பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை:
’’சென்னை இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று பிரச்சாரம் செய்யச் சென்று அப்பகுதி மக்களின் வாக்குகளை வாங்குவதற்கு பதிலாக சாபத்தை வாங்கி வந்திருக்கிறார். ஜெயலலிதாவின் பிரச்சாரத்திற்காக காவல்துறையும், ஆளுங்கட்சியும் செய்த கெடுபிடிகளால் குழந்தைகள் முதல் பெண்கள் வரை கடும் அவதிக்கு ஆளானதே இதற்கு காரணம்.
இராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கு எந்தத் தேவையுமே இல்லாத நிலையில், ஜெயலலிதாவை சட்டமன்ற உறுப்பினராக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேலை திடீரென பதவி விலக வைத்து, அவசர, அவசரமாக தேர்தல் நடத்தப்படுகிறது. வெற்றிவேலின் பதவி விலகல் கடிதத்தை ஏற்பதிலும், அடுத்த 10 நாட்களில் தேர்தல் அறிவிக்கப்பட்டதிலும் தொடங்கிய விதி மீறல்கள் இப்போது வரைத் தொடருகின்றன. இதைத் தடுக்க வேண்டிய தேர்தல் ஆணையமும், அதிகாரிகளும் வாய் பொத்தி வேடிக்கைப் பார்க்கின்றனர்.
இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு ஜெயலலிதா சென்றதையடுத்து சென்னை பாரிமுனையில் தொடங்கி இராயபுரம், காசிமேடு, வண்ணாரப்பேட்டை, தண்டையார் பேட்டை வழியாக மணலி வரை போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டது. மாலையில் ஜெயலலிதா வருவதற்காக மாலை 4.30 மணியிலிருந்தே இச்சாலைகள் மூடப்பட்டன. இதனால் அலுவலகம் முடிந்தும், தொழிற்சாலைகளில் பணி நேரம் முடிந்தும் வீடு திரும்பியவர்கள் பல கிலோ மீட்டர் தூரம் நடந்தே செல்லவேண்டியிருந்தது. கருவுற்ற பெண்மணி ஒருவர் சிகிச்சைக்காக தானியில் மருத்துவமனைக்கு சென்ற போது அதை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் அப்பெண்மணி பெரும் இன்னலுக்கு ஆளானார். 108 அவசர சிகிச்சை ஊர்திகளைக் கூட ஜெயலலிதா பயணம் செய்யும் பாதைகளில் காவல்துறையினர் அனுமதிக்க வில்லை. ஜெயலலிதா முதலில் பிரச்சாரம் செய்த இடம் தண்டையார் பேட்டையில் அப்பல்லோ மருத்துவமனைக்கும், தொற்றுநோய் தடுப்பு மருத்துவமனைக்கும் இடைப்பட்ட பகுதியாகும். மருத்துவமனை பகுதியில் ஒலி எழுப்பக்கூடாது என்று விதிகள் உள்ள போதிலும் நேற்று காலை முதல் இரவு ஜெயலலிதா பரப்புரை முடிக்கும் வரை ஒலிபெருக்கிகள் அலற விடப்பட்டதால் நோயர்கள் பெரும் இன்னலுக்கு ஆளானார்கள்.
தொடர்ந்து எண்ணூர் நெடுஞ்சாலை சந்திப்பில் ஜெயலலிதா பரப்புரை செய்த போதும் அப்பகுதியில் உள்ள மக்கள் பெரும் அவதிக்குள்ளாயினர். ஜெயலலிதாவின் பரப்புரை முடிந்த பிறகே சாலைகளில் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. பல மணிநேரத்துக்குப் பிறகே போக்குவரத்து அனுமதிக்கப்பட்டதால் கடுமையான நெரிசல் ஏற்பட்டது. திருவொற்றியூர் நெடுஞ்சாலை அப்பல்லோ மருத்துவமனை அருகில் ஒரு 108 அவசர ஊர்தி நெரிசலில் சிக்கிக் கொண்டதால் அதிலிருந்த நோயாளி கடும் பாதிப்புக்கு உள்ளானதாக கூறப்படுகிறது. அதேபோல், எண்ணூர் நெடுஞ்சாலை சந்திப்பு பகுதியில், ஜெயலலிதா உரையாற்றி விட்டு சென்ற பிறகும் போக்குவரத்து சீரனைக்கப்படாததைக் கண்டித்து பொதுமக்களும், சாலைகளில் பயணம் செய்தவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை சென்ட்ரல், பாரிமுனை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலையில் தொடங்கிய நெரிசால் இரவு 10 மணிக்கு பிறகும் நீடித்தது.
ஜெயலலிதாவின் பரப்புரையால் மக்களுக்கும், சாலைகளில் பயணிப்போருக்கும் ஏற்பட்ட பிரச்சினை இதுவென்றால் மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோர்க்கும் ஏற்பட்ட அவதி விவரிக்க முடியாதது ஆகும். தண்டையார்பேட்டையில் ஜெயலலிதா பரப்புரை செய்த பகுதியில் சென்னை மாநகராட்சிப் பள்ளி ஒன்றும், தனியார் பள்ளி ஒன்றும் உள்ளன. ஜெயலலிதா பரப்புரையையொட்டி இப்பள்ளிகளுக்கு நேற்று மதியத்துடன் கட்டாய விடுமுறை விடப்பட்டது. இதை காலையிலேயே அறிவிக்காமல் பள்ளி நடந்துக் கொண்டிருந்த போது திடீரெனஅறிவித்ததால் பல பெற்றோர் அலுவலகத்திலிருந்து உடனடியாக வர முடியாமல் அவதிப்பட்டனர். அதுமட்டுமின்றி, பள்ளிகள் விடப்படுவதற்கு முன்பாகவே போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் மாணவ, மாணவிகளும் பெற்றோரும் நடந்தே வீடுகளுக்கு செல்ல வேண்டியிருந்தது.
ஜெயலலிதாவுக்காக காட்டப்பட்ட இந்த நெருக்கடிகளும், கெடுபிடிகளும் அவருக்குத் தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், ‘‘இன்னொருவர் வேதனை இவர்களுக்கு வேடிக்கை... இதயமற்ற மனிதருக்கு இதுவெல்லாம் வாடிக்கை’’ என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப மக்களின் இந்த துயரங்களை ஜெயலலிதா ரசித்தாரே தவிர தடுக்க முயலவில்லை. மக்களின் இத்தனை அவதிகளுக்கும் காரணமான ஜெயலலிதா அவரது பரப்புரையில்,‘‘ மக்களால் நான், மக்களுக்காக நான் என்பது தான் எனது தாரக மந்திரம்’’ என்று பேசியதைக் கேட்கும் போது படிப்பது இராமாயணம்... இடிப்பது பெருமாள் கோவில் என்ற பழமொழி தான் நினைவுக்கு வந்தது. தனது சுயநலத்துக்காக மக்களுக்கு எந்த பாதிப்பையும் ஜெயலலிதா ஏற்படுத்துவார் என்பதற்கான உதாரணங்களின் பட்டியலில் இது குறிப்பிடத்தக்கதாகும்.
அரசியல் கட்சிகளில் தேர்தல் பரப்புரைகள் மக்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தக்கூடாது; குறிப்பாக பொதுக்கூட்டம், பேரணி போன்றவற்றால் மக்களுக்கு தொல்லை ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தேர்தல் நடத்தை விதிகளில் கூறப்பட்டுள்ளது. ஆனால், அதை மதிக்காமல் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திய ஜெயலலிதா மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எதுவும் எடுப்பதாக தெரியவில்லை. ஜெயலலிதாவின் பரப்புரைக்காக பள்ளிகளுக்கு கட்டாய விடுமுறை விடப்பட்டது பற்றி தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனாவிடம் கேட்டதற்கு, ‘‘பள்ளிகள் தானாக முன்வந்து தான் விடுமுறை அறிவித்தன. இதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது’’ என்று கூறிவிட்டார்.
கடந்த இரு நாட்களுக்கு முன் சேலத்தைச் சேர்ந்த கணேசன் என்ற காவல் அதிகாரி மருத்துவ விடுப்பு போட்டுவிட்டு இராதாகிருஷ்ணன் நகரில் ஜெயலலிதாவுக்காக பரப்புரை செய்ததை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியிருந்தேன். இது அனைத்து ஊடகங்களிலும் வெளியாகி இருந்தது. அதன்பின் 5 நாட்களாகியும் அந்த அதிகாரி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுபற்றி சந்தீப் சக்சேனாவிடம் கேட்ட போது, இது தொடர்பாக யாரும் புகார் தரவில்லை என்கிறார். நீங்களாகவே நடவடிக்கை எடுக்கக்கூடாதா? என்று கேட்டால், இச்செய்தி வந்த போது நான் வேறு வேலையில் இருந்ததால் தொலைக்காட்சிகளை பார்க்கவில்லை என்று பதில் சொல்கிறார். அதிமுகவின் அலுவலக ஊழியரைப் போல பதில் கூறும் இவர் எப்படித்தான் இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத்தேர்தலையும், அடுத்த ஆண்டு தமிழக பொதுத்தேர்தலையும் நியாயமாக நடத்தப்போகிறாரோ?
ஜெயலலிதா சென்னையில் வீட்டை விட்டு வெளியில் வந்தாலே தங்களுக்கு துயரமும், அவதியும் உறுதி என்பதை கடந்த ஒரு மாதத்தில் மக்கள் உணர்ந்து விட்டனர். இனியும் இந்த துயரத்தையும், அவதியையும் அனுபவிக்க அவர்கள் தயாராக இல்லை. எனவே, ஜெயலலிதா இனி அவரது வீட்டை விட்டு வெளியே வரத் தேவையில்லை என்ற நிலையை அடுத்த ஆண்டு தேர்தலில் உருவாக்குவார்கள்.’’
No comments:
Post a Comment