Friday, June 5, 2015

காவிரியில் கழிவுகள் கலப்பது குறித்து ஆய்வு செய்ய வல்லுனர் குழு அனுப்ப வேண்டும்: உமாபாரதிடம் அன்புமணி வலியுறுத்தல்

காவிரியில் கர்நாடக அரசு கழிவுகளை திறந்து விடுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்& கழிவுகள் கலந்ததால் காவிரி மற்றும் தென்பெண்ணையாறு படுகைகளில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு நடத்த வல்லுனர் குழுவை அனுப்ப வேண்டும் என்றும் மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உமாபாரதியிடம் தருமபுரி தொகுதி மக்களவை உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

இதுதொடர்பாக அவரது சார்பில் அமைச்சர் உமாபாரதி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட கடிதத்தின் விவரம்:

தமிழ்நாட்டின் சுற்றுச்சூழலை பாதிக்கும் மிக முக்கியமான பிரச்சினை குறித்து விவாதிக்க நேரம் ஒதுக்கியமைக்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

கர்நாடக சட்டமேலவையில் அண்மையில் நடைபெற்ற விவாதத்தில் பேசிய அம்மாநில நீர்ப்பாசனத் துறை அமைச்சர் சிவராஜ் தங்கடாகி, கர்நாடகத் தலைநகர் பெங்களூர் மற்றும் அதையொட்டிய பகுதிளிலுள்ள தொழிற்சாலைகள் மற்றும் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் கால்வாய்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு காவிரி ஆற்றில் வெளியேற்றப்படுவதாகத் தெரிவித்துள்ளார். 

காவிரியை வெள்ள நீரை வெளியேற்றுவதற்கான கால்வாயாக மட்டும் பயன்படுத்தி வந்த கர்நாடகம், இப்போது கழிவு நீரை வெளியேற்றுவதற்கான சாக்கடையாகவும் பயன்படுத்தத் தொடங்கியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. 

தமிழ்நாட்டில் 25 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு பாசன ஆதாரமாகவும், 5 கோடி பேருக்கு குடிநீர் ஆதாரமாகவும்  காவிரி திகழ்கிறது. இத்தகைய பெருமை கொண்ட காவிரியில் கழிவு நீரைக் கலப்பது மிகப்பெரிய பாவச் செயலாகும். ஃபுளோரைடு மிகையால் பாதிக்கப்பட்டுள்ள தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 3 நகராட்சிகள், 17 பேரூராட்சிகள் மற்றும் 6755 ஊரக குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்குவதற்காக ரூ.1928 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும்  ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம், வேலூர் மாவட்டத்தில் வேலூர் மாநகராட்சி, 11 நகராட்சிகள்,   5 பேரூராட்சிகள், 944 ஊரகக் குடியிருப்புகள் ஆகியவற்றுக்கு குடிநீர் வழங்குவதற்கான ரூ.1295 கோடி வேலூர் விரிவான கூட்டுக் குடிநீர் திட்டம் ஆகியவற்றுக்கு காவிரி ஆற்றிலிருந்து தான் தண்ணீர் எடுக்கப்படுகிறது. 

காவிரியில் வரும் தண்ணீர் தூய்மையாக இருந்தால் மட்டுமே இந்தக் கூட்டுக் குடிநீர் திட்டங்களின் நோக்கம் நிறைவேறும். நச்சுகள் நிறைந்த கழிவு நீர் கலந்த காவிரி ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து செயல்படுத்தப்படும் இந்த திட்டங்களால் மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்காது. ஏற்கனவே ஃபுளோரைடு கலந்த நீரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட நீரைத் தருவதாகக் கூறி, நச்சு கலந்த நீரை வழங்குவது துரோகமாகும்.

காவிரியில் மட்டுமின்றி தென்பெண்ணை ஆற்றிலும் பெங்களூர் உள்ளிட்ட நகரங்களின் கழிவு நீர் திறந்து விடப்படுகிறது. இதையும்  கர்நாடக அமைச்சர் தங்கடாகி ஒப்புக்கொண்டுள்ளார். இதனால் கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும்.

தமிழகத்திற்கு காவிரி உள்ளிட்ட ஆறுகளில் திறக்கப்படும் தண்ணீரில் கழிவு நீரைக் கலக்க கர்நாடக அரசுக்கு எந்த உரிமையும் கிடையாது. மாறாக, காவிரியில் தூய்மையான தண்ணீர் திறந்து விடப்படுவதை உறுதி செய்ய வேண்டியது கர்நாடக அரசின் கடமை ஆகும். இதைப் பொருட்படுத்தாமல் காவிரியில் கழிவு நீரை வெளியேற்றுவது பெரும் குற்றமாகும். ஆற்று நீர் தூய்மை, கழிவு நீர் வெளியேற்றம், மாசுக்கட்டுப்பாடு ஆகியவை தொடர்பான 13 மத்திய அரசு சட்டங்களின் படியும், பல்வேறு மாநில அரசு சட்டங்களின்படியும் இது குற்றமாகும். இந்த சட்டங்களின்படி கர்நாடக அரசு மீது நடவடிக்கை எடுப்பதுடன், கழிவு நீரால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இழப்பீடு பெறவும் முடியும். 

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்திற்கு 192 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விடப்பட வேண்டும். ஆனால், அந்தத் தீர்ப்பை மதித்து தமிழகத்திற்கு நன்னீரை திறந்து விட மறுக்கும் கர்நாடக அரசு கழிவு நீரை திறந்து விட்டு தமிழகத்தின் சுற்றுச்சூழலுக்கும், மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதை மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது.
நதிகளின் தூய்மையில் நீங்கள் மிகுந்த அக்கறை காட்டுபவர் என்பதை நான் அறிவேன். கங்கை நதியை தூய்மைப்படுத்துவதற்காக நடப்பாண்டு நிதிநிலை அறிக்கையில் ரூ.2100 கோடி நிதி ஒதுக்கி  தூய்மைத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறீர்கள். இது மிகவும் வரவேற்கத்தக்க பணியாகும். இதேபோல், காவிரி, தென்பெண்ணை ஆறுகளையும் தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத்திய நீர்வள ஆணைய வல்லுனர்களை உடனடியாக தமிழகத்திற்கு அனுப்பி காவிரி, தென்பெண்ணை ஆறுகளில் கழிவு நீர் கலக்கப்பட்டதால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். கழிவு நீரால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்வதற்கான திட்டத்தையும் வகுத்து செயல்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டும்.

இதற்கெல்லாம் மேலாக காவிரியில் இனி வரும் காலங்களிலும் கழிவு நீர் கலப்பதைத் தடுத்து, நடுவர் மன்றத் தீர்ப்பின்படி நன்னீர் திறந்து விடப்படுவதை உறுதி செய்வதற்காக காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி நீர் ஒழுங்கு முறைக் குழுவையும் அமைத்து ஆணையிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: