பெற்றுள்ள வரவேற்கத் தக்க பரிந்துரைகளை செயல்படுத்துவதுடன், பொதுமக்கள், பொருளாதாரம் மற்றும் தொடர்வண்டித் துறையையும் பாதிக்கும் மற்ற அனைத்து பரிந்துரைகளையும் மத்திய அரசு நிராகரிக்க வேண்டும்.’’
No comments:
Post a Comment