பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை:
’’இந்தியா முழுவதும் உள்ள 3 லட்சத்திற்கும் மேற்பட்ட கிராமப்புற பகுதி நேர அஞ்சல் தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 10 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தம் மேற்கொண்டு வருகின்றனர். அவர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் இன்று பத்தாவது நாளை எட்டியிருக்கிறது.
பல ஆண்டுகளாக பகுதி நேர தொழிலாளர்களாக பணியாற்றி வரும் தங்களை பணி நிலைப்பு செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்; பணி நிலைப்பு செய்யப்பட்ட பிறகு தங்களுக்கான பணித் தன்மை மற்றும் ஊதிய விகிதம் பற்றி பரிந்துரைக்க நீதிபதி தலைமையிலான குழு அமைக்கப்பட வேண்டும்; அஞ்சல் துறையை பிரித்து தனி நிறுவனமாக மாற்றும் முயற்சியைக் கைவிட வேண்டும் என்பவை தான் அரசிடம் இவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் ஆகும்.
ஊரக பகுதி நேர அஞ்சல் தொழிலாளர்களுக்கான பணி 4 மணி நேரம் மட்டுமே என்ற போதிலும், எல்லா நாட்களிலும் இவர்கள் எட்டு மணி நேரம் வேலை செய்ய வேண்டியிருக்கிறது. இதற்காக இவர்களுக்கு தரப்படும் ஊதியம் மிகமிகக் குறைவு. 25 ஆண்டுகளாக பணியாற்றுவோருக்குக் கூட ரூ.8,000 மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது. இத்தகைய சூழலில் பணியாற்றும் கிராமப்புற பகுதி நேர அஞ்சல் தொழிலாளர்கள் தங்களை பணி நிலைப்பு செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்று கோருவது மிகவும் நியாயமானதாகும். இக்கோரிக்கைகளை நிறைவேற்றுவதால் மத்திய அரசுக்கு பெரிய செலவு ஏற்படாது.
பணி நிலைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 7 ஆண்டுகளில் 3 முறை இவர்கள் வேலை நிறுத்தம் செய்துள்ளனர். அப்போதெல்லாம் இவர்களின் கோரிக்கைகளை ஏற்பதாக வாக்குறுதி அளிக்கும் மத்திய அரசு, வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்த பிறகு தங்களின் வாக்குறுதியை காற்றில் பறக்க விடுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது. இவர்களின் கோரிக்கைகள் குறித்து ஆராய இதுவரை 6 குழுக்கள் அமைக்கப்பட்டன. அவற்றில் முந்தைய வாஜ்பாய் ஆட்சியில் அமைக்கப்பட்ட நீதிபதி தல்வார் குழு இவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது. ஆனால், அப்போதைய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அதை நிறைவேற்றவில்லை.
கிராமப்புற பகுதி நேர அஞ்சல் தொழிலாளர்களின் கோரிக்கைகள் தொடர்பான வழக்கை கடந்த 2013 ஆம் ஆண்டு விசாரித்த உச்சநீதிமன்றம், அவர்களும் மற்ற அரசு ஊழியர்களுக்கு சமமாக நடத்தப்பட வேண்டும் என்றும், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தது. அதன்பின் 2014 ஆம் ஆண்டு அரசுக்கும், இவர்களுக்கும் இடையே கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின்படி தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து ஆராய நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், அப்போதிருந்த காங்கிரஸ் கட்சி பதவி இழந்த நிலையில், புதிதாக அமைக்கப்பட்ட நரேந்திரமோடி அரசு அந்த அறிவிப்பை செயல்படுத்த மறுத்துவிட்டது.
அஞ்சல் துறை தொழிலாளர்களின் போராட்டத்தால் கிராமப்புறங்களில் அஞ்சல் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. கிராமப்புறங்களில் உள்ள அஞ்சல் நிலையங்களில் 80 விழுக்காட்டுக்கும் அதிகமானவை மூடப்பட்டிருக்கின்றன. பண விடைகள் (Money Orders) வழங்கப்படாததால் முதியோர் உதவித் தொகை பெறுவோரும், ஆதரவற்றோர் உதவித்தொகை பெறுவோரும் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர்.
இந்த பாதிப்புகள் அனைத்தும் கிராமப்புறங்களில் தான் என்பதால் இதுகுறித்த செய்திகள் வெளியில் வரவில்லை; இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து பேச்சு நடத்த மத்திய அரசும் முன்வரவில்லை. அடிமட்ட தொழிலாளர்களின் உணர்வுகளை மதிக்காத இப்போக்கு கண்டிக்கத்தக்கது.
பகுதி நேர அஞ்சல் துறை ஊழியர்களின் கோரிக்கைகள் நியாயமானவை என்பதாலும், இவர்களின் போராட்டத்தால் கிராமப்புற மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதைக் கருத்தில் கொண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களை அழைத்து மத்திய அரசு பேச வேண்டும். அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்.’’
No comments:
Post a Comment