Thursday, July 4, 2013

வன்னிய சமுதாயத்துக்கு எதிராக அதிமுக அரசு ஏவி விட்டுள்ள அடக்குமுறையின் உச்சகட்டம் இதுவாகும்: ராமதாஸ் கண்டனம்

 
தேசிய  பாதுகாப்புச் சட்டத்தில் பாமக சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.குரு மீண்டும் கைது செய்யப் பட்டுள்ளதற்கு அக் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்,  ‘’ஜெ.குரு மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் போடப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்திய மத்திய உள்துறை அமைச்சகம் அந்த நடவடிக்கையை ரத்து செய்தது.

இதன் பிறகாவது தமிழக அரசு அதன் தவறை உணர்ந்து, தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்திருக்க வேண்டும். ஆனால் சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, ஜெ. குருவை பழி வாங்கும் நோக்குடன் மீண்டும் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்துள்ளது.

தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, விடுவிக்கப்பட்ட ஒருவரை, அவர் மீது புதிதாக வழக்கு எதுவும் பதிவு செய்யப்படாத பட்சத்தில்,  மீண்டும் அதே சட்டத்தில் கைது செய்ய முடியாது.  ஆனால் சட்டத்தைப் பற்றியெல்லாம் கவலைப்படாத தமிழக அரசு, ஜெ.குரு சிறையிலிருந்து விடுதலை ஆகிவிடக்கூடாது என்ற எண்ணத்தில் இவ்வாறு செய்துள்ளது.

பாமகவுக்கும், வன்னிய சமுதாயத்துக்கும் எதிராக அதிமுக அரசு ஏவி விட்டுள்ள அடக்குமுறையின் உச்சகட்டம் இதுவாகும்.  மிகப் பெரிய மனித உரிமை மீறலான இந்த நடவடிக்கைக்கு என் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

அரசின் அடக்குமுறைகள் அனைத்தையும்  நீதிமன்றத்தின் உதவியுடன் முறியடித்து வெற்றி பெறுவோம். அதுமட்டுமின்றி சட்டத்தை மதிக்காமல், தவறுகளுக்கு துணை போன  அதிகாரிகள் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, பணி நீக்கம் உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகளை பாமக மேற்கொள்ளும். எனவே அரசின் பழிவாங்கல் நடவடிக்கைகளுக்கு அதிகாரிகள் ஆதரவு அளிக்கக்கூடாது’’ என்று அவர் கூறியுள்ளார்

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: