பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை:
’’சென்னை புரசைவாக்கத்தில் இளம் தொழிலதிபர் ஒருவரை மிரட்டியதாகக் கூறி சமூக ஆர்வலர் டிராபிக் இராமசாமி கைது செய்யப்பட்டுள்ளார். 82 வயதான டிராபிக் ராமசாமி மகிழுந்தின் கண்ணாடியை உடைத்தார் என்பதும், தொழிலதிபரை மிரட்டினார் என்பதும் நம்பவே முடியாத குற்றச்சாற்றுகள் ஆகும். இவற்றின் அடிப்படையில் அவரை காவல்துறை கைது செய்திருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை மீறி சென்னையின் பல பகுதிகளில் ஆளுங்கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த பதாகைகளை அகற்றுவதில் டிராபிக் இராமசாமி தீவிரம் காட்டி வந்தார். கிரானைட் ஊழல் குறித்து சகாயம் தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்படுவதற்கு காரணமாக இருந்தவர். இதையெல்லாம் பொறுத்துக் கொள்ள முடியாமல், அவரை பழிவாங்க சரியான நேரம் பார்த்துக் கொண்டிருந்த தமிழக அரசும், காவல்துறையும் நடக்காத ஒரு நிகழ்வுக்காக தொழிலதிபரிடம் புகார் பெற்று கைது செய்திருப்பதாகவே தோன்றுகிறது.
இராமசாமி கைது செய்யப்பட்டதற்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருப்பது இதை உறுதி செய்கிறது. கைது செய்யப்பட்ட இராமசாமி உடல்நலம் பாதிக்கப்பட்டு, ரத்தக் கசிவுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். எனவே, அவரை விடுதலை செய்வதுடன், அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள பொய் வழக்கையும் திரும்பப் பெற வேண்டும்.’’
No comments:
Post a Comment