பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தென்காசி சென்றார். அங்கே அவர் செய்தியாளர் களிடம் பேசியபோது, ‘’வட மாவட்டங்களில் தான் எங்களுக்கு செல்வாக்கு உள்ளது. தென் மாவட்டங்களில் இல்லை என்று கேட்கிறார்கள். 1994ம் ஆண்டிலேயே தென்காசியில் போராட்டம் நடத்தி உள்ளோம். நெல்லை மாவட்டத்தில் அதிகமான கிராமங்களில் நான் கொடிஏற்றி உள்ளேன். என்னை போல் போராட்டம் நடத்திய தலைவர்கள் தமிழகத்தில் யாரும் இல்லை. தவறுதலாக அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. உடன் கூட்டணி வைத்துவிட்டோம். அதற்காக தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்டு விட்டோம்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கும் நிலையில், முதல் அமைச்சர் வேட்பாளராக அன்புமணியை அறிவித்து தனித்து போட்டியிடுவதை துணிச்சலாக கூறிய கட்சி பா.ம.க. மட்டுமே. தி.மு.க., அ.தி.மு.க.வினால் எந்த வளர்ச்சியும் இல்லை. இலவசங்களை கொடுத்து மக்களை ஏமாற்றி வருகிறார்கள். சாராயத்தை கொடுத்து இளைஞர்களை குடிகாரர்களாக்கி உள்ளனர்.
ஜெயலலிதா வழக்கில் குமாரசாமி தீர்ப்பு வந்த உடன் உடனடியாக மேல்முறையீடு செய்வதற்கு கர்நாடகா அரசுக்கு கடிதம் எழுதினேன். அந்த அரசு தகுந்த முடிவு எடுத்துள்ளது. நல்ல தீர்ப்பு வரும். ஏற்கனவே எழுதப்பட்ட தீர்ப்புகள் திருத்தப்படலாம்.
இப்போது நடைபெற உள்ள ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் எல்லா இடங்களிலும் நடைபெற்ற பார்முலா பின்பற்றப்பட உள்ளது. திருமங்கலத்தில் வாக்காளர்களுக்கு 1 ஓட்டுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கத்தில் ரூ.6 ஆயிரமாக உள்ளது. ஆர்.கே. நகரில் ரூ.8 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. முதல் கட்டமாக ரூ.3 ஆயிரம், பிரியாணி, மதுபாட்டில் வழங்கப்படுகிறது. மேலப்பாளையம் பள்ளி வாசலில் தொழுகை நடத்தியவர்களை போலீசார் தாக்கி உள்ளனர். இது கண்டிக்கத்தக்கது’’என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment