Wednesday, July 31, 2013

மக்கள் மாண்டாலும் பரவாயில்லை மது விற்றால் போதும் என்ற கொள்கையை அரசு கடை பிடிக்கிறது: ராமதாஸ்

மக்கள் மாண்டாலும் பரவாயில்லை மது விற்றால் போதும் என்ற மன சாட்சியில்லாத கொள்கையை அரசு கடை பிடித்து வரும் நிலையில், அதை எதிர்த்து போராட மாணவர்கள் முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது என்று தமிழகத்தில் மதுக்கடைகளை மூடகோரி உண்ணாவிரதம் இருக்கும் மதுரை சட்டக்கல்லூரிமாணவிக்கு ராமதாஸ் ஆதரவு தெரிவித்துள்ளார்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
தமிழ்நாட்டில் அனைத்து மதுக்கடைகளையும் மூடி, முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி மதுரையில் சட்டக்கல்லூரி மாணவி நந்தினி கடந்த திங்கட்கிழமை முதல் சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டத்தை தொடங்கியிருக்கிறார்.
அவருக்கு ஆதாரவாக மேலும் சில மாணவர்களும், சமூக ஆர்வலர்களும் உண்ணாநிலையில் பங்கேற்றுள்ளனர். தமிழகத்தில் முழு மது விலக்கை ஏற்படுத்த வேண்டும் என்ற எனது கொள்கைக்கு வலு சேர்க்கும் வகையில் மாணவர்கள் தொடங்கியுள்ள இப்போராட்டத்திற்கு பா.ம.க.வின் பாராட்டுக்களையும், ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்களை சீரழிக்கும் மதுவை ஒழிக்க வேண்டும் என்று கடந்த 25 ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி போராடி வருகிறது. முழுமையான மதுவிலக்கை வலியுறுத்தி நூற்றுக்கணக்கான போராட்டங்களை பா.ம.க. நடத்தியுள்ளது. அதுமட்டுமின்றி, இதே கோரிக்கையை வலியுறுத்தி யார் போராட்டம் நடத்தினாலும் அதற்கு முழுமையான ஆதரவையும் பா.ம.க. அளித்து வருகிறது. இதனால், மதுவின் தீமைகள் குறித்தும், மதுவிலக்கின் அவசியம் குறித்தும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டிருகிறது.
ஆனால், தமிழக அரசோ இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் மது விற்பனையை அதிகரிப்பதில் தான் ஆர்வம் காட்டிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளிலும், மாநில நெடுஞ்சாலைகளிலும் உள்ள மதுக்கடைகளை மார்ச் 31–ஆம் தேதிக்குள் மூட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்ட போதிலும் அதை செயல்படுத்த மறுத்து விட்ட தமிழக அரசு உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
ஆகஸ்ட் 14–ஆம் தேதிக்குள் நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் என்று உச்சநீதி மன்றம் கண்டிப்புடன் கூறிவிட்ட போதிலும், மதுக் கடைகளை மூட தமிழக அரசு இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை.
மக்கள் மாண்டாலும் பரவாயில்லை மது விற்றால் போதும் என்ற மன சாட்சியில்லாத கொள்கையை அரசு கடை பிடித்து வரும் நிலையில், அதை எதிர்த்து போராட மாணவர்கள் முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது. மதுவுக்கு எதிரான போராட்டங்களில் மாணவர்கள் இன்னும் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என்றும், மது ஒழிப்புக்கு எதிரான பாட்டாளி மக்கள் கட்சியின் முயற்சிக்கு துணை நிற்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: