தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனையை அடுத்த ஒரு வாரத்திற்குள் தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் மக்களையும், தொண்டு நிறுவனங்களையும் திரட்டி மாபெரும் போராட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி நடத்தும் என எச்சரிக்கிறேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா போன்ற போதைப் பொருட்களின் உற்பத்தி, இருப்பு வைப்பு, விற்பனை ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்டத் தடையை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து அண்மையில் தமிழக அரசு ஆணையிட்டிருக்கிறது. இதுதொடர்பான தமிழக அரசின் ஆணை காகிதத்தில் மட்டும் இருக்கிறதே தவிர நடைமுறையில் இல்லை என்பது மிகுந்த வருத்தமும், வேதனையும் அளிக்கிறது.
குட்கா மற்றும் போதைப் பாக்குகளை தடை செய்வதற்கான உணவுப் பாதுகாப்பு மற்றும் தர(விற்பனை மீதான தடை மற்றும் கட்டுப்பாடு) ஒழுங்குமுறைகள் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த மருத்துவர் அன்புமணி இராமதாசு மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது தான் உருவாக்கப்பட்டன. கடந்த 2011 ஆம் ஆண்டில் இந்த விதிகள் நடைமுறைக்கு வந்ததிலிருந்தே குட்கா மற்றும் போதைப் பாக்குகளை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பா.ம.க. சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதுகுறித்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மருத்துவர் அன்புமணி இராமதாசு இருமுறை கடிதம் எழுதினார். அதைத் தொடர்ந்து தான் போதைப் பொருட்களை தடை செய்வதற்கான அறிவிப்பை 23.05.2013 அன்று தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதா அறிவித்தார். ஆனால், அதன் பிறகும் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் தடையின்றி போதைப்பாக்குகள் விற்கப்பட்டு வருகின்றன.
சென்னையில் அனைத்துக் கடைகளிலும் குட்கா தாராளமாக கிடைக்கிறது. தமிழகத்தில் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் போதைப் பாக்குகளை மட்டும் விற்பனை செய்ய அனுமதிக்கப்படுவதாகவும், இதற்காக ஆட்சியாளர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை வழங்கப்படுவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. குட்கா விற்பனை குறையவில்லை என்பதை களத்திலிருந்து கிடைக்கும் புள்ளிவிவரங்கள் உறுதி செய்கின்றன. கடந்த 2 ஆண்டுகளில் ரூ.9.13 கோடி மதிப்புள்ள போதைப்பாக்குகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தமிழக அரசு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. ஆனால், அதைவிட 100 மடங்குக்கும் அதிகமான போதைப்பாக்கு விற்பனை செய்யப்பட்டிருக்கும் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல் போதைப்பாக்குகளின் தனிநபர் நுகர்வும் கணிசமான அளவில் குறையவில்லை. தடை விதிக்கப்படுவதற்கு முன்பு வரை தனிநபர்கள் தினமும் சராசரியாக 5.64 பொட்டலங்களை உட்கொண்டு வந்தனர். அது இப்போது 4.4 பொட்டலங்கள் என்ற அளவில் தான் குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் தடை முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் போதைப்பாக்குகளின் பயன்பாடு முற்றிலுமாக ஒழிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அப்படி ஒரு நிலை ஏற்படவில்லை என்பதிலிருந்து தெரியும் உண்மை என்னவெனில், குட்காவுக்கு தடை விதிப்பதில் கூட மக்களைக் காக்கும் எண்ணம் இல்லை; பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் தான் ஆட்சியாளர்களுக்கு உள்ளது என்பது தான்.
குட்கா, போதைப் பாக்கு தவிர மாவா எனப்படும் போதைப் பாக்கு, கச்சா புகையிலை என 23 வகையான போதைப் பொருட்கள் தாராளமாக விற்கப்படுகின்றன. பள்ளிகளில் இருந்து 100 கெஜம் தொலைவில் போதைப்பாக்கு உள்ளிட்ட எந்த விதமான புகையிலைப் பொருட்களும் விற்பனை செய்யக் கூடாது என சட்டம் உள்ள நிலையில், அந்தப் பகுதிகளில் தான் அதிக எண்ணிக்கையில் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அரசும், காவல்துறையும் நினைத்தால் போதைப்பாக்கு விற்பனையை முற்றிலுமாக தடுக்க முடியும். ஆனால், போதைப் பாக்கு விற்பனையை தடுக்க வேண்டும் என்ற எண்ணம் ஆட்சியாளர்களுக்கு இல்லை. போதைப்பாக்கு விற்பனையை தடுக்க முயலும் அதிகாரிகளின் கைகளை ஆளுங்கட்சியினர் கட்டிப்போடுகின்றனர் என்று கூறப்படுகிறது.
போதைப் பாக்குகள் விற்பனை மட்டுமின்றி கஞ்சா, அபின் உள்ளிட்ட போதைப் பொருட்களின் விற்பனையும் சென்னை உள்ளிட்ட நகரங்களில் கட்டுப்பாடின்றி நடைபெறுகிறது. மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களிலும், மாணவர் விடுதிகள் அமைந்துள்ள பகுதிகளிலும் இவை பெருமளவில் விற்பனை செய்யப்படுகின்றன. இதுகுறித்த அனைத்து தகவல்களும் காவல்துறையினருக்கும், மற்ற துறைகளின் அதிகாரிகளுக்கும் தெரியும் என்ற போதிலும் போதைப்பொருட்கள் விற்பனையை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்பது வேதனையானது; கடும் கண்டனத்துக்குரியது.
போதைப் பாக்குகளை உட்கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள் கொஞ்ச நஞ்சமல்ல. 90% வாய்ப்புற்று நோய் ஏற்படுவதற்கு போதைப்பாக்குகள் தான் காரணம் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் வாய்ப்புற்று நோய் தலைநகரமாக சென்னை திகழ்கிறது. தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் 4,000 பேர் புதிதாக வாய்ப்புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள். போதைப் பாக்குகளின் தீமைகள் இப்படி என்றால் கஞ்சா போன்ற போதைப் பொருட்களால் மனித வாழ்க்கை ஒட்டுமொத்தமாக அழிகிறது.
இவ்வளவு தீமைகளையும் நன்றாக அறிந்திருந்தும் போதைப் பொருட்களின் விற்பனைக்கு தமிழக அரசு துணை போவது வெட்கக்கேடானது. தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனையை அடுத்த ஒரு வாரத்திற்குள் தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் மக்களையும், தொண்டு நிறுவனங்களையும் திரட்டி மாபெரும் போராட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி நடத்தும் என எச்சரிக்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.
No comments:
Post a Comment