மக்களுக்கு நன்மை செய்வதை விட எதிர்க்கட்சியினரை பழிவாங்கத் துடிக்கும் அரசின் எதிர்மறை அணுகுமுறையை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று பா.ம.க. எம்.பி. அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விழுப்புரம் மாவட்டம் உளூந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை தாக்கியதாக என் மீது தொடரப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்து கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து தமிழக அரசு அவசர அவசரமாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் இப்ராகிம் கலிபுல்லா, சிவ்கீர்த்தி சிங் ஆகியோரை கொண்ட அமர்வு இந்த மேல்முறையீட்டை இன்று அறிமுக நிலையிலேயே தள்ளுபடி செய்துள்ளது. இத்தீர்ப்பு வரவேற்கத்தக்கது.
உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி தாக்கப்பட்டதற்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது அனைவரும் அறிந்த உண்மை ஆகும். சுங்கச்சாவடி தாக்கப்பட்டது தொடர்பாக என் மீது யாரும் எந்த புகாரும் அளிக்கவில்லை.
ஆனால், அரசியல் ரீதியாக பழிவாங்க வேண்டும் என்பதற்காகவே, சுங்கச்சாவடி ஊழியர் சந்தோஷ்குமார் என்பவரின் வீட்டிற்கு காவல்துறையினர் நள்ளிரவில் சென்று புகார் மனுவை எழுதி வாங்கியுள்ளனர்.
நானும், எனக்கு முன் வந்த மகிழுந்தில் இருந்தவர்களும் சுங்கச்சாவடியை அமைதியாக கடந்ததாக அவர் புகார் மனுவில் கூறியிருந்த போதிலும், எனது தூண்டுதலின் பேரில் தான் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக பொய் வழக்கை பதிவு செய்தனர்.
அதுமட்டுமின்றி, என்னை எப்படியாவது கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான காவல்துறையினர் எனது வீட்டை பல மணி நேரம் முற்றுகையிட்டனர். எனினும், விடுமுறை நாளில் உயர்நீதிமன்றத்தை அணுகி முன்பினை பெற்றேன்.
அதன்பிறகும், செய்யாத குற்றத்திற்காக விசாரணை என்ற பெயரில் என்னை இரு நாட்களுக்கு உளுந்தூர்பேட்டை காவல்நிலையத்திற்கு அழைத்து 200-க்கும் மேற்பட்ட கேள்விகளைக் கேட்டு அலைக்கழித்து கொடுமைப்படுத்தினார்கள்.
உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி தாக்குதல் தொடர்பான முழு உண்மைகளும் காவல்துறைக்கு நன்றாக தெரியும் என்ற போதிலும், இவ்வழக்கில் என்னை சிக்க வைக்க வேண்டும் என்பதற்காக அடுத்தடுத்து பொய்யான புகார்களை சுமத்தினார்கள்.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகளாக காவல்துறையினரால் பட்டியலிடப்பட்ட 3 பேரில் ஒருவர் கூட இத்தாக்குதலுக்கு நான் தான் காரணம் என்றோ, நான் தூண்டியதாகவோ, நான் உடந்தையாக இருந்ததாகவோ எந்த இடத்திலும் கூறவில்லை.
ஆனால், நான் தான் அனைத்துக்கும் காரணம் என்பது போல காவல்துறையினர் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர். இதை எதிர்த்து நான் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் என் மீதான குற்றச்சாற்றுக்கள் பொய்யானவை என்று கூறி தள்ளுபடி செய்து விட்டது.
இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத தமிழக அரசு, காவல்துறையைத் தூண்டி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இப்போது உச்சநீதிமன்றத்திலும் மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் உண்மையும், நீதியும் வெற்றி பெற்றிருக்கின்றன.
நான் குற்றமற்றவன் என்பதும், என் மீது தொடரப்பட்டது பொய் வழக்கு என்பதும் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. என் மீது மக்கள் விரோத அ.தி.மு.க. அரசு தெளித்த கறை அகற்றப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
என் மீதான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதால் ஏற்பட்ட மகிழ்ச்சியை விட, இந்த விஷயத்தில் தமிழக அரசு கடைபிடித்த அணுகுமுறை தான் மிகுந்த வருத்தமளிக்கிறது.
தமிழகத்தின் நலனை பாதிக்கும் ஏராளமான பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருக்கின்றன. மேகதாது அணை திட்டத்திற்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு 5 மாதங்களாக விசாரணைக்கு வராமல் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி 19.05.2014 ஆம் நாள் அரசு தொடர்ந்த வழக்கு 10 மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் விசாரணைக்கு வரவில்லை. இதனால் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளே நடத்தப்பட வில்லை.
ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 3 பேர், தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட 4 பேர் என 7 தமிழர்கள் 25 ஆண்டுகளாக சிறையில் வாடும் நிலையில், அவர்களின் விடுதலைக்கு எதிராக மத்திய அரசு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் ஓராண்டுக்கும் மேல் கிடப்பில் கிடப்பதால் அவர்களின் சிறை வாசம் தொடருகிறது. இந்த வழக்குகளை விரைவு படுத்தி தமிழகத்திற்கு நன்மை செய்ய அ.தி.மு.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆனால், செய்யாத தவறுக்காக என் மீது தொடரப்பட்ட பொய் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பளித்த ஒரு மாதத்திற்குள்ளாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்கிறதென்றால் அரசியல் எதிரிகளை பழி வாங்குவதில் எவ்வளவு தீவிரமாக உள்ளது என்பதை உணரலாம்.
மக்களுக்கு நன்மை செய்வதை விட எதிர்க்கட்சியினரை பழிவாங்கத் துடிக்கும் அரசின் எதிர்மறை அணுகுமுறையை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள். வரும் தேர்தலில் சரியான பாடம் புகட்டுவார்கள் என்பது உறுதி. இவ்வாறு கூறியுள்ளார்.
No comments:
Post a Comment