தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி, வேளாண் வளர்ச்சி, பொதுமக்கள் நலன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, நிதிநிலை அறிக்கை தயாரிப்பில் தமிழக அரசுக்கு ஆலோசனை வழங்கும் நோக்குடன் கடந்த 2003-04 ஆம் ஆண்டு முதல் பொது நிழல் நிதிநிலை அறிக்கையையும், 2008&09 ஆம் ஆண்டு முதல் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையையும் பாட்டாளி மக்கள் கட்சி மக்கள் மன்றத்தில் முன்வைத்து வருகிறது.
பா.ம.க. வெளியிடும் நிழல் நிதிநிலை அறிக்கைகள் சான்றோர்கள் மத்தியிலும், அதிகாரிகள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளன. இந்த நிலையில், 2015-16 ஆம் ஆண்டுக்கான வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை கடந்த 8ஆம் தேதி டாக்டர் ராமதாஸ் வெளியிட்டார்.
அதன் தொடர்ச்சியாக 2015&16 ஆம் ஆண்டுக்கான பொது நிழல் நிதிநிலை அறிக்கையை நாளை மறுநாள் (16.03.2015) சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிடவுள்ளார். பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி உள்ளிட்ட தலைவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.
தமிழகம் எதிர்கொண்டு வரும் மோசமான பொருளாதார சூழல், தமிழகத்தை மிரட்டும் ரூ.4 லட்சம் கோடி கடன்சுமை, 8 ஆண்டுகளாக தொடரும் மின்வெட்டு, மின்வாரியத்தின் கடன் சுமை ஆகியவற்றை தீர்ப்பதற்கான செயல்திட்டங்களை நடப்பாண்டிற்கான பொது நிழல் நிதிநிலை அறிக்கையில் பாட்டாளி மக்கள் கட்சி முன்வைத்திருக்கிறது.
பாமக தலைமை நிலையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment