ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசுக்கு தமிழக மக்கள் பாடம் புகட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சூரிய ஒளி மின்சாரம்: அதானிக்காக அரங்கேற்றப்படும் விதிமீறல்கள் என்ற தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டத்தில் 216 மெகாவாட் திறன் கொண்ட சூரிய ஒளி மின்னுற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கான மின்சாரக் கொள்முதல் ஒப்பந்தத்தில் தமிழ்நாடு மின்சார வாரியமும், அதானி குழுமமும் கையெழுத்திட்டுள்ளன. அடுத்த கட்டமாக அதானி குழுமம் மேலும் 648 மெகாவாட் சூரிய ஒளி மின்னுற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கான மின்சாரக் கொள்முதல் ஒப்பந்தம் அடுத்த வாரம் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் கையெழுத்திடப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தியாவின் மிகப்பெரிய தொழில் நிறுவனங்களில் ஒன்றான அதானி குழுமத்திற்கு சூரிய ஒளி மின் நிலையங்கள் அமைப்பதற்கான அனுமதி அளிப்பதிலும், மின்சாரக் கொள்முதல் ஒப்பந்தம் செய்து கொள்வதிலும் பெருமளவில் ஊழலும், விதிமீறல்களும் நடைபெற்றுள்ளன. சூரிய ஒளி மின்னுற்பத்தி தொடர்பான அனைத்து விதிகளையும் காற்றில் பறக்கவிட்டு, அதானி குழுமத்திற்கு சிவப்புக் கம்பளம் விரித்துக் கொண்டிருக்கிறது தமிழக அரசு. சூரியஒளி மின்சாரத்தை எல்லா நேரங்களிலும் சார்ந்திருக்க முடியாது என்பதால், அதன் அதிகபட்ச உற்பத்திக்கு வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இப்போதைய நிலவரப்படி தமிழகத்தின் ஒட்டுமொத்த மின் தேவையான 10,950 கோடி யூனிட்டுகளில் 0.5 விழுக்காடான 219 கோடி யூனிட் அளவுக்கு, அதாவது 365 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரத்தை மட்டுமே கொள்முதல் செய்ய முடியும். இதைக் கருத்தில் கொண்டு தான் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு 7,800 மெகாவாட் அளவுக்கு சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்து தர நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் முன்வந்த போதிலும், அவற்றில் ஒரு சில நிறுவனங்களுடன் சுமார் 350 மெகாவாட் அளவுக்கு மட்டுமே மின்சாரக் கொள்முதல் ஒப்பந்தங்களை தமிழ்நாடு மின்சார வாரியம் கையெழுத்திட்டிருந்தது.
மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் கூடுதல் கொள்முதல் விலை தரப்படுவதால் சூரிய ஒளி மின்சாரத்தை அதிக அளவில் தயாரித்துத் தர ஏராளமான நிறுவனங்கள் முன்வந்துள்ளன. இதையடுத்து சூரிய ஒளி மின்சாரக் கொள்முதலின் அளவை தமிழகத்தின் ஒட்டுமொத்தத் தேவையில் 2% என்ற அளவுக்கு, அதாவது 1460 மெகாவாட்டாக உயர்த்த முடிவு செய்து அதற்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலை தமிழக அரசு கோரியுள்ளது. எனினும் இதற்கான அனுமதியை ஆணையம் இன்னும் வழங்கவில்லை. இத்தகைய சூழலில் 365 மெகாவாட்டுக்கு மேல் ஒரு மெகாவாட் அளவுக்குக் கூட மின்சாரக் கொள்முதல் ஒப்பந்தத்தைச் செய்து கொள்ள முடியாது. ஆனால், இதையெல்லாம் பொருட்படுத்தாமல் அதானி குழுமத்துடன் 216 மெகாவாட் உட்பட 632 மெகாவாட் அளவுக்கு மின்சாரக் கொள்முதல் ஒப்பந்தங்களில் மின்வாரியம் கையெழுத்திட்டிருக்கிறது. இதுதவிர மேலும் 648 மெகாவாட் அளவுக்கு புதிய ஒப்பந்தங்களில் விரைவில் கையெழுத்திடவிருக்கிறது. இது சட்ட விரோதமானதாகும்.
அதுமட்டுமின்றி, மின்சார கொள்முதல் ஒப்பந்தங்களை வழங்குவதில் பெருமளவில் ஊழல்களும் நடைபெறுகின்றன. தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு 7,800 மெகாவாட் அளவுக்கு மின்சாரத்தைக் கொள்முதல் செய்து வழங்க தனியார் நிறுவனங்கள் முன்வந்தன. அவற்றில் 3,800 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரத்தை தயாரித்து வழங்க முன்வந்த நிறுவனங்கள் அதற்கான ஆவணங்களைத் தாக்கல் செய்ததுடன் 50% காப்புத் தொகையையும் செலுத்தி விட்டன. 1,800 மெகாவாட் மின்சாரத்தைத் தயாரிக்க முன்வந்த நிறுவனங்கள் அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்தது மட்டுமின்றி, காப்புத் தொகையையும் முழுமையாக செலுத்தி விட்டன. அவற்றுக்கு மின் கொள்முதல் ஒப்பந்தம் வழங்கிய பிறகு தான் அதானி குழுமம் உள்ளிட்ட மற்ற நிறுவனங்களுடன் மின்சாரக் கொள்முதல் ஒப்பந்தங்களைச் செய்து கொள்ள முடியும். ஆனால், அந்த நிறுவனங்களை காத்திருக்க வைத்திருக்கும் தமிழ்நாடு மின்சார வாரியம் அவசரமாக அதானி குழுமத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட முயல்கிறது.
அதானி குழுமத்திலிருந்து மெகாவாட்டுக்கு ரூ.30 லட்சம் வீதம் ஆட்சியாளர்களுக்கு சன்மானம் வழங்கப்பட்டிருப்பது தான் இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. சிறு நிறுவனங்களால் இத்தகைய சன்மானத்தை வழங்க முடியாததால் அவற்றுடன் மின்சாரக் கொள்முதல் ஒப்பந்தங்களை செய்துகொள்ள ஆட்சியாளர்கள் முன்வரவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும், ரிலையன்ஸ், சன் எடிசன் ஆகிய நிறுவனங்களுடனும் மின்கொள்முதல் ஒப்பந்தம் செய்து கொள்ள அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் 1460 மெகாவாட் வரை சூரிய ஒளி மின்சாரத்தைக் கொள்முதல் செய்ய ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்தாலும், அது அதானி மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்களிடம் கொள்முதல் செய்வதற்குத் தான் சரியாக இருக்கும். சிறு நிறுவனங்களுடன் மின்கொள்முதல் ஒப்பந்தங்களைச் செய்து கொள்ள முடியாது. எனவே, ஆவணங்கள் மற்றும் காப்புத் தொகையை செலுத்தி மின்சாரக் கொள்முதல் ஒப்பந்தம் செய்வதற்காக காத்திருக்கும் சிறு நிறுவனங்களை அச்சுறுத்தி விண்ணப்பங்களைத் திரும்பப் பெற வைக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டிருப்பதாக கூறப்படும் புகார்களை புறந்தள்ள முடியவில்லை.
அதானி குழுமத்துடன் இப்போது ஒப்பந்தம் செய்து கொண்டாலும் மார்ச் மாதத்திற்குள் உற்பத்தியைத் தொடங்கினால் மட்டுமே யூனிட்டுக்கு ரூ.7.01 என்ற விலை வழங்கப்படும். ஆனால், மார்ச் மாதத்திற்குள் அதானி குழுமம் உற்பத்தியைத் தொடங்குவது சாத்தியமல்ல. ஆனாலும், யூனிட்டுக்கு ரூ.7.01 என்ற விலை கிடைக்கச் செய்ய அதானி குழுமத்திற்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. சூரிய ஒளி மின் நிலையங்களை அமைப்பதற்கான செலவு குறைந்து விட்டதால் நடப்பாண்டில் சூரிய ஒளி மின்சாரத்தின் கொள்முதல் விலை ரூ.5.86 ஆக குறைந்து விட்டது. அடுத்த ஆண்டில் இது யூனிட் ரூ.5.00 என்ற அளவுக்கு குறையும் வாய்ப்புள்ளது. அவ்வாறு குறையும் தொகைக்கு தான் அதானி நிறுவனத்துடன் மின்சாரக் கொள்முதல் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட வேண்டும். ஆனால், ஒரு யூனிட்டுக்கு ரூ. 2.00 கூடுதலாக ரூ. 7.01 என்ற விலைக்கு அதானியிடம் மின்சாரம் வாங்க அரசு ஒப்பந்தம் செய்துகொள்கிறது. அதானி குழுமம் 1000 மெகாவாட் சூரிய ஒளி மின்நிலையங்களை அமைப்பதாக வைத்துக் கொண்டால், ஒப்பந்த காலமான 25 ஆண்டுகளில் மாதத்திற்கு ரூ.30 கோடி வீதம் மொத்தம் ரூ.9,000 கோடி அரசுக்கு இழப்பு ஏற்படும். இதற்கெல்லாம் காரணமான ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசுக்கு தமிழக மக்கள் பாடம் புகட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை. இவ்வாறு கூறியுள்ளார்.
No comments:
Post a Comment