Saturday, March 7, 2015

அக்ரி கிருஷ்ணமூர்த்தி நீக்கம் மட்டும் போதாது: கைது செய்ய வேண்டும்: ராமதாஸ்

 

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வேளாண்துறை உதவி செயற்பொறியாளர் முத்துக்குமாரசாமி தற்கொலைக்கு காரணமானவர் என்று குற்றஞ்சாற்றப்பட்ட வேளாண்துறை அமைச்சர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். இந்த நடவடிக்கை மிகவும் அவசியமானது என்ற போதிலும் போதுமானதல்ல.

திருநெல்வேலி மாவட்டத்தில் பணியாற்றி வந்த முத்துக்குமாரசாமி அப்பழுக்கற்ற அதிகாரி என்று பெயரெடுத்தவர். வேளாண்துறை நியமனங்கள் தொடர்பாக அமைச்சர் அக்ரி.கிருஷ்ணமூத்தி தரப்பிலும், அவரது உதவியாளர்கள் தரப்பிலும் அவருக்கு தொடர்ந்து தொல்லை கொடுக்கப்பட்டு வந்தது; பலமுறை அவருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. இவற்றையெல்லாம் தாங்கிக் கொள்ள முடியாமல் தான் அவர் தொடர்வண்டி முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதற்காக அக்ரி.கிருஷ்ணமூர்த்தி மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும்; விசாரணை முடியும் வரை அவரை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று கடந்த பிப்ரவரி 23 ஆம் தேதியே வலியுறுத்தியிருந்தேன். அதன்பின் 12 நாட்கள் கழித்து அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. நேர்மையான அதிகாரியின் உயிரைப் பறித்த குற்றத்திற்காக அமைச்சரின் பதவியை மட்டும் பறிப்பது முழுமையான நீதியாக இருக்காது; அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீது எடுக்கப்படும் நடவடிக்கை தங்களின் ஊழலுக்கு அதிகாரிகளை துணைக்கு இழுக்கும் அமைச்சர்கள் அனைவருக்கும் பாடமாக அமைய வேண்டும்.

அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீதான குற்றச்சாற்றுகள் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போன்றது தான். அனைத்துத் துறைகளிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. நியாயமாக, பணி மூப்பு அடிப்படையில் கிடைக்க வேண்டிய பதவி உயர்வுக்குக் கூட லட்சக்கணக்கில் லஞ்சம் பெறுவது, அரசு ஊழியர்களை வேண்டுமென்றே அவர்கள் குடும்பம் வசிக்கும் பகுதியிலிருந்து இட மாற்றம் செய்து விட்டு, அதை ரத்து செய்வதற்காக பல லட்சம் பணம் பெறுவது, தவறுகளுக்கு ஒத்துழைக்காத அதிகாரிகளை மிரட்டுவது, தண்டனை பகுதிகளுக்கு இடமாற்றம் செய்வது என தமிழக அமைச்சர்கள் அரங்கேற்றும் அட்டூழியங்கள் பட்டியலிடப்பட முடியாதவை. இந்த அட்டூழியங்களை தடுக்காவிட்டால் இன்னும் ஏராளமான அதிகாரிகள் தற்கொலை செய்து கொள்வதை தடுக்க முடியாது.

நேர்மையான அதிகாரிகளுக்கு அளிக்கப்படும் தொல்லைகள், விடுக்கப்படும் மிரட்டல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் பார்த்தால் அனைத்து அமைச்சர்களும் பதவி நீக்கப்பட வேண்டியவர்கள் தான். இந்த மோசமான கலாச்சாரத்திற்கு முடிவு கட்ட வேண்டுமானால், வளைந்து கொடுக்காத அதிகாரிகளுக்கு அமைச்சர்கள் கொடுக்கும் தொல்லைகள் குறித்து நேர்மையான இந்திய ஆட்சிப் பணி அதிகாரி ஒருவரை கொண்டு ரகசியமான முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டும்; அந்த விசாரணை அறிக்கை அடிப்படையில் தவறு செய்த அமைச்சர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார். 

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: