தமிழக அரசுக்கு தோல்விதான் பரிசாக கிடைக்கும்: போக்குவரத்து தொழிற்சங்க போராட்டத்திற்கு ஆதரவு: ராமதாஸ்
போக்குவரத்து தொழிலாளர்கள் மீதான பழிவாங்கலை அரசு கைவிட வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்தம் கடந்த 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைந்து விட்டது. ஆனால், அதன் பின் ஓராண்டுக்கு மேலாகியும் புதிய ஊதிய ஒப்பந்தத்திற்கான பேச்சுக்கள் தொடங்கப்படாததையடுத்து கடந்த ஆண்டில் பல்வேறு வகையான அறவழிப் போராட்டங்களை போக்குவரத்துத் தொழிலாளர்கள் மேற்கொண்டனர்.
அதன்பிறகும், ஊழியர்களின் கோரிக்கைகள் ஏற்கப்படாததால் கடந்த திசம்பர் 28 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை அரசு போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் மேற்கொண்டனர். இதையடுத்து புதிய ஊதிய ஒப்பந்தம் குறித்து போக்குவரத்துத் தொழிற்சங்கங்களுடன் பேச்சு நடத்த தமிழக அரசு ஒப்புக்கொண்டதால் போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் தங்களின் போராட்டத்தைக் கைவிட்டனர்.
அதன்பின் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான அதிகாரிகள் குழுவை தமிழக அரசு அமைத்தது. இக்குழுவுக்கும், தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையே கடந்த மார்ச் 2 ஆம் தேதி சென்னையில் பேச்சுக்கள் நடைபெற்றன. இப்பேச்சுக்கள் சுமூகமாகவே நடைபெற்றன. அடுத்தக்கட்ட பேச்சுக்களை வரும் 12 ஆம் தேதி நடத்த இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில், எவரும் எதிர்பாராதவகையில், பேச்சுக்கள் நடைபெற்ற அரங்கத்திற்கு வெளியே திடீரென மோதல் ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த தொழிற்சங்கத் தலைவர்கள் அனைவரும் தங்களின் தரப்பைக் கட்டுப்படுத்தியதால் உடனடியாக மோதல் முடிவுக்கு வந்தது. இதில் பலர் காயமடைந்தனர்.
அடுத்தக்கட்ட பேச்சுக்களில் சுமூக சூழல் நிலவ வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு இந்த மோதலை தொழிற்சங்கத்தினர் பெரிதுபடுத்தவில்லை. ஆனால், ஆளுங்கட்சியினர் அளித்த புகாரின் அடிப்படையில் பிணையில் வரமுடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் எதிர்க்கட்சி தொழிற்சங்க நிர்வாகிகள் இல்லத்திற்கு நள்ளிரவில்சென்று அவர்களை கைது செய்து வருகின்றனர்.
ஆளுங்கட்சி தூண்டுதலின் பேரில் காவல்துறையினர் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கது. இன்னும் 4 நாட்களில் அடுத்தக்கட்ட பேச்சுக்கள் நடைபெறவுள்ள நிலையில் மேற்கொள்ளப்படும் இத்தகைய கைது நடவடிக்கைகள் புதிய ஊதிய ஒப்பந்த பேச்சுகள் சுமூகமாக நடப்பதை சீர்குலைத்துவிடும். ஊதிய ஒப்பந்தப் பேச்சுக்கள் சுமூகமாக நடந்து நல்ல முடிவு எட்டப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே இத்தகைய நடவடிக்கைகளில் அரசு ஈடுபடுகிறதோ என்ற ஐயமும் தொழிலாளர்களிடையே நிலவுகிறது.
இதுபோன்ற அடக்குமுறைகளின் மூலம் தொழிலாளர் வர்க்கத்தை ஒடுக்கிவிடலாம் என தமிழக அரசு நினைத்தால் அதற்கு தோல்வி தான் பரிசாக கிடைக்கும்.
பொய்யான புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி நாளை மறுநாள் திங்கட்கிழமை அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் நடத்தப்படவிருக்கும் கண்டன தொடர் முழக்கப் போராட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சி ஆதரவளிக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment