Monday, July 15, 2013

பெட்ரோல் விலை ரூ.1.95 உயர்வு: சாமானிய மக்கள் மீதான சுரண்டல்: ராமதாஸ் கண்டனம்



பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பெட்ரோல் விலை உயர்வு என்ற பெயரில் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மீது மீண்டும் ஓர் இடி இறக்கப்பட்டிருக்கிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து விட்டது; இந்திய ரூபாய்க்கு எதிரான அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்து விட்டது என்று கூறி பெட்ரோல் விலையை மத்திய அரசு லிட்டருக்கு ரூ.1.55 உயர்த்தியுள்ளது. உள்ளூர் வரிகளுடன் சேர்த்து சென்னையில் ஒரு  லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.1.95 அதிகரித்திருக்கிறது.
இது கடந்த ஒன்றரை மாதத்தில் செய்யப்பட்டுள்ள நான்காவது விலை உயர்வு ஆகும். கடந்த மே மாதம் 30&ஆம் தேதி ரூ.65.90 ஆக இருந்த ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை இப்போது ரூ.73.60 ஆக உயர்ந்துள்ளது. ஒன்றரை மாதங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.7.70 உயர்த்தப்பட்ட கொடுமை இதுவரை நடந்ததில்லை. ஏற்கனவே அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்திருப்பதால், அன்றாட செலவுகளை சமாளிக்க முடியாமல் மக்கள் மூச்சுமுட்டிக் கொண்டிருக்கும் நிலையில், பெட்ரோல் விலை மேலும் ரூ.1.95 உயர்த்தப்பட்டிருப்பது சாமானிய மக்களின் பொருளாதாரத்தை சுரண்டும் செயலாகும்.
 வெளிச்சந்தையில் ஏற்படும் பாதிப்புகள் மக்களைத் தாக்காமல் பார்த்துக்கொள்வது தான் ஓர் அரசின் கடமை ஆகும். ஆனால், அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், உலக சந்தையை காரணம் காட்டி, பெட்ரோல் விலையை மத்திய அரசு தொடர்ந்து உயர்த்திக்கொண்டே சென்றால் அரசுக்கும், லாபம் ஒன்றையே குறிக்கோளாக கொண்ட தனியார் நிறுவனங்களுக்கும், வித்தியாசம் இல்லாமல் போய்விடும்.
எனவே, ஏழை மற்றும் நடுத்தர மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, பெட்ரோல் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும். அதுமட்டுமின்றி, எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பெட்ரோல் மீதான விலை நிர்ணய உரிமையை ரத்து செய்து, மத்திய அரசே அதை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: