பெட்ரோல், டீசல் மீதான விலைக்கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பிறகு 15 நாட்களுக்கு ஒருமுறை சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்றவாறு அவற்றின் விலைகள் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, கடந்த மார்ச் 15 ஆம் தேதி பெட்ரோல், டீசல் விலைகள் மாற்றப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யாததன் பின்னணியில் அரசியல் இருப்பதாகவே தோன்றுகிறது.
உலக சந்தையில் ஏறுமுகமாகவே இருந்து வந்த கச்சா எண்ணெய் விலை கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் சரியத் தொடங்கியது. ஆனால், இந்த விலைவீழ்ச்சியின் பயனை மக்களுக்கு வழங்க எண்ணெய் நிறுவனங்களும், மத்திய அரசும் தயாராக இல்லை. இதனால் கச்சா எண்ணெய் விலை குறைந்ததற்கு இணையாக பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை. அதேநேரத்தில் கடந்த பிப்ரவரி மாதத்தில் உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்ததை காரணம் காட்டி 2 முறை பெட்ரோல், டீசல் விலைகள் உயர்த்தப்பட்டன. கடைசியாக கடந்த மார்ச் 1-ஆம் தேதி இரவு பெட்ரோல் விலை வரிகளையும் சேர்த்து லிட்டருக்கு ரூ.3.46, டீசல் விலை ரூ.3.34 உயர்த்தப்பட்டன.
அதன்பின் மார்ச் ஒன்றாம் தேதி முதல் இன்று வரை உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக குறைந்திருக்கிறது. பிப்ரவரி 28 ஆம் நாள் இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் பீப்பாய் 59.85 டாலர் (ரூ.3698) என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. மார்ச் 16 ஆம் தேதி நிலவரப்படி இது 55.56 டாலராக (ரூ.3419) குறைந்து விட்டது.
இதன்படி பார்த்தால் பெட்ரோல் விலை வரிகளையும் சேர்த்து லிட்டருக்கு 3.56 ரூபாயும், டீசல் விலை 3.42 ரூபாயும் குறைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், எண்ணெய் நிறுவனங்கள் இதுவரை விலைக்குறைப்பை அறிவிக்கவில்லை. உலகசந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த பிறகும், உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் எண்ணெய் நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டி வருகின்றன. தனியார் எண்ணெய் நிறுவனங்கள் இப்போது முழு அளவில் பெட்ரோல், டீசல் விற்பனையில் ஈடுபட்டுள்ள நிலையில் அவையும் கொள்ளை லாபம் ஈட்டுவதற்கு வசதியாகவே விலைகள் குறைக்கப்படவில்லையோ என்ற சந்தேகம் எழுகிறது.
கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சிக்கு ஏற்றவாறு கடந்த 15 ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாததால் மட்டும் பொதுத்துறை மற்றும் தனியார் துறை எண்ணெய் நிறுவனங்கள் நாள் ஒன்றுக்கு ரூ.141 கோடி கூடுதலாக லாபம் ஈட்டி வருகின்றன. விலை நிர்ணய நாளுக்கு ஒரு நாள் முன்பாக கச்சா எண்ணெய் விலை அதிகாரித்தால் கூட அதை நுகர்வோர் தலையில் சுமத்தும் எண்ணெய் நிறுவனங்கள், கடந்த 15 நாட்களுக்கும் மேலாக கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதன் பயனை பொதுமக்களுக்கு வழங்க மறுப்பது ஏற்க முடியாதது; கடுமையாக கண்டிக்கத்தக்கது.
கடந்த ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி நிலவரப்படி ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 84.77 டாலராக (ரூ.5209) இருந்தது. அப்போது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.67.01 ஆகவும், டீசல் விலை ரூ.61.70 ஆகவும் இருந்தது. அதன்படி பார்த்தால் இப்போது கச்சா எண்ணெய் விலை 55.56 டாலராக(ரூ.3419) குறைந்து விட்ட நிலையில், ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.43.98 ஆகவும், டீசல் விலை ரூ.40.47 ஆகவும் குறைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், மத்திய அரசு கலால் வரியை உயர்த்தியதாலும், தனியார் எண்ணெய் நிறுவனங்கள் கூடுதல் லாபம் ஈட்ட துணை போகும் நோக்குடன் விலை நிர்ணயத்தில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் செய்யும் குளறுபடிகளாலும் பெட்ரோலுக்கு 19.33 ரூபாயும், டீசலுக்கு 12.45 ரூபாயும் கூடுதல் விலை செலுத்த வேண்டியிருக்கிறது.
உலக அளவில் பெட்ரோல், டீசல் மீது அதிக வரி வசூலிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. இத்தகைய சூழலில் வெளிப்படைத் தன்மை இல்லாத விலை நிர்ணயக் கொள்கையின் மூலம் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கும். எனவே, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு இணையாக பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதுடன், விலை நிர்ணய முறையையும் வெளிப்படையானதாக மாற்ற வேண்டும்.’’
No comments:
Post a Comment