இந்திய தொடர்வண்டித்துறை அமைச்சர் மாண்புமிகு சுரேஷ் பிரபு அவர்களை தருமபுரி தொகுதி மக்களவை உறுப்பினரும், பா.ம.க. இளைஞரணித் தலைவருமான மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள் இன்று மாலை தில்லியில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நீடித்தது. இந்த சந்திப்பின்போது முன்னாள் தொடர்வண்டித்துறை இணை அமைச்சர் அரங்க. வேலு உடனிருந்தார்.
இந்த சந்திப்பின் போது தருமபுரி & மொரப்பூர் இடையேயான தொடர்வண்டிப் பாதையை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று மருத்துவர் அன்புமணி இராமதாசு வலியுறுத்தினார். இது தொடர்பாக அவர் அளித்த மனுவின் விவரம்:
தருமபுரி & மொரப்பூர் இடையிலான மீட்டர்கேஜ் இரயில்பாதை அகலப்பாதை பணிகளுக்காக அகற்றப்பட்டது. அகற்றப்பட்ட பாதையில் புதிய அகலப்பதை அமைத்துத் தர வேண்டும். இது புதிய திட்டம் அல்ல. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான நிலம் தயாராக உள்ளது. இதனால் புதிதாக நிலம் கையகப்படுத்தத் தேவையில்லை.
மொரப்பூர் தொடர்வண்டி நிலையத்தையும், தருமபுரி ரயில் நிலையத்தையும் இப்பாதை இணைக்கும். மொரப்பூர் தெற்கு தொடர்வண்டி மண்டலத்திலும், தருமபுரி தென் மேற்கு தொடர்வண்டி மண்டலத்திலும் இருப்பதால் இத்திட்டம் இரு கோட்டங்களை இணைக்கும். அதுமட்டுமின்றி மாவட்டத் தலைநகரான தருமபுரியை மாநிலத் தலைநகரான சென்னையுடன் நேரடியாக இணைக்கும். 34 கி.மீ நீளத்திற்கான இத்திட்டத்தை செயல்படுத்த 220 கோடி ரூபாய் மட்டுமே செலவாகும் என்பதால் இதை நேரடி ரயில்வேத் திட்டமாகவே செயல்படுத்தலாம். மாநில அரசுடன் இணைந்து செலவை பகிர்ந்து கொள்ளும் திட்டமாக செயல்படுத்தத் தேவையில்லை. இத்திட்டம் ஏற்கனவே மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது. மத்திய திட்டக்குழுவின் ஆய்வுக்கும் 2005 ஆம் ஆண்டிலேயே அனுப்பப்பட்டிருக்கிறது.
அப்போது இந்தத் திட்டத்தை செயல்படுத்தலாம்; ஆனால், திட்டச் செலவில் 50 விழுக்காட்டை மாநில அரசு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று திட்டக்குழு கூறியதால் இத்திட்டம் தாமதமாகிறது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால், சென்னை&பெங்களூர் இடையிலான பயண தூரம் குறையும். அதுமட்டுமின்றி, மிகவும் பின் தங்கிய மாவட்டமான தருமபுரி மாவட்டத்தின் சமூக பொருளாதார சூழ்நிலை மேம்படும். எனவே, இந்தத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருக்கிறது.
மனுவை பெற்றுக்கொண்ட தொடர்வண்டித்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு இத்திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
No comments:
Post a Comment