Thursday, February 9, 2012

வெளி மாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்குவதை நிறுத்தியது தான் மின்வெட்டுக்கு காரணம்- ராமதாஸ்

சென்னை: தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் மின்வெட்டு மீண்டும் மிக மோசமான நிலையை அடைந்திருக்கிறது. மின்வெட்டு 8 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது என்ற செய்தியை மின்வாரியம் மறுத்துள்ள போதிலும் சென்னையில் 2 மணி நேரம் முதல் 3 மணி நேரம் வரையிலும் மற்ற மாவட்டங்களில் 8 முதல் 10 மணி நேரம் வரையிலும் அறிவிக்கப்படாத மின்வெட்டு நடைமுறையில் உள்ளது.

மின் தட்டுப்பாட்டை சமாளிக்க இதுவரை வெளி மாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்கப்பட்டது. தற்போது மின்வாரியத்தின் நிதி நிலையை காரணம் காட்டி வெளி மாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்குவதை ஆட்சியாளர்கள் நிறுத்திவிட்டதுதான் மின்வெட்டு அதிகரித்ததற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

மின்வெட்டைக் கண்டித்து தொழில்துறையினரும், பொதுமக்களும் போராட்டம் நடத்த தொடங்கியுள்ள நிலையில் நிலைமை மோசமடைவதைத் தடுக்க மின்வெட்டை உடனடியாக சரிசெய்ய வேண்டும்.

மின்சாரம் என்பது அடிப்படை தேவை. இதை தடையின்றி வழங்குவதை சேவையாக கருத வேண்டும். லாபம் ஈட்டும் தொழிலாக பார்க்கக் கூடாது. உடனடியாக சரி செய்ய வேண்டும்.

முதல் கட்டமாக மின்வெட்டின் நேரத்தை குறைக்க வேண்டும். எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த நேரத்தில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்பதை வெளிப்படையாக அறிவித்து அதை உறுதியாக பின்பற்ற வேண்டும்.

அடுத்தகட்டமாக மின்வெட்டை அடியோடு ரத்து செய்ய வேண்டும். இதற்காக மத்திய அரசை வலியுறுத்தி மத்திய மின் தொகுப்பில் இருந்து மின்சாரம் பெறுதல், வெளிமாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன் கூறியுள்ளார் ராமதாஸ்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: