Thursday, July 25, 2013

ஏழைகளின் வாழ்வுடன் விளையாட வேண்டாம்: மத்திய, மாநில அரசுகளுக்கு ராமதாஸ் வேண்டுகோள்



பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் 25.07.2013 வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்தியாவில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கை 2004&05 ஆம் ஆண்டின் அளவான 37.2 விழுக்காட்டிலிருந்து 2011&12 ஆம் ஆண்டில் 21.9 விழுக்காடாக குறைந்துள்ளது என்ற மத்தியத் திட்டக்குழுவின் அறிவிப்பு மகிழ்ச்சியளித்தது. ஆனால், கிராமப் பகுதிகளில் தினமும் ரூ27. 20&ம், நகர்ப்புறங்களில் ரூ.33.30&ம் செலவழிப்பவர்கள் வறுமைக் கோட்டைத் தாண்டியவர்கள் என்ற அளவுகோளின் அடிப்படையில் தான் இந்த புள்ளி விவரம் தயாரிக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிந்ததும் வருத்தமும், வேதனையும் தான் விஞ்சியது.
வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களின் எண்ணிக்கை குறித்த புள்ளி விவரம் சாதனை என்பதைவிட தந்திரம் என்பது தான் உண்மை. கிராமப்புறங்களில் தினமும் 27 ரூபாய் செலவழிப்பவர்கள் வறுமைக் கோட்டைத் தாண்டியவர்கள் என்ற வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. இது எதார்த்தங்களை கணக்கில் கொள்ளாமல் நிர்ணயிக்கப்பட்ட ஒன்றாகும். வறுமைக் கோட்டுக்குள் வாழும் மக்களின் அளவு குறைந்து விட்டதாக கணக்கு காட்டப்படும் 7 ஆண்டுகளில் மட்டும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் 300% வரை அதிகரித்திருக்கின்றன. மத்திய திட்டக்குழு வலியுறுத்தலின்படி பெட்ரோல் மற்றும் டீசலின் விலை 100% வரை உயர்த்தப்பட்டிருக்கிறது. இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் வறுமைக்கோட்டு வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருப்பது எதார்த்தத்திற்கு எதிரான செயல் ஆகும். ஒரு லிட்டர் குடிநீரின் அளவு ரூ. 25&க்கும் மேல் விற்கும் நிலையில், அதே தொகையில்  ஒருவர் ஒருநாள் முழுவதற்குமான தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்பது ஏழைகளின் வாழ்க்கையுடன் விளையாடும் செயலாகும்.
நாடாளுமன்றத்திற்கு விரைவில் தேர்தல் வரவிருக்கும் நிலையில் வறுமையை ஒழித்து விட்டோம் என்று கணக்கு காட்டி செல்வாக்கை அதிகரித்துக் கொள்வதற்காகவே இப்புள்ளி விவரத்தை மத்திய அரசு வெளியிட்டிருப்பதாகத் தோன்றுகிறது. இதன் மூலம் மத்திய அரசு வறுமையை ஒழிக்க வில்லை.... மாறாக வறியவர்களை ஒழிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது என்பது தான் உண்மை. ஒவ்வொரு முறை நாடாளுமன்றத்திற்கு தேர்தல் வரும் போதும், மக்களின் ஆதரவைப் பெறுவதற்காக இதுபோன்ற பிரச்சாரங்கள் செய்யப்படுவது வழக்கமாகி வருகிறது. 2004&ஆம் ஆண்டில் ‘இந்தியா ஒளிர்கிறது’ என்ற பெயரில் ஒரு கட்சியின் செலவில் செய்யப்பட்ட பிரச்சாரம் தான் இப்போது ‘இந்தியாவில் வறுமை ஒழிகிறது’ என்ற பெயரில் அரசு செலவில் செய்யப்படுகிறது. ஆனால், இத்தகைய தந்திரங்களை மக்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
இன்றைய நிலையில், மத்திய மாநில அரசுகள் கடைபிடித்து வரும் தவறான கொள்கைகள் காரணமாக இந்தியாவில் சமத்துவமின்மையும், ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையிலான இடைவெளியும் அதிகரித்து வருகின்றன. இந்தியாவில் 77% மக்கள் தினமும் ரூ.20 கூட சம்பாதிக்க முடியாமல் தடுமாறும் நிலையில், இந்தியாவின் 55 கோடீஸ்வரர்களிடம் மட்டும் ரூ. 10 லட்சம் கோடி சொத்து முடங்கிக் கிடக்கிறது என்பது தான் உண்மை.

மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான கல்வி, சுகாதாரம் ஆகியவற்றை இலவசமாகவும், தரமாகவும் வழங்குதல், இந்திய மக்களில் மூன்றில் இரண்டு பங்கினரின் வாழ்வாதாரமாகத் திகழும் விவசாயத்திற்கு தேவையான அனைத்தையும் இலவசமாக வழங்கி அதை இலாபகரமான தொழிலாக மாற்றுதல் ஆகியவற்றின் மூலம் தான் வறுமையை ஒழிக்கவும், சமத்துவத்தை ஏற்படுத்தவும் முடியும். மாறாக மக்களை சோம்பேறிகளாக்கும் இலவசங்களை வழங்குவதன் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரத்தையோ, நாட்டின் பொருளாதாரத்தையோ ஒரு போதும் உயர்த்த முடியாது. எனவே,  எதார்த்த நிலைக்கேற்ப வறுமைக் கோட்டு வரம்பை நிர்ணயித்து, அந்த வறுமையிலிருந்து மக்களை மீட்பதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் மத்திய மாநில அரசுகள் ஈடுபடவேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: