பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை:
’’சென்னையைச் சேர்ந்த பார்வையிழந்த மாற்றுத்திறனாளி பெனோ ஜெஃபைன் இந்தியக் குடிமைப் பணித் தேர்வில் தேர்ச்சி பெற்று இந்திய வெளியுறவுப் பணி அதிகாரியாக நியமிக்கப்பட்டி ருக்கிறார் என்ற செய்தி மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இந்த அரிய சாதனையை படைத்த பெனோ ஜெஃபைனுக்கு எனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பெனோ ஜெஃபைனின் இடைவிடாத முயற்சியும், உழைப்பும் தான் அவரை அரசு நிர்வாகத்தின் மிக உயர்ந்த இடத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது. இளங்கலை ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்ற பிறகு வங்கியில் அதிகாரியாக பணியில் சேர்ந்த பெனோ ஜெஃபைன் அத்துடன் திருப்தியடைய வில்லை.
மாறாக ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம், அதைத் தொடர்ந்து முனைவர் பட்ட ஆய்வு ஆகியவற்றிலும் சாதித்தார். அதன்தொடர்ச்சியாக இந்தியக் குடிமைப் பணிகள் தேர்விலும் வெற்றி பெற்று மிகப்பெரிய சாதனை படைத்துள்ளார். அவரது பணி சிறக்க எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதுடன், சாதிப்பதற்கு ஊனம் ஒரு தடையல்ல என்பதை உணர்ந்து ஜெஃபைன் வழியில் சாதனை படைக்க மற்ற மாற்றுத்திறனாளிகளும் உறுதியேற்கும்படி கேட்டுக் கொள்கிறேன்’’என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment