Saturday, July 20, 2013

இளவரசன் சாவில் மார்க்சிஸ்ட் கட்சி அருவருக்கத்தக்க அரசியல் நடத்துகிறது: ஜி.கே.மணி கண்டனம்



பாமக தலைவர் ஜி.கே.மணி 20.07.2013 சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் ஜி. இராமகிருஷ்ணன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், திவ்யாவின் தந்தை நாகராஜன் மரணமும், இளவரசனின் மரணமும் இயற்கை மரணம்  அல்ல என்றும், அவை கவுரவக் கொலைகள் என்றும் கூறியிருக்கிறார்.
அவரது அறிக்கையைப் படித்த பின்னர், பொதுவுடைமை சித்தாந்தம் பேச வேண்டியவர்கள் பிணத்தை வைத்து அரசியல் நடத்தும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுவிட்டார்களே என்ற கவலை தான் எனக்கு ஏற்பட்டது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் திவ்யாவும், இளவரசனும் திருமணம் செய்து கொண்ட நிலையில், அப்போதே தற்கொலை செய்து கொள்ளாத திவ்யாவின் தந்தை நாகராஜன் நவம்பர் மாதத்தில்  தற்கொலை செய்து கொண்டது ஏன்? என்று வினா எழுப்பியிருக்கிறார் இராமகிருஷ்ணன். நாகராஜன் தற்கொலை செய்து கொண்ட போது அதற்காக இரங்கல் தெரிவிக்கக் கூட முன்வராத மார்க்சிஸ்ட் கட்சித் தலைமை, இப்போது நாகராஜனின் சாவு கவுரவக் கொலை என்று கூறி சர்ச்சை எழுப்பப் பார்க்கிறது. இதன் நோக்கம் யாரையோ திருப்திப் படுத்தி, ஏதோ லாபம் பார்க்க வேண்டும் என்பதைத் தவிர வேறு எதுவாகவும் இருக்க முடியாது.
கடந்த ஆண்டு திவ்யாவை இளவரசன் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்று திருமணம் கொண்டார். தனது மகள் தவறான ஒருவரிடம் சிக்கி வாழ்க்கையை இழந்துவிடக் கூடாது என்று கவலைப்பட்ட நாகராஜன் தமது மகளை மீட்கப் போராடினார். ஆனால், அதற்கான அனைத்து வழிகளும் மூடப்பட்ட நிலையில், காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்தக் காவல் நிலையத்தில் பணியாற்றிய தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த உதவி காவல் ஆய்வாளர், அந்தப் புகார் மீது நடவடிக்கை எடுக்க மறுத்தார். மேலும், நாகராஜனை கடுமையாக திட்டியதுடன், இதற்குப் பிறகும் நீயெல்லாம் ஏன் உயிருடன் இருக்கிறாய்? என்று கேட்டதைத் தாங்க முடியாமல் தான் அவர் தற்கொலை செய்துகொண்டார். இந்த உண்மை அனைவருக்கும் தெரியும். அப்போது நாகராஜனின் தற்கொலைக்கு காரணமான காவல் அதிகாரியை கண்டிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்வரவில்லை. இப்போது தடையை மீறிச் சென்று இளவரசனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய மார்க்சிஸ்ட் கட்சித் தலைமை, அப்போது நாகராஜன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கக் கூட முன்வரவில்லை. இவற்றையெல்லாம் செய்தால், தாழ்த்தப்பட்ட மக்களின் ஆதரவு தங்களுக்கு கிடைக்காமல் போய்விடுமோ? என மார்க்சிஸ்ட்  தலைமை அஞ்சியது தான் இதற்கெல்லாம் காரணம் ஆகும். வாக்குகளை இழந்துவிடக்கூடாது என்பதற்காக, இப்படியெல்லாம் நடந்து கொள்வதும், தங்களின் தவறை மறைப்பதற்காக வருந்தத்தக்க ஓர் உயிரிழப்பை கவுரவக் கொலை என்று முத்திரை குத்தி கொச்சைப் படுத்துவதும் மார்க்சிஸ்ட் கட்சியின் அருவருக்கத்தக்க அரசியல் ஆகும்.
இளவரசனிடமிருந்து திவ்யா பிரிந்து வந்ததற்கும் பாட்டாளி மக்கள் கட்சிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று எங்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் திட்டவட்டமாக கூறியுள்ளார். அதற்குப் பிறகும் இதனுடன் பா.ம.க.வை சம்பந்தப்படுத்துவது கடுமையாக கண்டிக்கத்தக்கது. மார்க்சிஸ்ட் தலைமை உட்பட, இளவரசனுக்காக இன்று கண்ணீர் வடிப்பதைப் போல நடிப்பவர்கள் எவருமே அவர் உயிருடன் இருந்த போது வேலை வாங்கித்தரவோ அல்லது தற்கொலை மனநிலையுடன் இருந்த போது கவுன்சலிங் வழங்கவோ முன்வரவில்லை. இளவரசன் எழுதி வைத்திருந்த தற்கொலை கடிதத்தை சில தாழ்த்தப்பட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பதுக்கி வைத்துக் கொண்டு, இளவரசன் கொலை செய்யப்பட்டதாக வதந்தி பரப்பி கலவரத்தை ஏற்படுத்த முயன்றபோது அதைக் கண்டிக்க மார்க்சிஸ்ட் முன்வரவில்லை. இதற்காகவெல்லாம் வெட்கப்படாமல் இளவரசனின் தற்கொலைக்கு  புதுப்புது பெயர்களைச் சூட்ட இராமகிருஷ்ணன் முயல்கிறார். ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் எத்தனைத் தவறு செய்தாலும் கைகட்டி, வாய் பொத்தி வேடிக்கைப் பார்ப்போம்- மற்ற சமுதாயத்தினர் தவறே செய்யாவிட்டாலும் விமர்சிப்போம் என்பது தான் மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு என்றால் அதை ‘ஒரு சாதி ஆதரவு வெறி’ என்று அழைக்காமல் எப்படி அழைப்பது?  மார்க்சிஸ்ட் அகராதியில் இதற்குப் பெயர் தான் பொதுவுடைமையா? என்பதை இராமகிருஷ்ணன் தான் விளக்கவேண்டும்.
மரணங்கள் இயற்கையாக நிகழாத போது அதற்கு காரணமானவர்கள் தான் குற்றவாளிகள் என்று ‘நீதிபதி’ இராமகிருஷ்ணன் கூறியிருக்கிறார். அது உண்மை தான். அதன்படி பார்த்தால், மக்களால் மதிக்கப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களில்  ஒருவரான டபிள்யூ. ஆர். வரதராஜன் மீது, உட்கட்சி பதவிச் சண்டை காரணமாக அவதூறான பழியை சுமத்தி, விசாரணை அறிக்கை என்ற பெயரில்  அவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் குற்றப்பத்திரிகையை தயாரித்து, அதை தாங்கிக்கொள்ள முடியாமல் அவர் போரூர் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொள்ள காரணமாக இருந்த குற்றவாளிகள் யார் யார் என்பதை இராமகிருஷ்ணன் அடையாளம் காட்டுவாரா?
மார்க்சிஸ்ட் கட்சியினர் கார்ல் மார்க்சின் கொள்கைகளை வைத்தும், எல்லோருக்கும் எல்லாமும்  கிடைக்க வேண்டும் என்ற லட்சியத்தை முன் வைத்தும் அரசியல் நடத்தட்டும். ‘ஒரு சாதி ஆதரவு வெறி’யுடன் மற்ற சமுதாயத்தினர் மீது அவதூறு பரப்பும் அரசியலை நடத்த வேண்டாம். இத்தகைய அரசியலை கார்ல் மார்க்ஸ், ஜோதிபாசு, ஹர்கிஷன் சிங் சுர்ஜித் ஆகியோரின் ஆன்மாக்கள் கூட ஏற்றுக் கொள்ளாது என்பதை ஒரு பாட்டாளி என்ற முறையில் தெரிவித்துக் கொள்கிறேன்

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: