Tuesday, June 30, 2015

ஜெயலலிதா கட்சி மண்ணை கவ்வும் என்பது உறுதி: அதைவிட உறுதி...: ராமதாஸ் பேட்டி



 

2016ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மண்ணை கவ்வும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் புதன்கிழமை காலை செய்தியாளர்களிடம் பேசிய அவர், 

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக பெற்றுள்ள வெற்றி எதிர்வரும் சட்டமன்ற தேர்தலுக்கான முன்னோட்டம் அல்ல. உண்மையில் அது பின்னோட்டமே. ஜெயலலிதா கட்சி அடிமை கட்சி. ஜெயலலிதா கட்சி மண்ணை கவ்வும் என்பது உறுதி. அதைவிட உறுதி ஜெயலலிதா ஜெயிலுக்கு செல்வது என்றார். 

ஆர்.கே.நகர்: ஆதாரத்துடன் அளிக்கப்பட்ட புகார் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்ததா? ராமதாஸ் கேள்வி

 

 

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்

சென்னை இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத்தேர்தல் மிக அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்தி முடிக்கப்பட்டிருப்பதாக தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கூறியிருக்கிறார். மேலும், சில கட்சிகள் ஆதாரமின்றி புகார் கூறியிருப்பதாகவும் குற்றஞ்சாற்றியுள்ளார். முறைகேடுகளை கண்டுகொள்ளாதது மட்டுமின்றி புகார் கூறியவர்களையே சக்சேனா விமர்சிப்பது கண்டிக்கத்தக்கது.

இராதாகிருஷ்ணன் நகர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே ஆளுங்கட்சியினர் அப்பட்டமான விதிமீறல்களில் ஈடுபட்டனர். இராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் கடந்த 4 ஆண்டுகளாக எவ்வித நலத்திட்டங்களையும் செய்யாமல் இருந்து விட்டு, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன், இரவோடு இரவாக தொகுதி முழுவதும் சாலைகள் அமைக்கப்பட்டன. இந்த சாலை அமைக்கும் பணிகளில் சென்னை மாநகரக் காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர் என்றும், சாலை அமைக்கும் பணிகளை சென்னை மாநகர காவல் ஆணையரே மேற்பார்வையிட்டார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. காலங்காலமாக கருப்பான கழிவு நீர் வந்த நிலையில், இடைத்தேர்தல் அறிவிக்கப் பட்டவுடன் தற்காலிக ஏற்பாடாக சுத்தமான குடிநீர் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கழிவுநீர் குழாய்களும் மாற்றப்பட்டன. பொதுமக்களுக்கு இந்த வசதிகள் செய்து தரப்பட்டது வரவேற்கத்தக்க விஷயம் தான். ஆனால், 4 ஆண்டுகளில் எதையும் செய்யாமல் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்த பின்னர் இதை செய்தது விதி மீறல் என்பது சக்சேனாவுக்கு தெரியாதா? இதைத் தடுக்க அவர் என்ன செய்தார்? இந்த விதிமீறல்களுக்கு காரணமானவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?

வேட்புமனுத் தாக்கல் செய்யப்படும் தண்டையார்பேட்டை மண்டல அலுவலகம் திடீரென புதுப்பிக்கப் பட்டு, பச்சை வண்ணம் பூசப்பட்டது.  குறைந்த பரப்பளவே கொண்ட அந்த அலுவலகத்தில் தேவையே இல்லாமல் மூன்று குளிரூட்டிகள் பொருத்தப்பட்டன. இவை யாருக்காக செய்யப்பட்டன? இது தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயலா.... இல்லையா? இந்த விதிமீறல்கள் தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு தெரியுமா... தெரியாதா? இதுகுறித்து எவரேனும் புகார் அளித்தால் தான் அவர் நடவடிக்கை எடுப்பாரா? தானாக முன்வந்து நடவடிக்கை எடுப்பது அவரது கடமை இல்லையா? ஒருவேளை அவர் எதிரிலேயே வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால் கூட, எவரேனும் ஆதாரத்துடன் படம் பிடித்து வந்து புகார் கொடுத்தால் தான் நடவடிக்கை எடுப்பாரா? ஒரு தலைமைத் தேர்தல் அதிகாரி இப்படிப் பேசலாமா?

தேர்தல் பிரச்சாரத்தின்போது சேலம் மாநகரைச் சேர்ந்த காவல்துறை உதவி ஆணையர் கணேசன் என்பவர் காலில் அடிபட்டதாகக் கூறி மருத்துவ விடுப்பு எடுத்துக் கொண்டு தண்டையார்பேட்டையில் ஆளுங்கட்சிக்காக பரப்புரை மேற்கொண்டதை புகைப்பட ஆதாரத்துடன் அறிக்கையாக வெளியிட்டேன். அதைத் தொடர்ந்து மற்ற எதிர்க்கட்சிகளின் தலைவர்களும் இதே குற்றச்சாற்றை முன்வைத்தனர். இந்தக் குற்றச்சாற்றின் அடிப்படையில் தலைமைத் தேர்தல் அதிகாரி என்ன நடவடிக்கை எடுத்தார்?  இதுதொடர்பாக சில செய்தியாளர்கள் அவரிடம் கேட்டபோது, இதுகுறித்து யாரும் புகார் தரவில்லை என்று கூறினார். அப்படியானால், ஊடக செய்திகளின் அடிப்படையில் நீங்களாக முன்வந்து நடவடிக்கை எடுக்க மாட்டீர்களா? என்று கேட்டபோது,‘‘ நான் இன்று தொலைக்காட்சி பார்க்கவில்லை. அதனால் இதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது’’ என்று பதிலளித்துள்ளார். இப்படி பதில் கூறுவது பொறுப்பான அதிகாரிக்கு அழகா? காவல் அதிகாரி பிரச்சாரம் செய்தது குறித்து அதுவரை தெரியாவிட்டாலும், அதன்பின் விசாரித்து தலைமைத் தேர்தல் அதிகாரி சக்சேனா நடவடிக்கை எடுப்பதை யார் தடுத்தது?

வாக்குப்பதிவு நாளன்று 50-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றி கள்ள வாக்குகளைப் பதிவு செய்தனர். அதனால் தான் 181 ஆவது வாக்குச்சாவடியில் வாக்காளர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக வாக்குகள் பதிவாயின. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப்போல இராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் நடந்த முறைகேடுகளுக்கு இது ஒரு உதாரணம் தான். எந்தெந்த வாக்குச்சாவடியில் இதேபோல் முறைகேடுகள் நடந்தன என்பதை விசாரித்து அவை அனைத்திலும் மறு தேர்தல் நடத்தியிருக்க வேண்டும்... இல்லாவிட்டால் இடைத்தேர்தலை ரத்து செய்திருக்க வேண்டும். அதைவிடுத்து, ஏதோ அந்த வாக்குச்சாவடியின் அதிகாரி தான் வாக்காளர்களை அழைத்து வந்து கள்ள ஓட்டு போட வைத்தது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி அவரை பலிகடா ஆக்குவதும், அந்த வாக்குச்சாவடியில் மட்டும் மறுவாக்குப்பதிவு நடத்துவதும் கண்துடைப்பு நாடகமா.... இல்லையா?

தேர்தல் பரப்புரை முடிவடைந்தவுடன் வெளியாட்கள் அனைவரும் தொகுதியை விட்டு வெளியேறி இருக்க வேண்டும். ஆனால், வாக்குப்பதிவு நாளன்று சென்னை மாநகராட்சி அதிமுக கவுன்சிலர்கள் அனைவரும் இராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் முகாமிட்டு முறைகேடுகளை அரங்கேற்றினார்கள். இதைத் தடுக்க தலைமைத் தேர்தல் அதிகாரி சக்சேனா சிறு துரும்பையாவது கிள்ளிப்போட்டிருப்பாரா? 1993 ஆம் ஆண்டில் ராணிப்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலை நடத்துவதற்குரிய சூழல் நிலவவில்லை. இதையடுத்து அத்தேர்தலை அப்போதைய தேர்தல் ஆணையர் சேஷன் ஒத்திவைத்தார். அதேபோன்ற சூழல் தான் இராதாகிருஷ்ணன் நகரிலும் நிலவியது.அத்தகைய சூழலில் சேஷன் காட்டிய வழியில் சக்சேனா நடந்திருந்தால் அனைவரின் பாராட்டையும் பெற்றிருப்பார்.ஆனால், ஜெயலலிதா காட்டிய வழியில் செயல்பட்டதால் தான் இப்போது  விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கிறார்.

அனைத்து கட்சிகளுக்கும் பொதுவாக செயல்பட வேண்டிய சந்தீப் சக்சேனா  ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டிருக்கிறார். அதுமட்டுமின்றி, அதிமுகவின் நிர்வாகியாகவே மாறி எதிர்க்கட்சிகள் மீது பழி போடுகிறார். இவரை வைத்துக்கொண்டு 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை நடத்துவது சரியாக இருக்காது. எனவே, சந்தீப் சக்சேனாவுக்கு பதிலாக தமிழகத்திற்கு புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியை நியமிப்பதற்கு இந்தியத்  தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

Sunday, June 28, 2015

தொழில் வீழ்ச்சியில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றிவிட்டு தான் ஜெயலலிதா ஓய்வார்: ராமதாஸ்



தமது ஆட்சிக்காலம்  முடிவதற்குள் தொழில் வீழ்ச்சியில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றிவிட்டு தான் ஜெயலலிதா ஓய்வார் என்பது மட்டும் உறுதி என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
 
ஊழல், மின்வெட்டு, நிர்வாகச்சீர்கேடுகள் ஆகியவற்றால் தொழில்துறையில் தமிழகம் பின்னடைவை சந்தித்து வருவதாக தொடர்ந்து குற்றஞ்சாற்றி வருகிறேன். ஆனால், இவற்றை சரி செய்ய தமிழக அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அதன் விளைவாக தொழில் முதலீடுகள் தமிழகத்தை விட்டு வெளியேறுவதை படம் பிடித்துக் காட்டியிருக்கிறது தி எகனாமிக்ஸ் டைம்ஸ் ஆங்கில நாளிதழ்.
ஒரு காலத்தில் தொழில்துறை முதலீட்டை ஈர்ப்பதில் மராட்டியம், குஜராத் போன்ற மாநிலங்களுடன் போட்டியிட்ட தமிழ்நாடு இப்போது போட்டியிலேயே இல்லை. இதற்குக் காரணம் தமிழகத்தில் அதிகரித்து விட்ட ஊழல் தான் என்பதை அந்நாளிதழ் ஆதாரங்களுடன் விளக்கியிருக்கிறது. தமிழகத்தில் சிறிய தொழிற்சாலையைத் தொடங்குவது கூட எவ்வளவு சிரமமாக உள்ளது என்பது குறித்து அந்நாளிதழுக்கு  பேட்டியளித்த பெயர் கூற விரும்பாத தொழிலதிபர் ஒருவர்,‘‘ஒரு கோடி ரூபாய் முதலீட்டில் ஒரு சிறிய தொழிற்சாலையை நான் அமைத்தேன். அதில் உற்பத்தித் தொடங்கவிருந்த நேரத்தில் ஒரு குறிப்பிட்டத் துறையிலிருந்து அறிவிக்கை வந்தது. அதில் தொழிற்சாலைக்கு இன்னும் சில அனுமதிகளை வாங்க வேண்டும்; அந்த அனுமதிகளை 10 நாட்களில் பெற்று தாக்கல் செய்ய வேண்டும்; இல்லாவிட்டால் தொழிற்சாலையை பூட்டி சீல் வைப்போம் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து அந்தத் துறையின் அதிகாரியை சந்தித்த போது, அமைச்சரிடம் பேசும்படி கூறினார். அமைச்சரை சந்தித்த போது, அனைத்து அனுமதிகளையும் வழங்க ரூ.40 லட்சம் லஞ்சம் தர வேண்டும் என்று கேட்டார். அதன்பின் பேரம் பேசி அதை 20 லட்சமாக குறைத்தேன். எனது தொழிற்சாலையின் முதலீடே ரூ.1 கோடி தான் எனும் போது அதற்கு அனுமதி வாங்க ரூ.20 லட்சம் கையூட்டு என்பது பெரிய தொகை’’ என்று கூறினார். 

தோல் தொழிற்சாலை நடத்தி வரும் ஒரு தொழிலதிபர் தமக்கான நெருக்கடிகள் பற்றி கூறும்போது, ‘‘தொழிற்சாலைகளின் ஆய்வாளர் ஒவ்வொரு மாதமும் என்னிடம் ரூ.8 ஆயிரம்  லஞ்சம் வாங்குவார். திடீரென என்னிடம் அவர் ரூ.40,000 கேட்டார். எதற்காக இந்தப் பணம் என்று கேட்ட போது, தாம் பணியிட மாற்றம் செய்யப்பட்டு விட்டதாகவும், அதை ரத்து செய்ய அமைச்சர் லஞ்சம் கேட்பதாகவும், அமைச்சருக்கு தருவதற்காகவே என்னிடம் பணம் கேட்பதாகவும் கூறினார். கடைசியில் அவர் கேட்ட பணத்தை நான் கொடுத்துத் தொலைத்தேன்’’ என்று கூறியதாக அந்த நாளிதழ் தெரிவித்திருக்கிறது.

தமிழகத்தில் தொழில் தொடங்க முன்வராததற்காக தொழிலதிபர்கள் தரப்பில் முன்வைக்கப்படும் மற்றொரு காரணம் முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்திக்கவே முடியாது என்பது தான் என்றும் அந்த செய்திக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த குற்றச்சாற்றுகள் எதுவும் புதிதல்ல. இவற்றைத் தான் பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து பல மாதங்களாக கூறிவருகிறது. தெலுங்கானா மாநிலத்தின் தொழிற்கொள்கை குறித்து கடந்த 13 ஆம் தேதி நான் வெளியிட்ட அறிக்கையில்,‘‘தமிழகத்தில் புதிதாக தொழில் தொடங்க முன்வருபவர்கள் முதல்வரை சந்திப்பதே அரிதானதாக உள்ளது. அமைச்சர்களை சந்தித்தால், எவ்வளவு முதலீடு செய்வீர்கள் என்பதற்கு பதிலாக எங்களுக்கு எவ்வளவு தருவீர்கள்? என கேட்கும் அவல நிலை தான் தமிழகத்தில் காணப்படுகிறது’’ என்று குறிப்பிட்டிருந்தேன். அந்தக் குற்றச்சாற்று உண்மை என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த செய்திக்கட்டுரை அமைந்துள்ளது.

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா, மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் ஆகியோரும், ஆந்திரா, மராட்டியம், குஜராத் போன்ற மாநிலங்களின் அமைச்சர்கள் தலைமையிலான குழுக்களும் தமிழகத்திற்கு வந்து தொழிலதிபர்களை சந்தித்து பேசுகின்றனர். அவர்கள் அளிக்கும் சலுகைகளுக்காக தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர்கள் அம்மாநிலங்களில் முதலீடு செய்கின்றனர். தமிழகத் தொழிலதிபர்கள் ரூ.12,000 கோடி முதலீடு செய்ய ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து அவர்களுக்காக கர்நாடகத்தில் தனித் தொழில் பூங்கா உருவாக்கப்பட்டிக்கிறது. தமிழகத் தொழிலதிபர்களை தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தங்களது மாநிலத்தில் தொழில் தொடங்க முன்வரும்படி வேண்டுகோள் விடுக்கிறார். ஆந்திரத்தில் தொழில் தொடங்க முன்வந்தால் மூன்று வாரங்களில் அனைத்து அனுமதிகளையும் வழங்குவதுடன், ஏராளமான சலுகைகளையும் வழங்குவதாக வாக்குறுதி அளிக்கிறார். இதற்கெல்லாம் மேலாக ஆந்திர மாநிலத்தில் புதிய தொழில் தொடங்குவதற்கான அனுமதி பெற ஒரு பைசா கூட லஞ்சம் கொடுக்கத் தேவையில்லை. இதனால் ஆந்திர மாநிலத்தில் புதியத் தொழில் முதலீடுகள் குவிந்து வருகின்றன.

இந்தியாவின் ஒட்டுமொத்த தோல் பொருட்கள் ஏற்றுமதியில் 38% தமிழகத்திலிருந்து தான் செய்யப் படுகின்றன. இதைத் தகர்த்து ஆந்திராவில் தோல் பொருள் உற்பத்தியை பெருக்கும் வகையில் தமிழக எல்லையை ஒட்டிய கோத்தப்பட்டினம் என்ற இடத்தில் தோல்பொருட்கள் தொழில் பூங்காவை ஆந்திர அரசு அமைத்து வருகிறது. தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் ஆர்வம் காட்டாததாலும், தமிழகத்தில் தொழில் முதலீட்டுக்கான நடைமுறைகள் மிகவும் கடுமையாக இருப்பதாலும் மென்பொருள் நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க முன்வருவதில்லை. தமிழகத்திற்கு அதிக வருவாயும், வேலைவாய்ப்புக்களையும் ஈட்டித்தரக் கூடிய ஃபேஸ்புக், கூகுள், ஸ்நாப்டீல், ஃபிளிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் தமிழகத்தில் கிளைகளைத் தொடங்க மறுத்து ஆந்திரா, மராட்டியம், ஹரியானா ஆகிய மாநிலங்களுக்குச் சென்று விட்டன. தமிழகத்தில் தற்போது தொழிற்சாலைகளை நடத்தி வரும்  பெரு நிறுவனங்கள் இனி இங்கு முதலீடு செய்யப்போவதில்லை; ஆந்திரமே இலக்கு என்று தீர்மானித்துள்ளன.

தமிழகத்தில் நான்கு பெரிய துறைமுகங்கள், 3 சர்வதேச விமான நிலையங்கள் இருக்கும்போதிலும் தரமான சாலைகள் இல்லாததும் தமிழகத்தில் தொழில் தொடங்க யாரும் முன்வராததற்கு காரணமாகும். மக்களின் வாக்குகளை கவர்வதற்காக ‘இலவசங்கள்’ அரசியல் நடத்தும் தமிழக அரசுக்கு, தொழில் வளத்தை மேம்படுத்துவதில் அக்கறை இல்லை என்றும், இத்தகைய சூழலில் முதலீடு செய்ய யாரும் முன்வர மாட்டார்கள் என்றும் தொழிலதிபர்கள் கூறுகின்றனர். இந்த எச்சரிக்கை மணி  ஆளுங்கட்சி காதுகளில் விழுந்தது போலத் தெரியவில்லை. மீதமுள்ள ஆட்சிக் காலத்தில் எவ்வளவு சுருட்டலாம் என்பதில் தான் அவர்களின் கவனம் உள்ளது. தமது ஆட்சிக்காலம்  முடிவதற்குள் தொழில் வீழ்ச்சியில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றிவிட்டு தான் ஜெயலலிதா ஓய்வார் என்பது மட்டும் உறுதி!
இவ்வாறு கூறியுள்ளார்.

Thursday, June 25, 2015

இந்திராவின் எமர்ஜென்சிக்கும் ஜெ. ஆட்சிக்கும் வேறுபாடு இல்லை: ராமதாஸ்

சென்னை: 40 ஆண்டுகாலத்துக்கு முன்னர் இந்திரா காந்தி கொண்டுவந்த எமர்ஜென்சிக்கும் தற்போது தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா நடத்தி வரும் ஆட்சிக்கும் வேறுபாடு எதுவும் இல்லை என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சாடியுள்ளார்.இது தொடர்பாக டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:இந்திய ஜனநாயக வரலாற்றில் வெறுக்கத்தக்க அத்தியாயம் ஒன்று உண்டென்றால், அது 1975ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் தேதி நள்ளிரவில் தொடங்கி 21 மாதங்கள் நீடித்த நெருக்கடி நிலை தான். ஒட்டுமொத்த இந்தியாவையும் 21 மாதங்கள் மட்டுமே நெருக்கடி நிலை ஆட்டிப்படைத்த சூழலில், தமிழக மக்கள் மட்டும் 50 மாதங்களாக அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையால் அவதிப்படுகின்றனர்.

Tuesday, June 23, 2015

ஜெ. சொத்துக்குவிப்பு மேல்முறையீடு: விரைவாக விசாரிக்க கோர வேண்டும்: ராமதாஸ்



பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

வருவாய்க்கு மீறிய வகையில் ரூ.66.65 கோடி சொத்துக் குவித்த வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்திருக்கிறது. சுமார் 2700 பக்கங்கள் கொண்ட மேல்முறையீட்டு மனுவில், நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பில் காணப்படும் குறைபாடுகள் குறித்து புள்ளி விவரங்களுடன் விரிவாக விளக்கப்பட்டிருப்பதாக தெரிய வருகிறது. 

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு நீதித்துறை மீதான நம்பகத்தன்மையை ஆட்டம் காண வைத்த தீர்ப்பு ஆகும். எவ்வளவு வேண்டுமானாலும் ஊழல் செய்யலாம்; அந்த ஊழலுக்காக தண்டிக்கப்பட்டாலும் குறிப்பிட்ட நாட்களில்  விடுதலை ஆகி, விட்ட பணியை மீண்டும் தொடரலாம் என்ற தோற்றம் ஏற்படுவதற்கு இந்தத் தீர்ப்பு காரணமாகிவிட்டது. இத்தீர்ப்பு திருத்தப்படாவிட்டால் இந்தியாவில் ஊழல் என்பது அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாக மாறிவிடும். இதைத் தடுக்க வேண்டும் என்பதற்காகத் தான் கர்நாடக உயர்நீதிமன்றத்தின்  தீர்ப்பில் உள்ள குளறுபடிகளை விளக்கி, அதை எதிர்த்து மேல்முறையீடு செய்யும்படி கர்நாடக முதலமைச்சருக்கும், சட்டத்துறை உயரதிகாரிகளுக்கும் கடிதம் எழுதினேன்.  அதையேற்று இத்தீர்ப்பை திருத்துவதற்காக மேல்முறையீடு என்ற முதல் அடியை கர்நாடகா எடுத்துவைத்திருப்பது பாராட்டத்தக்கது.

தவறாக அளிக்கப்பட்டத் தீர்ப்பின் பயனாக ஒருவர் மீண்டும் முதலமைச்சராகி, ஊழல்களையும், முறைகேடுகளையும் அரங்கேற்றுவதை அனுமதிப்பது பெரும் அநீதி ஆகும். அந்த அநீதி தமிழகத்தில்  அரங்கேற்றப்பட்டு விட்டது. இந்த அநீதியை எவ்வளவு விரைவாக களைய முடியுமோ அவ்வளவு விரைவாக களைய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கர்நாடக உயர்நீதிமன்றத்தில் சாதகமானத் தீர்ப்பை பெற்று விட்ட நிலையில், இவ்வழக்கை விசாரணை நீதிமன்றத்தில் இழுத்தடித்ததைப் போலவே, உச்சநீதிமன்றத்திலும் இழுத்தடிக்க ஜெயலலிதா தரப்பில் நிச்சயமாக முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இந்த முயற்சிகள் முறியடிக்கப்படுவதை பொறுத்து தான் இவ்வழக்கில் நீதி நிலை நாட்டப்படும்.

எனவே, இந்த மேல்முறையீட்டு மனுவை ஒரு குறிப்பிட்ட காலவரையரைக்குள் விரைவாக விசாரித்து தீர்ப்பளிக்கும்படி உச்சநீதிமன்றத்திடம்  கர்நாடக அரசு முறையிட வேண்டும். ஒருவேளை விரைவான விசாரணைக்கு உச்சநீதிமன்றம் ஒப்புக்கொள்ளவில்லை என்றால், இவ்வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்தத் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை பெறுவதற்கு கர்நாடக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

மானம், மரியாதைக்கு ஆபத்து: நெருக்கடி நிலையை விட மோசமான சூழலில் தமிழகம்! : ராமதாஸ்

 

 பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை:
’’இந்தியா முழுவதும் இப்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டு நாளையுடன் 40 ஆண்டுகள் நிறைவடைகின்றன. நெருக்கடி நிலை என்ற இந்திய ஜனநாயகத்தின் கருப்புப் பக்கங்கள் 1975 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25-26 தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில் தான்  எழுதப்பட்டன. அப்போது இந்தியக் குடியரசுத் தலைவராக இருந்த ஃபக்ருதின் அலி அகமது அப்போதைய  பிரதமர் இந்திரா காந்தியின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், இந்திய அரசியல் சட்டத்தின் 352-ஆவது பிரிவைப் பயன்படுத்தி இந்தியாவில் நெருக்கடி நிலையை பிரகடனம் செய்வதற்கான மூன்று வரிகள் கொண்ட சுருக்கமான ஆணையில் கையெழுத் திட்டதில் தான் அனைத்தும் தொடங்கின.

இந்திரா காந்தியும் காங்கிரசில் இருந்த அவரது துதிபாடிகளும் கொண்டு வந்த நெருக்கடி நிலை இந்திய ஜனநாயத்தை சர்வாதிகாரமாக மாற்றியது. தனிநபர் சுதந்திரமும், தனியுரிமைகளும் பறிக்கப்பட்டன; குடிமக்களின் அடிப்படை உரிமைகள் ரத்து செய்யப்பட்டன; கருத்து சுதந்திரம் முடக்கப் பட்டது; கொடுமையான சட்டங்களின்படி லட்சக்கணக்கான மக்கள் கைது செய்யப்பட்டு விசாரணை இன்றி சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டனர். ஜனநாயகத்தின் நிர்வாக அமைப்புகளாக போற்றப்படும் குடியரசுத் தலைவர் அலுவலகம், நாடாளுமன்றம், மத்திய அமைச்சரவை, உயர் நீதித்துறை, குடிமைப் பணிகள் ஆகியவற்றின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டன. கருத்துச் சுதந்திரம் காணாமல் போய்விட்டது.

இந்திய ஜனநாயக வரலாற்றின் கருப்புப் பக்கங்கள் பற்றி அண்மையில் விளக்கிய பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, பொதுமக்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரத்தின் மீது நெருக்கடி நிலை காலத்தில் நடத்தப்பட்டத் தாக்குதல் ஆங்கிலேயர் ஆட்சியில் நடந்தப்பட்டத் தாக்குதலை விட மோசமானது என்று கூறினார். அதுமட்டுமின்றி, இந்தியாவில் அரசியலமைப்புச் சட்டம் மற்றும் பிற சட்டங்களின்படி மக்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள போதிலும், அவற்றையும் தாண்டி நமது ஜனநாயகத்தை நசுக்கக்கூடிய சில சக்திகள் மிகவும் வலிமையாக இருக்கின்றன என்ற அதிர்ச்சியூட்டும் தகவலையும் அத்வானி வெளியிட்டார். நெருக்கடி நிலை மற்றும் சர்வாதிகார ஆட்சிக்கு எதிரான போரை தலைமையேற்று நடத்தியவர்களில் ஒருவரான அத்வானியிடமிருந்து வந்திருக்கும் இந்த எச்சரிக்கை வார்த்தைகள் மிகவும் தீவிரமாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை ஆகும்.

நெருக்கடி நிலை என்ற பெயரில் தாம் செய்த ஜனநாயகப் படுகொலை மற்றும் உரிமைப் பறிப்புகளை நியாயப்படுத்துவதற்காக, ‘சுதந்திரத்தைவிட சுட்ட ரொட்டி மிகவும் முக்கியமானது’ என்ற வாதத்தை இந்திரா காந்தி முன்வைத்தார். வயிற்றுக்கு உணவு கிடைக்கும் வரை மக்கள் அடிமைகளாகவும், பிச்சைக்காரர்களாகவும் வாழலாம் என்பது தான் இந்திரா காந்தி முன்வைத்த வாதத்தின் பொருளாகும். ஆனால், 1997 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இவ்வாதத்தை நிராகரித்த மக்கள் வலிமைமிக்க இந்திராவையும், அவரது காங்கிரஸ் கட்சியையும் வீழ்த்தி, ஆட்சிப் பொறுப்பிலிருந்து தூக்கி எறிந்தனர்.

ஆனால், துரதிருஷ்டவசமாக தமிழக ஆட்சியாளர்களும், அவர்களின் கட்சிகளும் மக்களை இன்னும் மோசமாக நடத்துவதுடன், தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்று அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்கின்றனர். கடந்த சில பத்தாண்டுகளில் தமிழகத்தை அடுத்தடுத்து ஆட்சி செய்த அரசுகள்,  இலவசங்களை வழங்கியும், தெருவுக்குத் தெரு டாஸ்மாக் மதுக்கடைகளை திறந்தும் தமிழக மக்களை பிச்சைக்காரர்களாகவும், குடிநோயர்களாகவும் மாற்றி விட்டன. அரசு எந்திரம் மற்றும் ஆளுங்கட்சியிடம் பழகும்போது தங்களின் கண்ணியம், மானம், சுயமரியாதை ஆகியவற்றை மக்கள் இழக்க நேரிடுகிறது.

ஆளுங்கட்சியின் அமைச்சர்களும், சட்டப்பேரவை உறுப்பினர்களும், தொண்டர்களும் கண்ணிய        மான மனிதர்களாக பார்க்கப்படுவதில்லை; மாறாக துதிபாடிகளாகவும், அடிமைகளாகவுமே சித்தரிக்கப் படுகின்றனர். இவை அன்றாட வாடிக்கையாகிவிட்டன. அதுமட்டுமின்றி, அவர்களின் ‘இதய தெய்வம்’  ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்ட நாளிலிருந்து இது மேலும் மோசமாகிவிட்டது. இந்த கேலிக்கூத்துக்களை எல்லாம் ஆளுங்கட்சியின் ஆதரவாளர்களாக இல்லாத 80% மக்களிடம் திணிக்கவும் முயலுகின்றனர். பெருமளவிலான ஏழை மற்றும் சாதாரண மக்கள் இலவசங்களை  வாங்குவதாலும், அவர்கள் அரசு மதுக்கடைகளில் மதுவை அருந்துவதாலும் அவர்களுக்கு கண்ணியம், மானம், மரியாதை போன்றவை தேவையில்லை என்று சர்வாதிகார மனப்பான்மையும்,  அகந்தையும் கொண்ட தமிழக ஆட்சியாளர்கள் கருதுகின்றனர். இத்தகைய மனப்போக்கு கண்டிக்கத்தக்கதாகும்.

‘‘மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர் நீப்பர் மானம் வரின்’’ என்ற குறளின் மூலம் உயிரை விட மானமே பெரியது என்று வலியுறுத்திய திருவள்ளுவரும், சோற்றை விட சுயமரியாதை தான் முக்கியம் என்று வெளிப்படையாக முழங்கிய தந்தை பெரியாரும், கண்ணியம் தான் திராவிட இயக்கத்தின்  அடையாளம் என்று கூறிய பேரறிஞர் அண்ணாவும் வாழ்ந்த தமிழகத்தில் தான் இவை அரங்கேற்றப்படுகின்றன என்பது வருத்தமளிக்கிறது. பொதுவாக திராவிடக் கட்சிகளின் ஆட்சியில், குறிப்பாக அ.தி.மு.க.வின் ஆட்சியில் கண்ணியம், மானம், மரியாதை ஆகியவற்றின் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுவது முரண்பாடுகளின் உச்சம் ஆகும். ஜனநாயகத்தின் அடையாளங்களான சுதந்திரமும், உரிமைகளும் இந்த ஆட்சிகளில் முடக்கப்படுகின்றன. தமிழகத்தில் கிட்டத்தட்ட காவல்துறை மற்றும் மாஃபியா ஆட்சி தான் நடைபெறுகிறது. ஜனநாயகம் மற்றும் அதன் மாண்புகளுக்கு  பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. எழுபதுகளின் மத்தியில் நடைமுறைப்படுத்தப்பட்ட நெருக்கடி நிலை காலத்தில் நிலவியதை விட மிகவும் மோசமான சூழல் தமிழகத்தில் இப்போது நிலவுகிறது. தமிழ்நாட்டில் ஜனநாயகம் என்ற ஒன்று நிலவுகிறதா? என்ற ஐயம் அடிக்கடி பலருக்கும் ஏற்படுகிறது.

இந்த நிலை இனியும் தொடர்வதை அனுமதிக்கலாமா? இத்தகைய சூழலில் உண்மையான வளர்ச்சியோ, சமூக நீதியோ, சமத்துவமோ நிலவ வாய்ப்பிருக்கிறதா? என்பது குறித்தெல்லாம் தமிழக இளைஞர்கள் சிந்திக்க வேண்டும். 

இது இந்த தாயகத்தின் சுதந்திரமான, மரியாதைக்குரிய குடிமக்கள்  என்ற வகையில் அவர்களின் எதிர்காலம் சார்ந்த ஒன்றாகும். இந்த அவல நிலை மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை. தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் வெகுவிரைவில் நடைபெறவுள்ள நிலையில், தமிழகத்தில் தற்போது நிலவும் அடிமை மற்றும் கையேந்தும் கலாச்சாரத்தை துரத்தியடித்து, நமது மூதாதையர்கள் காட்டிய கண்ணியம், மானம் மற்றும் சுயமரியாதைக் கலாச்சாரத்தை மீண்டும் ஏற்படுத்துவது எப்படி? என்பதை சிந்தித்து செயல்படுத்துவதற்கான காலமும், நேரமும் வந்துவிட்டது.’’

ஜெயலலிதாவின் முதல்வர் பதவி நாட்கள் எண்ணப்படுகின்றன.. ராமதாஸ்

சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பிற்கு எதிரான கர்நாடக அரசின் மேல் முறையீட்டிற்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்ததுடன், தமிழக மக்களின் கோரிக்கையும் இதன் மூலமாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.ADVERTISEMENTஅதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா, கர்நாடகாவில் நடைபெற்ற சொத்துக் குவிப்பு வழக்கின் தண்டனை பெற்று பின்னர் ஜாமீனில் வெளிவந்து, மேல்முறையீட்டில் விடுதலையானார். குற்றம் சாட்டப்பட்டிருந்ததால் முதல்வர் பதவியையும், எம்.எல்.ஏ பதவியையும் இழந்திருந்த ஜெயலலிதா, இவ்வழக்கிலிருந்து விடுதலையானதால் மீண்டும் முதல்வரானார். இந்நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தற்போது போட்டியிட்டுள்ளார்.இந்நிலையில் சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இதனை வரவேற்றுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், "சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்துள்ளதால் முதல்வர் பதவியில் நீடிக்கும் உரிமையை ஜெயலலிதா இழந்து விட்டார். இந்த மேல்முறையீட்டின் மூலமாக தமிழக மக்களின் அப்பீல் மனு தொடர்பான கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் முதல்வர் பதவி நீடிக்கும் நாட்கள் எண்ணப்படுகின்றன என்பதை அதிமுகவினர் மனதில் கொள்ள வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
 

தமிழக மக்களின் அப்பீல் நிறைவேற்றப்பட்டிருக்கிறது : ராமதாஸ் டுவிட்

 

பா.ம.க. நிறுவனர் ராமதாசின் இன்றைய டுவிட்டர் பதிவுகள்:

1) சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு மேல்முறையீடு: முதல்வர் பதவியில் நீடிக்கும் உரிமையை ஜெயலலிதா இழந்து விட்டார்.
                               
2) ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு அப்பீல்: இதன்மூலம் தமிழக மக்களின் அப்பீல் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
                              
3) சொத்துக்குவிப்பு  வழக்கில் கர்நாடக அரசு மேல்முறையீடு: ஜெயலலிதாவின் முதல்வர் பதவி நாட்கள் எண்ணப்படுகின்றன.

Monday, June 22, 2015

போக்குவரத்தை நிறுத்தி, பள்ளிகளை மூடுவது தான் ஜெ.வின் மக்கள் பணியா?: ராமதாஸ்



பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை:
’’சென்னை இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று பிரச்சாரம் செய்யச் சென்று அப்பகுதி மக்களின் வாக்குகளை வாங்குவதற்கு பதிலாக சாபத்தை வாங்கி வந்திருக்கிறார். ஜெயலலிதாவின் பிரச்சாரத்திற்காக காவல்துறையும், ஆளுங்கட்சியும் செய்த கெடுபிடிகளால் குழந்தைகள் முதல் பெண்கள் வரை கடும் அவதிக்கு ஆளானதே இதற்கு காரணம்.

இராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கு எந்தத் தேவையுமே இல்லாத நிலையில், ஜெயலலிதாவை சட்டமன்ற உறுப்பினராக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேலை திடீரென பதவி விலக வைத்து, அவசர, அவசரமாக  தேர்தல் நடத்தப்படுகிறது. வெற்றிவேலின் பதவி விலகல் கடிதத்தை ஏற்பதிலும், அடுத்த 10 நாட்களில் தேர்தல் அறிவிக்கப்பட்டதிலும் தொடங்கிய விதி மீறல்கள் இப்போது வரைத் தொடருகின்றன. இதைத்  தடுக்க வேண்டிய தேர்தல் ஆணையமும், அதிகாரிகளும் வாய் பொத்தி வேடிக்கைப் பார்க்கின்றனர்.

இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு ஜெயலலிதா சென்றதையடுத்து சென்னை பாரிமுனையில் தொடங்கி  இராயபுரம், காசிமேடு, வண்ணாரப்பேட்டை, தண்டையார் பேட்டை வழியாக மணலி வரை போக்குவரத்து  முற்றிலுமாக தடை செய்யப்பட்டது. மாலையில் ஜெயலலிதா வருவதற்காக மாலை 4.30 மணியிலிருந்தே இச்சாலைகள் மூடப்பட்டன. இதனால் அலுவலகம் முடிந்தும், தொழிற்சாலைகளில் பணி நேரம் முடிந்தும் வீடு திரும்பியவர்கள் பல கிலோ மீட்டர் தூரம் நடந்தே செல்லவேண்டியிருந்தது. கருவுற்ற பெண்மணி ஒருவர் சிகிச்சைக்காக தானியில் மருத்துவமனைக்கு சென்ற போது அதை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் அப்பெண்மணி பெரும் இன்னலுக்கு ஆளானார். 108 அவசர சிகிச்சை ஊர்திகளைக் கூட ஜெயலலிதா பயணம் செய்யும் பாதைகளில் காவல்துறையினர் அனுமதிக்க வில்லை. ஜெயலலிதா முதலில் பிரச்சாரம் செய்த இடம் தண்டையார் பேட்டையில் அப்பல்லோ மருத்துவமனைக்கும், தொற்றுநோய் தடுப்பு மருத்துவமனைக்கும் இடைப்பட்ட பகுதியாகும். மருத்துவமனை பகுதியில் ஒலி எழுப்பக்கூடாது என்று விதிகள் உள்ள போதிலும் நேற்று காலை முதல் இரவு ஜெயலலிதா பரப்புரை முடிக்கும் வரை ஒலிபெருக்கிகள் அலற விடப்பட்டதால் நோயர்கள் பெரும் இன்னலுக்கு ஆளானார்கள்.

தொடர்ந்து எண்ணூர் நெடுஞ்சாலை சந்திப்பில் ஜெயலலிதா பரப்புரை செய்த போதும் அப்பகுதியில் உள்ள மக்கள் பெரும் அவதிக்குள்ளாயினர். ஜெயலலிதாவின் பரப்புரை முடிந்த பிறகே சாலைகளில் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. பல மணிநேரத்துக்குப் பிறகே போக்குவரத்து அனுமதிக்கப்பட்டதால் கடுமையான நெரிசல் ஏற்பட்டது. திருவொற்றியூர் நெடுஞ்சாலை அப்பல்லோ மருத்துவமனை அருகில்  ஒரு 108 அவசர ஊர்தி நெரிசலில் சிக்கிக் கொண்டதால் அதிலிருந்த நோயாளி கடும் பாதிப்புக்கு உள்ளானதாக கூறப்படுகிறது. அதேபோல்,  எண்ணூர் நெடுஞ்சாலை சந்திப்பு பகுதியில், ஜெயலலிதா உரையாற்றி விட்டு சென்ற பிறகும் போக்குவரத்து சீரனைக்கப்படாததைக் கண்டித்து பொதுமக்களும், சாலைகளில் பயணம் செய்தவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை சென்ட்ரல், பாரிமுனை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலையில் தொடங்கிய நெரிசால் இரவு 10 மணிக்கு பிறகும் நீடித்தது.

ஜெயலலிதாவின் பரப்புரையால் மக்களுக்கும், சாலைகளில் பயணிப்போருக்கும் ஏற்பட்ட பிரச்சினை இதுவென்றால் மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோர்க்கும் ஏற்பட்ட அவதி விவரிக்க முடியாதது ஆகும். தண்டையார்பேட்டையில் ஜெயலலிதா பரப்புரை செய்த பகுதியில் சென்னை மாநகராட்சிப் பள்ளி ஒன்றும், தனியார் பள்ளி ஒன்றும் உள்ளன. ஜெயலலிதா பரப்புரையையொட்டி இப்பள்ளிகளுக்கு நேற்று மதியத்துடன் கட்டாய விடுமுறை விடப்பட்டது. இதை காலையிலேயே அறிவிக்காமல் பள்ளி நடந்துக் கொண்டிருந்த போது திடீரெனஅறிவித்ததால் பல பெற்றோர் அலுவலகத்திலிருந்து உடனடியாக வர முடியாமல் அவதிப்பட்டனர். அதுமட்டுமின்றி, பள்ளிகள் விடப்படுவதற்கு முன்பாகவே போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் மாணவ, மாணவிகளும் பெற்றோரும் நடந்தே வீடுகளுக்கு செல்ல வேண்டியிருந்தது. 

ஜெயலலிதாவுக்காக காட்டப்பட்ட இந்த நெருக்கடிகளும், கெடுபிடிகளும் அவருக்குத்  தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், ‘‘இன்னொருவர் வேதனை இவர்களுக்கு வேடிக்கை... இதயமற்ற மனிதருக்கு இதுவெல்லாம் வாடிக்கை’’ என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப மக்களின் இந்த துயரங்களை ஜெயலலிதா ரசித்தாரே தவிர தடுக்க முயலவில்லை. மக்களின் இத்தனை அவதிகளுக்கும் காரணமான ஜெயலலிதா அவரது பரப்புரையில்,‘‘ மக்களால் நான், மக்களுக்காக நான் என்பது தான் எனது தாரக மந்திரம்’’ என்று பேசியதைக் கேட்கும் போது படிப்பது இராமாயணம்... இடிப்பது பெருமாள் கோவில் என்ற பழமொழி தான் நினைவுக்கு வந்தது. தனது சுயநலத்துக்காக மக்களுக்கு எந்த பாதிப்பையும் ஜெயலலிதா ஏற்படுத்துவார் என்பதற்கான உதாரணங்களின் பட்டியலில் இது குறிப்பிடத்தக்கதாகும்.

அரசியல் கட்சிகளில் தேர்தல் பரப்புரைகள் மக்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தக்கூடாது; குறிப்பாக பொதுக்கூட்டம், பேரணி போன்றவற்றால் மக்களுக்கு தொல்லை ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தேர்தல் நடத்தை விதிகளில் கூறப்பட்டுள்ளது. ஆனால், அதை மதிக்காமல் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திய ஜெயலலிதா மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எதுவும் எடுப்பதாக தெரியவில்லை. ஜெயலலிதாவின் பரப்புரைக்காக பள்ளிகளுக்கு கட்டாய விடுமுறை விடப்பட்டது பற்றி தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனாவிடம் கேட்டதற்கு, ‘‘பள்ளிகள் தானாக முன்வந்து தான் விடுமுறை அறிவித்தன. இதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது’’ என்று கூறிவிட்டார். 

கடந்த இரு நாட்களுக்கு முன் சேலத்தைச் சேர்ந்த கணேசன் என்ற காவல் அதிகாரி மருத்துவ விடுப்பு போட்டுவிட்டு இராதாகிருஷ்ணன் நகரில் ஜெயலலிதாவுக்காக பரப்புரை செய்ததை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியிருந்தேன். இது அனைத்து ஊடகங்களிலும் வெளியாகி இருந்தது. அதன்பின் 5 நாட்களாகியும் அந்த அதிகாரி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுபற்றி சந்தீப் சக்சேனாவிடம் கேட்ட போது, இது தொடர்பாக யாரும் புகார் தரவில்லை என்கிறார். நீங்களாகவே நடவடிக்கை எடுக்கக்கூடாதா? என்று கேட்டால், இச்செய்தி வந்த போது நான் வேறு வேலையில் இருந்ததால் தொலைக்காட்சிகளை பார்க்கவில்லை என்று பதில் சொல்கிறார். அதிமுகவின் அலுவலக ஊழியரைப் போல பதில் கூறும் இவர் எப்படித்தான் இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி  இடைத்தேர்தலையும், அடுத்த ஆண்டு தமிழக பொதுத்தேர்தலையும் நியாயமாக நடத்தப்போகிறாரோ?

ஜெயலலிதா சென்னையில் வீட்டை விட்டு வெளியில் வந்தாலே தங்களுக்கு துயரமும், அவதியும் உறுதி என்பதை கடந்த ஒரு மாதத்தில் மக்கள் உணர்ந்து விட்டனர். இனியும் இந்த துயரத்தையும், அவதியையும் அனுபவிக்க அவர்கள் தயாராக இல்லை. எனவே, ஜெயலலிதா இனி அவரது வீட்டை விட்டு வெளியே வரத் தேவையில்லை என்ற நிலையை அடுத்த ஆண்டு தேர்தலில் உருவாக்குவார்கள்.’’

தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசர நிலை உள்ளது: ஆர்ப்பாட்டத்தில் ராமதாஸ் பேச்சு



தகவல் உரிமை ஆணையத்துக்கு அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பா.ம.க. சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடந்தது. பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு துணை பொதுச் செயலாளர் ஏ.கே.மூர்த்தி தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தின்போது பேசிய ராமதாஸ், 

ஜெயலலிதா ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, அவரது கட்சிக்கு வேண்டப்பட்டவர்களே ஆணையர்களாக நியமிக்கப்படுள்ளனர். இப்படி இருக்கும்போது, எப்படி நியாயமான தகவல் வெளியாகும். ஆணையரை நியமிக்க முதல்வர், அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர் ஒருவர், எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் ஆலோசித்து ஆணையரை நியமிக்க வேண்டும். ஆனால் தமிழகத்தில் அத்தகைய சூழ்நிலை இல்லாத காரணத்தினால் அந்த குழுவே கூடவில்லை. 

ஒரு நாளைக்கு 20 மணி நேரம் உழைக்கிறேன் என்று அறிவித்துவிட்டு அரை மணி நேரம் மட்டும் பெயரளவுக்கு உழைத்துவிட்டு விமானங்களில் பறந்து சென்று மக்களை காண்பவர்களுக்கு மக்கள் நலனை காக்க இதுபோன்ற நடவடிக்கைகளை எப்படி எடுப்பார்கள்.

தற்போதைய சூழலில் தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசர நிலை உள்ளது. கல்வி, போக்குவரத்து என அனைத்து துறைகளிலும் ஊழல் நிலவுகிறது. மின்சார துறையில் நிலவும் ஊழல் குறித்து கேட்ட கேள்விக்கு இதுவரை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனால் பதில் கூற முடியவில்லை. இப்படி இருக்கும் சூழலில், தகவல் ஆணையத்தை வெளிப்படை தன்மையோடு அணுகினால் மட்டுமே நியாயமான, நேர்மையான நிர்வாகத்தை தமிழகத்தில் உருவாக்க முடியும். இவ்வாறு பேசினார். 

Saturday, June 20, 2015

நாடகங்கள் அம்பலம்: ஜெயலலிதாவின் ஒரு மாத ஆட்சியும், முற்றிலுமாக முடங்கிய நிர்வாகமும்: ராமதாஸ் கண்டனம்




மீண்டும் முதலமைச்சரான பிறகு தான் தொடங்கி வைக்க வேண்டும் என்ற தாராள மனதுடன் முடக்கி வைத்த பெருந்தன்மையாளர் தான் ஜெயலலிதா. அரசுத் திட்டங்கள் முடக்கி வைக்கப்படுவதால் மக்கள் எவ்வளவு பாதிக்கப்பட்டாலும் கவலையில்லை; தமக்கான விளம்பரம் தான் முக்கியம் என்ற எண்ணம் கொண்ட ஜெயலலிதா, ஏதோ மக்களுக்கு சேவை செய்வதற்காகவே தாம் அவதாரம் எடுத்தது போன்று நடத்திய நாடகங்கள் அம்பலமாகிவிட்டன என்று ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகத்தின் முதலமைச்சராக ஐந்தாவது முறை ஜெயலலிதா பதவியேற்று நாளையுடன் ஒரு மாதம் நிறைவடைகிறது. ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் செயல்படாத அரசு நடைபெற்றுக் கொண்டிருந்த போது, ஜெயலலிதா மட்டும் மீண்டும் முதலமைச்சராகிவிட்டால் இப்போது ஆமை வேகத்தில் நடக்கும் அரசு நிர்வாகம் இனி குதிரை வேகத்தில் ஓடும் என்றெல்லாம் விளக்கங்கள் அளிக்கப்பட்டன. ஆனால், குதிரைக்கு ஆமையே பரவாயில்லை எனும் அளவுக்கு நிர்வாகம் முற்றிலுமாக முடங்கிவிட்டது.

ஜெயலலிதா தலைமையிலான புதிய அரசின் பதவியேற்பு விழா மட்டும் தான் தேசிய கீதத்தைக் கூட இசைக்க நேரமில்லாத அளவுக்கு விரைவாக நடைபெற்று முடிந்ததே தவிர, அதன்பின் அரசு நிர்வாகத்தில் எந்த அசைவும் காணப்படவில்லை. புதிய அரசு பதவியேற்று ஒரு மாதம் முடிவடையும் நிலையில் இதுவரை ஒருமுறை கூட அமைச்சரவைக் கூட்டம் நடத்தப்பட வில்லை. ஒரு புதிய திட்டம் கூட அறிவிக்கப்படவில்லை. கடந்த ஒரு மாதத்தில் 7 நாட்கள் மட்டுமே முதலமைச்சர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்துக்கு வந்திருக்கிறார். தலைமைச் செயலகத்துக்கு வருவது, வந்த வேகத்தில் சில திட்டங்களை காணொலி மூலம் தொடங்கி வைத்த பின் ஒரு மணி நேரத்தில் இல்லம் திரும்புவது  ஆகியவற்றைத் தான் முதலமைச்சர் வழக்கமாகக் கொண்டிருக்கிறார். மக்களின் நலனுக்காக தினமும் 20 மணி நேரம் உழைப்பதாக வார்த்தைக்கு வார்த்தை கூறிக்கொள்ளும் ஜெயலலிதா கடந்த ஒரு மாதத்தில் மக்கள் பணிக்கு செலவிட்டது 10 மணி நேரத்திற்கும் குறைவு என்பதை மறுக்க முடியுமா? 

பொதுவாக அரசு ஊழியர்களுக்கு மாதத்திற்கு 7 நாட்கள் விடுமுறையும், 23 நாட்கள் பணியும் வழங்கப்படும். ஆனால், தமிழகத்தின் முதல் அரசு ஊழியரான ஜெயலலிதா மாதத்தில் 23 நாட்கள் விடுமுறை எடுத்துக் கொண்டு 7 நாட்கள் அதுவும் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் வீதம் மக்கள் பணியாற்றுகிறார். இப்படி ஒரு முதலமைச்சரை பெற்றதற்கு தமிழக மக்கள் என்ன தவம் செய்தனரோ?

ஊழல் வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு பதவி நீக்கம் செய்யப்பட்டதும் அவரது இடத்தில் பொம்மை முதலமைச்சர் ஒருவர் அமரவைக்கப்பட்டார். மட்டைப் பந்து போட்டிகளில் ‘நைட் வாட்ச்மேனாக’ கடைநிலை வீரர் அனுப்பி வைக்கப்படுவதைப் போல முதல்வராக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் எதுவும் செய்யவில்லை; செய்வதற்கும் அனுமதிக்கப்படவில்லை. இவ்வாறு 8 மாதங்களாக முடங்கிக் கிடந்த அரசு நிர்வாகத்தை சீரமைத்து இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கே முதலமைச்சரும், அதிகாரிகளும்  பல மாதங்கள் இரவு பகலாக உழைக்க வேண்டியிருக்கும். ஆனால், வாரத்திற்கு ஒரு நாள் மட்டும்  தலைமைச் செயலகத்திற்கு வந்து செல்லும் முதல்வரால் அரசு நிர்வாகத்தில் என்ன மாற்றத்தைக் கொண்டு வந்து விட முடியும்? எனத் தெரியவில்லை. எட்டு மாதங்களாக முடங்கிக் கிடந்த நிர்வாகம், கடந்த ஒரு மாதத்தில் மேலும் சுருண்டு கிடக்கிறதே தவிர செயல்படத் தொடங்கியதாகத் தெரியவில்லை.

ஆனால், பசுவிடம் பால் கறக்க வைக்கோலில் செய்யப்பட்ட கன்றுக்குட்டியைக் காட்டி ஏமாற்றுவதைப் போல, தமிழக மக்களை ஏமாற்றுவதற்காக முதலமைச்சர் ஜெயலலிதா நாள்தோறும் ஒரு திட்டத்தைத் தொடங்கி வைப்பதைப் போல செய்திக் குறிப்புகளை தமிழக அரசு வெளியிட்டுக் கொண்டிருக்கிறது.  ஜெயலலிதா தலைமைச் செயலகத்திற்கு வரும் போது மொத்தமாக 4 திட்டங்களைத் தொடங்கி வைத்தால், அதை ஒவ்வொரு நாளும் ஒரு திட்டத்தை அவர் தொடங்கி வைத்தது போன்று செய்திக் குறிப்புகளை அனுப்பி செயல்படாத அரசை செயல்படுவது போல காட்ட முயற்சிகள் செய்யப்படுகின்றன. மொத்தத்தில் விளம்பரத்திலும், செய்திக்குறிப்பிலும் தான் இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

கடந்த ஒரு மாதத்தில் 17 துறைகளின் சார்பில் ரூ.6,432 கோடியே 67,79,000 மதிப்புள்ள திட்டங்களை முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்துள்ளார். இவை அனைத்தும் ஜெயலலிதா பதவியேற்ற பின்னர் செயல்படுத்தப்பட்டவையா என்றால்... இல்லை என்பது தான் சரியான பதில். பல மாதங்களுக்கு  முன்பே நிறைவேற்றப்பட்ட இந்தத் திட்டங்களை தாம் மீண்டும் முதலமைச்சரான பிறகு தான் தொடங்கி வைக்க வேண்டும் என்ற தாராள மனதுடன் முடக்கி வைத்த பெருந்தன்மையாளர் தான் ஜெயலலிதா. அரசுத் திட்டங்கள் முடக்கி வைக்கப்படுவதால் மக்கள் எவ்வளவு பாதிக்கப்பட்டாலும் கவலையில்லை; தமக்கான விளம்பரம் தான் முக்கியம் என்ற எண்ணம் கொண்ட ஜெயலலிதா, ஏதோ மக்களுக்கு சேவை செய்வதற்காகவே தாம் அவதாரம் எடுத்தது போன்று நடத்திய நாடகங்கள் அம்பலமாகிவிட்டன.

அரசு நிர்வாகம் முடங்கிக் கிடந்தாலும் லஞ்சமும், ஊழலும் அவற்றுக்கான பேரங்களும் மட்டும் ஓயவில்லை. தமிழகத்தில் இன்னும் பல மாதங்கள் கழித்து செயல்படுத்தப்படவிருக்கும் திட்டங்களுக்கு கூட இப்போதே வசூல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் நேர்முகத் தேர்வு மூலம் தான் நிரப்பப்படும் என வெளிப்படையாக அரசு அறிவித்துள்ள நிலையில் , ரூ. 6 லட்சம் தந்தால் அப்பணியை வாங்கித் தருவதாக ஆளுங்கட்சியினர் பேரம் பேசுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இன்னும் சில மாதங்களே ஆட்சியில் நீடிக்க முடியும் என்பதால் அதற்குள் கிடைத்ததை எல்லாம் சுருட்டிக் கொள்ள வேண்டும் என்ற வேகம் மட்டுமே ஆட்சியாளர்களிடம் காணப்படுகிறது.

ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான ஆட்சி தமிழகத்தில் நடைபெற்ற போது இதைவிட மோசமான ஆட்சியை யாராலும் தர முடியாது என்பது தான் அனைவரின் எண்ணமுமாக இருந்தது. ஆனால், இப்போது மணிக் கணக்கிலும், நிமிடக் கணக்கிலும் ஜெயலலிதா மக்கள் பணியாற்றுவதைப் பார்க்கும்போது பன்னீர்செல்வம் ஆட்சியே பரவாயில்லை என்ற எண்ணம் தமிழக மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது. ஜெயலலிதா தலைமையிலான ஒரு மாத ஆட்சியின் சாதனை என்பது இது தான். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

Friday, June 19, 2015

குறையும் ஐ.ஐ.டி சேர்க்கை: இனியாவது பாடத்திட்டத்தை மாற்றுமா தமிழக அரசு? :ராமதாஸ்

 

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை:

’’இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களின் (ஐ.ஐ.டி) மாணவர் சேர்க்கைக்கு தகுதி பெற்ற மாணவர் களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. வழக்கம் போலவே, இந்த ஆண்டும் ஐ.ஐ.டி மாணவர் சேர்க்கையில் தமிழ்நாடு பாடத்திட்ட மாணவர்களுக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது.

இந்தியா முழுவதும் 18 ஐ.ஐ.டி.க்களில் உள்ள 10,066 மாணவர் சேர்க்கை இடங்களை நிரப்புவதற்காக ஐ.ஐ.டி&கூட்டு நுழைவுத் தேர்வு (முதன்மை), ஐ.ஐ.டி&கூட்டு நுழைவுத் தேர்வு (உயர்நிலை) என இரு கட்டத் தேர்வுகள் நடத்தப்பட்டன. இத்தேர்வுகளில் மொத்தம் 26,456 மாணவர்கள் தேர்ச்சி பெற்று கலந்தாய்வில் பங்கேற்கின்றனர். இவர்களில் தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை வெறும் 33 மட்டுமே. கடந்த ஆண்டில் இந்த எண்ணிக்கை 65 ஆக இருந்தது. இது மிகவும் குறைவு என கல்வியாளர்களால் விமர்சிக்கப்பட்டு வந்த நிலையில், நடப்பாண்டில் அதில் பாதியளவு மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் என்பது கவலையளிக்கும் விஷயமாகும்.

இந்தத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களில் 57 விழுக்காட்டினர், அதாவது 15,311 பேர் மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சி.பி.எஸ்.இ) பாடத் திட்டத்தில் பயின்றவர்கள் ஆவர். இவர்களுக்கு அடுத்தபடியாக ஆந்திர மாநில பாடத்திட்டத்தில் பயின்ற 2938 பேரும் (11.10%), மாராட்டிய மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களில் 1,787 பேரும் (6.76%), ராஜஸ்தான் மாநில பாடத் திட்டத்தில் படித்தவர்களில் 1,610 பேரும் (6.08%) ஐ.ஐ.டி.க்களில் சேர தகுதி பெற்றுள்ளனர். கல்வியில் பின்தங்கிய மாநிலங்களாக கருதப்படும் பிகார், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களின் பாடத் திட்டங்களில் பயின்றவர்கள் கூட குறிப்பிடத்தக்க அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆனால், தமிழ்நாடு மாநிலப் பாடத் திட்ட மாணவர்கள் தான் இந்தப் பட்டியலில் மிகவும் பின்னுக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர்.

தேசிய அளவில் பார்க்காமல் மாநில அளவில் பார்த்தாலும் தமிழ்நாடு மாநிலப் பாடத் திட்டத்தின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. தமிழ்நாட்டிலிருந்து இந்தத் தேர்வில் பங்கேற்ற மாணவர்களின் எண்ணிக்கை 2815 பேர். இவர்களில் 451 பேர் வெற்றி பெற்றிருக்கிறார்கள். மத்திய இடைநிலைக் கல்வி வாரிய மாணவர்களில் 1045 பேர் இத்தேர்வை எழுதி அவர்களில் 418 பேர் அதாவது 40% தேர்ச்சி எழுதினர். ஆனால், தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்ட மாணவர்களில் 1770 பேர் இத்தேர்வில் பங்கேற்று 33 பேர் அதாவது 1.66% மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டம் எவ்வளவு மோசமான நிலைமையில் உள்ளது என்பதை மேற்கண்ட புள்ளி விவரங்களே விளக்கும்.

நடப்பாண்டில் மட்டும் தான் இந்த நிலைமை என்று இல்லை. ஒவ்வொரு ஆண்டும் இதே நிலை தான் தொடர்கிறது. இந்த நிலையை மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த 4 ஆண்டுகளாக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ஆனால், மாணவர்களின் எதிர்காலத்தில் எந்த அக்கறையும் இல்லாத தமிழக அரசு இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் மாணவர்களுக்கு ஏட்டு சுரைக்காயை விற்று ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. ஆந்திரா, இராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் மேல்நிலைக் கல்விக்கான பாடத்திட்டம் சிந்திக்கும் திறனை ஊக்குவிக்கும் வகையிலும், ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வுக்கு மாணவர்கள் தகுதிப் படுத்தும்  வகையிலும் உருவாக்கப்பட்டிருக்கும். ஆனால், தமிழ்நாடு பாடத்திட்டமோ மனப்பாட கல்வியை ஊக்குவிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. 

உயர் தொழில்நுட்பக் கல்வி பயிலும் தமிழ்நாட்டு மாணவர்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்திருப்பதற்கு தமிழக அரசின் தொலைநோக்கற்ற கல்வித் திட்டம் தான் முதன்மைக் காரணம் என்றாலும், இந்த அவலநிலைக்கு தமிழகத்தைத் தள்ளியதில்  ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கும் பங்கு இருப்பதை எவராலும் மறுக்க முடியாது. ஆந்திரா மற்றும் மராட்டியத்தைச் சேர்ந்த மாணவர்களை விட தமிழக மாணவர்கள் எந்த வகையிலும் குறைந்தவர்கள் அல்ல. ஆனால், இப்பந்தயக் குதிரைகள் கண் மறைப்பு கட்டப்பட்டு  மருத்துவப் படிப்பு, பொறியியல் படிப்பு ஆகிய இலக்குகளை நோக்கி ஓட வைக்கப்படுவதால் இதைவிட சிறந்த இலக்குகள் எதுவுமே அவர்களுக்கு தெரிவதில்லை. ஐ.ஐ.டி. கல்வி வாய்ப்புகள் குறித்து மாணவர்களுக்கு ஆசிரியர்களும் விளக்குவதில்லை. நடப்பாண்டில் 9 லட்சம் பேர் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய நிலையில், அவர்களில் 1770 பேர் (0.20%) மட்டுமே ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வில் பங்கேற்றனர். இது நாம் வெட்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
மாணவர்களின் நலன் கருதி அத்திப் பூத்தாற்போல் செயல்படுத்தப்படும் சில நல்லத் திட்டங்களும்  தொடர்வதில்லை. 

சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவர்களை இத்தேர்வுக்கு தயார் படுத்தும் வகையில் அவர்களுக்கு திமிமிஜி-யிணிணி  நிறுவனம் மூலம் பயிற்சி அளிக்கும் திட்டம் கடந்த 2010 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது ஏழை மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருந்தது. ஆனால், இத்திட்டம் கடந்த ஆண்டுடன் கைவிடப்பட்டு விட்டது. 


இப்போதைய நிலையில், ஐ.ஐ.டி. போன்ற உயர்தொழில்நுட்பக் கல்வி தமிழக மாணவர்களுக்கு சாத்தியமாக வேண்டுமானால் தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தை  மத்திய இடைநிலை கல்வி வாரிய பாடத்திட்டத்திற்கு இணையானதாக மாற்றப்பட வேண்டும். அனைத்து அரசு பள்ளிகளில் பயிலும் மேல்நிலை மாணவர்களுக்கு ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வுக்கான  சிறப்புப் பயிற்சி வகுப்புகளை சிறந்த நிறுவனங்கள் மூலம் நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’

நலம் தரும் யோகாவை அனைவரும் பயில அரசு உதவ வேண்டும் : அன்புமணி ராமதாஸ்


பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை:
’’ஜூன் 21ம் தேதியை உலக யோகா நாளாக ஐ.நா. பொது அவை அறிவித்திருக்கிறது. உலக யோகா நாள் முதன் முதலாக நாளை (ஞாயிற்றுக் கிழமை) கடைபிடிக்கப்படுவதையொட்டி, தில்லி, சென்னை உள்பட உலகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உலக யோகா நாள் இந்தியாவின் முயற்சியில் அறிவிக்கப்பட்டிருப்பது நமக்கு பெருமை அளிப்பதாகும்.

உலகின் மிகப் பழமையான கலைகளில் யோகாசனம் குறிப்பிடத்தக்கதாகும். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் உருவான யோகா பல்வேறு சிறப்புகளை கொண்டதாகும். மனதையும், உடலையும் ஒருங்கிணைப்பது; சிந்தனையையும், செயலையும் ஒருங்கிணைப்பது; மனிதர்களுக்கும், இயற்கைக்கும் இடையே நல்லிணக்கத்தை உருவாக்குவது; மனித நலம் மற்றும் முழுமையான ஆரோக்கியத்திற்கு வழிவகை செய்வது உள்ளிட்ட அனைத்துக்கும் அருமருந்தாக திகழ்வது யோகாசனக் கலை ஆகும்.

தொடர்ந்து யோகாசனம் செய்தால் இதய நோய், நீரழிவு நோய், மன அழுத்தம், ரத்த அழுத்தம் ஆகியவை கட்டுப்படுத்தப்படுகின்றன என்பது ஆராய்ச்சிகள் மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கன்றன. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பின்பற்ற வேண்டிய கலை யோகாசனம் என்பதில் எந்த ஐயமும் இல்லை. பழங்காலத்தில் தமிழர்கள் எந்தவித நோயும் இல்லாமல் முழு ஆரோக்கியத்துடன் வாழ்ந்ததற்கு முதன்மையான காரணம் யோகாசனம் ஆகும். உலகின் சிறந்த இயற்கை மருத்துவ முறை என்று போற்றப்படும் சித்த மருத்துவத்தை நாட்டுக்கு வழங்கிய சித்தர்கள் தான், 6,000 ஆண்டுகளுக்கு முன்பே யோகாசன கலையையும் அறிமுகப்படுத்தினர். இன்று யோகாசன கலை உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. இந்தியாவில் தோன்றிய யோகா கலை ஐரோப்பாவில் தொடங்கி, ஆப்பிரிக்கா வரை 175 நாடுகளில் கடைபிடிக்கப்படுவதில் இருந்தே இதன் சிறப்பை அறியலாம்.

நான் மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த போது யோகா கலையை பரப்ப பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டேன். பல்வேறு இடங்களில் யோகா அறிவியல் முகாம்களை நடத்தியதுடன் யோகா பயிற்சியும் வழங்கியுள்ளேன். யோகா செய்வதன் மூலம் மூட்டுவலி, நீரழிவு நோய், ரத்த அழுத்தம், இதய நோய் போன்றவற்றை கட்டுப்படுத்த முடியும் என்பது குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் பிரச்சாரம் செய்தது.

யோகா கலையை உலகம் முழுவதும் பரப்பும் நோக்குடன் ஜூன் 21ம் தேதி உலக யோகா நாளாக கடைபிடிக்கப்படுவது மகிழ்ச்சியளிக்கும் ஒன்றாகும். அதே நேரத்தில் யோகா கலையை ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு மட்டும் சொந்தமானது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகள்  கண்டிக்கத்தக்கவை. யோகா அனைத்து நாடுகளுக்கும், அனைத்து மதங்களுக்கும், அனைத்து இனங்களுக்கும் பொதுவானதாகும். இதை ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் குறுக்கி அதன் சிறப்பை அழித்து விடக் கூடாது. 

மனம் முழுக்க அழுத்தத்துடன் இருக்கும் ஒருவர் சிறிது நேரம் யோகா செய்தால் குழந்தையைப் போல மாறி விடுவார் என்று அனுபவித்தவர்கள் கூறுகின்றனர். இத்தகைய அற்புதமான கலையை நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் கொண்டு செல்ல வேண்டும்; அதன் மூலம் மன அழுத்தம், நோய், பகைமை உள்ளிட்ட அனைத்து தீமைகளையும் அழிக்க வேண்டும் என்பது தான் அனைவரின் நோக்கமும் ஆகும். இந்த நோக்கத்தை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும். 

அதுமட்டுமன்றி, மாணவ பருவத்திலேயே யோகா கலையை பயிற்றுவிப்பதன் மூலம் தான் அதன் முழு பயனையும் மக்களுக்கு வழங்க முடியும். இதைக் கருத்தில் கொண்டு இந்தியா முழுவதுமுள்ள அனைத்து பள்ளிகளிலும் தினமும் ஒரு பாடவேளை யோகா பயிற்றுவிப்பதை கட்டாயமாக்க வேண்டும். ’’

Wednesday, June 17, 2015

ஜெயலலிதா தலைமையிலான அரசுக்கு தமிழக மக்கள் பாடம் புகட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை: ராமதாஸ்



ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசுக்கு தமிழக மக்கள் பாடம் புகட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சூரிய ஒளி மின்சாரம்: அதானிக்காக அரங்கேற்றப்படும் விதிமீறல்கள் என்ற தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டத்தில் 216 மெகாவாட் திறன் கொண்ட சூரிய ஒளி மின்னுற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கான மின்சாரக் கொள்முதல் ஒப்பந்தத்தில் தமிழ்நாடு மின்சார வாரியமும்,  அதானி குழுமமும் கையெழுத்திட்டுள்ளன. அடுத்த கட்டமாக அதானி குழுமம் மேலும் 648 மெகாவாட்  சூரிய ஒளி மின்னுற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கான மின்சாரக் கொள்முதல் ஒப்பந்தம் அடுத்த வாரம் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் கையெழுத்திடப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தியாவின் மிகப்பெரிய தொழில் நிறுவனங்களில் ஒன்றான அதானி குழுமத்திற்கு சூரிய ஒளி மின் நிலையங்கள் அமைப்பதற்கான அனுமதி அளிப்பதிலும், மின்சாரக் கொள்முதல் ஒப்பந்தம் செய்து கொள்வதிலும் பெருமளவில் ஊழலும், விதிமீறல்களும் நடைபெற்றுள்ளன. சூரிய ஒளி மின்னுற்பத்தி தொடர்பான அனைத்து விதிகளையும் காற்றில் பறக்கவிட்டு, அதானி குழுமத்திற்கு சிவப்புக் கம்பளம்  விரித்துக் கொண்டிருக்கிறது தமிழக அரசு. சூரியஒளி மின்சாரத்தை எல்லா நேரங்களிலும் சார்ந்திருக்க முடியாது என்பதால், அதன் அதிகபட்ச உற்பத்திக்கு வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இப்போதைய நிலவரப்படி தமிழகத்தின் ஒட்டுமொத்த மின் தேவையான 10,950 கோடி யூனிட்டுகளில் 0.5 விழுக்காடான 219 கோடி யூனிட் அளவுக்கு, அதாவது 365 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரத்தை மட்டுமே  கொள்முதல் செய்ய முடியும். இதைக் கருத்தில் கொண்டு தான் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு 7,800 மெகாவாட் அளவுக்கு சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்து தர நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் முன்வந்த போதிலும், அவற்றில் ஒரு சில நிறுவனங்களுடன் சுமார் 350 மெகாவாட் அளவுக்கு மட்டுமே மின்சாரக் கொள்முதல் ஒப்பந்தங்களை தமிழ்நாடு மின்சார வாரியம் கையெழுத்திட்டிருந்தது.

மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் கூடுதல் கொள்முதல் விலை தரப்படுவதால் சூரிய ஒளி மின்சாரத்தை அதிக அளவில் தயாரித்துத் தர ஏராளமான நிறுவனங்கள் முன்வந்துள்ளன. இதையடுத்து சூரிய  ஒளி மின்சாரக் கொள்முதலின் அளவை தமிழகத்தின் ஒட்டுமொத்தத் தேவையில் 2% என்ற அளவுக்கு, அதாவது 1460 மெகாவாட்டாக உயர்த்த முடிவு செய்து அதற்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலை தமிழக அரசு கோரியுள்ளது. எனினும் இதற்கான அனுமதியை ஆணையம் இன்னும் வழங்கவில்லை. இத்தகைய சூழலில் 365 மெகாவாட்டுக்கு மேல் ஒரு மெகாவாட் அளவுக்குக் கூட மின்சாரக் கொள்முதல் ஒப்பந்தத்தைச் செய்து கொள்ள முடியாது. ஆனால், இதையெல்லாம் பொருட்படுத்தாமல் அதானி குழுமத்துடன் 216 மெகாவாட் உட்பட 632 மெகாவாட் அளவுக்கு மின்சாரக் கொள்முதல் ஒப்பந்தங்களில் மின்வாரியம் கையெழுத்திட்டிருக்கிறது. இதுதவிர மேலும் 648 மெகாவாட் அளவுக்கு புதிய ஒப்பந்தங்களில் விரைவில் கையெழுத்திடவிருக்கிறது. இது சட்ட விரோதமானதாகும்.

அதுமட்டுமின்றி, மின்சார கொள்முதல் ஒப்பந்தங்களை வழங்குவதில் பெருமளவில் ஊழல்களும் நடைபெறுகின்றன. தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு 7,800 மெகாவாட் அளவுக்கு மின்சாரத்தைக் கொள்முதல் செய்து வழங்க தனியார் நிறுவனங்கள் முன்வந்தன. அவற்றில் 3,800 மெகாவாட் சூரிய  ஒளி மின்சாரத்தை தயாரித்து வழங்க முன்வந்த நிறுவனங்கள் அதற்கான  ஆவணங்களைத் தாக்கல் செய்ததுடன் 50% காப்புத் தொகையையும் செலுத்தி விட்டன. 1,800 மெகாவாட் மின்சாரத்தைத் தயாரிக்க முன்வந்த நிறுவனங்கள் அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்தது மட்டுமின்றி, காப்புத் தொகையையும் முழுமையாக செலுத்தி விட்டன. அவற்றுக்கு மின் கொள்முதல் ஒப்பந்தம் வழங்கிய பிறகு தான் அதானி குழுமம் உள்ளிட்ட மற்ற நிறுவனங்களுடன் மின்சாரக் கொள்முதல் ஒப்பந்தங்களைச் செய்து கொள்ள முடியும். ஆனால், அந்த நிறுவனங்களை காத்திருக்க வைத்திருக்கும்  தமிழ்நாடு மின்சார வாரியம் அவசரமாக அதானி குழுமத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட முயல்கிறது.

அதானி குழுமத்திலிருந்து மெகாவாட்டுக்கு ரூ.30 லட்சம் வீதம் ஆட்சியாளர்களுக்கு சன்மானம்  வழங்கப்பட்டிருப்பது தான் இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. சிறு நிறுவனங்களால் இத்தகைய சன்மானத்தை வழங்க முடியாததால் அவற்றுடன் மின்சாரக் கொள்முதல் ஒப்பந்தங்களை செய்துகொள்ள ஆட்சியாளர்கள் முன்வரவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும், ரிலையன்ஸ், சன் எடிசன் ஆகிய  நிறுவனங்களுடனும்   மின்கொள்முதல் ஒப்பந்தம் செய்து கொள்ள அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் 1460 மெகாவாட் வரை சூரிய ஒளி மின்சாரத்தைக் கொள்முதல் செய்ய ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்தாலும், அது அதானி மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்களிடம் கொள்முதல் செய்வதற்குத் தான் சரியாக இருக்கும். சிறு நிறுவனங்களுடன் மின்கொள்முதல் ஒப்பந்தங்களைச் செய்து கொள்ள முடியாது. எனவே, ஆவணங்கள் மற்றும் காப்புத் தொகையை செலுத்தி மின்சாரக் கொள்முதல் ஒப்பந்தம் செய்வதற்காக காத்திருக்கும் சிறு நிறுவனங்களை அச்சுறுத்தி விண்ணப்பங்களைத் திரும்பப் பெற வைக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டிருப்பதாக கூறப்படும் புகார்களை புறந்தள்ள முடியவில்லை.

அதானி குழுமத்துடன் இப்போது ஒப்பந்தம் செய்து கொண்டாலும் மார்ச் மாதத்திற்குள் உற்பத்தியைத் தொடங்கினால் மட்டுமே யூனிட்டுக்கு ரூ.7.01 என்ற விலை வழங்கப்படும். ஆனால், மார்ச் மாதத்திற்குள் அதானி குழுமம் உற்பத்தியைத் தொடங்குவது சாத்தியமல்ல. ஆனாலும், யூனிட்டுக்கு ரூ.7.01 என்ற விலை கிடைக்கச் செய்ய அதானி குழுமத்திற்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. சூரிய ஒளி மின் நிலையங்களை அமைப்பதற்கான செலவு குறைந்து விட்டதால் நடப்பாண்டில் சூரிய ஒளி மின்சாரத்தின் கொள்முதல் விலை ரூ.5.86 ஆக குறைந்து விட்டது. அடுத்த ஆண்டில் இது யூனிட் ரூ.5.00 என்ற அளவுக்கு குறையும் வாய்ப்புள்ளது. அவ்வாறு குறையும் தொகைக்கு தான் அதானி நிறுவனத்துடன் மின்சாரக் கொள்முதல் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட வேண்டும். ஆனால், ஒரு யூனிட்டுக்கு ரூ. 2.00 கூடுதலாக ரூ. 7.01 என்ற விலைக்கு அதானியிடம் மின்சாரம் வாங்க  அரசு ஒப்பந்தம் செய்துகொள்கிறது. அதானி குழுமம் 1000 மெகாவாட் சூரிய ஒளி மின்நிலையங்களை அமைப்பதாக வைத்துக் கொண்டால், ஒப்பந்த காலமான 25 ஆண்டுகளில் மாதத்திற்கு ரூ.30 கோடி வீதம் மொத்தம் ரூ.9,000 கோடி அரசுக்கு இழப்பு ஏற்படும். இதற்கெல்லாம் காரணமான ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசுக்கு தமிழக மக்கள் பாடம் புகட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை. இவ்வாறு கூறியுள்ளார்.

Monday, June 15, 2015

மசூதிகளை கோவில்களாக மாற்றுவோம் என மிரட்டுவதா...? சிங்கால் பேச்சுக்கு ராமதாஸ் கண்டனம்

சென்னை : ராமர் கோயில் கட்டுவதைத் தடுத்தால், இந்தியாவிலுள்ள அனைத்து மசூதிகளையும் கோயில்களாக மாற்றுவோம் என்ற விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் மூத்த தலைவர் அசோக் சிங்கால் பேச்சுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.ADVERTISEMENTஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம்; மாறாக ராமர் கோயில் கட்டுவதைத் தடுத்தால் இந்தியாவிலுள்ள அனைத்து மசூதிகளையும் கோயில்களாக மாற்றுவோம் என்று விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் மூத்த தலைவர் அசோக் சிங்கால் கூறியிருக்கிறார். இந்தியாவின் மத நல்லிணக்கத்தைக் குலைக்கும் வகையிலான இந்தப் பேச்சு கண்டிக்கத்தக்கது.மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கூட்டணி அரசு பதவியேற்றதிலிருந்தே மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையிலான கருத்துக்களை சங் பரிவாரங்கள் ஓங்கி உரக்க ஒலிப்பது வாடிக்கையாகி விட்டது. மத்திய அரசு பதவியேற்ற சில வாரங்களிலேயே கொல்கத்தாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பாகவத், ''இந்தியா என்பது இந்துக்களின் தேசம். கடந்த காலங்களில் இழந்ததை இப்போது மீட்போம். கடந்த காலங்களில் மத மாற்றம் செய்யப்பட்டவர்களை இப்போது கட்டாய மதமாற்றம் செய்வோம்" என்று எச்சரித்தார்.அடுத்த சில வாரங்களில் மீரட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், "இந்தியா ஒரே நாடு, இங்கு ஒரே மதம் தான் இருக்க வேண்டும், ஒரே மொழி தான் பேசப்பட வேண்டும். ஒரே கடவுளைத் தான் வழிபட வேண்டும்" என்று கட்டளையிட்டார். மத்தியில் ஆளும் கட்சியை வழி நடத்தும் அமைப்பாக கருதப்படும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவரே இப்படி பேசுவது மத நல்லிணத்தை வலுப்படுத்துமா? வலுவிழக்கச் செய்யுமா? இத்தகைய பேச்சுக்களை அனுமதிக்கலாமா? என்பதற்கெல்லாம் மத்திய அரசு தான் பதிலளிக்க வேண்டும். ஆனால், மத்திய அரசோ இதையெல்லாம் காதில் வாங்க மறுக்கிறது.இன்னொரு பக்கம் ‘இஸ்லாமியர்களை பாகிஸ்தானுக்கு விரட்டியடிப்போம்', ‘மத மாற்றம் செய்யும் நோக்கத்துடன் தான் அன்னை தெரசா சேவை செய்தார்', ‘காந்தியை கொன்ற கோட்சேவுக்கு சிலை அமைப்போம்' என்பன போன்ற முழக்கங்களைத் தான் திரும்பிய திசையெல்லாம் சங் பரிவாரங்கள் எழுப்பிக் கொண்டிருக்கின்றன. அதன் தொடர்ச்சியாகவே இப்போது மசூதிகளுக்கு எதிராக அசோக் சிங்கால் மிரட்டல் விடுக்கிறார். இத்தகைய பேச்சுக்கள் நாட்டின் அமைதிக்கும், வளர்ச்சிக்கு எந்த வகையிலாவது உதவுமா? என்று சங் பரிவாரங்களின் தலைவர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் விளைவை இன்று வரை அனுபவிக்கிறோம். கோத்ரா ரயில் எரிப்பும் அதைத் தொடர்ந்து நடந்த கலவரங்களும் உலக அரங்கில் இந்தியாவின் பெயரை சரி செய்ய முடியாத அளவுக்கு கெடுத்து வைத்துள்ளன. இத்தகைய சூழலில் சங் பரிவாரத் தலைவர்கள் வாயைக் கட்டுப்படுத்தாமல் வார்த்தைகளைக் கொட்டுவதும், அதை ஆட்சியாளர்கள் வேடிக்கைப் பார்ப்பதும் நிச்சயமாக இந்தியாவுக்கு நன்மை பயக்காது. மற்ற மதத்தினரின் அனைத்து சுதந்திரங்களும் பாதுகாக்கப்படும்; மத நல்லிணக்கத்தைக் குலைக்கும் வகையில் யாரும் பேசக் கூடாது என பிரதமர் மோடி இதுவரை இரு முறை கூறியிருக்கும் போதிலும், அதை அவருக்கு கீழ் உள்ள அமைச்சர்களும், பாரதிய ஜனதா நாடாளுமன்ற உறுப்பினர்களுமே கேட்பதில்லை என்பதிலிருந்தே இந்து அமைப்புகளின் ஆதிக்கமும், அதிகாரமும் நாட்டின் பிரதமரையும் தாண்டி வளர்ந்திருப்பதை உணர்ந்து கொள்ள முடியும்.நாட்டில் கடந்த ஓராண்டில் நடந்த முக்கிய நிகழ்வுகளை பட்டியலிட்டால், மதவாத பேச்சுக்கள், கட்டாய மறு மதமாற்றம், இந்தித்திணிப்பு, சமஸ்கிருதத் திணிப்பு ஆகியவற்றைத் தவிர வேறு எதுவும் நினைவுக்கு வரவில்லை. இந்தியாவில் இடதுசாரி தீவிரவாதத்தையும், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தையும் விட மோசமான ஆபத்து மத நல்லிணக்கத்தை குலைக்கும் வகையிலான பேச்சுக்கள் தான். இப்பேச்சுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். 2014 ஆம் ஆண்டு தேர்தலில் நரேந்திர மோடி தலைமையிலான அணிக்கு மக்கள் வாக்களித்ததன் நோக்கமே இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லக் கூடிய அரசு அமைய வேண்டும் என்பது தான். அமைதியும், நல்லிணக்கமும் நிலவினால் மட்டுமே நாடு வளர்ச்சிப் பாதையில் செல்லும் என்பதை உணர்ந்து, அதற்குத் தேவையான நடவடிக்கைகளை பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/ramadoss-slams-ashok-singhal-228788.html

Sunday, June 14, 2015

இந்தியர்களுக்கு பாதிப்பு: அமெரிக்க விசா கட்டுப்பாட்டை தளர்த்த நடவடிக்கை தேவை: பா.ம.க.



பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

அமெரிக்காவில் உள்ள சில நிறுவனங்களில் ஆட்குறைப்பு செய்யப்பட்டதையடுத்து இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் விசாக்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை அங்கு எழுந்துள்ளது. அடுத்த ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இனிவரும் மாதங்களில் இந்தியர்களுக்கான விசாக் கட்டுப்பாடு தீவிரமடையும் வாய்ப்புள்ளது.

அமெரிக்காவின் புகழ்பெற்ற பொழுதுபோக்கு நிறுவனம் வால்ட் டிஸ்னி, மின்சார நிறுவனம் தெற்கு கரோலினா எடிசன் ஆகியவற்றில் பணியாற்றிய நூற்றுக்கணக்கான அமெரிக்கர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு, அவர்களுக்கு பதில் ஹெச்-1பி (H-1B)விசா வைத்துள்ள இந்தியர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களில் பலர் இந்தியாவைச் சேர்ந்த இன்ஃபோசிஸ், டி.சி.எஸ். நிறுவனங்களுக்காக பணியாற்றச் சென்றவர்கள் ஆவர். இதையடுத்து இந்த இரு நிறுவனங்களின் விசா விதி மீறல்கள் பற்றி விசாரணை  நடத்த வேண்டும்; இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் H-1B விசாக்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்று அமெரிக்காவின் செல்வாக்கு மிகுந்த செனட்டர்கள் வலியுறுத்திள்ளனர். அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடக்கூடும் என எதிர்பார்க்கப்படும் பெர்னி சாண்டர்ஸ்  H-1B விசாக்களை கடுமையாக எதிர்ப்பவர் ஆவார்.எனவே இனி வரும் நாட்களில் இந்தியர்களுக்கான விசாக் கட்டுப்பாடு தீவிரப்படுத்தப்படுவதுடன், குறைக்கப் படுவதற்கும் வாய்ப்புள்ளது. அப்படி ஏதேனும் நடந்தால் அமெரிக்காவில் வேலைவாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கும் இந்திய இளைஞர்களின் கனவுகள் கருகி விடும் வாய்ப்பு இருப்பதை மறுப்பதற்கில்லை.

பொதுவாகவே இந்தியர்கள்  H-1B விசா மூலம் அமெரிக்க வருவதால் தான் தங்களின் வேலைவாய்ப்பு பறிக்கப்படுவதாக அங்குள்ள இளைஞர்களிடம் ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால், அது உண்மையல்ல. இந்தியர்கள் குறைந்த ஊதியத்தில் வேலை செய்வார்கள் என்பதால் தான் அவர்களை அமெரிக்க நிறுவனங்கள் பணியில் அமர்த்துகின்றன என்றாலும், அதைத் தாண்டி மற்றொரு உண்மையும் உள்ளது. மென்பொருட்களைத் தயாரித்து வழங்கிய பின்னர் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்வதற்கு அமெரிக்க மென்பொருள் பொறியாளர்கள் முன்வருவதில்லை. ஆனால், அந்தப் பணியை அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்ய இந்தியர்கள் தயாராக உள்ளனர். அதுமட்டுமல்லாமல், திறமையின் அடிப்படையில் இந்தியர்கள் மட்டுமே செய்யக்கூடிய பல பணிகள் அமெரிக்காவில் உள்ளன. அமெரிக்காவில் தற்போது 30,000 இந்தியர்கள்  H-1B விசா பெற்று பணியாற்றி வருகின்றனர். அவர்களின் பணிக்கான தேவை அதிகமாக இருப்பதால் பல நிறுவனங்களிலிருந்து அவர்களுக்கு அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன.

 H-1B விசாவில் செல்லும் இந்தியர்களால் அமெரிக்காவில் உள்ளவர்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப் படுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாற்று உண்மையற்ற, கற்பனையான ஒன்றாகும். அமெரிக்க நிறுவனங்கள் நுணுக்கமான தொழில்நுட்பம் கொண்ட பணிகளுக்கு இந்தியரையே சார்ந்திருக்கின்றன; இந்தியர்களும் தாய்நாட்டில் கிடைப்பதைவிட சற்று அதிக ஊதியத்தில் கிடைக்கும் வேலைக்காக அமெரிக்காவைச் சார்ந்திருக்கின்றனர். H-1B விசா மூலம் இந்தியர்களும், அமெரிக்க நிறுவனங்களும் பரஸ்பரம் பயனடைகின்றனர். கடந்த காலங்களில் இந்தியர்களுக்கான விசாக்களை குறைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளன. இதை உணராமல்  H-1B விசா சிக்கலை தேர்தல் பிரச்சினையாக்க அமெரிக்க அரசியல் அரங்கில் நடக்கும் முயற்சிகளைத் தடுக்க வேண்டும்.

அமெரிக்கத் தேர்தலையொட்டி நடக்கும் அரசியல் காய் நகர்த்தல்கள் காரணமாக இந்தியர்களுக்கு வழங்கப்படும்   H-1B விசாக்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டால் இந்தியர்களின் அமெரிக்க வேலைவாய்ப்பும், அவர்கள் மூலம் இந்தியாவுக்கு கிடைக்கும் அன்னிய செலாவணியும் பாதிக்கப்படும். இதைக் கருத்தில் கொண்டு இந்தியர்களுக்கான   H-1B விசாக்களின் எண்ணிக்கையைக் குறைக்கக் கூடாது; மாறாக அதிகரிக்க வேண்டும் என்று அமெரிக்காவிடம் வலியுறுத்த மத்திய அரசும், நாஸ்காம் அமைப்பும் முன்வர வேண்டும். இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி அவர்களையும், வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அவர்களையும் நேரில் சந்தித்து வலியுறுத்தவும் முடிவு செய்திருக்கிறேன்.

அதேநேரத்தில் இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் போதிய வேலைவாய்ப்புகள் இல்லாதது தான்  அதிக அளவிலான இளைஞர்கள் வேலை தேடி அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்வதற்குக் காரணமாகும். தமிழகத்தில் மட்டும் 2 கோடி இளைஞர்கள் வேலையின்றி வாடுகின்றனர். இந்நிலையை மாற்ற தமிழகத்தில் வேலைவாய்ப்புகளை பெருக்கவும், பணிக்கு தகுதியான மனித வளத்தை உருவாக்க திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்கவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

ஐ.எஃப்.எஸ் தேர்ச்சி பெற்ற பார்வையற்ற பெண் பெனோ ஜெஃபைனுக்கு அன்புமணி வாழ்த்து


பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை:
’’சென்னையைச் சேர்ந்த பார்வையிழந்த மாற்றுத்திறனாளி பெனோ ஜெஃபைன் இந்தியக் குடிமைப் பணித் தேர்வில் தேர்ச்சி பெற்று இந்திய வெளியுறவுப் பணி  அதிகாரியாக நியமிக்கப்பட்டி ருக்கிறார் என்ற செய்தி மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இந்த அரிய சாதனையை படைத்த பெனோ ஜெஃபைனுக்கு எனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பெனோ ஜெஃபைனின் இடைவிடாத முயற்சியும், உழைப்பும் தான் அவரை அரசு நிர்வாகத்தின் மிக உயர்ந்த இடத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது. இளங்கலை ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்ற பிறகு வங்கியில் அதிகாரியாக பணியில் சேர்ந்த பெனோ ஜெஃபைன் அத்துடன் திருப்தியடைய வில்லை. 

மாறாக ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம், அதைத் தொடர்ந்து முனைவர் பட்ட ஆய்வு ஆகியவற்றிலும் சாதித்தார். அதன்தொடர்ச்சியாக இந்தியக் குடிமைப் பணிகள் தேர்விலும் வெற்றி பெற்று மிகப்பெரிய சாதனை படைத்துள்ளார். அவரது பணி சிறக்க எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதுடன், சாதிப்பதற்கு ஊனம் ஒரு தடையல்ல என்பதை உணர்ந்து  ஜெஃபைன் வழியில் சாதனை படைக்க மற்ற மாற்றுத்திறனாளிகளும் உறுதியேற்கும்படி கேட்டுக் கொள்கிறேன்’’என்று தெரிவித்துள்ளார்.

தலையில்லாத தகவல் ஆணையமும்,தலைவிரித்தாடும் ஊழல்களும்!: ராமதாஸ்

 

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை:

’’ஓர் அமைப்பு எவ்வாறு செயல்படக்கூடாது என்பதற்கு ஏதேனும் உதாரணம் கூற வேண்டுமானால்,  தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தைத் தான் கூற வேண்டும். தகவல் ஆணையங்கள் எதற்காக ஏற்படுத்தப்பட்டனவோ, அந்நோக்கத்திற்கு எதிராக செயல்படுவது தமிழக தகவல் ஆணையம் தான்.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி தமிழ்நாடு தகவல் ஆணையம் 2005 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டாலும், அதற்கு ஆணையர்கள் எவரும் நியமிக்கப்பட வில்லை. 28.01.2006 அன்று தான் தலைமைத் தகவல் ஆணையரும் இரு ஆணையர்களும் நியமிக்கப் பட்டு ஆணையம் செயல்படத் தொடங்கியது. 2008-ஆம் ஆண்டில் இந்த ஆணையத்தின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 7 ஆக உயர்த்தப்பட்டது. தொடக்கத்தில் ஓரளவு நன்றாக செயல்பட்ட இந்த ஆணையம், அதன் தலைவராக தமிழக அரசின் ஓய்வு பெற்ற தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி நியமிக்கப்பட்டதும் தான் முடங்கத் தொடங்கியது. அ.தி.மு.க. ஆட்சியில் அக்கட்சியின் நிர்வாகிகளும், ஆளுங்கட்சிக்கு ஆதரவான ஓய்வு பெற்ற அதிகாரிகளும் நியமிக்கப்பட்டதால் அரசின் செயல்பாடுகளை கண்காணிக்கும் அமைப்பாக செயல்பட வேண்டிய ஆணையம் அரசின் தவறுகளை மூடிமறைக்கும் அமைப்பாக மாறியது.

தமிழ்நாடு தகவல் ஆணையத்திற்கு ஒரு தலைவரையும், 10 உறுப்பினர்களையும் நியமிக்கலாம். ஆனால், இப்போது தகவல் ஆணையத்தில் 4 ஆணையர்கள் மட்டுமே உள்ளனர். அதுமட்டுமின்றி, கீழ்மட்டத்தில் மறுக்கப்படும் தகவல்களை மேல்முறையீட்டின் மூலம் பெற்றுத் தரும் நீதிபதிகளைப் போல செயல்பட வேண்டிய அவர்கள் தகவல் கேட்டு வருபவர்களை மிரட்டி, விரட்டியடிக்கும் பணியைத் தான் செய்து வருகிறார்கள். இதற்கு எத்தனையோ உதாரணங்களைக் கூற முடியும். தகவல் கேட்டு வந்த ஒருவர் பணிந்து நடக்காததற்காக காவல்துறையினர் உதவியுடன் பொய்வழக்கு பதிவு செய்து சிறைக்கு அனுப்பியக் கொடுமை தமிழ்நாட்டைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் நடந்திருக்காது.

அரசின் திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள் ஆகியவை குறித்த தகவல்களை அரசிடமிருந்து கேட்டு பெற்று அவற்றில் ஏதேனும் விதிமீறல்கள் இருந்தால் அவற்றைக் களைய நடவடிக்கை எடுப்பது, அரசிடமிருந்து பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை பெறுவதில் தாமதம் ஏற்பட்டால் அதுகுறித்த தகவல்களை பெற்று  சரி செய்தல் ஆகியவை தான் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் நோக்கம் ஆகும். இதன்மூலம் அரசுத் துறை செயல்பாடுகளில் ஊழலை ஒழிக்க முடியும்; நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையில் தான் இச்சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், இல்லாத காரணங்களைக் கூறி மனுவைத் திருப்பி அனுப்புதல், அனல் மின்நிலையங்கள் குறித்த தகவல்களைக் கோரினால் புனல் மின் நிலையங்கள் குறித்த தகவல்களைத் தருதல் என உண்மையான தகவல்கள் வெளியாகாமல் தடுப்பதில் அரசு அதிக கவனம் செலுத்துகிறது.

இதை எதிர்த்து இரண்டாம் நிலை மேல்முறையீட்டுக்காக தமிழ்நாடு தகவல் ஆணையத்திற்கு செல்லும் தகவல் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள். லட்சக்கணக்கான மேல்முறையீட்டு மனுக்கள் விசாரிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன. தகவல் பெறும் உரிமைச் சட்டப்படி குறிப்பிட்ட காலத்திற்குள் தகவல் அளிக்காத அதிகாரிகள் மீது ரூ.25,000 வரை அபராதம் விதிக்க சட்டத்தில் வகை செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், சட்டத்தின்படி செயல்படாத தகவல் ஆணையர்கள் இருதரப்பையும் அழைத்துப் பேசி கட்டப்பஞ்சாயத்து செய்து வைக்கின்றனர். பல நேரங்களில் தகவல் தராத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக அவர்களை மிரட்டி தகவல் ஆணையர்கள் பணமாகவும், பொருளாகவும் லஞ்சம் வாங்கும் கொடுமையும் நடக்கிறது.

தமிழக தகவல் ஆணையத்தில் தலைமை தகவல் ஆணையர், 6 ஆணையர் பதவிகள் காலியாக கிடக்கின்றன. இந்த காலியிடங்களை நிரப்ப வேண்டுமானால் எதிர்க்கட்சித் தலைவருடன் ஆலோசனை நடத்த வேண்டும் என்பதால், அதைத் தவிர்ப்பதற்காக இந்த காலியிடங்களை நிரப்பும் முயற்சியையே தமிழக அரசு எடுக்கவில்லை. தமிழ்நாடு தகவல் ஆணையம் ஊழலை ஒழிப்பதற்கு பதிலாக ஊழலை ஊக்குவிக்கும் பணியையே செய்து வருவதால் தகவல் பெறும் உரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டதன் நோக்கமே சிதைக்கப்பட்டு விட்டது. இதற்கு தமிழக அரசு தான் முழுமையாக பொறுப்பேற்க வேண்டும்.

இதுவரை நிலவி வந்த சூழலை மாற்றி தகவல் ஆணையம் சிறப்பாக செயல்பட வேண்டுமானால்,  ஆணையத்திற்கு நியாயமான முறையில் ஆணையர்களை நியமித்து புத்துயிரூட்ட வேண்டும். மேலும் தகவல் தர மறுக்கும் அதிகாரிகள் மீது சட்டப்படியான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.’’

Saturday, June 13, 2015

தொழில்துறை முதலீடுகளை ஈர்ப்பதில் தெலுங்கானாவிடம் தமிழகம் பாடம் கற்க வேண்டும்: பாமக


ஆட்சியாளர்களின் சுயநலம் மற்றும் ஊழல் போதை காரணமாக தொழில்துறை முதலீடுகள் தமிழகத்தின் பக்கம் திரும்பிக்கூட பார்க்க மறுக்கின்றன. தொழில்துறை முதலீடுகளை ஈர்ப்பதில் தெலுங்கானாவிடம் தமிழகம் பாடம் கற்க வேண்டும் என்ற நிலை தான் இப்போது காணப்படுகிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

இந்தியாவின் 29-ஆவது மாநிலமாக உருவாக்கப்பட்டுள்ள தெலுங்கானா அதன் புதிய தொழில் கொள்கையை ஹைதராபாத்தில் வெளியிட்டுள்ளது. தொழிற்சாலைகளை தொடங்குவதற்கான அனுமதி விரைவாக கிடைப்பதை உறுதி செய்ய தொழிற்சாலைகளுக்கு அனுமதி பெறும் உரிமை (Right to Clearance) உட்பட பல முற்போக்கு அம்சங்கள் அதில் இடம்பெற்றுள்ளன. இது வரவேற்கத்தக்கதாகும்.

ஒரு மாநிலம் பொருளாதார வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் வேளாண்மை, உற்பத்தி, சேவை ஆகிய 3 துறைகளிலும் சிறந்து விளங்க வேண்டும். தொழிற்துறையில் முன்னேற வேண்டுமானால்  தொழில்துறை முதலீட்டுக்கு ஏற்ற சூழல் நிலவ வேண்டியது அவசியமாகும். அதைக் கருத்தில் கொண்டு தான் தொழிற்சாலைகளுக்கு அனுமதி பெறும் உரிமை என்ற புதிய சித்தாந்தத்துடன் கூடிய தொழில் கொள்கையை தெலுங்கானா அரசு வெளியிட்டிருக்கிறது. இதன்படி, தொழிற்சாலைக்கு அனுமதி கோரி தாக்கல் செய்யப்படும் விண்ணப்பங்கள் மீது குறித்த காலத்தில் அதிகாரிகள் முடிவு எடுக்க வேண்டும். முடிவெடுப்பதில் தாமதம் செய்யப்பட்டால், அதற்குக் காரணமான அதிகாரிக்கு நாள் ஒன்றுக்கு ரூ.1000 வீதம் தண்டம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை செயல்படுத்த வசதியாக தெலுங்கானா மாநில தொழில் திட்டங்கள் அனுமதி மற்றும் சுய சான்றளிப்பு சட்டம்--2014  என்ற புதிய சட்டத்தையும் சந்திரசேகரராவ் தலைமையிலான தெலுங்கானா அரசு நிறைவேற்றியுள்ளது.

இவை தவிர, தொழில் திட்டங்களுக்கு ஒற்றைச்சாளர அனுமதி, குறைந்தபட்ச ஆய்வு&அதிகபட்ச சேவை ஆகிய திட்டங்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவற்றுக்கெல்லாம் மேலாக புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்படும் போது, வேளாண் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதை தவிர்க்க ஒன்றரை லட்சம் ஏக்கர் நிலங்களைக் கொண்ட நிலவங்கி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இவை அனைத்துமே பாட்டாளி மக்கள் கட்சியால் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வரும் யோசனைகள் தான்.  பா.ம.க. வெளியிட்ட நிழல் நிதி நிலை அறிக்கைகளிலும் இவை குறித்து விளக்கப்பட்டிருக்கின்றன. தொழில் வளர்ச்சிக்கு அடித்தளமாக இந்தத் திட்டங்களை செயல்படுத்த தெலுங்கானா முன்வந்திருப்பது பாராட்டத் தக்கதாகும். இந்த புதிய திட்டங்கள் தொழில்துறையினரிடம் மிகப்பெரிய ஆதரவை பெற்றுள்ள நிலையில், இந்தத் திட்டங்களை தெலுங்கானா அரசு முழுமையாக செயல்படுத்த முன்வர வேண்டும்.

தொழில்துறை வளர்ச்சிக்காக தெலுங்கானா அதிரடியான திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வரும் நிலையில், தமிழகத்தின் நிலைமை கவலையளிப்பதாக உள்ளது. தமிழகத்தில் புதிதாக தொழில் தொடங்க முன்வருபவர்கள் முதல்வரை சந்திப்பதே அரிதானதாக உள்ளது. அமைச்சர்களை சந்தித்தால், எவ்வளவு முதலீடு செய்வீர்கள் என்பதற்கு பதிலாக எங்களுக்கு எவ்வளவு தருவீர்கள்? என கேட்கும் அவல நிலை தான் தமிழகத்தில் காணப்படுகிறது. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டையே ஜெயலலிதா என்ற தனி மனிதருக்காக பல முறை ஒத்திவைக்கும் நிலையில் தான் தமிழக அரசு செயல்படுகிறது. தமிழக அமைச்சர்களைப் பொறுத்தவரை தொழில்துறையினரின் நலன் முக்கியமல்ல; முதலமைச்சரின் மகிழ்ச்சி தான் மிகவும் முக்கியம். இந்த அணுகுமுறை காரணமாக தமிழகத்திற்கு தொழில் முதலீடுகள் வராதது ஒரு புறமிருக்க, ஏற்கனவே செய்யப்பட்ட முதலீடுகளும் வெளியேறிக் கொண்டிருக்கின்றன.

இந்தியாவின் எந்த மாநிலத்தையும் விட தமிழகத்தில் திறமையான, கடுமையாக உழைக்கக்கூடிய மனித வளம் உள்ளது. துறைமுகம் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளும் ஒப்பீட்டளவில் நன்றாகவே உள்ளன. ஆனாலும், ஆட்சியாளர்களின் சுயநலம் மற்றும் ஊழல் போதை காரணமாக தொழில்துறை முதலீடுகள் தமிழகத்தின் பக்கம் திரும்பிக்கூட பார்க்க மறுக்கின்றன. தொழில்துறை முதலீடுகளை ஈர்ப்பதில் தெலுங்கானாவிடம் தமிழகம் பாடம் கற்க வேண்டும் என்ற நிலை தான் இப்போது காணப்படுகிறது. 2016 ஆம் ஆண்டில் பா.ம.க. ஆட்சிக்கு வந்த பின்னர் தெலுங்கானா மாநிலமே வியக்கும் அளவுக்கு புதிய தொழில் கொள்கை உருவாக்கப்பட்டு தொழில் வளர்ச்சி பெருக்கப்படுவது உறுதி. இவ்வாறு கூறியுள்ளார். 

Friday, June 12, 2015

ஆர்.கே.நகரில் ஒரு ஓட்டுக்கு 8 ஆயிரம் வழங்கப்பட உள்ளது : ராமதாஸ்


பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தென்காசி சென்றார். அங்கே அவர் செய்தியாளர் களிடம் பேசியபோது,   ‘’வட மாவட்டங்களில் தான் எங்களுக்கு செல்வாக்கு உள்ளது. தென் மாவட்டங்களில் இல்லை என்று கேட்கிறார்கள். 1994ம் ஆண்டிலேயே தென்காசியில் போராட்டம் நடத்தி உள்ளோம். நெல்லை மாவட்டத்தில் அதிகமான கிராமங்களில் நான் கொடிஏற்றி உள்ளேன். என்னை போல் போராட்டம் நடத்திய தலைவர்கள் தமிழகத்தில் யாரும் இல்லை. தவறுதலாக அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. உடன் கூட்டணி வைத்துவிட்டோம். அதற்காக தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்டு விட்டோம்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கும் நிலையில், முதல் அமைச்சர் வேட்பாளராக அன்புமணியை அறிவித்து தனித்து போட்டியிடுவதை துணிச்சலாக கூறிய கட்சி பா.ம.க. மட்டுமே. தி.மு.க., அ.தி.மு.க.வினால் எந்த வளர்ச்சியும் இல்லை. இலவசங்களை கொடுத்து மக்களை ஏமாற்றி வருகிறார்கள். சாராயத்தை கொடுத்து இளைஞர்களை குடிகாரர்களாக்கி உள்ளனர்.

ஜெயலலிதா வழக்கில் குமாரசாமி தீர்ப்பு வந்த உடன் உடனடியாக மேல்முறையீடு செய்வதற்கு கர்நாடகா அரசுக்கு கடிதம் எழுதினேன். அந்த அரசு தகுந்த முடிவு எடுத்துள்ளது. நல்ல தீர்ப்பு வரும். ஏற்கனவே எழுதப்பட்ட தீர்ப்புகள் திருத்தப்படலாம்.

இப்போது நடைபெற உள்ள ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் எல்லா இடங்களிலும் நடைபெற்ற பார்முலா பின்பற்றப்பட உள்ளது. திருமங்கலத்தில் வாக்காளர்களுக்கு 1 ஓட்டுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கத்தில் ரூ.6 ஆயிரமாக உள்ளது. ஆர்.கே. நகரில் ரூ.8 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. முதல் கட்டமாக ரூ.3 ஆயிரம், பிரியாணி, மதுபாட்டில் வழங்கப்படுகிறது. மேலப்பாளையம் பள்ளி வாசலில் தொழுகை நடத்தியவர்களை போலீசார் தாக்கி உள்ளனர். இது கண்டிக்கத்தக்கது’’என்று தெரிவித்தார்.

Thursday, June 11, 2015

தொடர்வண்டி இயக்கத்தை தனியாரிடம் ஒப்படைப்பது மிகவும் ஆபத்தானது: ராமதாஸ்

 

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை:
’’தொடர்வண்டித்துறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்வது குறித்து பரிந்துரைக்க அமைக்கப் பட்ட  பொருளாதார வல்லுனர் பிபெக் தேப்ராய் தலைமையிலான குழு அதன் அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்துள்ளது. தேப்ராய் குழுவின் பரிந்துரைகளில் சில வரவேற்கத்தக்கவை என்றாலும் பெரும்பாலானவை தனியாருக்கு சாதகமாகவும், பயணிகளுக்கு பாதகமாகவும் அமைந்திருக்கின்றன.

தொடர்வண்டித்துறையின் அதிகாரம் முழுவதையும் தொடர்வண்டித்துறை வாரியத்திடம் குவித்து வைக்கக் கூடாது; மண்டல மேலாளர்களுக்கும், கோட்ட மேலாளர்களுக்கும் அதிகாரங்கள் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரை பயனுள்ள ஒன்றாகும். இதன்மூலம் உள்ளூர் தேவைக்கான திட்டங்களை மண்டல நிலையிலான அதிகாரிகளே தீட்டி நிறைவேற்ற முடியும். தொடர்வண்டித்துறைக்கு தமிழகம் தான் அதிக வருவாயை ஈட்டித் தருகிறது என்ற போதிலும், இந்த வருவாயைக் கொண்டு வருவாய் ஈட்டாத பிகார் போன்ற மாநிலங்களில் திட்டங்களை செயல்படுத்தும் நிலை இதனால் மாறும்.

ஆனால், தனியாரும் தொடர்வண்டிகளை இயக்க அனுமதிக்க வேண்டும் என்று தேப்ராய் குழு அளித்துள்ள பரிந்துரை தான் மிகவும் ஆபத்தானது. ‘‘ பயணிகள் மற்றும் சரக்குத் தொடர்வண்டிகளை  இயக்க தனியாரும் அனுமதிக்கப்பட வேண்டும். தனியாரும், தொடர்வண்டித்துறையும் போட்டிபோட்டு  தொடர்வண்டிகளை இயக்க வேண்டும்’’ என்பது தான் அக்குழுவின் பரிந்துரையாகும். மேலோட்டமாக பார்க்கும்போது தனியார் தொடர்வண்டிகள் வந்தால் அவை தூய்மையாகவும், சரியான நேரத்திலும் இயங்கும் என்ற எண்ணத்தில் இந்த யோசனை வரவேற்கத்தக்கது போல தோன்றலாம். உண்மையில் இது தொடர்வண்டித்துறையை கொஞ்சம், கொஞ்சமாக அழிப்பதற்கான திட்டம் என்பதில் சந்தேகமில்லை.

தொடர்வண்டிகளை இயக்க தனியார் அனுமதிக்கப்படும் பட்சத்தில், ஆட்சியாளர்களின் ஆதரவுடன் அவர்களுக்கு சலுகைகள் வழங்கப்படும். அதிக லாபம் தரும் வழித்தடங்களிலும், மற்றத் தடங்களில் பயணிகள் நெரிசல் அதிகமுள்ள நேரங்களிலும் தனியார் வண்டிகள் இயக்க அனுமதிக்கப்படும். இதனால், அரசு பேரூந்துகளும், தனியார் பேரூந்துகளும் இயக்கப்படும் வழித்தடங்கள் அனைத்திலும்  அரசுப் பேரூந்துகள் எப்படி நட்டதில் இயங்குகின்றனவோ, அதேபோல் தனியார் தொடர்வண்டிகள்  அதிக லாபத்தில் இயங்கும் பாதைகளில், அரசுத் தொடர்வண்டிகள் நட்டத்தில் ஓடும் நிலை உருவாகும்.

அதுமட்டுமின்றி தனியார் நிறுவனங்கள் சந்தை நிலவரத்திற்கு ஏற்ப தங்களின் கட்டணத்தை நிர்ணயித்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும்; அதற்கு அரசு எந்த கட்டுப்பாடும் விதிக்கக்கூடாது என்பது தேப்ராய் குழுவின் இன்னொரு பரிந்துரையாகும். இது தனியார் நிறுவனங்கள் கட்டணக் கொள்ளையில் ஈடுபடலாம் என்பதற்கு அளிக்கப்பட்ட அனுமதியாகவே தோன்றுகிறது. இது நடைமுறைப் படுத்தப்பட்டால் தொடர்வண்டிப் பயணம் என்பது பணக்காரர்களுக்கானதாக மாறி விடும். இந்தியாவின் எந்த பகுதிக்கும் சாதாரண மக்கள் கூட எளிதாக சென்று வர முடிகிறது என்றால் அதற்கு முக்கியக் காரணம், மற்ற அனைத்து போக்குவரத்து முறைகளையும் விட தொடர்வண்டிக் கட்டணங்கள் மிகவும் குறைவாக இருப்பது தான்.

 இதற்கு மாறாக தனியார் நிறுவனங்கள் தொடர்வண்டிகளை இயக்கி விருப்பம் போல கட்டணத்தை நிர்ணயிக்க அனுமதி அளிக்கப்பட்டால் அது சுற்றுலாவை பாதிக்கும். அதேபோல், சரக்குக் கட்டணங்கள் உயர்த்தப்படும் போது அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி  உயரும். மேலும், அதிக வருமானம் தரும் நிலக்கரி, இரும்புத்தாது போன்ற சரக்குகளை கையாளவே தனியார் நிறுவனங்கள் முன்னுரிமை அளிக்கும்; குறைந்த வருவாய் தரும் உணவு தானியங்களை கொண்டு செல்ல ஆர்வம் காட்டாது என்பதால் உணவு தானியங்களுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும்.

தேப்ராய் குழுவின் இன்னொரு பரிந்துரை தொடர்வண்டித்துறையை பிரித்து தொடர்வண்டி இயக்கம் சார்ந்த பணிகளுக்கு ஓர் அமைப்பையும், பள்ளிகள், மருத்துவமனைகள், காவல் பணி ஆகியவற்றுக்கு இன்னொரு அமைப்பையும் ஏற்படுத்தலாம் என்பதாகும். தொடர்வண்டிப் பணியாளர் குடும்பங்களுக்காக மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளை நடத்தத் தேவையில்லை; வேண்டுமானால் தனியாரிடமிருந்து இந்த சேவைகளை அவர்கள் பெற மானியம் வழங்கலாம் என்பதும் அதன் பரிந்துரைகளில் ஒன்றாகும். இது தொடர்வண்டித்துறை பணியாளர்களின் கல்வி மற்றும் மருத்துவ உரிமைகளை பறிக்கும் செயல்.

பொதுவாக பொருளாதார வல்லுனர்களுக்கு வருவாய் பெருக்கம் பற்றி மட்டும் தான் தெரியும்; வறிய மக்களின் முன்னேற்றத்தில் அக்கறை இருக்காது என்பார்கள். அதை நிரூபிக்கும் வகையில் தான் பிபேக் தேப்ராய் குழுவின் பரிந்துரைகள் அமைந்துள்ளன. அதில் இடம்பெற்றுள்ள வரவேற்கத் தக்க பரிந்துரைகளை செயல்படுத்துவதுடன், பொதுமக்கள், பொருளாதாரம் மற்றும் தொடர்வண்டித் துறையையும் பாதிக்கும் மற்ற அனைத்து பரிந்துரைகளையும் மத்திய அரசு நிராகரிக்க வேண்டும்.’’

Monday, June 8, 2015

கலைக் கல்லூரி மாணவர் சேர்க்கை: ஒற்றைச் சாளர முறையில் நடத்துக!: ராமதாஸ்


பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை:
’’பொறியியல் படிப்புகள் மீதான மாணவர்களின் ஆர்வம் குறைந்து விட்ட நிலையில், பெரும்பாலான மாணவர்கள் கலை மற்றும் அறியியல் படிப்புகளில் சேர விரும்புகின்றனர். ஆனால், கலை&அறிவியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை முறைப்படுத்தப்படாததால் மாணவர்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

தமிழகத்தில் 65 அரசு கலை-அறிவியல் கல்லூரிகள், 37 பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகள் மற்றும் 600&க்கும் மேற்பட்ட தனியார் கலை-அறிவியல் கல்லூரிகள் உள்ளன. அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. எந்தக் கல்லூரியில் இடம் கிடைக்கும் என்பது உறுதியாக தெரியாத நிலையில் மாணவர்கள் குறைந்தது 5 முதல் 10 கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டியதாக உள்ளது. விண்ணப்பத்திற்காக மட்டும் ஒவ்வொரு மாணவரும் ரூ.3,000 முதல் ரூ.5,000 வரை செலவழிக்க வேண்டியிருக்கிறது. அதுமட்டுமின்றி, தேவையில்லாத அலைச்சலும் ஏற்படுகிறது. மற்றொருபுறம் ஒரு கல்லூரியில் சேர்ந்த மாணவருக்கு அதைவிட சிறந்த கல்லூரியில் இடம் கிடைத்தால் ஏற்கனவே படித்த கல்லூரியிலிருந்து விலகும்போது காலியாகும் இடம் பெரும்பாலும் நிரப்பப்படுவதில்லை. இதனால் அந்த இடங்கள் யாருக்கும் பயன்படாமல் போகும் நிலை ஏற்படுகிறது.

இந்த நிலையை மாற்ற அனைத்து கலை-அறிவியல் கல்லூரிகளிலும் ஒற்றைச் சாளர முறையில் மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். கல்லூரி ஆசிரியர்  சங்கங்களும் இதே யோசனையை கூறி வருகின்றன. ஆனால், இந்த யோசனையை தமிழக அரசு இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழகத்தில் 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. அவற்றுக்கு ஒற்றைச் சாளர முறையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுவதால், மாணவர்கள் அவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் அவர்களுக்கு பிடித்த கல்லூரிகளில் பிடித்த பாடப்பிரிவை தேர்வு செய்து கொள்கின்றனர். இதனால் மாணவர்கள் ஒரு குறிப்பிட்ட கல்லூரியில் தான் படிக்க வேண்டும் என்று விரும்பினால் அங்கு தாங்கள் விரும்பிய ஒரு பாடப்பிரிவு கிடைக்காவிட்டால், தங்களுக்கு விருப்பமான இன்னொரு பாடப்பிரிவை தேர்ந்தெடுத்துக் கொள்ள முடிகிறது. அதேபோல், ஒரு குறிப்பிட்ட பாடப்பிரிவில் தான் படிக்க வேண்டும் என்று மாணவர் விரும்பினால் அப்பாடப்பிரிவு ஒரு கல்லூரியில் இல்லாவிட்டால், அதற்குப் பதிலாக இன்னொரு கல்லூரியை தேர்ந்தெடுத்துக் கொள்ள முடிகிறது.

ஆனால், இந்த வாய்ப்பு கலை-அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு மறுக்கப்படுகிறது. இதனால் கிடைத்த கல்லூரியில் கிடைத்த படிப்பை விருப்பமில்லாமல் கடமைக்காக படிக்கும் நிலை ஏற்படுகிறது. இது மாணவர்களின் எதிர்காலத்திற்கும் உதவாது.... நாட்டுக்கும் நன்மை செய்யாது. அதேநேரத்தில்  பொறியியல் மாணவர் சேர்க்கையில் கடைபிடிக்கப்படுவதைப் போல கலை-அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கையிலும் ஒற்றைச் சாளர முறை அறிமுகம் செய்யப்பட்டால் மாணவர்கள் விரும்பிய கல்லூரியில், விரும்பிய படிப்பை ஆர்வத்துடன் படிக்க முடியும். கல்லூரிகளில் தேவையின்றி காலியிடங்கள் ஏற்படாது.

அதேபோல், தனியார் கலை-அறிவியல் கல்லூரிகளில் கல்விக் கட்டணமும் ஒழுங்குபடுத்தப்படாமல் உள்ளது. இளநிலை பட்டப்படிப்புகளுக்கு கல்லூரி மற்றும் பாடப்பிரிவுகளுக்கு ஏற்றவாறு ஆண்டுக்கு ரூ.15,000 முதல் ரூ.40,000 வரை கல்விக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. பொறியியல் படிப்புக்கும், பள்ளிகளுக்கும் கல்விக் கட்டணத்தை அரசே நிர்ணயித்து வரும் நிலையில், கலை-அறிவியல் படிப்புகளுக்கு மட்டும் கட்டணம் நிர்ணயிக்கப்படாமல் இருப்பது கல்விக் கட்டணக் கொள்ளைக்குத் தான் வழி வகுக்கும். இவற்றையெல்லாம் தமிழக அரசு நன்றாக அறிந்திருந்தும் கலை- அறிவியல் படிப்புகளுக்கு கட்டண நிர்ணயம் செய்ய தனிக் குழுவை அமைக்காமல் இருப்பது கண்டிக்கத்தக்கது.

கலை&அறிவியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், மாணவர் சேர்க்கையை முறைப்படுத்த மாநில அளவிலோ, மண்டல அளவிலோ ஒற்றைச்சாளர முறையை அறிமுகம் செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி கலை - அறிவியல் படிப்புகளுக்கான கட்டணத்தை முறைப்படுத்த ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் கட்டண நிர்ணய குழுவை அரசு அமைக்க வேண்டும். ’’

Sunday, June 7, 2015

அருள் நிதி திருமண வரவேற்பு.. "கேப்டன்" வரவில்லை.. ராமதாஸ் ஆஜர்!

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் பேரனும், நடிகருமான அருள் நிதியின் திருமண வரவேற்பு நேற்று மாலை சென்னையில் நடந்தேறியது. இதில் ஆளுநர் ரோசய்யா உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொண்டனர்.ADVERTISEMENTநடிகர் ரஜினி காந்த்தும் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.திமுக தலைவர் கருணாநிதியின் இளைய மகன் மு.க.தமிழரசுவின் மகன் அருள் நிதி. இவருக்கும், கீர்த்தனாவுக்கும், திருமண வரவேற்பு நேற்று மாலை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெற்றது.இந்த விழாவில் ஆளுநர் ரோசய்யா கலந்து கொண்டார். மணமக்களுக்கு வாழ்த்து கூறிய அவர் கருணாநிதியிடமும் நலம் விசாரித்தார். அதேபோல நடிகர் ரஜினிகாந்த், மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்ட கருணாநிதி குடும்பத்தாரும் திருமண வரவேற்பில் கலந்து கொண்டனர்.இதேபோல பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸும் திருமண வரவேற்பில் கலந்து கொண்டார். தமாகா தலைவர் ஜி.கே.வாசன், கட்சியின் மூத்த துணைத் தலைவர் ஞானதேசிகன், காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி, நடிகர் சத்யராஜ், மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு உள்பட பலரும் கலந்து கொண்டனர்.இன்று வருவாரா விஜயகாந்த்?திருமண வரவேற்பில் முக்கிய ஆப்சென்ட் தேமுதிக தலைவர் விஜயகாந்த். அவருக்குப் பதில் அவரது மச்சான் சுதீஷ் வந்திருந்தார். ஒருவேளை திருமணத்திற்கு அவர் வரலாம் என்று தெரிகிறது.

மாணவர்களிடம் பாகுபாடு காட்டும் தனியார் பள்ளி... நிர்வாகத்தை அரசு ஏற்குமா? - ராமதாஸ்

சென்னை: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசுடைமையாக்கியது போல கூடுதல் கல்விக்கட்டணம், மாணவர்களிடம் பாகுபாடு காட்டும் சென்னை பால வித்யா மந்திர் பள்ளி நிர்வாகத்தையும் அரசே ஏற்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: "சென்னை அடையாறில் உள்ள பால வித்யா மந்திர் பள்ளியில் கல்விக் கட்டணத்தின் அடிப்படையில் மாணவர்களிடம் பாகுபாடு காட்டப்படுவதாகக் கூறி பெற்றோர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மற்றொருபுறம் பள்ளி நிர்வாகியின் ஊழலைக் கண்டித்து ஆசிரியர்கள் போராட்டம் நடத்துகின்றனர்.பால வித்யா மந்திர் பள்ளியில் 1400-க்கும் அதிகமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். பாரம்பரியமான இந்த பள்ளி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை லாப நோக்கமின்றி நடத்தப்பட்டு வந்தது. ஆனால், அண்மைக்காலமாக இப்பள்ளி நிர்வாகம் கல்வியை கடைச் சரக்காக்கி விற்பனை செய்து வருகிறது.இந்தப் பள்ளியில் ஆண்டுக்கு இரு வகையான கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. தமிழக அரசின் கட்டண நிர்ணயக் குழு நிர்ணயித்தவாறு ஆண்டுக்கு ரூ. 32,000 முதல் ரூ.39,000 வரை கட்டணம் செலுத்துபவர்களுக்கு அரை நாள் மட்டுமே வகுப்புகள் நடத்தப்படும்.அதேநேரத்தில் பள்ளி நிர்வாகம் நிர்ணயித்த ரூ.54,000 முதல் ரூ.69,000 வரை கட்டணம் செலுத்தும் மாணவர்களுக்கு கேண்டீன் சேவை, மருத்துவ ஆய்வு உள்ளிட்ட 60 வகையான சேவைகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த பாகுபாட்டைக் கண்டித்து கடந்த ஒரு வாரமாக மாணவர்களும், பெற்றோர்களும் போராடுகின்றனர்.மற்றொரு புறம், பெற்றோர்களுக்கு ஆதரவாகவும், பள்ளி நிர்வாகத்தின் ஊழல், முறைகேடுகளுக்கு எதிராகவும் பள்ளியில் முதன்மை நிர்வாக அதிகாரியும், முதல்வரும் குரல் கொடுத்தனர். இதையடுத்து முதன்மை நிர்வாக அதிகாரி நாதனை பணி நீக்கம் செய்ததுடன், முதல்வர் சீனிவாசராகவனை பணியிடமாற்றம் செய்து பள்ளி நிர்வாகம் ஆணையிட்டிருக்கிறது. இந்த நடவடிக்கையை கண்டித்து பள்ளி ஆசிரியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டிருக்கிறது.கட்டாயம் ஏன்?இந்த பள்ளியில் 4 ஆம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைவரும் ரோபாட்டிக்ஸ் பயிற்சியில் சேரும்படி கட்டாயப் படுத்தப்படுவதாகவும், இதற்காக ஒவ்வொருவரிடமிருந்தும் ரூ. 8,000 வசூலிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.ஆயிரக்கணக்கில் வசூல்அதுமட்டுமின்றி, மெரிட்டஸ் என்ற பெயரில் உயர்கல்விக்கான பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படுகின்றன. இப்பயிற்சியில் சேர மாணவர்களிடமிருந்து ஆண்டுக்கு ரூ.70,000 முதல் ரூ.90,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.கொள்ளைக்கும்பல்ஒருவேளை பயிற்சியிலிருந்து இடையில் விலகுவதற்கு மாணவர் விரும்பினால் அவர் 3 ஆண்டுகளுக்கான பணத்தை மொத்தமாக கட்டினால் தான் விலக முடியும்.நிர்வாக அதிகாரி நீக்கம் ஏன்?இந்த பயிற்சிக்கும் பள்ளிக்கும் எந்த தொடர்பும் இல்லை; பள்ளியின் நிர்வாகி ரமணபிரசாத் குடும்பம் தான் இப்பயிற்சி வகுப்புகளை நடத்தி அதில் கிடைக்கும் கோடிக்கணக்கான வருவாயை எடுத்துக் கொள்கிறது என்ற உண்மையை வெளியுலகுக்கு அம்பலப்படுத்தியதால் தான் முதன்மை நிர்வாக அதிகாரி நாதன் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.பாகுபாடு காட்டுவதா?ஒரு பள்ளியில் பயிலும் மாணவர்களிடையே எந்த வேறுபாடும் இருக்கக்கூடாது என்பதற்காகத் தான் சீருடை உள்ளிட்ட சமச்சீர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவ்வாறு இருக்கும்போது மாணவர்களிடையே பாகுபாட்டை ஏற்படுத்தும் பள்ளி நிர்வாகத்தின் செயல் கடும் கண்டனத்துக்குரியது.ஒரே குடும்ப நிர்வாகிகள்அதுமட்டுமின்றி, பள்ளியைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு கட்டாய வகுப்பு நடத்தி, அதன் மூலம் பள்ளியின் வருமானத்தை விட அதிக வருமானத்தை ஒரு தனிநபர் ஈட்டுவது பெரிய மோசடியாகும். அதுமட்டுமின்றி, பள்ளியை நிர்வகிக்கும் அறக்கட்டளையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் உறுப்பினர்களாக இருப்பது மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் விதிகளுக்கு எதிரானதாகும்.அரசே ஏற்கவேண்டும்மாணவர்களிடமிருந்து இருவகையான கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து தமிழக அரசின் கல்விக் கட்டண நிர்ணயக் குழு வரும் 11-ஆம் தேதி விசாரணை நடத்தவிருக்கும் போதிலும், அந்த குழுவுக்கு நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் கிடையாது.எனவே, மாணவர்களிடையே பாகுபாடு காட்டப்படுவதை தடுக்கவும், அங்கு பயிலும் அனைத்து மாணவர்களின் கல்வியை உறுதி செய்யவும் வசதியாக, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசுடைமையாக்கியது போல பால வித்யா மந்திர் பள்ளி நிர்வாகத்தையும் அரசே ஏற்க வேண்டும்.தனி அதிகாரி நியமனம்இப்போதைய நிர்வாகத்தின் பணி நீக்கம், பணியிட மாற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகளை ரத்து செய்வதுடன், பள்ளியை நிர்வகிக்க நேர்மையான ஒருவரை தனி அதிகாரியாக நியமித்து தமிழக அரசு நிர்ணயித்த கட்டணத்தில் தரமான கல்வி வழங்க வேண்டும்" என ராமதாஸ் கூறியுள்ளார்.

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: