Thursday, June 4, 2015

வருங்காலத் தலைமுறை வாழ சுற்றுச்சூழலைக் காப்போம்!: அன்புமணி


 


பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை:
 சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5 &ஆம் நாள்  உலக சுற்றுச்சூழல் நாளாகக் கொண்டாடப்படுகிறது. "எழுநூறு கோடி கனவுகள். ஒரு பூமிக்கோளம். பொறுப்புடன் பயன்படுத்துவோம்"(Seven Billion Dreams. One Planet. Consume with Care.) என்பதை இந்த ஆண்டுக்கான முழக்கமாக ஐ.நா. முன்வைத்திருக்கிறது.

உலக அளவில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதற்கான முதன்மைக் காரணம் மனிதர்களின் நுகர்வுக் கலாச்சாரம் தான் என்பது சுற்றுச்சூழல் குறித்த ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. நுகர்வுக் கலாச்சாரத்தின் அடிப்படையிலான இன்றைய மனிதர்களின் வாழ்க்கை முறையால் பூமிப்பந்து அழிவின் விளிம்பில் நிறுத்தப்பட்டுள்ளது. நீர், நிலம், காற்று என எல்லாமும் மாசுபடுத்தப்பட்டுள்ளது. இயற்கை வளங்கள் அவற்றின் தாங்கும் திறனுக்கும் மேலாக சுரண்டப்பட்டுள்ளன. இந்த நிலை இனிமேலும் தொடர்ந்தால் -பூமியில் மனித வாழ்க்கை சாத்தியமில்லாமல் போய்விடும் என்று ஐநா எச்சரித்துள்ளது. வளிமண்டலத்தில் மனிதர்களால் ஏற்படுத்தப்படும் மாசு காரணமாக புவியின் சராசரி வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிகரிப்பதைத் தடுக்க முடியாது. அதேநேரத்தில் வெப்பநிலை உயர்வு 2 டிகிரி செல்சியசைத் தாண்டினால் உலகம் அழிவது உறுதியாகிவிடும் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவிலும், பிற உலக நாடுகளிலும் அண்மைக்காலமாக இயற்கைச்சீற்றங்கள் அதிகரித்துள்ளன. ஒரே நேரத்தில் புவியின் வெவ்வேறு பகுதிகளில் வறட்சி, மழை&வெள்ளம், நிலநடுக்கம், சுனாமி, அதிக பனிப்பொழிவு போன்றவை ஏற்படுகின்றன. சுற்றுச்சூழல் மாசுபாடு தான் இதற்கு காரணம். பூமியின் மாசுக்கு வளர்ந்த  நாடுகள் தான் காரணம் என்றாலும், அந்நாடுகளின் பாதையில் இந்தியாவும் செல்லக் கூடாது. சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் மற்ற நாடுகளை இந்தியாவுக்கு கூடுதல் பொறுப்பு உள்ளது. ஏனெனில், உலகில் மோசமாக மாசுபட்ட நாடுகள் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. 

அதேபோல், உலகளவில் மாசு நிறைந்த நகரங்கள் பட்டியலில் தில்லி தான் முதலிடத்தில் உள்ளது. மொத்தம் 20 நகரங்களைக் கொண்ட இந்தப் பட்டியலில் 15 நகரங்கள் இந்தியாவைச் சேர்ந்தவை ஆகும். இதில் தென்னிந்தியாவை, குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த நகரங்கள் ஒன்று கூட இல்லை என்பது மனநிறைவு அளிக்கும் விஷயம் தான் என்றாலும், தமிழகத்திலுள்ள சாயப் பட்டறைகளும், தோல் தொழிற்சாலைகளும் மிக மோசமான சுற்றுச்சூழல் சீர்கேட்டை ஏற்படுத்துகின்றன. இன்னொருபுறம் காவிரியிலும், தென்பெண்ணையாற்றிலும் கர்நாடக மாநிலத்தின் கழிவுகள் கலக்கப்படுகின்றன. கேரள மாநிலத்தையொட்டிய தமிழக மாவட்டங்கள் அம்மாநிலத்தின் கழிவுகளைக் கொட்டும் குப்பைத் தொட்டியாக்கப்பட்டு விட்டன. இவையெல்லாம் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

 இதேநிலை தொடர்ந்தால் இந்தியா வாழத்தகுதியற்ற நாடாகிவிடும். ‘சுற்றுச்சூழலுக்கு உகந்த நீடித்த வாழ்க்கை முறை (sustainable lifestyles)’என்பதை நடப்பாண்டில் சுற்றுச்சூழல் நாள் நோக்கமாக ஐ.நா. அறிவித்திருக்கிறது. வருங்காலத் தலைமுறை வாழ வேண்டுமானால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது தான் இதன் பொருளாகும். அப்படி ஒரு நிலை ஏற்படுவதைத் தடுத்து வருங்காலத் தலைமுறையினருக்கு பசுமையான, தூய்மையான, அமைதியான உலகை விட்டுச் செல்ல வேண்டும்.

சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் மருத்துவர் அய்யா அவர்களால் உருவாக்கப்பட்ட பசுமைத் தாயகம் அமைப்பு, சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், மரம் நடுதல், நீர் நிலைகளை தூர்வாருதல், புகையிலை எதிர்ப்பு, மது ஒழிப்பு போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. சுற்றுச்சூழலை பேணி புவியை பாதுகாக்கும் இந்த வேள்வியில் அரசே எல்லா நடவடிக்கையையும் மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கக்கூடாது.

 நுகர்வுக் கலாச்சாரத்தை மட்டுப்படுத்துதல், தண்ணீர் சிக்கனம், மழைநீர் சேமிப்பு, நீர்வளப் பாதுகாப்பு, மின்சார சிக்கனம், உணவுப்பொருட்கள் வீணாவதைத் தடுத்தல், அனைவருக்கும் போதுமான சத்துள்ள உணவு கிடைக்கச் செய்தல் ஆகியவற்றின் மூலம் சுற்றுச்சூழலை பாதுகாக்க மக்கள் பங்களிக்க வேண்டும். மற்றொரு புறம் சுற்றுச்சூழலை பாதிக்கும் திட்டங்களை ரத்து செய்தும், சுற்றுச்சூழல் தொடர்பான சட்டங்களை முழு அளவில் செயல்படுத்தியும் சூழலை பாதுகாப்பதற்கான கடமையை அரசு நிறைவேற்ற வேண்டும்.’’

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: