பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை:
’’நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே மகிழுந்தில் சென்ற பெண் நீதிபதியை ஒரு கும்பல் வழிமறித்து தாக்கியுள்ளது. இத்தாக்குதலில் நீதிபதியும், அவரது மகிழுந்து ஓட்டுனரும் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். நீதிபதி மீதான இத்தாக்குதல் கண்டிக்கத்தக்கது.
நீதிபதி மீதான தாக்குதல் எதேச்சையாக நடந்த ஒன்றாகத் தெரியவில்லை; திட்டமிட்டே நடத்தப்பட்ட தாக்குதலாகத் தான் தோன்றுகிறது. நீதிபதியின் மகிழுந்தை மறித்த மர்ம கும்பல், ‘‘இது நீதிபதியின் மகிழுந்தா?’’ என்று கேட்டு உறுதி செய்து கொண்டு தான் தாக்கியுள்ளது. இந்திய ஜனநாயகத்தின் 3 தூண்களில் ஒன்றான நீதித்துறையின் பிரதிநிதி மீது துணிச்சலாக தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது என்றால் தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு என்ற ஒன்றே இல்லை என்று தான் பொருள் கொள்ளவேண்டும்.
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகவே நீதிபதிகளுக்கு பாதுகாப்பில்லாத சூழல் தான் நிலவுகிறது. கடந்த மாதம் இராமநாதபுரம் மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி பிரகாசம் வீட்டின் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் நீதிபதிக்கும் காயம் ஏற்பட்டது. இத்தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த மதுரை உயர்நீதிமன்றக் கிளை,‘‘ இத்தாக்குதல் நீதித்துறை சுதந்திரத்திற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்.
தமிழகத்தில் சட்டம்&ஒழுங்கு நிலை மோசமாக இருப்பதையே இது காட்டுகிறது’’ என அ.தி.மு.க. ஆட்சியில் இருக்கும் போதெல்லாம் நீதிபதிகளுக்கு அச்சுறுத்தல் அதிகரிப்பது வாடிக்கையாக உள்ளது. ஜெயலலிதாவுக்கும், ஜெயலலிதா அரசுக்கும் எதிராக தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் வீட்டுக்கு குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது, நீதிபதியின் மருமகன் மீது கஞ்சாவழக்கு பதிவு செய்யப்பட்டது, சொத்து வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதியை சனியன், எருமை என்று விமர்சித்து சுவரொட்டிகளை ஒட்டியது போன்றவை தான் அ.தி.மு.க. ஆட்சியின் அடையாளங்களாக உள்ளன.
சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்ததால் தான் நீதிபதிகள் மீதே தாக்குதல் நடத்தப்படும் சூழல் உருவாகி உள்ளது. அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின் இதுவரை 7805 படுகொலைகள், 79,305 கொள்ளைகள், 4697 பாலியல் வன்கொடுமைகள் நடந்துள்ளன. இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய தமிழக அரசு, இதுகுறித்த புள்ளிவிவரங்களை காவல்துறை இணையதளத்திலிருந்து அகற்றி, உண்மையை மூடி மறைக்கப்பார்க்கிறது. இந்தப் போக்கை கைவிட்டு குற்றங்களைக் குறைக்கவும், நீதிபதியை தாக்கிய குற்றவாளிகளை கைது செய்து தண்டிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதுமட்டுமின்றி, நீதிபதிகள் விஷயத்தில் இன்னொரு உண்மையை தமிழக அரசு உணர வேண்டும். உயர்நீதிமன்ற நீதிபதிகள் பெரும்பாலும் ஆவணங்களின் அடிப்படையில் தான் வழக்கு விசாரணையை நடத்துவார்கள். இதனால் இவர்கள் வழக்கறிஞர்களை மட்டும் தான் சந்திக்க வேண்டியிருக்கும். ஆனால், கீழமை நீதிமன்றங்களின் நீதிபதிகள் நிலைமை அப்படியல்ல. குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை அவர்கள் நேரடியாக விசாரிக்க வேண்டியிருக்கும். அப்போது குற்றவாளிகளால் பல நீதிபதிகள் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், கீழமை நீதிபதிகளுக்கு பல முனைகளிலிருந்து அழுத்தங்கள் தரப்படுகின்றன. அந்த அழுத்தத்திற்கு பணியாத நீதிபதிகளுக்கு ஆபத்துக்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மொத்தத்தில் பாதுகாப்பின்மை காரணமாக கீழமை நீதிபதிகள் சுதந்திரமாக பணியாற்ற முடியாத சூழல் உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு வழங்கப்படுவதைப் போன்று கீழமை நீதிபதிகளுக்கும் பாதுகாப்பு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.’’
No comments:
Post a Comment