பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை:
’’பொறியியல் படிப்புகள் மீதான மாணவர்களின் ஆர்வம் குறைந்து விட்ட நிலையில், பெரும்பாலான மாணவர்கள் கலை மற்றும் அறியியல் படிப்புகளில் சேர விரும்புகின்றனர். ஆனால், கலை&அறிவியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை முறைப்படுத்தப்படாததால் மாணவர்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
தமிழகத்தில் 65 அரசு கலை-அறிவியல் கல்லூரிகள், 37 பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகள் மற்றும் 600&க்கும் மேற்பட்ட தனியார் கலை-அறிவியல் கல்லூரிகள் உள்ளன. அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. எந்தக் கல்லூரியில் இடம் கிடைக்கும் என்பது உறுதியாக தெரியாத நிலையில் மாணவர்கள் குறைந்தது 5 முதல் 10 கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டியதாக உள்ளது. விண்ணப்பத்திற்காக மட்டும் ஒவ்வொரு மாணவரும் ரூ.3,000 முதல் ரூ.5,000 வரை செலவழிக்க வேண்டியிருக்கிறது. அதுமட்டுமின்றி, தேவையில்லாத அலைச்சலும் ஏற்படுகிறது. மற்றொருபுறம் ஒரு கல்லூரியில் சேர்ந்த மாணவருக்கு அதைவிட சிறந்த கல்லூரியில் இடம் கிடைத்தால் ஏற்கனவே படித்த கல்லூரியிலிருந்து விலகும்போது காலியாகும் இடம் பெரும்பாலும் நிரப்பப்படுவதில்லை. இதனால் அந்த இடங்கள் யாருக்கும் பயன்படாமல் போகும் நிலை ஏற்படுகிறது.
இந்த நிலையை மாற்ற அனைத்து கலை-அறிவியல் கல்லூரிகளிலும் ஒற்றைச் சாளர முறையில் மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். கல்லூரி ஆசிரியர் சங்கங்களும் இதே யோசனையை கூறி வருகின்றன. ஆனால், இந்த யோசனையை தமிழக அரசு இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழகத்தில் 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. அவற்றுக்கு ஒற்றைச் சாளர முறையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுவதால், மாணவர்கள் அவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் அவர்களுக்கு பிடித்த கல்லூரிகளில் பிடித்த பாடப்பிரிவை தேர்வு செய்து கொள்கின்றனர். இதனால் மாணவர்கள் ஒரு குறிப்பிட்ட கல்லூரியில் தான் படிக்க வேண்டும் என்று விரும்பினால் அங்கு தாங்கள் விரும்பிய ஒரு பாடப்பிரிவு கிடைக்காவிட்டால், தங்களுக்கு விருப்பமான இன்னொரு பாடப்பிரிவை தேர்ந்தெடுத்துக் கொள்ள முடிகிறது. அதேபோல், ஒரு குறிப்பிட்ட பாடப்பிரிவில் தான் படிக்க வேண்டும் என்று மாணவர் விரும்பினால் அப்பாடப்பிரிவு ஒரு கல்லூரியில் இல்லாவிட்டால், அதற்குப் பதிலாக இன்னொரு கல்லூரியை தேர்ந்தெடுத்துக் கொள்ள முடிகிறது.
ஆனால், இந்த வாய்ப்பு கலை-அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு மறுக்கப்படுகிறது. இதனால் கிடைத்த கல்லூரியில் கிடைத்த படிப்பை விருப்பமில்லாமல் கடமைக்காக படிக்கும் நிலை ஏற்படுகிறது. இது மாணவர்களின் எதிர்காலத்திற்கும் உதவாது.... நாட்டுக்கும் நன்மை செய்யாது. அதேநேரத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கையில் கடைபிடிக்கப்படுவதைப் போல கலை-அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கையிலும் ஒற்றைச் சாளர முறை அறிமுகம் செய்யப்பட்டால் மாணவர்கள் விரும்பிய கல்லூரியில், விரும்பிய படிப்பை ஆர்வத்துடன் படிக்க முடியும். கல்லூரிகளில் தேவையின்றி காலியிடங்கள் ஏற்படாது.
அதேபோல், தனியார் கலை-அறிவியல் கல்லூரிகளில் கல்விக் கட்டணமும் ஒழுங்குபடுத்தப்படாமல் உள்ளது. இளநிலை பட்டப்படிப்புகளுக்கு கல்லூரி மற்றும் பாடப்பிரிவுகளுக்கு ஏற்றவாறு ஆண்டுக்கு ரூ.15,000 முதல் ரூ.40,000 வரை கல்விக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. பொறியியல் படிப்புக்கும், பள்ளிகளுக்கும் கல்விக் கட்டணத்தை அரசே நிர்ணயித்து வரும் நிலையில், கலை-அறிவியல் படிப்புகளுக்கு மட்டும் கட்டணம் நிர்ணயிக்கப்படாமல் இருப்பது கல்விக் கட்டணக் கொள்ளைக்குத் தான் வழி வகுக்கும். இவற்றையெல்லாம் தமிழக அரசு நன்றாக அறிந்திருந்தும் கலை- அறிவியல் படிப்புகளுக்கு கட்டண நிர்ணயம் செய்ய தனிக் குழுவை அமைக்காமல் இருப்பது கண்டிக்கத்தக்கது.
கலை&அறிவியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், மாணவர் சேர்க்கையை முறைப்படுத்த மாநில அளவிலோ, மண்டல அளவிலோ ஒற்றைச்சாளர முறையை அறிமுகம் செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி கலை - அறிவியல் படிப்புகளுக்கான கட்டணத்தை முறைப்படுத்த ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் கட்டண நிர்ணய குழுவை அரசு அமைக்க வேண்டும். ’’
No comments:
Post a Comment