தமது ஆட்சிக்காலம் முடிவதற்குள் தொழில் வீழ்ச்சியில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றிவிட்டு தான் ஜெயலலிதா ஓய்வார் என்பது மட்டும் உறுதி என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஊழல், மின்வெட்டு, நிர்வாகச்சீர்கேடுகள் ஆகியவற்றால் தொழில்துறையில் தமிழகம் பின்னடைவை சந்தித்து வருவதாக தொடர்ந்து குற்றஞ்சாற்றி வருகிறேன். ஆனால், இவற்றை சரி செய்ய தமிழக அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அதன் விளைவாக தொழில் முதலீடுகள் தமிழகத்தை விட்டு வெளியேறுவதை படம் பிடித்துக் காட்டியிருக்கிறது தி எகனாமிக்ஸ் டைம்ஸ் ஆங்கில நாளிதழ்.
ஒரு காலத்தில் தொழில்துறை முதலீட்டை ஈர்ப்பதில் மராட்டியம், குஜராத் போன்ற மாநிலங்களுடன் போட்டியிட்ட தமிழ்நாடு இப்போது போட்டியிலேயே இல்லை. இதற்குக் காரணம் தமிழகத்தில் அதிகரித்து விட்ட ஊழல் தான் என்பதை அந்நாளிதழ் ஆதாரங்களுடன் விளக்கியிருக்கிறது. தமிழகத்தில் சிறிய தொழிற்சாலையைத் தொடங்குவது கூட எவ்வளவு சிரமமாக உள்ளது என்பது குறித்து அந்நாளிதழுக்கு பேட்டியளித்த பெயர் கூற விரும்பாத தொழிலதிபர் ஒருவர்,‘‘ஒரு கோடி ரூபாய் முதலீட்டில் ஒரு சிறிய தொழிற்சாலையை நான் அமைத்தேன். அதில் உற்பத்தித் தொடங்கவிருந்த நேரத்தில் ஒரு குறிப்பிட்டத் துறையிலிருந்து அறிவிக்கை வந்தது. அதில் தொழிற்சாலைக்கு இன்னும் சில அனுமதிகளை வாங்க வேண்டும்; அந்த அனுமதிகளை 10 நாட்களில் பெற்று தாக்கல் செய்ய வேண்டும்; இல்லாவிட்டால் தொழிற்சாலையை பூட்டி சீல் வைப்போம் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து அந்தத் துறையின் அதிகாரியை சந்தித்த போது, அமைச்சரிடம் பேசும்படி கூறினார். அமைச்சரை சந்தித்த போது, அனைத்து அனுமதிகளையும் வழங்க ரூ.40 லட்சம் லஞ்சம் தர வேண்டும் என்று கேட்டார். அதன்பின் பேரம் பேசி அதை 20 லட்சமாக குறைத்தேன். எனது தொழிற்சாலையின் முதலீடே ரூ.1 கோடி தான் எனும் போது அதற்கு அனுமதி வாங்க ரூ.20 லட்சம் கையூட்டு என்பது பெரிய தொகை’’ என்று கூறினார்.
தோல் தொழிற்சாலை நடத்தி வரும் ஒரு தொழிலதிபர் தமக்கான நெருக்கடிகள் பற்றி கூறும்போது, ‘‘தொழிற்சாலைகளின் ஆய்வாளர் ஒவ்வொரு மாதமும் என்னிடம் ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்குவார். திடீரென என்னிடம் அவர் ரூ.40,000 கேட்டார். எதற்காக இந்தப் பணம் என்று கேட்ட போது, தாம் பணியிட மாற்றம் செய்யப்பட்டு விட்டதாகவும், அதை ரத்து செய்ய அமைச்சர் லஞ்சம் கேட்பதாகவும், அமைச்சருக்கு தருவதற்காகவே என்னிடம் பணம் கேட்பதாகவும் கூறினார். கடைசியில் அவர் கேட்ட பணத்தை நான் கொடுத்துத் தொலைத்தேன்’’ என்று கூறியதாக அந்த நாளிதழ் தெரிவித்திருக்கிறது.
தமிழகத்தில் தொழில் தொடங்க முன்வராததற்காக தொழிலதிபர்கள் தரப்பில் முன்வைக்கப்படும் மற்றொரு காரணம் முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்திக்கவே முடியாது என்பது தான் என்றும் அந்த செய்திக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த குற்றச்சாற்றுகள் எதுவும் புதிதல்ல. இவற்றைத் தான் பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து பல மாதங்களாக கூறிவருகிறது. தெலுங்கானா மாநிலத்தின் தொழிற்கொள்கை குறித்து கடந்த 13 ஆம் தேதி நான் வெளியிட்ட அறிக்கையில்,‘‘தமிழகத்தில் புதிதாக தொழில் தொடங்க முன்வருபவர்கள் முதல்வரை சந்திப்பதே அரிதானதாக உள்ளது. அமைச்சர்களை சந்தித்தால், எவ்வளவு முதலீடு செய்வீர்கள் என்பதற்கு பதிலாக எங்களுக்கு எவ்வளவு தருவீர்கள்? என கேட்கும் அவல நிலை தான் தமிழகத்தில் காணப்படுகிறது’’ என்று குறிப்பிட்டிருந்தேன். அந்தக் குற்றச்சாற்று உண்மை என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த செய்திக்கட்டுரை அமைந்துள்ளது.
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா, மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் ஆகியோரும், ஆந்திரா, மராட்டியம், குஜராத் போன்ற மாநிலங்களின் அமைச்சர்கள் தலைமையிலான குழுக்களும் தமிழகத்திற்கு வந்து தொழிலதிபர்களை சந்தித்து பேசுகின்றனர். அவர்கள் அளிக்கும் சலுகைகளுக்காக தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர்கள் அம்மாநிலங்களில் முதலீடு செய்கின்றனர். தமிழகத் தொழிலதிபர்கள் ரூ.12,000 கோடி முதலீடு செய்ய ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து அவர்களுக்காக கர்நாடகத்தில் தனித் தொழில் பூங்கா உருவாக்கப்பட்டிக்கிறது. தமிழகத் தொழிலதிபர்களை தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தங்களது மாநிலத்தில் தொழில் தொடங்க முன்வரும்படி வேண்டுகோள் விடுக்கிறார். ஆந்திரத்தில் தொழில் தொடங்க முன்வந்தால் மூன்று வாரங்களில் அனைத்து அனுமதிகளையும் வழங்குவதுடன், ஏராளமான சலுகைகளையும் வழங்குவதாக வாக்குறுதி அளிக்கிறார். இதற்கெல்லாம் மேலாக ஆந்திர மாநிலத்தில் புதிய தொழில் தொடங்குவதற்கான அனுமதி பெற ஒரு பைசா கூட லஞ்சம் கொடுக்கத் தேவையில்லை. இதனால் ஆந்திர மாநிலத்தில் புதியத் தொழில் முதலீடுகள் குவிந்து வருகின்றன.
இந்தியாவின் ஒட்டுமொத்த தோல் பொருட்கள் ஏற்றுமதியில் 38% தமிழகத்திலிருந்து தான் செய்யப் படுகின்றன. இதைத் தகர்த்து ஆந்திராவில் தோல் பொருள் உற்பத்தியை பெருக்கும் வகையில் தமிழக எல்லையை ஒட்டிய கோத்தப்பட்டினம் என்ற இடத்தில் தோல்பொருட்கள் தொழில் பூங்காவை ஆந்திர அரசு அமைத்து வருகிறது. தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் ஆர்வம் காட்டாததாலும், தமிழகத்தில் தொழில் முதலீட்டுக்கான நடைமுறைகள் மிகவும் கடுமையாக இருப்பதாலும் மென்பொருள் நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க முன்வருவதில்லை. தமிழகத்திற்கு அதிக வருவாயும், வேலைவாய்ப்புக்களையும் ஈட்டித்தரக் கூடிய ஃபேஸ்புக், கூகுள், ஸ்நாப்டீல், ஃபிளிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் தமிழகத்தில் கிளைகளைத் தொடங்க மறுத்து ஆந்திரா, மராட்டியம், ஹரியானா ஆகிய மாநிலங்களுக்குச் சென்று விட்டன. தமிழகத்தில் தற்போது தொழிற்சாலைகளை நடத்தி வரும் பெரு நிறுவனங்கள் இனி இங்கு முதலீடு செய்யப்போவதில்லை; ஆந்திரமே இலக்கு என்று தீர்மானித்துள்ளன.
தமிழகத்தில் நான்கு பெரிய துறைமுகங்கள், 3 சர்வதேச விமான நிலையங்கள் இருக்கும்போதிலும் தரமான சாலைகள் இல்லாததும் தமிழகத்தில் தொழில் தொடங்க யாரும் முன்வராததற்கு காரணமாகும். மக்களின் வாக்குகளை கவர்வதற்காக ‘இலவசங்கள்’ அரசியல் நடத்தும் தமிழக அரசுக்கு, தொழில் வளத்தை மேம்படுத்துவதில் அக்கறை இல்லை என்றும், இத்தகைய சூழலில் முதலீடு செய்ய யாரும் முன்வர மாட்டார்கள் என்றும் தொழிலதிபர்கள் கூறுகின்றனர். இந்த எச்சரிக்கை மணி ஆளுங்கட்சி காதுகளில் விழுந்தது போலத் தெரியவில்லை. மீதமுள்ள ஆட்சிக் காலத்தில் எவ்வளவு சுருட்டலாம் என்பதில் தான் அவர்களின் கவனம் உள்ளது. தமது ஆட்சிக்காலம் முடிவதற்குள் தொழில் வீழ்ச்சியில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றிவிட்டு தான் ஜெயலலிதா ஓய்வார் என்பது மட்டும் உறுதி!
இவ்வாறு கூறியுள்ளார்.
No comments:
Post a Comment